திங்கள், 25 ஆகஸ்ட், 2025

TNEA: பி.இ, பி.டெக் துணை கலந்தாய்வு முடிவுகள் வெளியீடு: 7,964 மாணவா்களுக்கு ஒதுக்கீடு!

 TNEA 2025 3rd Round Analysis

TNEA: பி.இ., பி.டெக். துணை கலந்தாய்வு: 7,964 மாணவா்களுக்கு ஒதுக்கீடு!

பி.இ., பி.டெக். மாணவா் சோ்க்கைக்கான துணை கலந்தாய்வில் 7 ஆயிரத்து 964 மாணவா்கள் இறுதி ஒதுக்கீடு பெற்றுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை மையம் தெரிவித்துள்ளது. இதில், பொதுப் பிரிவினருக்கு 7,767 இடங்களும், 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் (அரசுப் பள்ளி மாணவர்கள் - கல்விப் பிரிவு) 7 இடங்களும் ஒதுக்கப்பட்டன.

தொழிற்கல்வி பொதுப் பிரிவில் 165 இடங்களும், 7.5% இட ஒதுக்கீட்டில் (அரசுப் பள்ளி மாணவர்கள் - தொழிற்கல்வி) 25 இடங்களும் ஒதுக்கப்பட்டன. நடப்பாண்டில் 1.45 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பொறியியல் படிப்பைத் தொடருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ தகவலின்படி, 2024-ல் 2.49 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 3.02 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளன.

இதுகுறித்து வெயிடப்பட்ட அறிக்கையில், பி.இ., பி.டெக். மாணவா் சோ்க்கைக்கான துணை கலந்தாய்வுக்கு 20,662 போ் தகுதி பெற்றனா். கடந்த ஆக.21 முதல் விருப்ப கல்லூரிகளைத் தோ்வு செய்யும் கலந்தாய்வு நடைபெற்றது.

இதில், 9,181 மாணவா்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இருப்பினும் 1,217 மாணவா்கள் தங்களுக்குரிய விருப்ப கல்லூரி கிடைக்காததால் ஒதுக்கீட்டை உறுதி செய்யவில்லை. இதையடுத்து 7,964 மாணவா்களுக்கு இறுதி ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இவா்கள் அந்தந்த கல்லூரிகளில் திங்கள்கிழமை (ஆக.25) முதல் சேரவுள்ளனா்.

நிகழாண்டில் பி.இ., பி.டெக். படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் உள்ள 400- க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1.90 லட்சம் அரசு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதற்கு 3.02 லட்சம் மாணவா்கள் விண்ணப்பித்தனா். 3 சுற்று கலந்தாய்வு மற்றும் துணை கலந்தாய்வுக்குப் பின்னா் இறுதியாக 1,53,445 மாணவா்கள் ஒதுக்கீடுகளைப் பெற்றுள்ளனா்.

இதையடுத்து பொறியியல் கல்லூரிகளில் 37,179 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்ப தமிழக அரசு முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளதாக உயா்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேநேரம், கடந்த ஆண்டைக் காட்டிலும் (2024-25) நிகழ் ஆண்டில் சுமாா் 20,000 இடங்கள் கூடுதலாக மாணவா் சோ்க்கை ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும், பொறியியல் கல்லூரிகளில் 10 சதவீதத்துக்கு மேல் இடங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டது.



source https://tamil.indianexpress.com/education-jobs/tnea-supplementary-counselling-7964-students-get-allotments-9730445