செவ்வாய், 23 டிசம்பர், 2025

புத்தகங்கள் படிக்க ஸ்டாலின் அறிவுரை

 

CM MK Stalin 3

நம்முடைய அறிவுப் பாரம்பரியம் தொடரும் வரை, ஆரிய ஆதிக்கவாதிகள், வந்த வழி மறந்த அடிமைகள், அறிவற்ற அரைகுறைகள் என்று யாரும் இந்த ஆலமரத்தை அசைத்துப் பார்க்க முடியாது. என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் எழுத்தாளர் ப.திருமாவேலன் எழுதிய தீரர்கள் கோட்டம் தி.மு.க, திராவிட அரசியல் - திராவிட அரசு இயல், முறை செய்து காப்பாற்றும் முதலமைச்சர், ஆகிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த நூல்களை வெளியிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: “இங்கே வந்திருக்கின்ற உங்களுக்கும், இந்தப் புத்தகங்களை வாங்கக் கூடியவர்களுக்கும் நான் வைக்கின்ற வேண்டுகோள் என்னவென்றால், “புத்தகம் என்பது அறிவாயுதம்!” பயன்படுத்தாமல் விட்டால் ஆயுதம் துருப்பிடித்துவிடும்.

அதேபோல, புத்தகங்களையும் அலங்காரத்திற்காக அலமாரியில் வைக்காமல் தினமும் எடுத்து வாசிக்கவேண்டும். அப்போதுதான், நம்முடைய மூளையும் துருப்பிடிக்காமல் இருக்கும். புதிய சிந்தனைகள் பிறக்கும், இன்றைக்கு முப்பது செகண்ட்ஸ் ரீல்ஸ் வீடியோவை கூட முழுவதும் பார்க்ககாமல் ஸ்கிப் செய்கின்ற அளவுக்கெல்லாம் வேகமாக சென்று கொண்டிருக்கிறது.

இந்த அடிக்‌ஷனால் (Addiction) எந்த விஷயத்திலும், ஆழ்ந்து கவனம் செலுத்த முடியாமல் இளைஞர்கள் தவிக்கிறார்கள். ஆனால், Good Things Take Time என்று அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்! இதுபோன்ற சூழ்நிலையில், புத்தக வாசிப்புதான் மனதை ஒருமுகப்படுத்துகின்ற மெடிடேஷன்! அதனால், நீங்கள் எவ்வளவு பிசியான வேலையில் இருந்தாலும், ஒரு நாளைக்கு அரை மணி நேரம்… அல்லது 15 நிமிடமாவது புத்தகங்களை வாசியுங்கள்! உங்களைப் பார்த்து வீட்டில் உள்ள குழந்தைகளும் இதை ஃபாலோ செய்வார்கள். பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் தான் எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும்.

மாவட்டந்தோறும் புத்தகத் திருவிழாக்கள், ஜனவரியில் நான் தொடங்கி வைக்க இருக்கின்ற சென்னை புத்தகக் கண்காட்சி, அண்மையில், இளைஞரணிச் செயலாளர் உதயநிதி நடத்திய அறிவுத்திருவிழா, இது எல்லாமே ஆழ்ந்த வாசிப்பை நோக்கி இளைஞர்களை நகர்த்துகின்ற முயற்சிகள்தான்!

நம்முடைய அறிவுப் பாரம்பரியம் தொடரும் வரை, ஆரிய ஆதிக்கவாதிகள், வந்த வழி மறந்த அடிமைகள், அறிவற்ற அரைகுறைகள் என்று யாரும் இந்த ஆலமரத்தை அசைத்துப் பார்க்க முடியாது. இங்கே அறிவுத்தீ அணையாமல் இருப்பதால்தான் நம்முடைய ஊரில், கலவரத்தீயை பற்ற வைக்க முடியவில்லை. வாசிப்பும், வளர்ச்சியும் ஒன்றோடொன்று தொடர்புடையது. அதை உணர்ந்து, காலத்திற்கேற்ற கருத்து ஆயுதங்களை கூர்தீட்டிக் கொடுக்கக்கூடிய திருமாவேலன் அவர்களை மீண்டும் பாராட்டி, திராவிடம் எனும் அறிவொளி இயக்கத்தால் நிமிர்ந்த தமிழ்நாடு ஒருநாளும் தலைகுனியாது. பாசிசவாதிகளின் பகல்கனவு இங்கு பலிக்காது. வரலாற்றைப் படிப்போம்! தொடர்ந்து வரலாறு படைப்போம்.” என்று கூறினார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/cm-mk-stalin-advice-to-youths-to-read-books-and-alert-an-addiction-10939314