Pages - Menu

Pages - Menu

Menu

திங்கள், 3 ஜூலை, 2023

கோமாளித்தனமான வேலை… ஆளுனர் குறித்து வைகோ கடும் விமர்சனம்

 Vaiko

வைகோ பேட்டி

பெரம்பலூர் ரோவர் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து திருச்சி வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

இந்திய வரலாற்றில் எந்த கவர்னரும் செய்ய முனையாத தகிடுதத்தம் வேலைகளை  தமிழக கவர்னர் செய்து வருகிறார். மாநில அமைச்சர்களை நியமிப்பதும், மாற்றுவதும் முதல்வரின் அதிகாரம் என்று அரசியல் சட்டம் தெளிவாக சொல்கிறது. கவர்னருக்கு அந்த அதிகாரம் கிடையாது. கவர்னர் அமைச்சரை நீக்கியதாக அறிவிப்பு செய்கிறார். நள்ளிரவில் ஞானோதயம் வந்ததும் அந்த அறிவிப்பை நிறுத்தி வைக்கச் சொல்கிறார்.

இது போன்ற கோமாளித்தனமான வேலையை, எந்த கவர்னரும் செய்ததில்லை. அதனால் தான், கவர்னரை திரும்பப் பெற வேண்டும் என்று, ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கு கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறோம். கவர்னர் போக்கால், பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். பிரிட்டிஷ் கவர்னர் போல் நினைத்து, ஜனநாயக படுகொலை செய்ய முயற்சிக்கிறார். தமிழகத்தில் அவரது பருப்பு வேகாது.

கர்நாடகாவில் மேகதாது அணை கட்டப்பட்டால், டெல்டா மாவட்ட பாசனம் பாழாகிப் போகும். குடிநீருக்கும் பிரச்னை ஏற்படும். ஆற்றிலும் அணை கட்டுவதற்கு, கர்நாடகா அரசு மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக சொல்கின்றனர். அதுவும் தமிழகத்தை பெரிதும் பாதிக்கும். ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்ற போக்கை, மத்திய அரசு மாற்றிக் கொள்ள வேண்டும்.

சனாதனம் என்பதே இல்லை. சனாதனம் என்றால், இந்தியா கிடையாது. பல்வேறு தேசங்களை ஒன்றாக்கி, வெளையர்கள் ஒரு நாடகா உருவாக்கி, அதற்கு இந்தியா என்று பெயர் சூட்டப்பட்டது. அதற்கு முன், சனாதனம் வாயிலாக ஒரு நாடு வந்ததாக சொன்னால், அதை விட பைத்தியக்காரத் தனமான பேச்சு வேறு ஒன்றும் இல்லை. நடிகர் விஜய் கட்சி தொடங்கி திமுக கூட்டணிக்கு வந்தால் ஏற்று கொள்வீர்களா? என்ற கேள்விக்கு அதை அவரிடம் போய் கேளுங்கள் என தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பின்போது மணவை தமிழ்மாணிக்கம், டாக்டர் ரொஹையா, சேரன் உள்ளிட்ட  மதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

க.சண்முகவடிவேல்


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-mdmk-general-secretary-vaiko-press-meet-in-trichy-713199/