8 9 2025
/indian-express-tamil/media/media_files/2025/09/09/franois-bayrou-2025-09-09-07-34-17.jpg)
நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி... கவிழ்ந்தது பிரான்ஸ் அரசு - பிரதமர் ராஜினாமா
பிரான்ஸ் நாட்டின் அதிபராக உள்ள இமானுவேல் மேக்ரான், கடந்த வருடம் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்த உத்தரவிட்டார். அதன்படி தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்றத்தில், முதலில் கேப்ரியல் அட்டல் பிரதமராக பதவி வகித்தார். அவர் கடந்த செப்டம்பரில் ராஜினாமா செய்த நிலையில், அதன் பிறகு மைக்கேல் பார்னியர் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
மைக்கேல் பார்னியர் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்த நிலையில், மூன்றாவதாக பிராங்காய்ஸ் பாய்ரு என்பவர் பிரதமராக பதவியேற்றார். பிரான்ஸ் அரசுக்கு சுமார் 3 ட்ரில்லியன் யூரோக்கள் அளவுக்கு கடன் உள்ளது. அரசை கடனிலிருந்து மீட்க பல்வேறு நடவடிக்கை எடுக்க பிராங்காய்ஸ் பாய்ரு திட்டமிட்டு வந்தார். அரசின் செலவுகளை சிக்கனமாக மேற்கொள்வது அவசியம் என்ற தன் நிலைப்பாட்டுக்கு ஆதரவு கோரி, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பிராங்காய்ஸ் பாய்ரு அழைப்பு விடுத்தார். அதைத்தொடர்ந்து வாக்கெடுப்பு நடந்தது.
8 மாதங்களுக்கு முன்பு பிரதமராகப் பொறுப்பேற்றிருந்த பாய்ரு, 364-க்கு 194 வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தார். இன்று காலை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரனிடம் தனது ராஜினாமா கடிதத்தை பாய்ரு சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது புதிய பிரதமரை கண்டறிந்து பதவியேற்கச் செய்ய வேண்டிய நெருக்கடி அதிபர் மேக்ரோனுக்கு ஏற்பட்டுள்ளது.
2 ஆண்டுகளில் பதவி விலகிய 3வது பிரான்ஸ் பிரதமர்
74 வயதான பாய்ரு, கடந்த 2 ஆண்டுகளில் மேக்ரனால் நியமிக்கப்பட்ட 3வது பிரதமர் ஆவார். இவருக்கு முன்னர் இருந்த மிஷல் பர்னியர் கடந்த டிசம்பரில், பதவியேற்ற 3 மாதங்களிலேயே நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்று, பிரான்ஸ் வரலாற்றிலேயே மிகக் குறைந்த காலம் பிரதமராக இருந்தவர் என்ற பெயரைப் பெற்றார். அவருக்கு முன் இருந்த கேப்ரியல் அட்டல் என்பவரும் ஜனவரி முதல் செப்டம்பர் 2024 வரை 8 மாதங்கள் மட்டுமே பிரதமராகப் பதவி வகித்தார்.
அடுத்து என்ன நடக்கும்?
எலிசே மாளிகையின் தகவல்படி, அதிபர் மேக்ரன், பைரூவின் வாரிசை 'அடுத்த சில நாட்களில்' அறிவிப்பார். மேக்ரன் தனது சொந்த மையவாத சிறுபான்மை ஆளும் குழுவில் இருந்தோ அல்லது பழமைவாதக் கட்சியில் இருந்தோ ஒரு அரசியல்வாதியை அடுத்த பிரதமராக நியமிக்கலாம். ஆனால், இந்த முயற்சி நிலையான கூட்டணியை உருவாக்கத் தவறிவிட்டது. அதேவேளையில் அவர் இடதுசாரிகள் பக்கம் திரும்பி சோஷலிஸ்ட்-ஐ நியமிக்கலாம் அல்லது தொழில்நுட்ப வல்லுநரைத் தேர்ந்தெடுக்கலாம். எந்தவொரு சூழ்நிலையிலும், அடுத்த அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு இல்லை.
நம்பிக்கை வாக்கெடுப்பை ஏன் நடத்தினார் பாய்ரு?
ஐரோப்பிய ஒன்றியத்தின் 3% என்ற வரம்பைவிட இருமடங்காக உள்ள பற்றாக்குறையைக் குறைக்கவும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 114% ஆக இருக்கும் கடனைக் கட்டுப்படுத்தவும் திட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற, பாய்ரு திடீரென நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் 44 பில்லியன் யூரோக்களை (சுமார் ரூ. 3,84,000 கோடி) சேமிக்க அவர் திட்டமிட்டார். ஆனால், 2027-ல் மேக்ரனின் வாரிசுக்கான தேர்தல் வர இருப்பதால், எதிர்க்கட்சிகள் அவரது திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.
வாக்கெடுப்புக்கு முன்னதாக, பாய்ரு, பிரான்ஸ் தனது எதிர்காலத்தையும் செல்வாக்கையும் பணய வைத்துக்கொண்டிருப்பதாகக் கூறினார். 'நம்மை மூழ்கடிக்கும்' நிலையில் இருக்கும் பல டிரில்லியன் யூரோக்கள் கடன்களைக் கட்டுப்படுத்த சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தினார்.
"அரசாங்கத்தை வீழ்த்தும் சக்தி உங்களுக்கு இருக்கலாம், ஆனால் யதார்த்தத்தை அழிக்கும் சக்தி உங்களுக்கு இல்லை" என்று நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன் தேசிய சபையில் பாய்ரு பேசினார். "யதார்த்தம் மாறாது. செலவுகள் தொடர்ந்து அதிகரிக்கும், ஏற்கெனவே தாங்க முடியாத கடன் சுமை இன்னும் அதிகமாகும்" என்றும் அவர் எச்சரித்தார்.
source https://tamil.indianexpress.com/international/frances-government-collapses-as-prime-minister-fran%C3%A7ois-bayrou-loses-confidence-vote-10063268