வியாழன், 3 ஜூலை, 2025

அஜித்குமார் விவகாரம்.. நகை திருட்டு புகாரளித்த நிகிதா மீது பணமோசடி புகார்; எஃப்.ஐ.ஆரில் அதிர்ச்சித் தகவல்!

 

அஜித்குமார் விவகாரம்.. நகை திருட்டு புகாரளித்த நிகிதா மீது பணமோசடி புகார்; எஃப்.ஐ.ஆரில் அதிர்ச்சித் தகவல்!

Tiruppuvanam case nikitha

அஜித்குமார் விவகாரம்.. நகை திருட்டு புகாரளித்த நிகிதா மீது பணமோசடி புகார்; எஃப்.ஐ.ஆரில் அதிர்ச்சித் தகவல்!

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் விவகாரத்தில் நகை திருடுபோனதாகப் புகாரளித்த நிகிதா என்பவர் மீது ஏற்கனவே மதுரை திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்தில் பணமோசடி வழக்கு இருப்பது தெரிய வந்துள்ளது. 2011-ம் ஆண்டு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.16 லட்சம் மோசடி செய்த புகாரில், முதல் குற்றவாளியாக தாய் சிவகாமி மற்றும் 5-வது குற்றவாளியாக நிகிதா சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் எஃப்.ஐ.ஆர். நகல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் காளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித்குமார். இவரை திருட்டு வழக்கு ஒன்றில் விசாரணைக்காக அழைத்துச்சென்ற திருப்புவனம் போலீசார், அவரை கொடூரமாக அடித்து, மிளகாய் பொடி கொடுத்து துன்புறுத்தினர். அடிதாங்க முடியாத அஜித்குமார் மரணம் அடைந்தார். இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக 5 தனிப்படை காவலர்கள் கைது செய்யப்பட்டனர். அதேபோல், எஸ்.பி ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். டி.எஸ்.பி சண்முகசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அமைச்சர் பெரியகருப்பன் நேரில் சென்றும், முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாகவும் ஆறுதல் கூறினர். அதேபோல் அஜித்குமார் சகோதரர் நவீன் குமாருக்கு அரசு வேலை அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, இந்த சம்பவத்திற்கு காரணமான உயர் அதிகாரிகள் யார்? தனிப்படை அமைக்கப்பட்டது ஏன்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். அதேபோல் 9 சவரன் நகையை காணவில்லை என்று புகாரளித்த நிதிதா மற்றும் சிவகாமி ஆகியோரின் பின்னணி என்ன? என்பது குறித்தும் கேள்விகள் எழுந்தன. உயரதிகாரிகள் தொடர்பான கேள்விக்கு சிபிஐ விசாரணை மற்றும் மதுரை மாவட்ட நீதிபதி தலைமையிலான விசாரணை அறிக்கை மூலமாக பதில் கிடைக்கும் என்று பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் 9 சவரன் தங்க நகையை காணவில்லை என்று புகாரளித்த போது, தாய் சிவகாமி மற்றும் மகள் நிகிதாவிடம், எதற்காக நகையை காரில் வைத்து சென்றீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஸ்கேன் பரிசோதனை செய்ததால் நகையை கழற்றி காரில் வைத்ததாக கூறி இருந்தார். இந்நிலையில், நிகிதா மற்றும் சிவகாமி ஆகியோர் மீது 2011-ம் ஆண்டு பணமோசடி புகார் இருப்பது அம்பலமாகி உள்ளது. 2011ஆம் ஆண்டு துணை முதல்வரின் உதவியாளரை தெரியும் எனக்கூறி அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.16 லட்சம் மோசடி செய்ததாக அப்போது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரில் சிவகாமி முதல் குற்றவாளியாகவும், நிகிதா 5வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆசிரியர் மற்றும் விஏஓ வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.16 லட்சம் பெற்றுள்ளனர். அதேபோல் பணம் கொடுத்தவருக்கு பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை, அரசுப் பணியையும் வாங்கி கொடுக்கவில்லை. கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட போது, நிகிதா குடும்பத்தினர் தலைமறைவாகி இருக்கின்றனர். அதற்கு முன்பாக மிரட்டலும் விடுத்திருக்கின்றனர் என்பது எப்.ஐ.ஆர் மூலமாக தெரிய வந்துள்ளது. இதனால், நகையை காணவில்லை என்று நிகிதா மற்றும் சிவகாமி அளித்த புகாரின் உண்மைத்தன்மை குறித்த கேள்வி எழுந்துள்ளது. 

போலீசாரின் விசாரணையில் இதுவரை காணாமல் போனதாக கூறப்படும் 9 சவரன் நகை எங்கும் கைப்பற்றப்படவில்லை. அஜித் குமார் மீது புகார் கொடுத்த நிகிதா மற்றும் சிவகாமி ஆகியோரும் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்பது தெரியவந்துள்ளதால் விரைவில் இருவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணமோசடி வழக்கில் சிக்கிய ஒருவருக்காக, தனிப்படை போலீஸ் வந்தது எப்படி? என்று தற்போது பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

3 7 2025 


source https://tamil.indianexpress.com/tamilnadu/nikita-who-filed-a-jewelry-theft-complaint-has-already-been-charged-with-money-laundering-9458116