புதன், 10 செப்டம்பர், 2025

பெரியகுடி ஹைட்ரோ கார்பன் எரிவாயு கிணறு மூடல்; தமிழக அரசு உறுதிபடுத்த வேண்டும்: பி.ஆர்.பாண்டியன் பேட்டி

 

Farmers association leader PR Pandian on  Periyakudi hydrocarbon well closed TN GOVT Tamil News

"ஓ.என்.ஜி.சி-க்கான கச்சா எடுப்பதற்கான அனுமதிகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஆந்திரா,அசாம் போன்ற மாநிலங்களுக்கு பணி மாறுதல் செய்வதற்கு ஓ.என்.ஜி.சி அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது." என்று பி.ஆர் பாண்டியன் கூறினார்.

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர் பாண்டியன் மன்னார்குடி அருகே பெரியகுடி கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு கிணறு மூடும் பணியை நேரில் பார்வையிட்டடார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: 

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒ.என்.ஜி.சி நிறுவனம் கச்சா எடுப்பதற்கு அனுமதி பெற்று பல்வேறு இடங்களில் இயற்கை எரிவாயு கச்சா எடுத்து வருகின்றனர். இந்நிலையில், பெரியகுடி கிராமத்தில் தமிழக அரசின் அனுமதி பெறாமல் கச்சா எடுக்க கிணறு தோண்டும் பணி நடைபெற்றது. நிறைவுறும் நிலையில் இந்தியாவில் எந்த ஒரு இடத்திலும் இல்லாத வகையில் மிக அடர்த்தியான ஹைட்ரோ கார்பன் எரிவாயு 2013ம் ஏப்ரல் 6ம் தேதி  வெடித்து சிதறி தீப்பற்றி எறிய தொடங்கியது. இதனையறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போது இந்தியாவிலேயே எங்கும் கிடைக்காத அடர்த்தியான வகையில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எதிர்பாராத நிலையில் வெடித்து சிதறி தீப்பற்றி எரிவதாகவும் தெரிவித்தனர். 

ஹைட்ரோ கார்பன் தீப்பற்றி எரிவதை அணைத்து வெளியேறுவதை நிறுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக பொறுப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை ஏற்று அன்றைய மாவட்ட ஆட்சித் தலைவர் அரசு அனுமதி பெறாமல் கிணறு தோண்ட தற்காலிக தடை விதித்தார்.
வாயு அடர்த்தியை குறைப்பதற்காக இக்கிணற்றை சுற்றி இருள்நீக்கி. விக்கிரபாண்டியம், ஆலத்தூர்,  மாவட்டக்குடி, வடபாதிமங்கலம், , பள்ளிவர்த்தி, சேந்தமங்கலம், கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் எட்டு கிணறுகள் அமைக்கப்பட உள்ளன.அதன் மூலம் அடர்த்தியை குறைத்து விட்டு மீண்டும் இந்த கிணறை திறப்போம் என்றனர். அப்பொழுது எட்டு இடங்களிலும் இதுபோல அடர்த்தியான எரிவாயு வெளியேறினால் என்ன செய்வது? என்று கேள்வி எழுப்பிய போது, அதை தடுப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று மறுத்தனர். 

இந்நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்ற கருத்துக் கேட்ப்பு கூட்டத்தில் கிணறை திறக்க கூடாது என்று முடிவெடுக்கப்பட்டது. கிணறுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை என்பதையும் தெரிவிக்கப்பட்டது. இதனை மீறி விக்கிரபாண்டியத்தில் புதிய கிணறு அமைப்பதற்கான நடவடிக்கை துவங்கியது.அதனை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பொய் வழக்கு போட்டு விவசாயிகள் சிறையில் அடைக்கப்பட்டோம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்னிந்திய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நான் (பிஆர் பாண்டியன்) வழக்கு தொடர்ந்தேன். வழக்கில் மத்திய அரசும் மாநில அரசும் கொள்கை முடிவு எடுத்து காவிரி டெல்டாவில் இனி புதிய கிணறுகள் அமைக்கவும், ஆய்வு செய்யவும் அனுமதிக்க மாட்டோம்.

ஹைட்ரோ கார்பன் மீத்தேன் உள்ளிட்ட பேரழிவு திட்டங்களை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்பதை கொள்கை முடிவு எடுத்துள்ளதாக அறிக்கையை நீதிமன்றத்தில் தெரிவித்தனர். மேலும் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை ஏற்று ஓஎன்ஜிசிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு 2015ல் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நீண்ட காலமாக கிணறு மூடப்படாமல் நிலுவையில் இருந்தது. 2020 ல் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அறிவித்த பிறகும் பெரியகுடி கிணற்றில் எரிவாயு அடர்த்தியாக உள்ளதை கருத்தில் கொண்டு மூடுவதற்கு முன் வரவில்லை. இதற்கு பிறகு தொடர் போராட்டம் நடத்தினோம். 

கடந்த ஆண்டு 2024 ல் இதனை நிரந்தரமாக மூடுவதற்கு முடிவு எடுக்கப்பட்டு மூடும் பணி துவங்கியது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டது. தற்போது அடைக்கும் பணி முடிவு பெற்றுள்ளதாக நிர்வாகம் தெரிவித்தது. இதனை தமிழக அரசு உயர் மட்ட தொழில்நுட்பக் குழு அமைத்து ஆய்வு செய்து பாதுகாப்பு குறித்து உறுதி தன்மையை அரசு உறுதிப்படுத்த வேண்டும். தற்போது ஓ.என்.ஜி.சி காவிரி படுகையில் 500-க்கும் மேற்பட்ட தமிழக ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஓ.என்.ஜி.சி-க்கான கச்சா எடுப்பதற்கான அனுமதிகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஆந்திரா,அசாம்  போன்ற மாநிலங்களுக்கு பணி மாறுதல் செய்வதற்கு ஓ.என்.ஜி.சி அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஊழியர்கள் பணி பாதுகாப்பு கருதி மத்திய அரசு இவர்களுக்கு உரிய பணிமாறுதல் அளித்து ஊழியர்களின் பணி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

மாநில துணைச் செயலாளர்  எம்.செந்தில்குமார், கோட்டூர் ஒன்றிய செயலாளர் ராவணன், தலைவர் எஸ் வி கே சேகர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

செய்தி: க.சண்முகவடிவேல்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/farmers-association-leader-pr-pandian-on-periyakudi-hydrocarbon-well-closed-tn-govt-tamil-news-10066541