/indian-express-tamil/media/media_files/2025/12/17/drump-2025-12-17-15-46-08.jpg)
அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது அமெரிக்காவில் நுழைய 20 நாடுகளுக்கு பயணத் தடை விதித்துள்ளார். மேலும் பாலஸ்தீன அதிகாரப்பூர்வ ஆவணங்களை கொண்டவர்களும் அமெரிக்காவில் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையானது ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
இதற்கு முன், 2025 ஜூன் மாதத்தில் 12 நாடுகளுக்கு முழுமையான தடையும், 7 நாடுகளுக்கு பகுதி தடையும் விதிக்கப்பட்டிருந்தது. அதில் ஆப்கானிஸ்தான், மியான்மார், சாட், காங்கோ, எரிட்ரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், யேமன் ஆகியவை அடங்கும். இந்நிலையில் தற்போது பகுதி தடை அறிவிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அங்கோலா, ஆன்டிகுவா & பார்புடா, பெனின், ஐவரி கோஸ்ட், டொமினிகா, காபோன், காம்பியா, மலாவி, மௌரிடானியா, நைஜீரியா, செனெகல், தான்சானியா, டோங்கா, சாம்பியா, ஜிம்பாப்வே ஆகிய 15 நாடுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
அமெரிக்க அரசு, “இந்த நாடுகளில் ஊழல், போலியான ஆவணங்கள், குற்றச் செயல்கள், விசா மீறல்கள், அரசியல் நிலைத்தன்மையின்மை அதிகம் உள்ளது. இதனால், குடிமக்களை சரியாகச் சோதனை செய்வது கடினமாகிறது” என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்த முடிவு, தேசிய பாதுகாப்பு, குடிவரவு அமலாக்கம் மற்றும் வெளிநாட்டு கொள்கை காரணங்களுக்காக எடுக்கப்பட்டதாக டிரம்ப் அரசு தெரிவித்துள்ளது.
சமீபத்தில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே அமெரிக்க தேசிய காவல் படை வீரர்கள் மீது ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் தேசிய காவல் படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், மற்றொருவர் படுகாயமடைந்தார். இதனையடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களின் அனைத்து குடியேற்ற கோரிக்கைகளையும் கால வரையின்றி அமெரிக்கா நிறுத்தி வைத்தது. ஏற்கனவே அமெரிக்காவுக்குள் செல்ல 19 நாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது மேலும் 20 நாடுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/international/donald-trump-expand-travel-ban-and-restriction-to-additional-20-countries-10918074





