டிரம்ப் உடன் அலாஸ்கா பேச்சுவார்த்தை: நேரடியாக பேசிய புதினுக்கு மோடி நன்றி; உக்ரைனில் அமைதிக்கு அழைப்பு
/indian-express-tamil/media/media_files/2025/08/19/modi-putin-2-2025-08-19-07-42-46.jpg)
பிரதமர் மோடி திங்கள்கிஅமை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேசியதாகக் கூறினார். Photograph: (கோப்புப் படம்)
உக்ரைன் போர் தொடங்கிய பிறகு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் அலாஸ்காவில் முதல் முறையாக நேரடியாகச் சந்தித்த சில நாட்களுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை, அந்தச் சந்திப்பின் விளைவு குறித்து புதின் தனக்கு நேரில் தெரிவித்ததாகக் கூறினார்.
கடந்த வாரம் அங்கரேஜ் (Anchorage) நகரில் நடைபெற்ற அந்தச் சந்திப்பில் போர் நிறுத்தம் எதுவும் ஏற்படவில்லை, ஆனால் கீவ்-இடம் இருந்து பிரதேச சலுகைகளுக்காகப் புதின் அழுத்தம் கொடுப்பதற்கான ஒரு தளத்தைக் கொடுத்தது.
எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி, “எனது நண்பர், அதிபர் புதின், அவரது தொலைபேசி அழைப்பிற்கும், அலாஸ்காவில் அதிபர் டிரம்புடன் நடந்த அவரது சமீபத்திய சந்திப்பு குறித்த நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி. உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வைக் காண இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது, மேலும் இது தொடர்பான அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவளிக்கிறது. வரும் நாட்களில் நமது தொடர்ந்து தொடர்புகொள்வோம் என எதிர்பார்க்கிறேன்” என்று எழுதினார்.
புதின் அலாஸ்காவுக்குச் சென்றது பல ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க மண்ணுக்கு அவர் சென்ற முதல் பயணம், உக்ரைன் அவரது திட்டங்களை உடனடியாக நிராகரித்தபோதிலும், அது ஒரு அடையாள ரீதியான ராஜதந்திர வெற்றியாகக் கருதப்பட்டது.
இதற்கிடையில், அமெரிக்கா – இந்தியா இடையேயான உறவில் புதிய அழுத்தம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் குறைந்த விலையிலான கச்சா எண்ணெயைச் சுத்திகரித்து மீண்டும் ஏற்றுமதி செய்வதன் மூலம் மாஸ்கோவின் போர் முயற்சிக்கு இந்தியா நிதியுதவி செய்வதாகக் கூறி, டிரம்ப் நிர்வாகம் சமீபத்தில் இந்தியப் பொருட்களுக்கான வரியை 25%லிருந்து 50% ஆக உயர்த்தியது.
இந்த நடவடிக்கை நியாயமற்றது என்று இந்தியா கூறியுள்ளது, மேலும் அதன் மூலோபாய சுயாட்சி கொள்கையைப் பேணும்போது பல்வேறு ஆதாரங்களில் இருந்து எரிசக்தி விநியோகத்தைப் பாதுகாப்போம் என்று வலியுறுத்தியுள்ளது.
19 08 2025