சனி, 30 ஜூன், 2018

கங்கை நீர்


பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு


  • பெட்ரோல் 
    ₹ 78.40 /Ltr
  • டீசல் 
    ₹ 71.12 /Ltr

மருந்துப் பொருட்களுக்கான ரசாயனத் தயாரிப்பு ஆலையை மூட உத்தரவு! June 29, 2018

Image


உதகை அருகே செயல்பட்டு வந்த மருந்துப் பொருட்களுக்கான ரசாயனத் தயாரிப்பு ஆலையை மூட தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

உதகை அருகே உள்ள சாண்டிநல்லாவில், ஸ்டெர்லிங் பயோடெக், என்ற தொழிற்சாலையில், எலும்புகளை கொண்டு மருந்துகளுக்கான ரசாயன மூலப்பொருள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் உருவாகும் ரசாயனக் கழிவுகளை முறையாக சுத்திகரிப்பு செய்யாமல், அருகில் உள்ள பைக்காரா மற்றும் காமராஜர் சாகர் அணைகளுக்கு நீண்ட காலமாக திறந்துவிடபட்டுள்ளது. 

இதனால் கடுமையான துர்நாற்றம் வீசியதால், சாண்டிநல்லா மற்றும் அதனை சுற்றி உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடுமையாக பாதிக்கபட்டு வந்தனர். மேலும், ஏராளமானோருக்கு தோல் மற்றும் சுவாசம் சம்பந்தபட்ட நோய்களும் ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதனால் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரா மக்களும், சுற்றுசூழல் ஆர்வலர்களும் தொழிற்சாலையை மூட கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். 

இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு தொழிற்சாலையை ஆய்வு செய்த தமிழக மாசு கட்டுபாட்டு துறை அதிகாரிகள், ரசாயன கழிவுகளை சுத்திகரிக்க சுத்திகரிப்பு நிலையம் அமைக்குமாறு ஆலை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர். 

ஆனால் 8 கோடி ரூபாய் மதிப்பில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஆலை நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது. இதனையடுத்து அந்த ஆலையை மூட, தமிழக மாசுகட்டுபாட்டு துறை உத்தரவிட்டுள்ளது. 

அதற்கான ஆணையை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்ததுடன் முதற்கட்டமாக ஆலைக்கு வழங்கபட்டுள்ள மின் இணைப்பையும் துண்டிக்க உத்தரவிட்டது. இந்த நடவடிக்கைக்கு பொதுமக்களும், சுற்றுசூழல் ஆர்வலர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

உலகின் செல்வந்தர்கள் தங்களது பணத்தை ஸ்விஸ் வங்கியில் செலுத்துவது ஏன்? June 30, 2018

Image



உலகின் செல்வந்தர்கள் தங்களது பணத்தை ஸ்விஸ் வங்கியில் செலுத்துவது ஏன்?  எந்த நாட்டிலும் இல்லாத நம்பகத்தன்மை ஸ்விஸ் வங்கி மீது மட்டும் ஏன் வந்தது குறித்து அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு.

பாஜக 2014ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த பிறகு கருப்பு பணத்தை ஒழிக்க பல்வேறு அதிரடி நடவடிக்ககளை எடுத்து வருவது நாடே அறிந்தததே - இந்த இலக்கை குறிக்கோளாக கொண்டு நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பாஜக அரசுக்கு பெருத்த இடியாக அமைந்துள்ளது, ஸ்விஸ் வங்கி தற்போது லேட்டஸ்டாக வெளியிட்டுள்ள அறிக்கை. 

கடந்த ஆண்டு இந்தியர்கள் செலுத்திய தொகை 2016-ம் ஆண்டை விட  50 சதவீதம் அதிகரித்திருப்பதாக ஸ்விஸ் வங்கி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 2017-ம் ஆண்டு கணக்குப்படி ஸ்விஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் சுமார் 7000 கோடி ரூபாய் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் ஸ்விஸ் வங்கியில் அந்நாட்டவர் மற்றும் பிற நாட்டவர்கள் டெபாசிட் செய்திருக்கும் மொத்த தொகை 100 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏன் ஸ்விட்சர்லாந்திலுள்ள வங்கியில் உலகின் கோடீஸ்வரர்கள் தங்களது பணத்தை டெப்பாசிட் செய்கிறார்கள் ?

பணத்தை டெபாசிட் செய்பவர்கள் பற்றிய விவரங்களை அந்த வங்கி எந்த ஒரு காரணத்திற்காகவும் வெளியிடாது என்ற கொள்கையை பின்பற்றி வருவதுதான் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கபடலாம். ஆனால், ஸ்விஸ் அரசு மீதுள்ள நம்பகத்தன்மை தான் உலகின் அனைத்து பணக்காரர்களையும் அந்நாட்டு வங்கியில் பணத்தை டெபாசிட் செய்ய வைப்பதற்கான முதன்மை காரணம்.  

15ம் நூற்றாண்டுக்கு பிறகு ஒரு முறை கூட போர் புரியாத நாடு ஸ்விட்சர்லாந்து. நிலையான அரசு, நிலையான பொருளாதாரம் என எந்தவித சலனமுமின்றி செயல்பட்டு வருகிறது. மேலும் சர்வதேச சந்தையில் ஸ்விஸ் கரன்சியான ஃபிராங் எந்தவித ஏற்ற இறக்குமின்றி நிலையான மதிப்புடன் இருந்து வருகிறது. இவை அனைத்தும் உலகின் பணக்காரர்களை ஸ்விஸ் வங்கியை நம்ப வைத்துள்ளது 

இப்படி இருக்கும் நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கருப்புப் பணம் குறித்த தகவல்கள் தொடர்பாக இந்திய அரசுக்கும், ஸ்விஸ் வங்கிக்கும் இடையே ஒரு  ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் படி 2018ம் ஆண்டு முதல் ஸ்விஸ் வங்கியில் கருப்புப் பணம் செலுத்தும் இந்தியர்கள் குறித்து விவரங்கள் இந்திய அரசுக்கு கொடுக்க வேண்டும்.
 
இந்நிலையில் ஸ்விஸ் வங்கியில் டெபாசிட் செய்யப்படும் பணம் அனைத்தும் கருப்புப்பணம் கிடையாது என்றும் இந்தியர்கள் யாரேனும் கருப்புப் பணத்தை டெப்பாசிட் செய்திருந்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். எனினும் ஒரே ஆண்டில் 50 சதவீதம் வரை இந்தியர்கள் செலுத்திய தொகை அதிகரித்திருப்பது எளிதில் கடந்து செல்லக்கூடிய விஷயமல்ல என்பதே பொருளாதார நிபுணர்களின் கருத்தாக உள்ளது. 

வெள்ளி, 29 ஜூன், 2018

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவது தாமதமாவது குறித்து ப.சிதம்பரம் கருத்து! June 29, 2018

Image


உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க அதிகாரிகளே போதும் என்றால் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியையே அமல்படுத்திவிடலாம் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் விமர்சித்துள்ளார்.  

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவது தாமதமாவது குறித்து டிவிட்டர் பக்கத்தில் தனது ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ள சிதம்பரம், அதிமுகவிற்கு மக்கள் பிரதிநிதிகள் ஆட்சி மீது நம்பிக்கை இல்லை என்றால் தமிழ்நாடு அரசில் அமைச்சர்கள் எதற்கு எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.  

