/indian-express-tamil/media/media_files/2025/01/08/9ozBPl4BnhnBbbXQz1FO.jpg)
நாமக்கல் மாவட்டத்தில் நடந்த சிறுநீரக முறைகேடு சம்பவம் குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கியத் தகவல்களை வெளியிட்டுள்ளார். இந்தச் சம்பவம் சிறுநீரகத் திருட்டு அல்ல, மாறாக முறைகேடு என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். ஒருவரின் ஒப்புதல் இல்லாமல் உடல் உறுப்புகளை எடுப்பது மட்டுமே திருட்டு என்றும், இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தெரியாமல் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
25 7 25
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் போன்ற பகுதிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய விசைத்தறி தொழிலாளர்களைக் குறிவைத்து, அவர்களிடம் இருந்து சிறுநீரகத்தைப் பெற்று சட்டவிரோதமாக விற்பனை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க, தமிழக மருத்துவ திட்டப் பணிகள் இயக்குநர் வினித் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவின் விசாரணையில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக போலியான சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்டு, அரசு அங்கீகாரக் குழு ஏமாற்றப்பட்டது அம்பலமானது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்குச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்குத் தமிழக அரசு தற்காலிகத் தடை விதித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, 'தனலட்சுமி ஸ்ரீனிவாசன் மற்றும் திருச்சி சீதா' ஆகிய மருத்துவமனைகள் இனி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்றும் அதற்கான உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். கிட்னி மற்றும் மனித உறுப்புகளைத் திருடுகிறார்கள் என்று சிலர் பேசி வருகின்றனர். இது திருட்டா அல்லது முறைகேடா என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மனித உறுப்புகளை, அவர்களுக்கே தெரியாமல் எடுத்தால் மட்டுமே அது திருட்டு. ஆனால், இது ஒரு முறைகேடு என்று அவர் விளக்கமளித்தார்.
இந்தச் சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் 2019 ஆம் ஆண்டிலேயே நடந்திருக்கிறது என்றும், அப்போதே காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்த போதிலும், சுகாதாரத் துறை தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
தற்போது சுகாதாரத் துறை சார்பில் விசாரணை நடத்தப்பட்டு, முதற்கட்ட அறிக்கை வந்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் இரண்டு மருத்துவமனைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இரண்டு வார கால விசாரணை முடிந்து முழுமையான அறிக்கை கிடைத்ததும், துறை ரீதியாகவும், காவல்துறை மூலமாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார். மேலும், மனித உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கான பல்வேறு புதிய விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்னும் ஒரு வாரத்தில் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்தார். மேலும், யார் யாரெல்லாம் இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பதை முழுமையாக அறியவே ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும், பாதிக்கப்பட்ட மக்கள் நேரடியாகவும் புகார் அளிக்கலாம் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/namakkal-kidney-theft-minister-m-subramaniyan-explanation-about-tthe-scam-in-tamil-9537435