ஞாயிறு, 18 அக்டோபர், 2026

மீண்டும் 'அமைதிப் பத்திரம்' எழுதிக் கொடுக்க நேர்ந்தது ஏன்? சட்டம் சொல்வது என்ன?

 source https://tamil.indianexpress.com/explained/abhijeet-dipke-peace-bond-jantar-mantar-protest-preventive-detention-laws-india-12686307





டெல்லி காவல்துறையின் தடுப்புக்காவல் நடவடிக்கை: CJP அபிஜித் திப்கேவிடம் மீண்டும் அமைதிப் பத்திரம் பெறப்பட்டது ஏன்?

டெல்லி கான்நாட் பிளேஸில் கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 16) நடைபெறவிருந்த "லெஹ்ரா தோ திரங்கா" (தேசியக் கொடியை ஏந்துவோம்) பேரணிக்குச் சென்ற வழியில், அகில இந்திய மாணவர்கள் சங்க (AISA) தலைவர் நேஹா போரா, மண்டி ஹவுஸ் பகுதியில் காவலில் எடுக்கப்பட்டார். பேரணிக்கு முன்பாக, காக்ரோச் ஜனதா கட்சி தலைவர் அபிஜித் தீப்கேவையும் டெல்லி காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் காவலில் எடுத்தது.

காவல்துறையின் நியாயமான உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிய மறுப்பவர்களைக் அப்புறப்படுத்த அனுமதிக்கும் டெல்லி காவல்துறைச் சட்டம், 1978 பிரிவு 65-ன் கீழ் காவலில் வைக்கப்பட்ட நேஹா போரா, சனிக்கிழமை அதிகாலை நடைமுறைகள் முடிந்து விடுவிக்கப்பட்டார்.

ஆனால், பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) சட்டத்தின் பிரிவுகள் 126 மற்றும் 170-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட அபிஜித் தீப்கே, சனிக்கிழமை மாலை வரை காவலில் வைக்கப்பட்டார். பின்னர் மந்திர் மார்க்கில் உள்ள சிறப்பு நிர்வாக நடுவரிடம் ஆஜர்படுத்தப்பட்டு, மற்றொரு 'அமைதிப் பத்திரத்தில்' கையெழுத்திட்ட பிறகே விடுவிக்கப்பட்டார்.

ஜந்தர் மந்தர் பகுதிக்குள் அனுமதியின்றி நுழைந்து தேசியக் கொடியை ஏந்தியதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ள சி.ஜே.பி தலைவர்கள் அசுதோஷ் ரங்கா மற்றும் சௌரவ் தாஸ் ஆகியோரின் கைது நடவடிக்கையைக் கண்டித்து இந்தப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தாஸ் மற்றும் ரங்கா ஆகியோர் காவல் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மற்றொரு நிர்வாகி அஜின்யா ஷிண்டே ரூ.5,000 பிணையில் விடுவிக்கப்பட்டார்.

முன்னதாக, அக்டோபர் 11-ஆம் தேதி அபிஜித் தீப்கே ரூ.50,000 பிணைத் தொகையில் ஒரு ஆண்டுக்கு அமைதியைப் பேணுவதாகக் கூறி அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட்டிருந்தார். இருப்பினும், வெறும் ஆறே நாட்களில் மீண்டும் ஒருமுறை கைது செய்யப்பட்டு, மற்றொரு அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட வைக்கப்பட்டார்.

போராட்டங்களின் பின்னணி 

தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடவடிக்கைக்கு எதிராக, அபிஜித் தீப்கே அக்டோபர் 10 அன்று டெல்லியில் திரளுமாறு அழைப்பு விடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து டெல்லி காவல்துறை பலத்த கட்டுப்பாடுகளை விதித்தது.

அக்டோபர் 10: டெல்லி வந்தடைந்ததுமே தீப்கே, தாஸ் மற்றும் ரங்கா ஆகியோர் முன்னெச்சரிக்கையாகக் கைது செய்யப்பட்டு, தலா ரூ.50,000 அமைதிப் பத்திரம் அளித்த பின் விடுவிக்கப்பட்டனர்.