தமிழக அரசை ஏன் மக்கள் பிரதிநிதிகள் நடத்த வேண்டும்? என்றும் சிதம்பரம் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். தமிழக அமைச்சர்கள் பதவி விலகி குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற வழிவகுக்கலாமே என்றும் சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

நச்சுக்காற்றை சுவாசிக்கிறதா இந்தியா? June 29, 2018

Image

இந்தியா முழுவதும் ஃபார்மாலிடிஹைட் எனும் நச்சுத்தன்மை கொண்ட வாயு நிறைந்திருப்பதாக ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இதய நோய், புற்றுநோய், ஆஸ்துமா போன்ற நோய்கள் இந்தியாவில் அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணமாக காற்று மாசு பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியா மேல் பரவி இருக்கும் காற்றில் உள்ள மாசு குறித்த அதிர்ச்சி புகைப்படம் ஒன்றை ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா முழுவதும் நச்சுத்தன்மை வாய்ந்த ஃபார்மாலிடிஹைட் எனும் வாயு நிறைந்திருப்பது தெரியவந்துள்ளது. 

வளிமண்டலத்தில் பெரும்பாலும் நைட்ரஜன் மற்றும் மனிதர்கள் சுவாசிக்கும் ஆக்சிஜன் வாயுக்கள் தான் அதிகம் உள்ளன. அவற்றுடன் ஒப்பிடுகையில் ஃபார்மால்டிஹைட்டின் அளவு மிகவும் குறைவானதே, எனினும் சிறிய அளவு என இதை கண்டுகொள்ளாமல் இருந்துவிட முடியாது என்றும், ஃபார்மால்டிஹைட்டினால் ஏற்படும் விளைவுகள் ஆபத்தானவை என்றும் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்

தாவரங்கள், காற்று மாசு, காட்டுத்தீ போன்றவற்றால் உருவாகும் ஃபார்மால்டிஹைட் வாயுவினால், கண்கள், மூச்சக்குழாயில் எரிச்சல் ஏற்படும். மேலும் ஆஸ்துமா போன்ற சுவாசம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவிலுள்ள கிராமப்புறங்களில் சமையலுக்காக எறிக்கப்படும் விறகுகள், அறுவடை முடிந்தவுடன விவசாய நிலங்களை எறிப்பதன் மூலமாக அதிகளவில் காற்றில் ஃபார்மால்டிஹைட் பரவுவதாக கூறப்பட்டுள்ளது

சில தினங்களுக்கு முன்பு அதிகரிக்கும் காற்று மாசை கண்காணிப்பதற்காக, செயற்கை கோள் மூலம் தரவுகளை சேகரித்து அதனை தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக, மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் அறிவித்திருந்தது. 

இந்நிலையில் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் ஒரு எச்சரிக்கை மணியாகவே பார்க்க வேண்டியுள்ளது. ஃபார்மால்டிஹைட்டின் அளவு காற்றில்  மேலும் அதிகரித்தால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 

அதிகரிக்கும் உயிரிழப்புகள், அதிர்ச்சி தரும் செயற்கைகோள் தரவுகள் என அனைத்து காற்று மாசை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அரசு இருப்பதை உரக்க சுட்டிக்காட்டுகிறது. இந்த பிரச்னையை  அவசரகதியாக அணுகி, உடனடியாக தேவையான நடவடிக்கைகளை அரசு அமல்படுத்தினால் தான் இதற்கான தீர்வை நோக்கி பயணிக்க முடியும்.

வியாழன், 28 ஜூன், 2018

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள பசுமை பை விற்பனை! June 28, 2018

Image


தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் தடை என்ற அறிவிப்பை அடுத்து கோவையில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றான பசுமை பைகளின் விற்பனை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பசுமை அங்காடியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு ஏதுவாக தயாரிக்கப்பட்டுள்ள துணி பைகள்,  மண்ணில் மக்க கூடிய பிளாஸ்டிக் இல்லாத பசுமை பைகள், பேனா, பல் துலக்கும் பிரஸ் போன்றவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை என்ற தமிழக அரசின் அறிவிப்பை தொடர்ந்து பசுமை பைகளை வாங்கும் வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கின்றனர். 
  
மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளை கட்டுப்படுத்துவதே 
அரசிற்கு சவாலாக இருக்கும் நிலையில் இந்த பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக கொண்டு 
வந்துள்ள பயோ பைகள் எனப்படும் பசுமை பைகளுக்கே மவுசு அதிகரித்து வருவதாக 
அங்காடி பணியாளர்கள் தெரிவித்தனர். மக்காச்சோளம், கப்பை கிழங்கு மற்றும் காய்கறிகள் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த பைகள் மண்ணில் போட்டால் மூன்று மாதத்தில் மக்கிவிடும் 
என்றும் அவர்கள் கூறினர். 

அந்த பையில் கொடுக்கப்பட்டுள்ள நிறங்கள் அனைத்திலும் ரசாயனம் இல்லை என்றும் தெரிவிக்கின்றனர். இந்த பைகள் சுடுநீரில் கரையும் தன்மையுடையதாகவும், நெருப்பில் எரித்தால் சாம்பலாகவும் மாறும் தன்மை கொண்டதாகவும் உள்ளது. 

சுற்றுச்சூழல் மீதான அக்கறையோடும், பிளாஸ்டிக் பைக்களை தவிர்க்கும் நோக்கில் 
கோவையில் உள்ள பெரிய உணவகங்கள், சில நிறுவனங்கள் பிளாஸ்டிக் பைக்கு மாற்றான 
இந்த பயோ பைகளை உபயோகிக்க முன்வந்துள்ளனர். சமுதாயத்தில் சுற்றுச்சூழலை 
பாதுகாப்பதில் நமது கடமை என்பதை உணர்த்தும் வகையில் பசுமை பைகளை மட்டுமே 
பயண்படுத்துவதாகவும் உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். 
 
இயற்கை மூலப்பொருட்களை கொண்டு பசுமை பைகளை தயாரித்து விற்கமுடியும் என்றும், 
பிளாஸ்டிக் பை தயாரிப்போர்கள், அவர்கள் தற்போது பயன்படுத்தும் இயந்திரங்கள் மூலம் பசுமை பைகளை தயாரிக்க இயலும் என்றும் தெரிவிக்கின்றனர்.

பிளாஸ்டிக் பைகளுக்கான மாற்று பைகளை உபயோகித்து மாற்றத்தை நோக்கி அடியெடுத்து 
வைத்துள்ள கோவை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு அதிகரிக்க அரசு சார்பிலும் 
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வணிக நிறுவனங்களும், தனிநபர்களும் அதற்கு 
ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே பிளாஸ்டிக் இல்லா நகரை உருவாக்க முடியும் என்பதும் பலரின் கருத்தாக உள்ளது.

இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா..! June 28, 2018

வரும் நவம்பர் மாதத்திற்குள், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டும் என, அமெரிக்கா புதிதாக ஒரு எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. கச்சா எண்ணெய் தேவை அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில், 125 கோடி மக்கள் கொண்ட இந்தியா இதனை எப்படி கொள்ளப் போகிறது ?

