வியாழன், 21 ஆகஸ்ட், 2025

”மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டால், அதற்கான காரணங்களை ஆளுநர் கூற வேண்டும்’ – உச்ச நீதிமன்றம் கருத்து!

 

”மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டால், அதற்கான காரணங்களை ஆளுநர் கூற வேண்டும்’ – உச்ச நீதிமன்றம் கருத்து!

20 08 2025

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் வருடக்கணக்கில் கிடப்பில் போட்டுள்ளதாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆளுநர்களால்  அனுப்பி வைக்கப்படும் மாநில அரசின் மசோதாக்கல் மீது குடியரசுத் தலைவர் 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும்.  அப்படி முடிவெடுக்க வில்லை என்றால் அதை எதிர்த்து மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யலாம் என்று தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பு தொடர்பாக ஆலோசனை பெறும் வகையில் குடியரசு தலைவர் முர்மு 14 கேள்விகளை எழுப்பி  உச்ச நீதிமன்றத்திற்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பான மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு நேற்று விசாரிக்க தொடங்கியது. அப்போது நீதிபதிகள், குடியரசு தலைவரின் கேள்விகளை விசாரித்து வருகிறோமே தவிர, தீர்ப்பை மாற்ற மாட்டோம். கருத்து மட்டுமே தெரிவிப்போம்’ என்று தெளிவுப்படுத்தினர்.

இந்த நிலையில் இவ்வழக்கானது இன்றும் விசாரிக்கப்பட்டது. அப்போது,  அரசமைப்புச் சட்டத்தின் கீழ் ஆளுநர்கள் முடிவுகளை எடுக்க அனைத்து அதிகாரமும் உள்ளது . ஒரு மசோதா அனுப்பப்பட்டால் அதற்ககு ஆளுநர் ஒப்புதல் வழங்கலாம் அல்லது நிறுத்தி வைக்கலாம் அல்லது அந்த மசோதாவை மறுபரிசீலனை செய்யுமாறு மீண்டும் சட்டமன்றத்திற்கு அனுப்பி வைக்கலாம் அல்லது மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பலாம்.   மறுபரிசீலனைக்காக திருப்பி அனுப்பலாம் அதேவேளையில், திருப்பி அனுப்பப்பட்ட அந்த சட்ட மசோதா சட்டமன்றத்தில் மறுபரிசீலனை செய்யப்பட்ட பின்னர் மீண்டும் ஆளுநருக்கு அனுப்பப்படும்போது, அந்த மசோதாவிற்கு கட்டாயமாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை, அது தொடர்பாக எந்த விளக்கமும் இல்லை. மேலும், தமிழ்நாடு ஆளுநர் வழக்கில் அரசியல்சாசன பிரிவு 200ஐ இந்த நீதிமன்றம் விளக்கியது சரியானது அல்ல தவறானது” என்று வாதிட்டனர்.

வாதங்களை கேட்ட நீதிபதிகள் ”தமிழ்நாடு வழக்கில் ஆளுநர் 10 மசோதாக்களை நிறுத்தி வைப்பதாகக் கூறினார், ஆனால் நிறுத்தி வைப்பதாக அரசுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. மசோதாவுக்கு ஒப்புதல் கொடுக்க தாமதப்படுத்தினால், அதற்கான காரணங்களை கூறியிருக்க வேண்டும் என்று சுட்டிகாட்டினர்.

மேலும், “ஆளுநர் ஒரு மசோதாவை நிரந்தரமாக கிடப்பில் போட முடியும் என்று எந்த தீர்ப்பும் இல்லை. பிரிவு 200க்கு விளக்கம் அளிக்கும்போது, நீதிமன்ற நேரடி தீர்ப்புகளை மட்டுமே பார்க்க வேண்டும். தற்போது நமக்கு சொந்த அரசியலமைப்பு மற்றும் அரசியலமைப்பு பிரிவு 200ஐ விளக்கும் தீர்ப்புகள் உள்ளன. சட்டமன்றம் மறுநிறைவேற்றம் செய்து மசோதாவை அனுப்பும்போது ஆளுநர் ஒப்புதல் கொடுத்துதான் ஆக வேண்டும், அதைதான் அரசியல்சாசனம் 200 கூறுகிறது” என்று தெரிவித்தனர்.

மேலும் வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.


source https://news7tamil.live/if-the-bill-is-suspended-the-reasons-must-be-given-supreme-court-opinion.html