Pages - Menu

Pages - Menu

Menu

புதன், 10 டிசம்பர், 2025

தலைமைச் செயலாளர், ஏ.டி.ஜி.பி ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

 



Thiruparankundram Deepam Justice GR Swaminathan High Court Madurai Bench

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை அமல்படுத்தாததாக கூறி தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தலைமைச்செயலாளர் மற்றும் கூடுதல் டி.ஜி.பி (ஏ.டி.ஜி.பி) உள்ளிட்டோர் வரும் 17 ஆம் தேதி காணொலி வழியாக ஆஜராக வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படாததால், ஹிந்து தமிழர் கட்சி நிறுவனர் ராம் ரவிக்குமார், மதுரை மாவட்ட கலெக்டர், போலீஸ் கமிஷனர், கோவில் செயல் அலுவலர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்திருந்தார்.
இதற்கிடையில், இந்த உத்தரவை சவால் செய்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. அந்த மனு இன்னும் விசாரணைக்கு வராத நிலையில், அவமதிப்பு வழக்கு இன்று மீண்டும் விசாரிக்கப்பட்டது.

வழக்கில் கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் ரவீந்திரன், வீரகதிரவன், விகாஸ் சிங் ஆகியோர் ஆஜராகினர். “மேல்முறையீட்டு மனு நிலுவையில் இருக்கையில், உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை; கோவில் வழிபாட்டு முறைகளில் அரசு தலையிட முடியாது. தேவஸ்தானமே முடிவு செய்யும் அதிகாரம் பெறுகிறது” என அரசு தரப்பு வாதிட்டது.

இதனைத் தொடர்ந்து நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், தலைமைச் செயலாளர், ஏ.டி.ஜி.பி உள்ளிட்டோர் டிசம்பர் 17 ஆம் தேதி காணொலியில் ஆஜராக வேண்டும். மத்திய உள்துறை அமைச்சகத்தை வழக்கில் எதிர் மனுதாரராக இணைக்க வேண்டும். மதுரை போலீஸ் துணை கமிஷனர் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-high-court-madurai-bench-justice-gr-swaminathan-order-to-appear-chief-secretary-adgp-for-thirupparankundram-deepam-issue-10895560