சர்வதேச பொருளாதார வளர்ச்சியில்  அடுத்த சில ஆண்டுகளில்  அமெரிக்காவை சீனா விஞ்சி விடும் என்பது, உலக வங்கி, பன்னாட்டு நிதியம் போன்ற அமைப்புகளின் கணிப்பு.சீனாவுடன் போட்டிப்போட்டுக்கொண்டு, இந்தியாவும் வளர்ச்சி கண்டு, ஆசிய பிராந்தியத்தில் இருபெரும் வல்லரசுகளாக உருவெடுத்து வருகின்றன. இது, தற்போது முதல் இடத்திலுள்ள அமெரிக்காவுக்கு கலக்கத்தை ஏற்படுத்த, அந்நாடு மறைமுக வர்த்தகப்போரை திணிக்கும் நடவடிக்கைளில் இறங்கியுள்ளது என்றே சொல்லலாம்.  

1,300 சீனப் பொருட்களுக்கு திடீரென 25 சதவீத அதிக வரி என அறிவித்த அமெரிக்கா அடுத்ததாக, தங்கள் நாட்டில் இறக்குமதி செய்யப்படும் எஃகு,  அலுமினியப் பொருட்கள் மீதும் அதிரடியாக வரிகளை விதித்தது. இதனால் அதிர்ச்சி போன ஐரோப்பிய நாடுகளும், இந்தியாவும், சீனாவும் தங்கள் பங்கிற்கு அமெரிக்காவின் பொருட்கள் மீது வரிகளை  வாரி வீசத் தொடங்கி உள்ளன. எந்நாட்டுடனும் வர்த்தக போரை திணிக்கவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வந்தாலும், சர்வதேச வணிகத்தில் பிற நாடுகளின் வர்த்தகங்களை, அமெரிக்கா முடக்கும் செயலாகவே, இது பார்க்கப்படுகிறது. 

தற்போது, ஈரானை தனிமைப்படுத்துவதாகக் கூறி, அந்நாட்டிடமிருந்து, எந்த ஒரு நாடும் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யக்கூடாது என புதிதாக ஒரு மிரட்டலை விடுத்திருக்கிறது அமெரிக்கா. நவம்பர் மாதத்திற்குள் ஈரானிடம் இருந்து இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், இல்லையெனில், அந்நாடுகள் மீது பொருளாதார தடைகள் பாயும் என்றும் எச்சரித்திருக்கிறது.
Image
நம் நாட்டில் கச்சா எண்ணெய்யின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த சூழலில், 125 கோடி மக்கள்  தொகை கொண்ட இந்தியா, இதனை எப்படி எதிர்க்கொள்ளப்போகிறது என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.  ஈராக், சவுதி அரேபியாவை தொடர்ந்து,  கச்சா எண்ணெய் தேவையில் ஈரானையே இந்தியா பெரிதும் நம்பியிருக்கிறது.  ஏற்கனவே பெட்ரோலிய பொருட்களின் விலை இந்தியாவில் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ள வேளையில், ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதிக்கு டிரம்ப் அரசு முட்டுக்கட்டை போடுவது, புஷ், ஓபாமா போன்ற முன்னாள் அதிபர்கள் வளர்த்தெடுத்த இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்படுத்தும் என்பது வெளியுறவுத்துறை நிபுணர்களின் கருத்தாகவே உள்ளது.

வர்த்தக வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருக்கும் சரக்குப்போக்குவரத்திற்கான எரிபொருட்களுக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, இந்தியாவின் வளர்ச்சியை  அமெரிக்கா தடுக்க நினைக்கிறதா? என்ற கேள்வியும் எழத்தான்  தோன்றுகிறது.  எதிர்கால மின்சார தேவைக்காக அணு சக்தி ஒப்பந்தம் கை நழுவிப்போகாமல் இருக்க, அமெரிக்காவின் உத்தரவுகளை ஏற்று,  கச்சா எண்ணெய் இறக்குமதியில் மாற்று ஏற்பாடுகளை இந்தியா செய்யுமா?.. இதை இந்தியா எப்படி எதிர்கொள்ளப்போகிறது ?என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

அதிபராக டிரம்ப் பதவியேற்ற நாள் முதல், அமெரிக்காவின் வளர்ச்சியை நிலை நிறுத்துவதாக சொல்லிக்கொண்டு, பிற நாடுகளுடனான, அதுவும் வளரும் நாடுகளுடனான வர்த்தக,  வெளியுறவு கொள்கைகளில் முரண்பாடான, பாதகமான முடிவுகளை எடுப்பது,  சர்வதேச அளவில் சதிகார பிம்பத்தை அமெரிக்கா மீண்டும் ஆணித்தரமாக வெளிப்படுத்துவதாகவே தெரிகிறது.

தமிழக அரசு உரிய ஒத்துழைப்பு அளிப்பதில்லை!” : பொன்.மாணிக்கவேல் ஐ.ஜி June 27, 2018

சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தது. மேலும் கோயில்களில் உள்ள சிலைகள் பாதுகாப்பு தொடர்பாக 21 வழிமுறைகளை வழங்கி இருந்தது. 
Image

இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது, சிலைகளை பாதுகாப்பாக வைக்க பாதுகாப்பு அறைகள் அமைப்பது தொடர்பாக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் குற்றம்சாட்டினார்.

அதற்கு அரசு தரப்பில், கோயில்கள் புனரமைப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் பாதுகாப்பு அறை கட்டுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது. 

இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கோயில்களில் சிலைகள் பாதுகாப்பு அறை அமைப்பது தொடர்பாக அறிக்கையை ஜூலை 11-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரித்தார்.

மேலும் சிலை கடத்தல் தடுப்பு சிறப்புக்குழுவில் இடம் பெற்றுள்ள அதிகாரிகளை அரசு தமக்கு தெரியாமலும், நீதிமன்றத்தில் அனுமதி பெறாமலும் பணியிட மாற்றம் செய்வதாகவும், நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்த அரசு முழு ஒத்துழைப்பு தரவில்லை எனவும் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் குற்றம்சாட்டினார். 

இதைக் கேட்ட நீதிபதி, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவில் இடம் பெற்றவர்களை  நீதிமன்ற அனுமதியின்றி பணியிட மாற்றம் செய்திருப்பது கண்டனத்துக்குரியது என்றார். தொடர்ந்து இதுபோல் செயல்பட்டால் டி.ஜி.பி நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனவும் நீதிபதி எச்சரித்தார். மேலும், வழக்கு விசாரணையை ஜூலை 11 ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.


ஏழைகளின் தேசமா இந்தியா? June 28, 2018

Image

வளர்ந்து வரும் நாடு எனக்கூறப்படும் இந்தியா வறுமையால் பாதிக்கப்பட்டவர்களை அதிகம் கொண்ட நாடு என ஆய்வு முடிவுகள் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகில் கடுமையான வறுமையால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

இப்பட்டியலில் 8 கோடியே 7 லட்சம் பேருடன் ஆப்பிரிக்க நாடான நைஜீரியா முதலிடத்தில் உள்ளது. 

