மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய ஸ்டாலின் அதிரடி உத்தரவு; பின்னணி என்ன?
/indian-express-tamil/media/media_files/nHuD4WxXylHyHctShTKt.jpg)
மாநகராட்சியின் அனைத்து ஐந்து மண்டலத் தலைவர்களையும் கூண்டோடு ராஜினாமா செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (07.07.2025) இரவு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மதுரை மாநகராட்சியில் கட்டிடங்களுக்கு சொத்துவரி நிர்ணயம் செய்ததில் நடைபெற்றதாகக் கூறப்படும் மிகப்பெரிய முறைகேடு சர்ச்சை தொடர்பாக, மாநகராட்சியின் அனைத்து ஐந்து மண்டலத் தலைவர்களையும் கூண்டோடு ராஜினாமா செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (07.07.2025) இரவு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த மே மாதம் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த், மாநகராட்சி பணிகளில் தலையிட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் இந்த அதிரடி நடவடிக்கை வந்துள்ளது.
கட்சி நிர்வாகிகளுடனான 'ஒன் டூ ஒன் உடன்பிறப்பே வா' நிகழ்ச்சியின்போதே, "தேவையான இடங்களில் தயவு தாட்சண்யமின்றி பதவியை பறிப்பேன்" என்று முதலமைச்சர் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மதுரை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களில் (மண்டலம் 1-வாசுகி, மண்டலம் 2-சரவண புவனேஸ்வரி, மண்டலம் 3-பாண்டிச்செல்வி, மண்டலம் 4-முகேஷ் சர்மா, மண்டலம் 5-சுவிதா ஆகியோர் தலைவர்களாக உள்ளனர்) மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. இங்குள்ள சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் கடைகளுக்குச் சொத்துவரி வசூலிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு, மாநகராட்சி ஆணையராக தினேஷ்குமார் இருந்தபோது நடத்தப்பட்ட திடீர் ஆய்வில், சொத்துவரி வசூல் மற்றும் புதிய சொத்துவரி நிர்ணயத்தில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.
சுமார் 150 கட்டிடங்களுக்குச் சொத்துவரி குறைக்கப்பட்டு, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் மாநகராட்சிக்கு 150 கோடி ரூபாய் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டதும் கண்டறியப்பட்டது. நீதிமன்ற உத்தரவு அல்லது மாநகராட்சி கூட்டத் தீர்மானம் இன்றி ஆயிரக்கணக்கான கட்டிடங்களுக்குக் குறைவான சொத்துவரி நிர்ணயம் செய்யப்பட்டது தெரியவந்தது.
இதுதொடர்பான புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார், சைபர் கிரைம் போலீசாருடன் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மத்திய குற்றப்பிரிவு போலீஸ் உதவி ஆணையர் வினோதினி தலைமையிலான விசாரணையில், ஓய்வுபெற்ற உதவி ஆணையர், உதவி வருவாய் அலுவலர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 7 7 2025
மேலும், உதவியாளர் தனசேகரன், புரோக்கர்கள் சாகா உசேன், ராஜேஷ் ஆகியோரை மூன்று நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையின் ஒரு பகுதியாக மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள் மட்டுமின்றி, மண்டலத் தலைவர்கள் மற்றும் அவர்களது கணவன் / மனைவி ஆகியோரிடமும் போலீசார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரித்துள்ளனர். அ.தி.மு.க.வும் மதுரை மாநகராட்சியை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/stalins-dramatic-order-to-forcefully-resign-as-madurai-corporation-zonal-leaders-what-is-the-background-9472255