Pages - Menu

Pages - Menu

Menu

சனி, 23 ஆகஸ்ட், 2025

விண்வெளிக்கு பறந்த 75 எலிகள்.

 russia space

விண்வெளிக்கு பறந்த 75 எலிகள்... விண்வெளியின் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கப் புறப்பட்ட குட்டிப் படை!

2025 ஆகஸ்ட் 20 அன்று ரஷ்யா பயான்-எம் எண் 2 (Bion-M No.2) என்ற விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பியது. இந்த விண்கலத்தில் எலிகள், பழ ஈக்கள், தாவர விதைகள் மற்றும் நுண்ணுயிரிகள் என 1,000க்கும் மேற்பட்ட உயிரினங்கள் பயணித்துள்ளன. இதன் நோக்கம், விண்வெளியின் கடுமையான சூழல் உயிரினங்களை எப்படிப் பாதிக்கிறது என்பதை ஆய்வு செய்வதே.

இந்த எலிகள் சிறிய "மவுஸ் ஹோட்டலில்" அனைத்து வசதிகளுடன் வைக்கப்பட்டுள்ளன. அங்கு, நவீன உணவு, கழிவு அகற்றும் வசதிகள், கேமராக்கள், சென்சார்கள் உள்ளன. இவை நிகழ்நேரத் தகவல்களை பூமிக்கு அனுப்பும். சில எலிகளுக்கு மைக்ரோசிப்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அவை அவற்றின் உடல்நலத்தைக் கண்காணித்து, விண்வெளியில் ஏற்படும் மாற்றங்களை பதிவு செய்யும்.

இந்த ஆய்வின் முக்கிய அம்சம், கதிர்வீச்சுக்கு எதிர்ப்பு சக்தி கொண்டதாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட எலிகளும் இந்த குழுவில் இடம்பெற்று உள்ளன. இந்த விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்தை விட 30% அதிக கதிர்வீச்சு உள்ள ஒரு சுற்றுப்பாதையில் சுற்றுகிறது. இதன்மூலம், ஆழமான விண்வெளிப் பயணங்களில் மனிதர்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலையை விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய முடியும்.

ஆராய்ச்சியாளர்கள் எலிகளை 3 குழுக்களாகப் பிரித்துள்ளனர். ஒரு குழு விண்வெளியிலும், மற்ற 2 குழுக்கள் பூமியிலும் வைத்து கண்காணிக்கப்படுகின்றன. விண்வெளியில் ஏற்படும் மாற்றங்கள் நுண் ஈர்ப்பு விசை மற்றும் கதிர்வீச்சால் ஏற்பட்டதா அல்லது மூடிய சூழலில் வாழ்வதால் ஏற்பட்டதா என்பதை இந்த ஆய்வு கண்டறிய உதவும்.

இந்த எலிகளின் பயணத்தின் முக்கிய நோக்கம் என்ன?

நுண் ஈர்ப்பு விசை மற்றும் விண்வெளிக் கதிர்வீச்சு மனித உடல் அமைப்புகளை, குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தியை, எப்படிப் பாதிக்கிறது என்பதை புரிந்துகொள்ளுதல். எதிர்கால விண்வெளிப் பயணங்களுக்கான மருத்துவ சிகிச்சை முறைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துதல். சுருக்கமாக, இந்த 75 எலிகளின் பயணம், மனிதர்கள் விண்வெளிக்கு பாதுகாப்பாக பயணம் செய்ய முடியுமா என்ற முக்கிய கேள்விக்கு விடை தேடும் முயற்சி. இந்தச் சின்னஞ்சிறு உயிரினங்கள், எதிர்கால விண்வெளி வீரர்களின் பயணத்தை எளிதாக்கப் போகின்றன என்பது உண்மை.


source https://tamil.indianexpress.com/science/russia-launches-75-mice-to-space-to-pave-the-way-for-human-missions-9726200