உலகளவில் 8.5 சதவீதம் மக்கள் கடுமையான வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக, ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் 7 கோடியே 2 லட்சம் பேர் வறுமையினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

நாள் ஒன்றுக்கு 140 ரூபாய்க்கும் கீழ் சம்பாதிப்பவர்கள் மிகவும் வறுமையில் உள்ளவர்கள் என உலக வங்கி மதிப்பீடு செய்துள்ளது.

இதுதொடர்பாக, அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் காரணமாக, 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் நிலவும் கடுமையான வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும் என கூறப்படுகிறது

புதன், 27 ஜூன், 2018

திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு! June 27, 2018

Image


ஆளுநர் ஆய்வு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் விளக்கமளிக்காததை அடுத்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். 

சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்த பின் பேசிய எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் மாளிகையில் இருந்து வந்த அறிக்கை குறித்து பேசினார். அப்போது, ஆளுநர் மாவட்ட அதிகாரிகளை சந்திப்பதில் சட்டத்தில் தடை இல்லை எனவும், தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் மூலம் ஆய்வுக்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். 

தலைமை செயலாளரிடம் ஒப்புதல் பெற்றுதான் ஆளுநர் ஆய்வு நடத்துகிறாரா, இது முதலமைச்சருக்கு தெரிந்திருந்தால் அதனைப் பற்றி அவர் விளக்கமளிக்க வேண்டும் என ஸ்டாலின் கோரினார். ஆளுநர் சுற்றுப்பயணம் சாதாரண ஒன்று எனக் கூறிய சபாநாயகர், அதனை விவாத பொருளாக மாற்ற தேவையில்லை என தெரிவித்தார். 

முதல்வர், துணை முதல்வர் பதிலளிக்க வேண்டியது தொடர்பாக தானே முடிவு செய்ய வேண்டும் என்றும் சபாநாயகர் கூறினார். இதனால் திமுக, காங்கிரஸ் கட்சியினர் ஸ்டாலின் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்

கனடாவின் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படும் என அறிவிப்பு! June 27, 2018

Image

கனடாவின் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்களுக்காக, தமிழ் இருக்கை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் உள்ள 7 செம்மொழிகளில் முக்கியமானதாக விளங்கும் தமிழ் மொழிக்கு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் கனடாவில் உள்ள டொரண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

டொரண்டோ பல்கலைக்கழகத்தின் ஸ்கார்பரோ வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பல்கலைக்கழகத்தின் முதல்வர் ப்ரூஸ் கிட், இதற்கான அறிவிப்பை முறைப்படி வெளியிட்டார். பல மொழிகளுக்கு மொழியியல் கட்டமைப்பை உருவாக்க வழிகாட்டும் தமிழ் மொழி, இலக்கியம், பாரம்பரியத்தில் மிக உயர்ந்தது என அப்போது அவர் புகழாரம் சூட்டினார். இந்த நிகழ்ச்சியில் கனடா தமிழ் காங்கிரஸ் துணைத் தலைவரும், தமிழ் இருக்கையின் துணைத் தலைவருமான சிவன் இளங்கோ, அமெரிக்காவில் உள்ள தமிழ் சங்க நிர்வாகிகள் விஜய் ஜானகிராமன், சம்பந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தமிழ் இருக்கை அமைக்க 50 லட்சம் டாலர் தேவை என்று அறிவித்த பல்கலைக்கழகத்தின் செயல் இயக்குநர் ஜார்ஜெட் ஜிநாடி, தொடக்க விழாவில் சுமார் 6 லட்சம் டாலருக்கு மேல் நன்கொடை கிடைத்திருப்பதாகத் தெரிவித்தார். மேலும், ஆக்ஸ்போர்ட, கேம்பிரிட்ஜ் மற்றும் ஹூஸ்டன் பல்கலைக்கழகம் உட்பட ஐந்து தமிழ் இருக்கைகள் விரைவில் ஏற்படுத்தப்படும் என்றும், செம்மொழியாகிய தமிழை அடுத்து பல தலைமுறைகளுக்கு எடுத்து செல்ல இது வெற்றிகரமான முயற்சி என்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் என தகவல்! June 27, 2018

பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக, ஆய்வறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

உலகளவில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் வகிப்பதாக அதிர்ச்சிகர ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த தாம்ஸன் ராய்ட்டர்ஸ் என்ற அறக்கட்டளை, பல்வேறு நாடுகளை சேர்ந்த 548 பேரிடம் இதுக்குறித்த இந்த ஆய்வை நடத்தியது.

பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல்கள், பெண்ணடிமைத்தனம், பெண்களுக்கு எதிரான கலாச்சார நடைமுறைகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வானது நடத்தப்பட்டது.

ஆய்வில் இந்தியா முதலிடத்திலும், ஆஃப்கானிஸ்தான் 2 வது இடத்திலும், 3 வது இடத்திலும் சிரியாவும் உள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பெண்கள் பாதுகாப்பு குறித்த இதே ஆய்வின்போது, இந்தியா 4ஆவது இடத்தில் இருந்தது. 

ஆப்கானிஸ்தான், காங்கோ, பாகிஸ்தான் ஆகியவை முறையே முதல் 3 இடங்களை பெற்றிருந்தன.

இந்நிலையில், இந்த ஆய்வு முடிவை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. பொது இடங்களில் பேசக்கூட அனுமதி இல்லாத நாடுகளை காட்டிலும் குறைவான இடமே வழங்கப்பட்டுள்ளதாக இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், குறைவான நபர்களிடம்தான் ஆய்வு நடத்தப்பட்டுள்ளதால், இதனை ஒட்டுமொத்த நாட்டின் நிலையாக கருதிவிட முடியாது எனவும் இந்தியா விளக்கம் அளித்துள்ளது. 
http://ns7.tv/ta/tamil-news/india/27/6/2018/india-ranks-top-unsafe-countries-women

செவ்வாய், 26 ஜூன், 2018

ராமேஸ்வரத்தில் கிடைத்த ஆயுதக் குவியலின் பின்னணி பற்றிய விசாரணை தீவிரம் June 26, 2018

VIEWS
ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தில் ஆயிரக்கணக்கான துப்பாக்கித் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தோட்டாக்கள் பின்னால் உள்ள மர்மம் என்ன என்பதை கண்டறிய போலீசார் தீவிரமாகியுள்ளனர்.


Image
ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் பகுதியில் மீனவர் எடிசன் என்பவர் அவரது  வீட்டில் கழிவுநீர் தொட்டிக்கு நிலத்தை தோண்டியுள்ளார். அப்போது சிதைந்த நிலையில் 22 பெட்டிகள் கிடைத்துள்ளன. அதனால், அதிர்ச்சியடைந்த எடிசன், இது பற்றி தங்கச்சிமடம் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா தலைமையில் பெட்டிகளை திறந்து பார்த்தபோது அதில் துப்பாக்கி குண்டுகள் துருப்பிடித்த நிலையில் இருந்தன. 400 ராக்கெட் லாஞ்சர் குண்டுகள், 4000 இயந்திர துப்பாக்கி தோட்டாக்கள், 5 கை எறி குண்டுகள், 15 கண்ணிவெடிகள் இருந்தன. 

