/indian-express-tamil/media/media_files/2024/12/26/2MNGCvMJkhn5otxiL3u5.jpg)
அண்ணா பல்கலை. சம்பவம்: களம் இறங்கியது தேசிய மகளிர் ஆணையம்! தீவிர விசாரணை
அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த அதிர்ச்சி சம்பவம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரியாணி கடை நடத்திவந்த ஞானசேகரன் என்பவரால் நிகழ்த்தப்பட்டது. இந்த வழக்கில் ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தின் தீவிரத்தை உணர்ந்து, தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் விஜயா மற்றும் அவரது குழுவினர் அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நடைபெறாமல் இருக்க பல்கலைக்கழக நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் தீவிரமாக விசாரித்தனர். பிற்பகல் 3:30 மணிக்குத் தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டம் 1.30 மணி நேரம் நடைபெற்றது. இதில் அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்று விளக்கம் அளித்தனர்.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் விஜயா, அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் பேராசிரியர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தியதாகத் தெரிவித்தார். மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதாகக் கூறினார். மேலும், மாணவிகளின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளார். இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க, தேசிய மகளிர் ஆணையத்தின் சார்பில் தமிழக அரசுக்கு உரிய பரிந்துரை அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/anna-university-sexual-assault-national-commission-for-women-investigation-9540184