/indian-express-tamil/media/media_files/2025/12/23/assam-violence-2025-12-23-21-14-45.jpg)
அசாமில் கலவரம்: ஐ.பி.எஸ் அதிகாரிகள் காயம், கடைகளுக்குத் தீவைப்பு; இணைய சேவை துண்டிப்பு
அசாம் மாநிலத்தின் கர்பி ஆங்லாங் மற்றும் மேற்கு கர்பி ஆங்லாங் மாவட்டங்களில் மீண்டும் வன்முறை வெடித்ததை அடுத்து, செவ்வாய்க் கிழமை மாலை முதல் மொபைல் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. கேரோனி பகுதியில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் உட்பட 38 போலீசார் காயமடைந்துள்ளனர்.
வன்முறை பின்னணி என்ன?
கர்பி பழங்குடியின அமைப்புகள் நீண்டகாலமாக கோரிக்கையை முன்வைத்து வருகின்றன. கர்பி ஆங்லாங் தன்னாட்சி கவுன்சில் எல்லைக்கு உட்பட்ட அரசு மேய்ச்சல் நிலங்களில் அத்துமீறி குடியேறியுள்ள பீகார் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த குடும்பங்களை வெளியேற்ற வேண்டும் என்பதே அக்கோரிக்கை. இதனை வலியுறுத்தி மேற்கு கர்பி ஆங்லாங்கின் பெலங்பி பகுதியில் கடந்த 2 வாரங்களாக 9 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். திங்கட்கிழமையன்று, உண்ணாவிரதம் இருந்தவர்களை மருத்துவ சிகிச்சைக்காக போலீசார் வலுக்கட்டாயமாக குவஹாத்திக்கு அழைத்துச் சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் வன்முறையில் இறங்கினர்.
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க
திங்கட்கிழமை தொடங்கிய மோதல், செவ்வாய்க்கிழமை மாலை மீண்டும் தீவிரமடைந்தது. போராட்டக்காரர்கள் சந்தைப் பகுதியில் இருந்த கடைகளுக்குத் தீ வைத்தனர். கடைகளிலிருந்து சிலிண்டர்களை வெளியே இழுத்துப் போட்டு வெடிக்கச் செய்ததாகவும், அம்புகள் மற்றும் கற்களை கொண்டு போலீசாரைத் தாக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
இதுகுறித்து சம்பவ இடத்தில் இருந்த அசாம் டிஜிபி ஹர்மீத் சிங் கூறுகையில், நான் மக்களிடம் நேரடியாகப் பேசச் சென்றேன். ஆனால் போராட்டக்காரர்கள் போலீசாரை இருபுறமிருந்தும் தாக்குகிறார்கள். கடைகளைச் சேதப்படுத்த மாட்டோம் என்று கூறிவிட்டு, இப்போது சிலிண்டர்களை வெடிக்கச் செய்கிறார்கள். வன்முறை மூலம் எந்தத் தீர்வும் கிடைக்காது என்றார்/
அரசின் நடவடிக்கை மற்றும் பேச்சுவார்த்தை
வன்முறை பரவாமல் தடுக்கவும், வதந்திகள் பரவுவதைத் தவிர்க்கவும் உள்துறை அமைச்சகம் இணைய சேவையை உடனடியாக முடக்கியுள்ளது. முன்னதாக, மாநில அமைச்சர் ரனோஜ் பெகு போராட்டக்காரர்களைச் சந்தித்துப் பேசினார். இந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து உண்ணாவிரதத்தைக் கைவிட போராட்டக்காரர்கள் ஒப்புக் கொண்டனர்.
அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில், கர்பி ஆங்லாங் தன்னாட்சி கவுன்சில் மற்றும் போராட்டக்காரர்களுக்கு இடையேயான முத்தரப்பு பேச்சுவார்த்தை வரும் டிசம்பர் 26-ஆம் தேதி நடைபெற உள்ளது. இருப்பினும், அமைச்சர் அந்தப் பகுதியை விட்டு வெளியேறிய சில மணி நேரங்களிலேயே மீண்டும் வன்முறை வெடித்தது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
source https://tamil.indianexpress.com/india/violence-worsens-in-assams-karbi-anglong-ips-officers-injured-shops-set-on-fire-internet-snapped-10941934