இவை அனைத்தும் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்றும், இவற்றை விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள்  பயன்படுத்திருக்கலாம் என்றும் காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.  ராமநாதபுரம் சரக டிஐஜி காமினி, வீட்டின் உரிமையாளர் எடிசனிடம் விசாரணை நடத்தி வருகின்றார். 

மேலும் ஜேசிபி மூலம் அந்த இடத்தை முழுமையாக தோண்டி ஆராயவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே துப்பாக்கித் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்தை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா நேற்றிரவு ஆய்வு செய்தார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அங்கு கைப்பற்ற பட்ட பெட்டிகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகையான துப்பாக்கி தோட்டக்கள் இருந்ததாகக் கூறினார்.  இவை எந்த நாட்டைச் சேர்ந்த தோட்டாக்கள் எப்போது மண்ணில் புதைக்கப்பட்டன என தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

ராமேஸ்வரத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆயுதக் குவியல் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் இந்த விவகாரத்தில் உள்ள மர்மம் என்ன என்பதை கண்டறிய போலீசார் தீவிரமாகியுள்ளனர்.

தபால் துறை ஊழியர்களின் அஜாக்கிரதையால் நிராகரிக்கப்பட்ட மருத்துவ விண்ணப்பம் June 26, 2018

Image

சிவகங்கையைச் சேர்ந்த மாணவர் ஒருவரின் மருத்துவக் கனவு அஞ்சல்துறை ஊழியர்களின் அலட்சியத்தால் கேள்விக்குறியாகியுள்ளது. 

விரைவு தபாலில் விண்ணப்பம்

சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் கிராமத்தைச் சேர்ந்த பாண்டிசெல்வத்தின் மகன் வசந்த், பிளஸ் 2-தேர்வில் 1125 மதிப்பெண்கள் பெற்றார். நீட் தேர்வில் 384 மதிப்பெண்கள் பெற்ற மாணவர் வசந்த், மருத்துவப்படிப்புக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, கடந்த 14-ம் தேதி காஞ்சிரங்கால் கிளை தபால் நிலையத்திலிருந்து மருத்துவ கல்வி இயக்குநகரத்திற்கு விரைவு தபாலில் அனுப்பினார். 

மாணவர் வசந்த் அதிர்ச்சி

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அளிக்க 19-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 9 நாட்கள் காலதாமதாக கடந்த 23-ம் தேதி விண்ணப்பம் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த விண்ணப்பத்தை மருத்துவக் கல்வி இயக்குநரகம் நிராகரித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர் வசந்த், சிவகங்கை ஆட்சியர் வளாக அஞ்சலகத்திற்கு சென்று விசாரித்தபோது, அஞ்சலக அதிகாரிகளின் அஜாக்கிரதையால், விண்ணப்பம் தாமதமாக சென்றது தெரியவந்தது.  

ஊழியரின் அலட்சியம்

நீட் தேர்வில் ஓ.பி.சி. பிரிவினர் 96 மதிப்பெண்கள் பெற்றாலே தேர்ச்சி என்ற நிலையில், மருத்துவப்படிப்பு எளிதில் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்த மாணவரின் கனவு, அஞ்சல ஊழியரின் அலட்சியத்தால் தகர்ந்து போயுள்ளது. மருத்துவ மாணவரின் விண்ணப்பம் தாமதமாக அனுப்பப்பட்ட விவகாரம் குறித்து விசாரனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தபால்துறை கோட்ட கண்காணிப்பாளர் சிவநாதன் தெரிவித்துள்ளார். நியூஸ் 7  தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்த அவர், ஆய்வாளர் தலைமயில் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.  

மருத்துவ கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தல்

தபால் மூலம் காலதாமதமாக அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், முன்கூட்டியே விண்ணப்பங்களை அனுப்பியதற்கான சான்றுடன் தேர்வுக்குழு தலைவரை அணுகுமாறு மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.  28-ம் தேதி மருத்துவப் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ள நிலையில், 19-ம் தேதிக்கு முன்னரே விண்ணப்பங்களை அனுப்பிய சான்றுகளை காண்பித்தால் கருத்தில் கொள்ளப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தரவரிசை பட்டியல் தயார் செய்யப்பட்ட பின் விண்ணப்பங்கள் வரும் பட்சத்தில் மாணவர்கள் நீதிமன்ற வழிகாட்டுதல் பெற்றால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று மருத்துவ கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது

திங்கள், 25 ஜூன், 2018

தமிழக ஆளுநருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தல் June 25, 2018

தமிழக ஆளுநர் வரம்பு மீறிய மிரட்டல் போக்கையும், நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொள்ள வேண்டுமென மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
Image

இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பொறுப்பேற்றது முதல் மாநில அரசை துச்சமாக கருதி அமைச்சர்களைக் கூட அரங்கிற்குள் அனுமதிக்காமல், அதிகாரிகளை அழைத்து விவாதிப்பது அவரது அதிகார எல்லையை கடந்த செயல் என கூறியுள்ளார். 

தமிழகத்தில் ஆளுநர்கள் பின்பற்றி வந்த மரபுகள், நடைமுறைகளை மீறிவரும் பன்வாரிலாலை கண்டித்து திமுக ஜனநாயக முறையில் கருப்புக்கொடி அறப்போர் நடத்திவருவதாக குறிப்பிட்டுள்ளார்.

திமுகவின் செயலால் ஆத்திரமடைந்த ஆளுநர் சட்டப்பிரிவை சுட்டிக்காட்டி 7 ஆண்டுகள் சிறையில் அடைப்போம் என கூறுவதற்கு, இங்கு ஆளுநர் ஆட்சி நடக்கவில்லை என வைகோ விமர்சித்துள்ளார். 

தமிழக தொழில்முனைவோர்கள் தன்னை சந்திக்கலாம் என எந்த சட்டப்பிரிவின் கீழ் ஆளுநர் அழைப்பு விடுத்தார் என கேட்டுள்ள வைகோ, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்  தனது வரம்பு மீறிய மிரட்டல் போக்கையும், நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொள்ள வேண்டுமென்றும் வைகோ கோரியுள்ளார்.

அச்சுறுத்தும் நோக்கில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டால் கடும் நடவடிக்கை June 25, 2018

Image

அச்சுறுத்தும் நோக்கில் ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்படுமானால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் மாளிகை எச்சரித்துள்ளது. 

