15 7 2025
/indian-express-tamil/media/media_files/2025/06/28/mk-stalin-2025-06-28-19-59-02.jpg)
அரசு சேவைகள் வீடு தேடி வர உங்களுடன் ஸ்டாலின் திட்டம் இன்று தொடக்கம்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதல்வரான பிறகு 3-வது முறையாக ரயில் பயணம் மேற்கொண்டு, பொதுமக்களை நேரடியாக சந்தித்து வருகிறார். இன்று (ஜூலை 15, 2025) கடலூர் மாவட்டம் சிதம்பரம் மற்றும் மயிலாடுதுறையில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, நேற்று (ஜூலை 14) மாலை சென்னையிலிருந்து ரயில் மூலம் புறப்பட்டார்.
நேற்று மாலை 5:30 மணியளவில் சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது இல்லத்திலிருந்து புறப்பட்ட ஸ்டாலின், தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்தார். அங்கு திரண்டிருந்த ஏராளமான தி.மு.க தொண்டர்களும், பொதுமக்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பொதுமக்கள் அளித்த மனுக்களையும் முதலமைச்சர் பெற்றுக்கொண்டார். பின்னர், மாலை 6:10 மணிக்கு தாம்பரத்திலிருந்து ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் (சிதம்பரம் வழியாகச் செல்லும் ரயில்) ஏறினார். அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், நாசர் மற்றும் திமுக எம்.பி. டி.ஆர். பாலு உள்ளிட்டோர் முதல்வருடன் பயணித்தனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் இரவு 9:40 மணியளவில் சிதம்பரம் ரயில் நிலையம் சென்றடைந்தார். அங்கிருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு கிராண்ட் பார்க் ஹோட்டலில் தங்கினார். கடலூர் எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
சிதம்பரம் நிகழ்ச்சிகள் (ஜூலை 15, 2025):
காலை 9 மணிக்கு ஹோட்டலில் இருந்து புறப்படும் முதலமைச்சர், 9:20 மணிக்கு சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்குச் செல்கிறார். அங்கு பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.
காலை 9:30 மணிக்கு சிதம்பரத்தில் உள்ள வாண்டையார் திருமண மண்டபத்தில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமைத் தொடங்கி வைக்கிறார். அங்கு துறை சார்ந்த அரங்குகளில் மனுக்கள் பதிவு செய்யப்படுவதை பார்வையிட்டு, மனுதாரர்களுடன் கலந்துரையாடுகிறார்.
காலை 10:00 மணியளவில் சிதம்பரம் பேட்டையில் அண்ணல் அம்பேத்கர் திருவுருவச் சிலையைத் திறந்து வைக்கிறார். காலை 10:30 மணியளவில் சிதம்பரம் லால்புரத்தில் முன்னாள் எம்.பி. எல். இளையபெருமாள் அவர்களின் திருவுருவச் சிலையுடன் கூடிய நூற்றாண்டு அரங்கைத் திறந்து வைத்து பார்வையிடுகிறார். காலை 11:00 மணியளவில் லால்புரத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். பின்னர் பரமேஸ்வரநல்லூர் சென்று நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, கொள்ளிடம் பாலம் அருகே சோதியகுடி சென்று கலைஞர் சிலையைத் திறந்து வைக்கிறார்.
மயிலாடுதுறை நிகழ்ச்சிகள் (ஜூலை 15 & 16, 2025):
சிதம்பரம் நிகழ்ச்சிகளை முடித்த பின்னர், மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு சென்று மதியம் தங்குகிறார். மாலை 5 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சம்பாதனிருப்பு சென்று ரோட்ஷோ நடத்துகிறார். இரவு மயிலாடுதுறை சர்க்யூட் ஹவுஸில் தங்குகிறார். மறுநாள் (ஜூலை 16, 2025) காலை சர்க்யூட் ஹவுஸில் இருந்து புறப்பட்டு காலை 11:00 மணிக்கு ஏவிசி கல்லூரி சென்று நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் மயிலாடுதுறை ரயில் நிலையம் சென்று பிற்பகல் 1:10 மணிக்கு சோழன் விரைவு ரயில் மூலம் பயணம் செய்து மாலை 6:15 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையம் சென்றடைவார். அங்கிருந்து மாலை 6:40 மணிக்கு கார் மூலம் தனது இல்லம் சென்றடைவார். முதலமைச்சரின் இந்த ரயில் பயணத்தையொட்டி, ரயில் நிற்கும் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க தயாராகி வருகின்றனர்.
முந்தைய ரயில் பயணங்கள்:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முதல்வர் ஆன பின்னர் ரயில் மூலம் பயணம் மேற்கொள்வது இது 3வது முறையாகும். கடந்த 2023 ஆம் ஆண்டு, "கள ஆய்வில் முதல்வர்" திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காக சென்னையிலிருந்து வேலூருக்கு ரயில் பயணம் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் வேலூர் மற்றும் திருப்பத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகவும் ரயிலில் சென்று வந்தார். இந்த ரயில் பயணங்கள் மூலம் முதலமைச்சர் நேரடியாக மக்களைச் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிவதுடன், அரசின் திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/cm-stalin-train-journey-chidambaram-visit-udan-ungaludan-stalin-scheme-today-starts-9496561