செவ்வாய், 9 டிசம்பர், 2025

தமிழகத்தில் இருந்து பறந்த 50,000 கடிதங்கள்... குடியுரிமை கேட்டு இலங்கைத் தமிழர்கள் கோரிக்கை

 


50000 letters to PM Modi

தமிழகத்தில் இருந்து பிரதமருக்கு பறந்த 50,000 கடிதங்கள்... குடியுரிமை கேட்டு இலங்கைத் தமிழர்கள் கோரிக்கை

தமிழகத்தின் பல்வேறு முகாம்களில் வசிக்கும் சுமார் 50,000 இலங்கைத் தமிழர்கள் ஒன்றாக இணைந்து, மத்திய அரசு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தும், அத்துடன் தங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கக் கோரியும் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளனர். சர்வதேச மனித உரிமைகள் தினத்தை (டிசம்பர் 10) ஒட்டி இந்தக் கடிதங்கள் பிரதமருக்கு அனுப்பப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் உள்ள 103 முகாம்களில் சுமார் 58,000 இலங்கைத் தமிழர்கள் வசித்து வருகின்றனர். இவர்களில், 2015 ஜனவரி 9ஆம் தேதிக்கு முன்னர் உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழைந்து, அரசிடம் பதிவு செய்து சட்டபூர்வமாகத் தங்கியிருப்பவர்களுக்கு மத்திய அரசு ஒரு முக்கிய சலுகையை வழங்கியது. மத்திய அரசு கடந்த செப்.2ஆம் தேதி ஒரு உத்தரவின் மூலம், குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் (Immigration and Foreigners Act) கீழ் இவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனையிலிருந்து விலக்கு அளிப்பதாக அறிவித்தது.

இந்த முடிவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, திருச்சி கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம் உட்பட திருச்சி, நாமக்கல், ராமநாதபுரம், மண்டபம் உள்ளிட்ட பல முகாம்களைச் சேர்ந்த சுமார் 50,000 பேர், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான கடிதங்களைப் பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ளனர். திருச்சி தலைமை தபால் நிலையத்தில் இருந்து மாதினி, நளினி உள்ளிட்டோர் இந்த நூற்றுக்கணக்கான கடிதங்களை அனுப்பி வைத்தனர்.

கடிதத்தில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்

பிரதமருக்கு அனுப்பப்பட்ட அந்தக் கடிதங்களில், மத்திய அரசின் இந்த முடிவுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்ததுடன், ஒரு முக்கியமான கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு இந்தியப் பிரதமருக்கு வணக்கம் ஐயா, உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட 01.09.2025 தேதியிட்ட S.O. 3997(E) உத்தரவின் மூலம் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டம், 2025 இன் தண்டனை விதிகளிலிருந்து எங்களுக்கு விலக்கு அளித்ததற்கு எங்களது மனமார்ந்த நன்றியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்."

4 தசாப்தங்களாகத் தாங்கள் ஏங்கி வந்த நிவாரணத்தை வழங்கிய பிரதமர் மற்றும் இந்திய அரசுக்கு இலங்கைத் தமிழர்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர். இந்த முடிவானது, இந்தியாவின் நிலையான மதிப்புகளான இரக்கம், நீதி, மனிதநேயத்தை, குறிப்பாக "வசுதைவ குடும்பகம்" (உலகம் ஒரு குடும்பம்) என்ற கருத்தை, பிரதிபலிக்கிறது என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தாங்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் அமைதியாக வாழ்ந்து, சமூக வளர்ச்சிக்குப் பங்களித்து வருவதாகவும், நாட்டின் சட்டத்தை மிகுந்த மரியாதையுடன் மதித்து வருவதாகவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வேண்டுகோள்:

"நாங்கள் இந்தியாவின் சமூக மற்றும் கலாச்சார கட்டமைப்பின் ஒரு பகுதியாக இருக்கிறோம். எங்களுக்கு இங்கே வலுவான பிணைப்பும் அன்பும் இருக்கிறது. அதேநேரத்தில், எங்களை சட்டவிரோத குடியேறிகளாக வகைப்படுத்தியுள்ள இந்திய அரசு, எங்களுக்கு சட்டபூர்வமான குடியுரிமை வழங்கி, இந்திய குடியுரிமை பெற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை இந்தியப் பிரதமர் தயவுசெய்து பரிசீலிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்" என்று அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. சுமார் 50,000 கடிதங்கள் ஒரே நேரத்தில் பிரதமரைச் சென்றடைந்திருப்பது, தமிழக இலங்கைத் தமிழர்களின் சமூகத்தில் ஏற்பட்டுள்ள உணர்வை குறிக்கிறது.

செய்தி: க.சண்முகவடிவேல்

source https://tamil.indianexpress.com/tamilnadu/50000-letters-fly-to-pm-modi-sri-lankan-tamils-thank-centre-demand-indian-citizenship-10893437