ஆளுநர் பன்வாரிலாலின் சுற்றுப் பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கருப்புக் கொடி காட்டும் போராட்டங்களை நடத்தி வருகிறது. நாமக்கல்லில் கருப்புக் கொடி காட்டியவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் நேற்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், ஆளுநர் மாளிகையின் தகவல் தொடர்புத் துறையின் இணை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்வதற்கான முழு உரிமை அரசியல் சாசனப்படி ஆளுநருக்கு உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆளுநர் தனது பயணத்தின்போது, எந்த துறையை குறித்தும் குறை கூறுவதோ, உத்தரவு பிறப்பிப்பதோ இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆளுநரின் சுற்றுப் பயணம் மேற்கொள்வதைத் திரித்து ஆளுநர் ஆய்வு செய்வதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கூறி வருவது மக்களை தவறாக வழிநடத்தும் செயல் என்றும் ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவ்விஷயத்தில் ஆளுநருக்கு உள்ள சட்டப்பூர்வ அதிகாரம் குறித்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருக்கு முன்பே தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை புரிந்து கொள்ள போதுமான கால அவகாசமும் அளிக்கப்பட்டுவிட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநருக்கு உள்ள சட்ட அதிகாரத்தை தொடர்ந்து விமர்சித்து வந்தால், அது சட்டத்திற்கு கட்டுப்பட மறுக்கும் செயல் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

ஆளுநர் அலுவலகத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நோக்கில், ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்படுமானால், 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்கள் பயன்பெறும் வகையில் ஆளுநரின் சுற்றுப் பயணம் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் மாளிகையில் இருந்து வந்துள்ள அறிக்கை மிரட்டல் தொனியில் இருக்கிறது - முத்தரசன் விமர்சனம்! June 24, 2018

Image



ஆளுநர் மாளிகையில் இருந்து வந்துள்ள அறிக்கை மிரட்டல் தொனியில் இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனநாயக முறையில் அனுமதிக்கப்பட்ட போராட்டங்களில் ஈடுபடுவோரை கைதுசெய்யும் அடக்குமுறைகளை தமிழக அரசு கைவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

தமிழக ஆளுநர் தமக்கு அளிக்கப்பட்டுள்ள பொறுப்புகள், வரம்புகளை மீறி தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சி நடைபெறுவது போன்று கருதி கொண்டு  தன்னிச்சையாக செயல்பட்டு வருவதாக முத்தரசன் குற்றம்சாட்டினார். 

சென்னை-சேலம் இடையேயான பசுமை வழிச்சாலை அமைப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பல முறை வலியுறுத்தியும், அரசு தொடர்ந்து பிடிவாத போக்கை கடைபிடிப்பது நல்லதல்ல எனவும் முத்தரசன் கூறினார்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி விவசாயிகள் மேற்கொள்ள அரசு அனைத்து 
நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், உடனடியாக காவிரி மேலாண்மை ஆணையம் கூடி 
தமிழகத்திற்கு தொடர்ந்து தண்ணீர் கிடைக்கவும் குறுவை, சம்பா சாகுபடிகள் தடையின்றி நடைபெற மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஆளுநர் சட்டபடி தான் நடந்து கொள்கிறார் எதிர்கட்சிகள் புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்கின்றன என்கிற முறையில் ஆளுநர் மாளிகையின் அறிக்கை உள்ளது கவலை அளிப்பதாக உள்ளது என்றார்.
ஆளுநர் சட்டபடி தான் நடந்து கொள்கிறார் எதிர்கட்சிகள் புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்கின்றன என்கிற முறையில் ஆளுநர் மாளிகையின் அறிக்கை உள்ளது. அந்த அறிக்கை கவலைக்கும் கண்டனத்திற்கும் உரியது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

விளக்கம் என்ற பெயரில் திமுகவை ஆளுநர் மிரட்டுவதா? - மு.க.ஸ்டாலின் கண்டனம்! June 24, 2018

Image

விளக்கம்” என்ற பெயரில், ஆளுநர் மாளிகை வெளியிட்டிருக்கும் செய்தியின் மூலம், அரசியல் சட்டத்திற்கு முரணாக நேரடி அரசியல் செய்ய ஆளுநர் முயன்றிருக்கிறார் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் தொடர்பு இணை இயக்குநர் மூலம் செய்தி ஒன்றை வெளியிட்டு, அரசியல் சட்டத்திற்கு முரணாக, ஆளுநர் நேரடி அரசியல் செய்ய முயன்றிருப்பதற்கு, திமுக சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று  கூறியுள்ளார். 

ஆளுநரின் இந்த "ஆய்வு" குறித்து திமுக மட்டும் கூறவில்லை என்றும், ஆளுநரின் மாவட்டச் சுற்றுப்பயணம் குறித்துச் செய்தி வெளியிடும் பத்திரிக்கைகள் அனைத்துமே, “ஆளுநர் ஆய்வு” என்றுதான் செய்தி வெளியிட்டு வருவதாகவும், ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின், உரிமையிலும் அதிகாரத்திலும், அரசியல் சட்டத்தின் வரையறைகளுக்கு மாறாகத் தலையிட்டு, மாவட்ட அளவில் அரசு அதிகாரிகளைக் கூட்டி நடத்தும் ஆய்வுக்குத்தான் திமுக எதிர்ப்பு தெரிவிக்கிறது என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

“ஆய்வு தொடரும்” என்று ஆளுநர் அறிவித்துள்ளதற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அவர் தலைமையில் உள்ள அதிமுக அரசும் எதிர்ப்புத் தெரிவிக்க துணிச்சல் இல்லாமல் இருக்கலாம், ஆனால் திமுக வெற்று மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்சி நடுங்கும் இயக்கம் அல்ல என்றும், மு.க.ஸ்டாலின் தனது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், ஆளுநரின் ஆய்வு தொடரும் என்றால், மாநில அரசின் உரிமைகளை பாதுகாக்க, திமுக தொடர்ந்து  போராடும் என்றும், அவர் தெரிவித்துள்ளார்.

பசுமை நாடுகள் பட்டியலில் மிகவும் பின்தங்கியுள்ள இந்தியா! June 25, 2018

Image

பசுமை நாடுகள் தரவரிசை பட்டியலில், இந்தியா மிகவும் பின்தங்கியிருப்பது ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில், உலகளாவிய பசுமை நாடுகளுக்கான சுற்றுச்சூழல் செயல்திறன் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.  கொலம்பியா பல்கலைகழகமும் உலக பொருளாதார அமைப்பும் இணைந்து இந்த ஆய்வை மேற்கொள்கின்றன.

விவசாயம், வனங்களை பாதுகாத்தல், காற்று மாசுபாட்டை கையாள்வது, சுத்தமான தண்ணீர், பல்லுயிர் அழிப்பு உள்பட 10 வகையான பிரச்னைகளை வைத்து, மொத்தம் 180 நாடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த தரவரிசையில் சுவிட்சர்லாந்து முதலிடத்திலும், இரண்டாவது இடத்தில் பிரான்ஸ்ஸும், மூன்றாவது டென்மார்க்கும் உள்ளன.

இந்த பட்டியலில், உலகின் வேகமாக முன்னேறி வரும் நாடுகளில் ஒன்றாக கருதப்படும் இந்தியா, 177-வது இடத்தில் பின்தங்கி, கடைசி 5 நாடுகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.  

2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் இந்த ஆய்வில், கடந்த முறை இந்தியா 141-வது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 24 ஜூன், 2018

ஆசைக்கு இணங்கினால் பயிர்க் கடன்: விவசாயியின் மனைவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வங்கி மேலாளர்! June 24, 2018

Image



பயிர்க் கடன் கோரி வங்கியில் விண்ணப்பித்த விவசாயியின் மனைவியை ஆசைக்கு இணங்குமாறு வங்கி மேலாளர் தொந்தரவு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தின் ததாலா பகுதியில் உள்ள செண்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா வங்கிக்கு கடந்த ஜூன் 18ஆம் தேதி தனது மனைவியுடன் சென்ற விவசாயி ஒருவர் பயிர்க் கடனுக்காக விண்ணப்பித்திருந்தார்.