அக்டோபர் 14: போராட்டக் களமாக அறிவிக்கப்படாத ஜந்தர் மந்தரில் நுழைந்ததாக தாஸ் மற்றும் ரங்கா மீண்டும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

அக்டோபர் 16: கான்நாட் பிளேஸ் பேரணிக்கு முன்பாக நேஹா போரா மற்றும் திப்கே காவலில் எடுக்கப்பட்டனர். தீப்கே இரண்டாவது முறையாகப் பத்திரம் எழுதித் தந்த பின் விடுவிக்கப்பட்டார்.

அமைதிப் பத்திரம் (Peace Bond) என்றால் என்ன?

பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) சட்டத்தின் கீழ் அமைதிப் பத்திரம் என்பது பொது அமைதியையும் நல்லொழுக்கத்தையும் பேணுவதற்காக அளிக்கப்படும் ஒரு சட்டப்பூர்வமான உறுதிமொழியாகும். இது ஒரு குற்றத்திற்கு வழங்கப்படும் தண்டனை அல்ல; மாறாக, அசம்பாவிதங்களைத் தடுப்பதற்காக எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்.

அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட்டவரை மீண்டும் கைது செய்ய முடியுமா?

அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திடுவது கைது நடவடிக்கையிலிருந்து முழு விலக்கு அளிக்காது.

பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) பிரிவு 170-ன் கீழ், ஒருவர் பிணையில் வர முடியாத குற்றம் செய்யத் திட்டமிடுவதாகக் காவல்துறை கருதினால், அவரை மீண்டும் முன்னெச்சரிக்கையாகக் கைது செய்ய முடியும்.

முந்தைய அமைதிப் பத்திரத்தின் விதிகளை ஒருவர் மீறிவிட்டார் என்பது நிரூபணமானால், (BNSS) பிரிவு 141(1)(b)-ன் கீழ் அந்தப் பத்திரத்தின் காலம் முடியும் வரை அவரைக் காவலில் வைக்க நடுவர் உத்தரவிடலாம்.

தீப்கே விஷயத்தில், அக்டோபர் 16 போராட்டத்தைத் தொடரக் கூடாது என்று காவல்துறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. எனினும், இது முந்தைய பத்திரத்தை மீறியதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையா அல்லது புதிய அசம்பாவிதத்தைத் தடுப்பதற்கானதா என்பது இன்னும் தெளிவாக விளக்கப்படவில்லை.

தீப்கே மீண்டும் மற்றொரு பத்திரத்தில் கையெழுத்திட நேர்ந்தது ஏன்?

பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) பிரிவு 126-ன் கீழ், ஒருவர் பொது அமைதிக்குப் பங்கம் விளைவிப்பார் என நம்பத் தகுந்த காரணம் இருந்தால், நிர்வாக நடுவர் விசாரணை நடத்த உத்தரவிடலாம்.

விசாரணை நிலுவையில் இருக்கும்போதே அவசர நடவடிக்கை தேவைப்பட்டால், இடைக்கால அமைதிப் பத்திரத்தைப் பெறுவதற்குச் சட்டத்தில் இடமுள்ளது. விசாரணை முடிவில் தேவைப்பட்டால் நிலையான அமைதிப் பத்திரத்தைப் பெறலாம்; இல்லையெனில் அவரை விடுவிக்கலாம். தீப்கேவிடம் பெறப்பட்ட இரண்டாவது பத்திரம் இடைக்கால நடவடிக்கையா அல்லது விசாரணைக்குப் பின் பெறப்பட்டதா என்பது நிர்வாக நடுவரின் முழுமையான உத்தரவு வந்த பிறகே தெரியவரும்.

நேஹா போரா விடுவிக்கப்பட்டது எப்படி?

நேஹா போரா டெல்லி காவல்துறைச் சட்டத்தின் கீழ் காவலில் எடுக்கப்பட்டார். காவல்துறையின் நியாயமான உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியாதவர்களை அப்புறப்படுத்த பிரிவு 65 அனுமதிக்கிறது. சூழல் சரியானதுமே அவர்களை 24 மணி நேரத்திற்குள் விடுவிக்க வேண்டும் அல்லது நடுவரிடம் ஆஜர்படுத்த வேண்டும்.

இந்தச் சட்டப் பிரிவை மீறுபவர்களுக்கு அதிகபட்சமாக 50 ரூபாய் மட்டுமே அபராதம் விதிக்க முடியும் என்பதால், அவர் முறையான நடைமுறைகளுக்குப் பின் உடனடியாக விடுவிக்கப்பட்டார்.