ஞாயிறு, 7 டிசம்பர், 2025

மதுரையில் ஸ்டாலின் தலைமையில் இன்று மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாடு: 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு

 

மதுரை:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , தென் மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், இன்று (டிசம்பர் 7, 2025) மதுரையில் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று, பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.

மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாடு - 2025

மதுரை மாநகரில் இன்று ஸ்டாலின் தலைமையில் "தமிழ்நாடு வளர்கிறது" எனும் தலைப்பில் ‘மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாடு - 2025’ நடைபெறுகிறது. இம்மாநாட்டில் மொத்தம் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. இந்த ஒப்பந்தங்களின் மூலம் ரூ.36,660.35 கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, அதன் விளைவாக சுமார் 56,766 இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், தொழில்துறை வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கில், மேலூரில் அமையவுள்ள புதிய சிப்காட் (SIPCOT) தொழிற்பூங்காவிற்கும் முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம் திறப்பு

மதுரை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், மேலமடை சந்திப்பில் ரூ.150.28 கோடி செலவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்திற்கு, சுதந்திரப் போராட்ட வீராங்கனை 'வீரமங்கை வேலுநாச்சியார்' பெயர் சூட்டப்பட்டு, அதனைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

63,698 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள்

இதனைத் தொடர்ந்து கலைஞர் திடலில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில், 63,698 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை ஸ்டாலின் வழங்குகிறார். . மேலும், பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.3,065 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளைத் திறந்து வைக்கும், புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டி அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/madurai-investors-meet-2025-cm-stalin-veeramangai-velunachiyar-flyover-sipcot-melur-10888421