இந்நிலையில் அந்த வங்கியின் மேலாளரான ராஜேஸ் ஹிவாசே, விவசாயியின் விண்ணப்ப படிவத்தில் இருந்த அவரின் மனைவியின் செல்போன் எண், முகவரி ஆகியவற்றை எடுத்து, அவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பயிர்க் கடன் விண்ணப்பத்தை நிராகரிக்காமல் மேற்கொண்டு கடன் பெற வழிவகை செய்ய வேண்டுமானால் தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தொலைபேசியில் அழைத்தது மட்டுமல்லாமல் அந்த வங்கியில் பணியாற்றும் உதவியாளர் (Peon) மனோஜ் சவான் (வயது 37) என்பவரை விவசாயியின் வீட்டிற்கே அனுப்பி வைத்து தனது ஆசைக்கு இணங்குமாறு நேரிலும் வற்புறுத்தச் செய்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயியின் மனைவி, வங்கி மேலாளரின் செயல் குறித்து மல்காபூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் வங்கி மேலாளர் ஆசைக்கு இணங்குமாறும் செல்போனில் பேசும் உரையாடலை பதிவு செய்து ஆடியோ ஆதாரமாகவும் அளித்துள்ளார்.

இந்த விவகாரம் கடந்த வியாழக்கிழமையன்று மகராஷ்டிராவில் பூதாகரமாக வெடித்த நிலையில், புல்தானா மாவட்ட ஆட்சியர் தனிப்பட்ட முறையில் இந்த வழக்கை தலைமையேற்று கண்காணிப்பார் என்று மாநில அரசு அறிவித்தது.

இதனையடுத்து ஆட்சியரின் உத்தரவின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கி ஊழியர்களை கைது செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டதையடுத்து, திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருந்த வங்கி உதவியாளர் மனோஜை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.

வங்கி மேலாளர் ஹிவாசே, தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருவதால் அவரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான வழிமுறை

இன்டர்நெட் வசதி இல்லாமலேயே, எஸ்.எம்.எஸ் வாயிலாக பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான வசதியை வருமான வரித் துறை ஏற்படுத்தியுள்ளது.

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம் என அறிவித்த மத்திய அரசு அதற்கு ஜூன் 30ம் தேதி வரை கால அவகாசமும் அளித்தது. 

பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான வழிமுறைகளை எளிமையாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளையும் வருமான வரித் துறை செய்தது.

அதன்படி, வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதற்கென பிரத்யேக இணைப்பை வருமான வரித் துறை உருவாக்கியது.

அந்த இணைப்பில் பான் எண்ணையும், ஆதார் எண்ணையும் பதிவிட்டாலே சிறிது நேரத்தில் பான் எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டது உறுதி செய்யப்படும். 

இந்நிலையில், பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான வசதியை மேலும் எளிமையாக்கும் விதமாக, குறுஞ்செய்தி வசதியை வருமான வரித் துறை அறிமுகப்படுத்தி உள்ளது. 

செல்போனில் UIDPAN என்று டைப் செய்து இடைவெளி விட்டு 12 இலக்க ஆதார் எண்ணையும், அதன் பிறகு மீண்டும் இடைவெளி விட்டு 10 இலக்க பான் எண்ணையும் டைப் செய்ய வேண்டும். 

இந்தத் தகவலை 567678 அல்லது 56161 என்ற எண்களில் ஏதேனும் ஒன்றுக்கு குறுஞ்செய்தியை அனுப்பினாலே பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு விடும்.

பான் அட்டையிலும், ஆதார் அட்டையிலும் ஒரே மாதிரியான பெயர் கொண்டவர்களுக்கு மட்டுமே இந்தக் குறுஞ்செய்தி வசதி பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற கூட்டு பாலியல் வன்புணர்வு குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்கள்! June 24, 2018

Image

ஜார்கண்ட் மாநிலத்தில் 6 பேர் கொண்ட கும்பலால், NGO அமைப்பில் பணியாற்றி வந்த 5 பெண்கள் கொடூரமான முறையில் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் குறித்த அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜார்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில் கடந்த வாரம் செவ்வாய்கிழமையன்று 5 பெண்கள் உட்பட 11 பேர் கொண்ட NGO அமைப்பைச் சேர்ந்தவர்கள் பள்ளி ஒன்றில் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவர்களை தாக்கி துப்பாக்கி முனையில் அருகில் இருந்த காட்டுப்பகுதிக்கு காரில் கடத்திச் சென்றது.

பின்னர் அப்பெண்களை கூட்டுப்பாலியல் வன்புணர்வில் ஈடுபடுத்திய அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.

நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இச்சம்பவம் குறித்து மேல்மட்ட விசாரணைக்கு ஜார்கண்ட் மாநில முதல்வர் ரகுபர் தாஸ் உத்தரவிட்டார்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய இருவரை நேற்று காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காட்டுப்பகுதிக்கு கடத்திச் செல்லப்பட்ட அந்த பெண்களை 5 பேரும் சேர்ந்து துப்பாக்கி முனையில் மாறி மாறி சுமார் 4 மணி நேரத்திற்கு பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளனர். அதன் பின்னர் அக்குழுவில் இருந்த ஆண்களை  மரக்கிளையால் அடித்துத் துன்புறுத்தியதோடு, அவர்களை சிறுநீரையும் குடிக்கச் செய்துள்ளனர். இதனை தங்கள் செல்போன்களில் வீடியோவும் எடுத்துள்ளனர்.

பாலியல் வன்புணர்வு மற்றும் தாக்குதலுக்கு உள்ளான அப்பெண்கள் 20 முதல் 35 வயதுடையோர். இவர்கள் ஆஷா கிரண் என்ற அரசு சாரா அமைப்பில் (NGO) பணியாற்றி வருபவர்கள். இந்த அமைப்பு உள்ளூர் கிருஸ்துவ மிஷனரி ஆதரவுடன் இயங்கி வந்துள்ளது.

பின்னர் அங்கிருந்து தப்பி வந்த 11 பேரும் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பள்ளியை நடத்தி வந்த அல்ஃபோன்ஸோ ஏலியன் என்ற பாதிரியாரிடம் சென்று அவரிடம் நடந்தவற்றை கூறியுள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளிக்க வேண்டாம் என பாதிரியார் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

எனினும் சஞ்சய் சர்மா என்பவர் இச்ச்செயலை மறைத்த பாதிரியாருக்கு எதிராக காவல்நிலையத்தில் அளித்த புகாரைத் தொடர்ந்து குற்றத்தை மறைத்த காரணம் உட்பட சில பிரிவுகளின் கீழ் வழக்கப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார். பாதிரியாருக்கும் குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

காவல்துறையினர் மேற்கொண்டு நடத்திய விசாரணையில் குற்றத்தில் ஈடுபட்ட இருவர், குற்றத்தை மறைக்க உதவியதாக பாதிரியார் உட்பட மூவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

தப்பிச்சென்ற மேலும் நால்வரை கைது செய்ய காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 50,000 ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் ஜார்கண்ட் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் People’s Liberation Front of India - (PLFI) என்ற கிளர்ச்சி அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சனி, 23 ஜூன், 2018

BSNL Offer

Cartoon

Image may contain: 7 people, text

8 வழிச்சாலையை நிச்சயம் எதிர்க்க வேண்டும் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் June 23, 2018

Image

மக்களிள் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடிய சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை நிச்சயம் எதிர்க்க வேண்டும் என காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஈ.வி.கே,ஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். 

