வியாழன், 10 ஜூலை, 2025

உடைந்து நொறுங்கிய குஜராத் பாலம்... அந்தரத்தில் தொங்கும் லாரி: 2 பேர் பலி; 5 பேர் மீட்பு

 

உடைந்து நொறுங்கிய குஜராத் பாலம்... அந்தரத்தில் தொங்கும் லாரி: 2 பேர் பலி; 5 பேர் மீட்பு 09 07 2025 

Bridge 1

குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் உள்ள பத்ரா தாலுகாவின் முஜ்பூரில் அமைந்துள்ள பாலம், இன்று (ஜூலை 9) அதிகாலை இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர். இதனால் மஹிசாகர் ஆற்றில் பல வாகனங்கள் விழுந்த நிலையில், ஐந்து பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த பாலம் முஜ்பூரை, ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கம்பீராவுடன் இணைத்தது. இது மத்திய குஜராத்தையும், சவுராஷ்டிராவையும் இணைக்கும் முக்கிய பாலமாக செயல்பட்டது.

பாலம் இடிந்த காட்சிகள் அடங்கிய வீடியோக்களில், உடைந்த பாலத்தில் ஒரு டேங்கர் லாரி ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டிருப்பது தெரிகிறது. மேலும், ஆற்றில் சிக்கித் தவித்த ஒரு பெண், தலைகீழாக கவிழ்ந்த வேனில் சிக்கியிருக்கும் தனது மகனுக்காக உதவி கேட்டு அழும் சத்தம் கேட்கிறது.

வதோதரா மாவட்ட ஆட்சியர் அனில் தமேலியா, "ஐந்து பேர் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இரண்டு பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தற்போது வரை, இரண்டு லாரிகள், ஒரு வேன், ஒரு பிக்கப் வேன் மற்றும் ஒரு ஆட்டோ ரிக்‌ஷா ஆகியவை பாலம் இடிந்த போது ஆற்றில் விழுந்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்தது" என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ்-க்கு தெரிவித்தார்.

வதோதரா மாவட்ட தீயணைப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (NDRF) ஆகியோர் மீட்புப் பணிகளை மேற்கொள்ள சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

 

Bridge 2

 

"இது ஆற்றின் ஆழமான பகுதி அல்ல. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விபத்து நடந்த நேரத்தில் பாலத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் இருந்தன. ஆனால், அவை ஆற்றில் விழுந்தனவா என்பது குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. நாங்கள் மீட்புப் பணிகளில் கவனம் செலுத்தி வருவதால், உயிரிழந்தவர்களின் அடையாளங்களை இன்னும் உறுதிப்படுத்தவில்லை" என்று தமேலியா கூறினார்.

காயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட ஐந்து பேரில் நான்கு பேர் லேசான காயங்களுடன் தப்பியுள்ளனர் என்று தமேலியா தெரிவித்தார்.

43 ஆண்டுகள் பழமையான இந்த பாலம் கடந்த ஆண்டு தான் பழுதுபார்க்கப்பட்டது என்றும் தமேலியா குறிப்பிட்டார். "சாலைகள் மற்றும் பாலங்கள் துறையின் செயற்பொறியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கொண்டிருக்கிறார்கள். மீட்புப் பணிகள் முடிந்தவுடன் பாலத்தின் விவரங்களை ஆய்வு செய்வோம்" என்று அவர் கூறினார்.

வதோதரா மாவட்டம் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், மூன்று தீயணைப்பு வாகனங்களை உதவிக்காக அனுப்பியுள்ளதாக ஆனந்த் மாவட்ட ஆட்சியர் பிரவீன் சவுத்ரி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்-க்கு தெரிவித்தார். "ஆனந்த் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல்துறையும் உதவி செய்வதற்கு சம்பவ இடத்தில்தான் உள்ளன" என்று கூறியுள்ளார்.

அங்கலவ் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அமித் சாவ்டா, "பல வாகனங்கள் ஆற்றில் விழுந்துள்ளன.  உயிரிழப்புகள் அதிகரிக்குமோ என்று அஞ்சப்படுகிறது. அரசு நிர்வாகம் உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொண்டு, போக்குவரத்தை அதற்கேற்ப திசை திருப்ப வேண்டும்" என்று எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் வதோதரா பாலம் இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "குபிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.ஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் பாலம் இடிந்து விழுந்து உயிர் இழப்பு ஏற்பட்டது ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்.

source https://tamil.indianexpress.com/india/vadodara-bridge-collapse-deaths-injuries-vehicles-into-river-9476762