வியாழன், 4 செப்டம்பர், 2025

மருத்துவ சீட் கிடைத்தும் படிக்க முடியாமல் தவிப்பு: நிதியுதவி கோரும் புதுச்சேரி மாணவன்!

 

Neet student

மெடிக்கல் சீட் கிடைத்தும் கட்டணம் செலுத்த முடியாத நிலை: நிதியுதவி கோரும் புதுச்சேரி மாணவன்!

மருத்துவம் படிப்பது பலருக்கும் ஒரு கனவு. ஆனால், சிலருக்கு அது கைகூடக் கிடைத்தாலும், அதை நிறைவேற்ற பெரும் போராட்டத்தைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. புதுச்சேரியைச் சேர்ந்த ராஜகுரு என்ற மாணவனின் கதை இதற்கு ஒரு உதாரணம். கரிக்கலாம்பாக்கத்தைச் சேர்ந்த ஏழை மாணவர் ராஜகுரு, அரசு இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைத்தும், கூடுதல் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வருகிறார்.

கரிக்கலாம்பாக்கத்தில் உள்ள மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற ராஜகுரு, நீட் தேர்வில் 187 மதிப்பெண்கள் பெற்று உள்ளார். புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 10% சிறப்பு இட ஒதுக்கீட்டின் கீழ், அவருக்கு ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

அரசு சார்பில் கல்விக் கட்டணமாக ரூ.4 லட்சம் செலுத்தப்படும் நிலையில், புத்தகக் கட்டணம், சீருடை, கிளினிக்கல் கட்டணம், பேருந்து கட்டணம், பி.ஜி. கோச்சிங் கட்டணம் என கூடுதலாக ரூ.2 லட்சம் வரை தேவைப்படுகிறது. பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியுள்ள ராஜகுருவால் இந்தத் தொகையை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ராஜகுருவின் தந்தை அய்யனார் உடல் ஊனமுற்றவர். ராஜகுருவின் தாய் அவர் சிறு வயதிலேயே இறந்துவிட்டார். இதனால் தனது பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்துவரும் ராஜகுருவின் மருத்துவக் கனவை நனவாக்க, தன்னார்வலர்கள் முன்வர வேண்டும் என்று புதுச்சேரி சென்டாக் மாணவர் பெற்றோர் நலச் சங்க தலைவர் நாராயணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி



source https://tamil.indianexpress.com/india/puducherry-centac-parents-and-students-welfare-association-appeal-for-help-9782686