செவ்வாய், 1 ஜூலை, 2025

பெரிய தொழில், வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டணம் உயர்வு - அமைச்சர் சிவசங்கர்

 

1 6 2025

TN Transport minister SS Sivasankar on Bike Taxi Tamil News

பெரிய தொழில், பெரிய வணிக நிறுவனங்கள் மற்றும் பிறவகை கட்டண பிரிவுகளுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்துள்ளவாறு 3.16 சதவீதத்துக்கு மிகாமல் மின்கட்டணம் உயர்த்தப்படும் என மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;

மின்சார வாரியங்களின் நிதி நிலைமை சீராக இருப்பதற்காக அந்தந்த மாநிலங்களின் ஒழுங்குமுறை ஆணையம் அவ்வப்பொழுது மின்கட்டணத்தில் மாற்றம் செய்துவருகிறது. தமிழ்நாட்டை பொறுத்த வரையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பல்லாண்டு மின்கட்டண உயர்வை அறிவித்து ஆண்டுதோறும் நுகர்வோர் விலைக்குறியீட்டு அடிப்படையில் மின்நுகர்வோர்களுக்கு மின்கட்டணத்தை மாற்றி அமைத்து ஆணை வெளியிடுகிறது. அதன்படி 2025-26 ஆண்டிற்கு ஜூலை 1 ஆம் தேதி முதல் வரக்கூடிய மின்கட்டண மாற்றங்களில் பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் நலன் கருதி முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி அனைத்து, 2.42 கோடி வீட்டு நுகர்வோர்களுக்கு ஏற்படக்கூடிய மின்கட்டண மாற்றங்களை அரசே ஏற்று அதற்கான மானியத்தொகையை தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்கும் என்று உத்தரவிட்டதை ஏற்கனவே மின்சாரத் துறை அமைச்சரால் அறிக்கையாக வெளியிடப்பட்டது.

மேலும் அனைத்து வீட்டு மின் நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் மற்றும் குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும். 100 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் அனைத்து வீட்டு மின் நுகர்வோர்களுக்கும் உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை, தமிழக அரசே ஏற்று மானியமாக வழங்குவதால், ஆண்டொன்றுக்கு ரூ.374.89 கோடி அரசிற்கு கூடுதல் செலவாகிறது.

வீட்டு மின் நுகர்வோர்களுக்கு, நிலைக்கட்டணம் இரு மாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை செலுத்துவதில் இருந்த முழுவிலக்கு தொடர்ந்து அளிக்கப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களும் பயனடைவார்கள். 

தற்பொழுது விவசாயம், கைத்தறி, விசைத்தறி, வழிப்பாட்டுதலங்கள் மற்றும் தாழ்வழுத்த தொழிற்சாலை ஆகிய மின்கட்டண பிரிவிற்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மின்கட்டண சலுகைகள்:

1). இரு மாதங்களுக்கு 500 யூனிட் வரை பயன்படுத்தும் சிறு வணிக மின் நுகர்வோர்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டணத்தை (Energy charges) தமிழக அரசே ஏற்று மானியமாக வழங்குவதால், ஆண்டொன்றுக்கு ரூ.51.40 கோடி அரசிற்கு கூடுதல் செலவாகிறது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள சுமார் 34 லட்சம் சிறு வணிக மின் நுகர்வோர்கள் பயனடைவார்கள்.

2). 50 கிலோவாட் வரை ஒப்பந்த பளு (sanctioned load) கொண்ட தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு (LT (III) B Industries) உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டணத்தை தமிழக அரசே ஏற்று மானியமாக வழங்குவதால், ஆண்டொன்றுக்கு ரூ.76.35 கோடி அரசிற்கு கூடுதல் செலவாகிறது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள 2.81 லட்சம் தாழ்வழுத்த தொழிற்சாலை மின்நுகர்வோர்கள் பயனடைவார்கள்.

3). குடிசை மற்றும் குறு தொழில்களுக்கு (LT (III) A(1) – Cottage and Micro Industries) உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை தமிழக அரசே ஏற்று மானியமாக வழங்குவதால், ஆண்டொன்றுக்கு ரூ.9.56 கோடி அரசிற்கு கூடுதல் செலவாகிறது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள 2.70 லட்சம் குடிசை மற்றும் குறு தொழில் மின்நுகர்வோர்கள் பயனடைவார்கள்.

4). விசைத்தறி நுகர்வோர்களுக்கு 1,000 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். மேலும் 1,001 யூனிட்டுகளுக்கு மேல் உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை தமிழக அரசே ஏற்று மானியமாக வழங்குவதால், ஆண்டொன்றுக்கு ரூ.7.64 கோடி அரசிற்கு கூடுதல் செலவாகிறது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள 1.65 லட்சம் விசைத்தறி நுகர்வோர்களும் பயனடைவார்கள்.

எனவே 2025-26ம் ஆண்டின் மின்கட்டண உயர்வின்படி, தமிழ்நாட்டில் சுமார் 2.83 கோடி மின் நுகர்வோர்களுக்கு எவ்வித மின்கட்டண உயர்வும் இல்லாமல் பயனடைவார்கள். இதனால் தமிழக அரசிற்கு ஆண்டொன்றுக்கு ரூ.519.84 கோடி கூடுதல் செலவாகும். இந்த மானியத் தொகையினை தமிழக அரசு தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்கும். 

இது தவிர பெரிய தொழில், பெரிய வணிக நிறுவனங்கள் மற்றும் பிறவகை கட்டண பிரிவுகளுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்துள்ளவாறு 3.16 சதவீதத்துக்கு மிகாமல் மின்கட்டணம் உயர்த்தப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-minister-sivashankar-says-power-tariff-hike-to-big-industries-9451485

இலங்கை கடற்படை அட்டூழியம்... ராமேஸ்வரம் மீனவர்கள் மேலும் 7 பேர் கைது

 

Pudukkottai 21 TN fishermen arrested srilankan navy Tamil News

இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்... ராமேஸ்வரம் மீனவர்கள் மேலும் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இவ்வாறு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு அருகே உள்ள நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு 2 ரோந்து கப்பல்களில் இலங்கை கடற்படையினர் வந்தனர். எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த விசைப்படகு உரிமையாளரான சேசுராஜா, அண்ணாமலை, கல்யாணராமன், செய்யது இப்ராகிம், முனீஸ்வரன், செல்வம், காந்திவேல் உள்பட 8 மீனவர்களைக் கைது செய்தனர். மேலும், அவர்கள் சென்ற விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.

1 6 2025 

கைது செய்யப்பட்ட மீனவர்களை மன்னார் கடற்படை முகாம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் 8 மீனவர்களும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, மீனவர்களை 3-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து மீனவர்கள் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், இன்று மன்னார் வடக்கு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ஆரோக்கியா டேனியல் என்பவரின் படகில் இருந்த மீனவர்களைக் கைது செய்த இலங்கை கடற்படையினர், அந்த படகையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 7 மீனவர்களும் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். ஏற்கனவே 8 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/rameswaram-fishermen-arrest-boats-seized-by-sri-lanka-9451780