Pages - Menu

Pages - Menu

Menu

வெள்ளி, 5 டிசம்பர், 2025

2014-ம் ஆண்டு ஜெயலலிதா பெற்ற தீர்ப்பின் படி அரசு செயல்படுகிறது; திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அமைச்சர் ரகுபதி விளக்கம்

 

Raghupathy

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நகேந்திரன் உள்ளிட்ட அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில். இது குறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்துள்ளார். 

மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் வழக்கமாக உச்சிப் பிள்ளையார் கோயில் முன்பாகவே தீபம் ஏற்றப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு, மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என ரவிக்குமார் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் தீப தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.  ஆனால் இந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை.  

வழக்கம்போல், உச்சிப் பிள்ளையார் கோயில் முன்புள்ள தீபத்தூணில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்ட நிலையில், இந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வந்தது. இதில் நீதிபதி ஜி ஆர்.சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்ற விசாரணையில, இன்று மாலை 7 மணிக்குள் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். மேலும் நீதிமன்ற உத்தரவை நடைமுறைபடுத்தியது தொடர்பான அறிக்கையை நாளை காலை 10.30 மணிக்குள் சமர்ப்பிக்க உத்தரவிட்டு இருந்தார்.

இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல் முறையீடு செய்ய இருக்கிறது. என்பதால், தீபம் ஏற்ற அனுமதி கிடையாது என கூறி போலீசார் கூறியுள்ளனர். இதனால் மனு தாக்கல் செய்த ரவிக்குமார், உள்ளிட்ட இந்து முன்னணியினர், மற்றும் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பா.ஜ.க.வினர் தரையில் அமர்ந்து போராட்டம் செய்தனர். இதில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணமாக கூறி நயினார் நாகேந்திரன் உள்பட அங்கிருந்தவர்களை கைது செய்தனர். 

இந்நிலையில் இவ்விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருப்பரங்குன்றத்தில் திடீர் பிரச்சினையை உருவாக்குகிறார்கள். கார்த்திகை தீபம் இந்துக்கள் பண்டிகை. தமிழர்கள் கொண்டாடக்கூடிய பண்டிகைய்யில் இந்துத்வாவுக்கு எந்த வேலையும் இல்லை. 2014 ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி அரசு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டுக்கும் அரசுக்கும் ஆதரவாக இருக்கக் கூடிய பழனிசாமி இந்துத்வாவிற்கு ஆதரவாக பேசி வருகிறார். 

2014- ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பெற்ற தீர்ப்புக்கு புறம்பாகவே எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். இந்துத்வா அமைப்புகளுக்கு எடப்பாடி பழனிசாமி துணை போகிறார். ஜெயலலிதா அரசு தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் கூறியதை தான் நாங்கள் கூறுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-law-minister-raghupathy-said-about-tiruparankuntram-issue-10882437