Pages - Menu

Pages - Menu

Menu

ஞாயிறு, 21 டிசம்பர், 2025

வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த வன்முறை

 


வங்காளதேசம், டிசம்பர் 19, 2025: வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த 'ஜூலை புரட்சி' இயக்கத்தின் முக்கியத் தலைவரான ஷெரீப் ஒஸ்மான் ஹாடி (Sharif Osman Hadi) துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் உயிரிழந்ததையடுத்து, நாடு முழுவதும் வன்முறை வெடித்துள்ளது. தலைநகர் டாக்காவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பத்திரிகை அலுவலகங்களைத் தாக்கித் தீவைத்ததோடு, சட்டகிராம் (Chattogram) நகரில் உள்ள இந்தியத் துணை உயர் ஆணையரின் (Assistant Indian High Commissioner) இல்லத்தின் மீதும் கற்கள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
 
பின்னணி: 

ஷெரீப் ஒஸ்மான் ஹாடி 'இன்குலாப் மஞ்ச்' (Inqilab Moncho) அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மற்றும் 'ஜூலை புரட்சி' இயக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவர் ஆவார். இவர் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக தீவிரமாகச் செயல்பட்டு வந்தார்.

கடந்த வாரம், டாக்காவின் மோதிஜில் (Motijheel) பகுதியில் இவர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். தலையில் பலத்த காயம் அடைந்த ஹாடிக்கு, சிங்கப்பூரில் உள்ள எவர்கேர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ஷெரீப் ஒஸ்மான் ஹாடி வியாழக்கிழமை (டிசம்பர் 18, 2025) இரவு உயிரிழந்தார்.

டாக்காவில் வெடித்த வன்முறை

ஹாடி உயிரிழந்த செய்தி வெளியானதும், அவரது ஆதரவாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் டாக்காவில் உள்ள ஷாபாக் (Shahbagh) பகுதியில் கூடி நீதிக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தலைநகரில் உள்ள பிரதான வங்காளப் பத்திரிகையான ‘ப்ரோதோம் ஆலோ’ (Prothom Alo) மற்றும் ‘தி டெய்லி ஸ்டார்’ (The Daily Star) ஆகிய நாளிதழ்களின் அலுவலகங்கள் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். கட்டிடங்களின் சில தளங்கள் சூறையாடப்பட்டுத் தீவைக்கப்பட்டன. பத்திரிகையாளர்களும் பணியாளர்களும் கட்டிடத்திற்குள் சிக்கிக்கொண்டனர்.

வங்காளதேசத்தின் நிறுவனத் தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் தன்மண்டி 32 (Dhanmondi 32) இல்லத்திற்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தீவைத்தனர். ஏற்கனவே இந்த கட்டிடம் ஓரளவு இடிக்கப்பட்டு சிதைந்த நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ராஜஷாஹி (Rajshahi) நகரில், ஆர்ப்பாட்டக்காரர்கள் அவாமி லீக் (Awami League) கட்சியின் அலுவலகத்தை அகழ் எந்திரம் (Excavator) மூலம் இடித்துத் தள்ளினர்.

Bangladesh Violence Sharif Osman Hadi Death Dhaka

இந்தியத் துணைத் தூதர் இல்லம் மீது தாக்குதல்

வெள்ளிக்கிழமை அதிகாலை 1:30 மணியளவில், சட்டகிராம் நகரில் உள்ள இந்தியத் துணை உயர் ஆணையரின் இல்லத்தின் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் செங்கல் மற்றும் கற்களை வீசித் தாக்குதல் நடத்த முயன்றனர்.

உடனடியாக விரைந்த காவல்துறை கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தைக் கலைத்ததுடன், 12 போராட்டக்காரர்களைக் கைது செய்தது. துணை உயர் ஆணையரின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமைதி காக்க முஹம்மது யூனுஸ் வேண்டுகோள்

இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகரான முஹம்மது யூனுஸ் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். ஷெரீப் ஒஸ்மான் ஹாடி ஜூலை எழுச்சியின் ஒரு துணிச்சலான போராளி என்று கூறிய யூனுஸ், ஒரு நாள் அரசுத் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்தார்.

‘ஹாடி மரணத்திற்குக் காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்துவதாகவும், ஹாடி மனைவி மற்றும் ஒரே குழந்தைக்கு அரசுப் பொறுப்பேற்கும். நாட்டின் குடிமக்கள் அனைவரும் பொறுமையுடனும், நிதானத்துடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். சட்டத்தை நிலைநாட்டுவதற்கு உரிய அமைப்புகளுக்கு வாய்ப்பளியுங்கள்,’ என்று அமைதி காக்கும்படி யூனுஸ் வலியுறுத்தியுள்ளார்.

விரைவான நீதிக்கு வலியுறுத்தல்

வங்காளதேச தேசியக் கட்சியின் (BNP) இடைக்காலத் தலைவர் தாரிக் ரஹ்மான், ஷெரீப் ஒஸ்மான் ஹாடி மரண வழக்கை முஹம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு விரைந்து விசாரித்து குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஷெரீப் ஒஸ்மான் ஹாடி உடல் சிங்கப்பூரில் இஸ்லாமிய இறுதிச்சடங்கு (நமாஸ்-இ-ஜனாஸா) நடைபெற்ற பிறகு, இன்று மாலை 6:05 மணியளவில் டாக்கா வந்தடையவுள்ளது. சனிக்கிழமை அன்று மாலையில் மணிக் மியா அவென்யூவில் மற்றொரு இறுதிச்சடங்கு நடைபெறும்.

இந்த வன்முறையின் காரணமாக வங்காளதேசம் முழுவதும் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது.

source https://tamil.indianexpress.com/international/bangladesh-violence-sharif-osman-hadi-death-dhaka-protests-prothom-alo-attack-sheikh-hasina-ouster-muhammad-yunus-10923195