செவ்வாய், 23 டிசம்பர், 2025

தேர்தல் அறக்கட்டளைகள் தாக்கல் செய்த அறிக்கை: நன்கொடை இத்தனை கோடியா?

 

2024 - 2025 ஆம் ஆண்டில் தேர்தல் அறக்கட்டளைகள் பெற்ற மொத்த நன்கொடைகளில் பாதிக்கும் மேற்பட்டவை டாடா குழுமம், ஓ.பி ஜிந்தால் குழுமம், எல்&டி, மேகா எஞ்சினியரிங், அசோக் லேலண்ட், டி.எல்.எஃப், மகேந்திரா ஆகிய ஏழு பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து வந்துள்ளது.

22 12 2025 

மத்திய பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை அரசியலமைப்புக்கு எதிரானது என கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து தேர்தல் அறக்கட்டளைகள் உருவாக்கப்பட்டு அதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள், தனி நபர்களிடம் இருந்து பெறப்படும் நன்கொடைகள் அரசியல் கட்சிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகின்றன.

இந்தியாவில் மொத்தம் 19 தேர்தல் அறக்கட்டளைகள் உள்ளன. இந்த தேர்தல் அறக்கட்டளைகள் கார்ப்பரேட் மற்றும் தனிநபர்களிடம் இருந்து பெறப்படும் நிதியில் 95 சதவீதத்தை அந்த நிதியாண்டிலேயே கட்சிகளுக்கு வழங்கிவிட வேண்டும் என்பது விதியாக உள்ளது. இந்நிலையில், அரசியல் கட்சிகளுக்கு நிதியை பகிர்ந்து அளித்தது தொடர்பான அறிக்கையை அறக்கட்டளைகள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளன.

அதன்படி, கடந்த நிதியாண்டில் அரசியல் கட்சிகளுக்கு ரூ. 3,811.37 கோடி நன்கொடையாக வழங்கப்பட்டது. அதில், மேற்குறிப்பிட்ட ஏழு குழுமங்கள் மட்டும் ரூ. 2,107 கோடி வழங்கியுள்ளது. இது தேர்தல் அறக்கட்டளையின் மொத்த நிதியில் 55 சதவிகிதம் ஆகும். 

ப்ரூடெண்ட்  (Prudent Electoral Trust), புராகிரெஸ்ஸிவ்  (Progressive Electoral Trust), நியூ டெமோக்ராடிக்  (New Democratic Electoral Trust) ஆகிய மூன்று தேர்தல் அறக்கட்டளைகள் தாங்கள் பெற்ற மொத்த நன்கொடைகளில் 98 சதவிகிதத்தை கட்சிகளுக்கு வழங்கியுள்ளன. 

electora;

ப்ரூடெண்ட் அறக்கட்டளையானது ரூ. 2,668.46 கோடியை நன்கொடையாக பெற்ற நிலையில் இதில் ரூ. 2,181 கோடியை பா.ஜ.கவிற்கு வழங்கியுள்ளது. இது மொத்த நன்கொடையில் சுமார் 82 சதவீதம் ஆகும். நன்கொடை தரவுகளின் அடிப்படையில் எல்&டி குழுமத்துடன் தொடர்புடைய  ‘எலிவேட்டெட் அவென்யூ ரியால்டி’ (Elevated Avenue Realty) தான் அதிகபட்சமாக ரூ.500 கோடியை தேர்தல் நன்கொடையாக வழங்கியுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

2024 - 2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய தேர்தல் நன்கொடையாளர் என்றால் அது டாடா குழுமம் தான். இக்குழுமம் புராகிரெஸ்ஸிவ் தேர்தல் அறக்கட்டளைக்கு மொத்தம் ரூ. 915 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்த நிதியில், சுமார் 83 சதவீதம் அதாவது ரூ. 758 கோடி பா.ஜ.க-விற்கு வழங்கப்பட்டுள்ளது. 
அதே சமயம், காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 77 கோடிக்கும் சற்று அதிகமாக அதாவது மொத்த நிதியில் சுமார் 8.5 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது.

புராகிரெஸ்ஸிவ் தேர்தல் அறக்கட்டளையில் இருந்து திரிணாமூல் காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், சிவசேனா, பிஜு ஜனதா தளம், பாரத் ராஷ்ட்ர சமிதி, லோக் ஜன்சக்தி கட்சி (ராம் விலாஸ்), ஜனதா தளம் (யூனைடெட்),  திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) உள்ளிட்ட மேலும் எட்டு அரசியல் கட்சிகள் தலா ரூ. 10 கோடி பெற்றுள்ளன.

2024 -2025 ஆம் ஆண்டின் மற்றொரு பெரிய நன்கொடையாளர் என்றால் அது மேகா எஞ்ஜினியரிங் அண்ட் இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர்ஸ் லிமிடெட் (MEIL) ஆகும். இந்த நிறுவனம் ப்ரூடெண்ட் தேர்தல் அறக்கட்டளைக்கு ரூ. 175 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளது.  

தேர்தல் அறக்கட்டளைகளுக்கு நன்கொடையளித்த குழுமங்கள் விவரம்:

மகிந்திரா குழுமம் –  ரூ. 160 கோடி

ஓ.பி. ஜிந்தால் குழுமம் –  ரூ. 157 கோடி

டி.எல்.எஃப்  –  ரூ. 100 கோடி

அசோக் லேலண்ட் – ரூ. 100 கோடி


source https://tamil.indianexpress.com/india/big-donors-to-electoral-trust-read-full-story-10930054