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா நடந்தது. விழாவில் பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மத்தியிலும், மாநிலத்திலும் மக்கள் விரோத ஆட்சி நடைபெறுவதாகக் கூறினார். வழக்குகள் போடுவதால் காங்கிரஸ் கட்சி பணிந்துவிடாது என்றும் அவர் தெரிவித்தார். 

இன்று யார் யாரோ அரசியல் பேச ஆரம்பித்துவிட்டதாகக் கூறிய அவர், கமல், ரஜினியின் அரசியல் பற்றி மறைமுகமாக விமர்சித்தார். நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், இந்தியாவில் உள்ள சாதி பேதங்களால், பள்ளி படிப்பை முடித்த மாணவர்களில் 20 சதவீதம் பேர் தான் கல்லூரி செல்வதாகக் கூறினார். 

சாதிய ரீதியான பேதங்களுக்கு அடிப்படையாக இருக்கும் மனுநீதியை காங்கிரஸ், திராவிட இயக்கம், புரட்சியாளர் அம்பேத்கர் போன்றோர்கள் எதிர்த்ததாக தெரிவித்தார். மாணவர்களுக்கு வழங்க கூடிய கல்விக் கடன் திட்டம் இன்று முழுமையாக முடக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். 

உடுமலை அருகே உயிரை பணயம் வைத்து, ஆற்றை கடக்கும் மலைவாழ் மக்கள்! June 23, 2018

Image

உடுமலை அருகே உயிரை பணயம் வைத்து ஆற்றை கடக்கும் மலைவாழ் மக்கள் தொடர்பான செய்தி, நமது நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வெளியான நிலையில், அங்கு ஆற்றுப் பாலம் கட்ட நிதி ஒதுக்கப்படும், என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அமராவதி வனச்சரகத்தில், தளிஞ்சி, மஞ்சம்பட்டி, மூங்கில்பள்ளம், கீழானவயல், தளிஞ்சிவயல் உள்ளிட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இங்கு 600-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 

கடந்த நூறு ஆண்டுகளாக, சம்பக்காடு பாதையை மலைவாழ் மக்கள் போக்குவரத்துக்காக பயன்படுத்தி வந்தனர். ஆனால் திடீரென கடந்த பிப்ரவரி மாதம், சம்பக்காடு பகுதிக்கு சொந்தம் கொண்டாடிய கேரள வனத்துறை, கம்பிவேலி அமைத்து பாதையை மூடியது. இதனால் பொருட்கள் வாங்கவும், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்காகவும், கூட்டாறு வழியாக 6 கிலோ மீட்டர் சுற்றிச் செல்லும் நிலைக்கு மலைவாழ் மக்கள் தள்ளப்பட்டனர். இதனால், தளிஞ்சி ஆற்றில் ஆபத்தான முறையில் பொதுமக்கள் கடந்து செல்கின்றனர். இதுதொடர்பான செய்தி, கடந்த 15-ம் தேதி நமது நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வெளியானது. 

இந்நிலையில், இச்செய்தியை கண்ட அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தளிஞ்சியில் ஆற்றுப் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என கூறியுள்ளார். திருப்பூரில் அவர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இதனை தெரிவித்தார்.

சுரைக்காய் போன்று கசப்புத்தன்மைவாய்ந்த ஜூஸ் பருகுவதால் மரணம் ஏற்படுமா? June 22, 2018

Image

சுரைக்காய் ஜூஸை பருகிய பெண் ஒருவர் திடீரென மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கசப்புத்தன்மை அதிகம் நிறைந்த ஜூஸ் பருகுவது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துமா? மருத்துவர்கள் கூறுவது என்ன என்பது குறித்து இத்தொகுப்பில் விரிவாக காணலாம்.

புனே நகரைச் சேர்ந்த 41 வயது பெண்மணி ஒருவர் தினமும் உடற்பயிற்சி, ஓட்டப்பயிற்சி செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார். மிகவும் ஆரோக்கியமான உடல்நிலையுடனும், எந்தவித மருத்துவ ரீதியான பிரச்சனைகளும் இல்லாத இவர், கடந்த ஜூன் 12ஆம் தேதி காலை 9.30 மணியளவில் வழக்கம் போல 5 கிலோ மீட்டர் தூரம் அன்றாட ஓட்டப்பயிற்சியினை மேற்கொண்டார்.  

பின்னர் ஒரு கப் சுரைக்காய் ஜூஸை பருகிவிட்டு அலுவலகத்திற்கு காரில் புறப்பட்டுச் சென்றார். ஜூஸை பருகிய அரை மணி நேரத்தில் செல்லும் வழியிலேயே அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது, உடனடியாக வீடு திரும்பிய அவருக்கு வயிற்று போக்கும் ஏற்பட்டு உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

கடுமையான வயிற்று வலி, மூச்சுத் திணறல் மற்றும் வலிப்பு ஆகியவை என தொடர்ந்து பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டதால் மதியம் 1.30 மணியளவில் அருகில் இருந்த மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சுயநினைவை இழந்ததோடு இருதய அடைப்பும் ஏற்பட்டது. அடுத்த இரண்டு நாட்கள் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஓரளவு உடல்நலன் தேறிய நிலையில் ஜூன் 15ஆம் தேதி இரவு அவரின் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்றுவந்த அவர் ஜூன்16ஆம் தேதி, முக்கிய உறுப்புகள் செயலிழந்ததால் பரிதாபமாக மரணமடைந்தார்.

உடற்பயிற்சி ஆர்வலரான அந்தப் பெண்மணி, தினமும் ஓட்டப்பயிற்சி, சைக்கிளிங், மற்றும் பல்வேறு உடற்பயிற்சிகளை தவறாது செய்து வந்த தனது உடலை ஃபிட்டாக வைத்திருந்தார். எனினும் ஒரு கோப்பை சுரைக்காய் ஜூஸ் பருகியது அவரின் உயிரை பறித்துள்ளது, சுரைக்காய் ஜூஸ் பருகுவோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுரைக்காய் ஜூஸ் பருகுவது உயிரைப்பறிக்குமா? மருத்துவர்கள் என்ன கூறுகிறார்கள்?

அவசர சிகிச்சை நிபுணரான கபில் போரவாகே கூறுகையில், இது போன்று ஒரு சில சம்பவங்கள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது, குறிப்பாக புனே பகுதிகளில் வசிப்போர் காய்கறி ஜூஸ் பருகுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர், இது போன்ற ஜூஸ்களில் கசப்புத்தன்மை அதிகரித்து காணப்பட்டால் அவற்றை பருகக் கூடாது, அவை விஷத்தன்மை கொண்டிருக்கும் என்றார். மேலும் இந்த விஷத்தை முறிக்கும் மாற்று மருந்து இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் கூறினார்.

இந்த நிகழ்வு சுரைக்காய் மட்டுமல்லாது கசப்புத்தன்மைமிக்க ஜூஸ் பருகுவோருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.