Pages - Menu

Pages - Menu

Menu

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2025

அரிய சிற்பத்தை பாதுகாக்க தொல்லியல் ஆய்வாளர் கோரிக்கை

 

Archaeologist Senguttuvan requests protection of rare sculpture yaanai meethu amarntha murugan Tamil News

"விழுப்புரம் அருகே உள்ள கப்பியாம்புலியூர் கிராமத்தில், தாமரைக் குளத்தின் கரையிலும் அல்லாமல் உள்ளேயும் அல்லாமல் இடைப்பட்ட பகுதியில் முன்புறம் சாய்ந்த நிலையில் நின்றிருக்கிறது இந்தச் சிற்பம்." என்று தொல்லியல் ஆய்வாளர் செங்குட்டுவன் தெரிவித்தார்.

'யானை மீது அமர்ந்த முருகன்' என்கிற அரிய சிற்பத்தை உரிய முறையில் பாதுகாக்க வேண்டும் என விழுப்புரம் தொல்லியல் ஆய்வாளர் செங்குட்டுவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவர் இன்று கூறியதாவது:-

விழுப்புரம் அருகே உள்ள கப்பியாம்புலியூர் கிராமத்தில், தாமரைக் குளத்தின் கரையிலும் அல்லாமல் உள்ளேயும் அல்லாமல் இடைப்பட்ட பகுதியில் முன்புறம் சாய்ந்த நிலையில் நின்றிருக்கிறது இந்தச் சிற்பம். சாய்ந்து சாய்ந்து மண்ணை நோக்கி வரலாம். மண்ணில் புதைந்தும் போகலாம்.  இந்த சிற்பத்தின் அருகிலேயே தற்காலத்திய "வரலாற்றுத் தடயங்கள்" ஆன மது பாட்டில்கள் உள்ளன. 

இது சிற்பத்தின் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்குகின்றன. சிற்பத்தைக் கண்டறிந்து பல பத்தாண்டுகளைக் கடந்தாலும் இன்னமும் கூட இது முருகன் சிற்பம் எனும் தெளிவு உள்ளூர் மக்களிடம் ஏற்படுத்தவில்லை. எந்தக் கடவுள் என்று தெரியாமல் கிராம மக்கள் வணங்கி வருகின்றனர். இது குறித்து என்னுடன் வந்திருந்த நண்பரும் விக்கிரவாண்டி துணை வட்டாட்சியரும் ஆன பாரதிதாசன் அவர்களிடம் சொன்னேன். 

அதற்கு அவர், 'உள்ளூர் மக்களே குளக்கரையின் மீது ‌மேடை அமைத்து பாதுகாக்கலாம். அல்லது வட்டாட்சியர் அலுவலகம் எடுத்துச் சென்றால், விழுப்புரம் அருங்காட்சியகம் அமைந்தவுடன் அங்கு வைக்கலாம்' என தெரிவித்தார். இதில் ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும் எனக் கோரினேன். அப்போது, விரைவில் செய்ய உள்ளதாக துணை வட்டாட்சியர் உறுதி அளித்துள்ளார். இப்போது, ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த அரிய சிற்பம் உரிய முறையில் பாதுகாக்கப்படும் எனும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. 

இவ்வாறு தொல்லியல் ஆய்வாளர் செங்குட்டுவன் தெரிவித்தார். 

செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.


source https://tamil.indianexpress.com/tamilnadu/villupuram-archaeologist-senguttuvan-requests-protection-of-rare-sculpture-yaanai-meethu-amarntha-murugan-tamil-news-9743245