Pages - Menu

Pages - Menu

Menu

செவ்வாய், 7 மே, 2019

அக்னி நட்சத்திரம் சுட்டெரிக்கும் வேளையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை...! May 07, 2019

source ns7.tv
Image
அக்னி நட்சத்திரம் சுட்டெரிக்கும் வேளையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக பெய்த மழையால், மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
திருவள்ளூர் மணவாள நகர், ஒண்டிக்குப்பம், புட்லூர் சுற்றுவட்டாரங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. காற்றின் வேகத்தில் மின்கம்பங்கள் சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்ததால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது சென்னை-திருப்பதி சாலையில் குறுக்கே மின் கம்பம் விழுந்ததால் மாற்றுப் பாதையில் பேருந்துகள் இயக்கப்பட்டன. செவ்வாய்ப்பேட்டை ரயில் 
நிலையத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், மரக்கிளைகள் முறிந்து, மின்சார கம்பிகள் மீது விழுந்ததால், ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. 
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மிதமான மழை பெய்தது. இதனால், கோடை வெப்பம் தணிந்து, குளிர்ச்சி நிலவியது.
வேலூர் மாவட்டம் காட்பாடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான விருதம்பட்டு, காந்திநகர், கழிஞ்சூர், தாராபடவேடு, பிரம்மபுரம் ஆகிய பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. காட்பாடியில் பெய்த திடீர் மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் வெயில் வாட்டிவதைத்த நிலையில், இடிமின்னலுடன் மழை பொழிந்தது. ஆட்டுக்குளம், வெள்ளலூர், எட்டிமங்கலம், விநாயகபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை காணப்பட்டது. 
 
இதேபோன்று, காஞ்சிபுரத்தில் கோடைமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அக்னி வெயிலால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்த நிலையில், கோடை மழை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.