Pages - Menu

Pages - Menu

Menu

ஞாயிறு, 28 செப்டம்பர், 2025

கரூரில் இருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன" - ஸ்டாலின்

 


Stalin

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று (2025 செப்டம்பர் 27) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் தனது ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது: உங்க விஜய் நான் வரேன்’ என்ற மக்கள் சந்திப்புப் பயணத்தின் மூன்றாம் கட்ட பரப்புரையை மேற்கொண்டார். நாமக்கல்லில் பரப்புரையை முடித்த பின், அவர் பிரச்சார வாகனத்தில் சாலை மார்க்கமாகக் கரூரை நோக்கிச் சென்ற போது, வழிநெடுகிலும் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கரூர் பொதுக்கூட்டத்தில் அதிக அளவிலான மக்கள் திரண்டதால் கடும் நெரிசலும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதன் விளைவாகப் பலர் மயக்கமடைந்தனர். விஜய் பேசிவிட்டுச் சென்ற பிறகு, கூட்டம் கலையும்போதுதான் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்திருந்தது தெரியவந்தது. உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்தப் பரப்புரையில் கலந்துகொண்டவர்களில் இதுவரை 31 பேர் உயிரிழந்ததாகவும்,  குழந்தைகள் உட்பட பலர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்தத் தகவலை அறிந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, உடனடியாக அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று சிகிச்சைப் பெறுபவர்களிடம் பேசி வருகிறார். சம்பவத்தின் தீவிரத்தைக் கருதி, மருத்துவமனையைத் தயார் நிலையில் வைக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து, அமைச்சர்கள் மா. சுப்பிரமணியம் மற்றும் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கரூருக்கு விரைந்துள்ளனர். சுற்றுவட்டார மாவட்டங்களிலிருந்தும் மருத்துவக் குழுவினர் கரூருக்கு விரைந்துள்ளனர். நெரிசலில் சிக்கியவர்களை ஏற்றிச்செல்ல ஆம்புலன்ஸ்கள் வந்துகொண்டிருப்பதால், கரூர் அரசு மருத்துவமனையில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. சிகிச்சைப் பெறுபவர்களில் ஒவ்வொருவராக உயிரிழந்து வருவதாக வரும் தகவல்கள், கரூர் மாவட்டத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (X) பக்கத்தில் வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், "கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திட, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் சுப்பிரமணியம், மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரைத் தொடர்புகொண்டு அறிவுறுத்தியுள்ளேன்.


அருகிலுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் போர்க்கால அடிப்படையில் தேவையான உதவியினைச் செய்து தரும்படி உத்தரவிட்டுள்ளேன். நிலைமையைக் விரைவில் சீராக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏடிஜிபியிடம் பேசியிருக்கிறேன். பொதுமக்கள் மருத்துவர்கள் மற்றும் காவல் துறைக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் கரூர் ஆட்சியர் மற்றும் ஏ.டி.ஜி.பியிடம் தொலைபேசியில் நிலைமையை முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டறிந்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.  

source https://tamil.indianexpress.com/tamilnadu/tragedy-strikes-actor-vijays-rally-in-karur-dozens-dead-and-injured-in-crowd-crush-cm-stalin-concer-10508666