திங்கள், 31 டிசம்பர், 2018

பிளாஸ்டிக் மீதான தடையை 5 வருடங்கள் தள்ளி வைக்க கோரிக்கை! December 30, 2018

source ns7.tv
Image
ஜனவரி 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதிலும் உள்ள பிளாஸ்டிக் கடைகள் காலவரையற்று மூடப்படும் என தமிழ்நாடு, பாண்டிச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. 
சென்னையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து பிளாஸ்டிக் உற்பதியாளர் சங்கத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின் செய்தியாளர்களை சந்தித்த அச்சங்கத்தின் தலைவர் சங்கரன், முதலில் 14 பெருட்களுக்கு மட்டும் தடை என்று கூறிவிட்டு தற்போது பிளாஸ்டிக் கடைகளே இருக்க கூடாது என்று அரசு கூறி வருவதாகவும்,  இது பிளாஸ்டிக் பொருட்கள் தாயரிப்பாளர் மற்றும் விற்பனையாளர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என தெரிவித்தார். 
மேலும், பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் மீதான தடையை 5 வருடம் தள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

கர்ப்பிணி பெண்ணுக்கு HIV ரத்தம் வழங்கிய இளைஞர் மரணம்...! December 31, 2018

Image

source ns7.tv
கர்ப்பிணி பெண்ணுக்கு HIV ரத்தம் வழங்கிய இளைஞர் விஷ ஊசி போட்டு கொல்லப்பட்டிருப்பதாக, அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், அவரது உடற்கூறு ஆய்வை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணிற்கு, ஹெச்ஐவி தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம், தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்ப்பிணி பெண்ணிற்கு ரத்தம் வழங்கிய ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த இளைஞர் ரமேஷ், கடந்த 27ஆம் தேதி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார்.
இதையடுத்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், திடீரென ரத்தவாந்தி எடுத்ததால், அவருக்கு புதிய ரத்தம் ஏற்றப்பட்டது. இதனிடையே, நேற்று சிகிச்சை பலனின்றி இளைஞர் உயிரிழந்தார்.
உயிரிழந்த இளைஞர் குடித்த விஷத்தின் வீரியம் காரணமாகவே, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் இயல்பான நிலையில் உள்ளதாகவும், அவரது வயிற்றில் உள்ள சிசுவிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தொடர்ந்து மருந்துகள் வழங்கப்படுவதாகவும் சண்முகசுந்தரம் கூறியுள்ளார். 
இதற்கிடையே, விஷ ஊசி போட்டு இளைஞர் கொலை செய்யப்பட்டிருப்பதாக, அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 
குடும்பத்தினரின் கோரிக்கை காரணமாக, இளைஞரின் உடலை உடற்கூறு ஆய்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. உடற்கூறு ஆய்வை வீடியோ பதிவு செய்ய வேண்டும், என குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளதால், உயர்நீதிமன்றத்தின் அனுமதிக்கு பிறகே, பிரேத பரிசோதனை நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 
 

விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டம் தற்காலிகமாக வாபஸ்! December 31, 2018

source ns7.tv
விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் விவசாயிகள் நடத்தி வந்த போராட்டம், தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. 
விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை கண்டித்து, 8 மாவட்டங்களில், கடந்த 17ம் தேதி முதல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில், விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் வரும் 3-ம் தேதி, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து பேரணியாக சென்று, சட்டப்பேரவையை முற்றுகையிட விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இதை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்து வந்த காத்திருப்பு போராட்டம், மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தை, விவசாயிகள் தற்காலிமாக வாபஸ் பெற்றுள்ளனர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 
விளைநிலங்களில் மின்கோபுரம் அமைக்க, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பேச்சுவார்த்தை நடத்த தயார், என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
பள்ளிபாளையத்தில் உழவர் பணி கூட்டுறவு சங்கத்தின் பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து தொடங்கப்பட்ட உயர்மின் கோபுர திட்ட பணிகள், ஆந்திர மாநிலம் வரை முடிவடைந்துள்ளது என்றும், தமிழகத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் எனவும் தெரிவித்தார். சில அரசியல் கட்சிகள், விவசாயிகளிடம் தவறான தகவல்களை கூறி, இத்திட்டத்துக்கு தடையாக உள்ளதாக தங்கமணி கூறினார். 

ஞாயிறு, 30 டிசம்பர், 2018

இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்...தமிழக மீனவர்கள் மீது கொடூர தாக்குதல்! December 30, 2018

Image

source: ns7.tv
கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்திய சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, 500-க்கும் மேற்பட்ட படகுகளில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது, அங்கு 6 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர், கண்ணாடி பாட்டில்கள் மற்றும் கற்களை வீசி தாக்குல் நடத்தியதாக, மீனவர்கள் புகார் தெரிவத்தனர். 
100-க்கும் மேற்பட்ட படகுகளிலிருந்த சுமார் மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி சாதனங்களை சேதபடுத்தியதால், படகு ஒன்றுக்கு 75 ஆயிரம் ரூபாய் வரை இழப்பு நேரிட்டுள்ளதாகவும், மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.  இரு நாட்டு மீனவர்களும் சுமூகமாக மீன்பிடிக்க, இந்திய - இலங்கை மீனவர்களிடயே 5-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், எனவும் மீனவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருப்பவர்களா நீங்கள்?...உங்களுக்கான முக்கிய அறிவிப்பு! December 30, 2018

Image

source ns7.tv
சென்னையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருப்போர், திங்கள்கிழமைக்குள் மாநகராட்சி வார்டு அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும், என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. 
தமிழகம் முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு, தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த, ஜனவரி ஒன்றாம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை, வார்டு அலுவலகங்களில் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது வீடு, அலுவலகம், தொழிற்கூடங்கள், உணவு விடுதிகளில் இருப்பு வைத்துள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை, வார்டு அலுவலகங்களில் திங்கள்கிழமைக்குள் ஒப்படைக்குமாறு, சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. 
ஜனவரி ஒன்றாம் தேதிக்கு பின்னர், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தாலோ, விற்பனை செய்தாலோ, அவற்றை பறிமுதல் செய்ய மண்டல அளவிலும், கோட்ட அளவிலும் சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. 

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் என்னென்ன? December 30, 2018

Image

source ns7.tv
தமிழகம் முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு, தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த, ஜனவரி ஒன்றாம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்தெந்த பொருட்களுக்கு அந்த தடை என்பது பற்றி பெரும்பாலானோர் சந்தேகமாக கேள்வி எழுப்பிவருகின்றனர். அதனை பற்றிய செய்தி...
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் என்னென்ன?
➤உணவகங்களில், உணவுப் பொருட்களை கட்டுவதற்கு பயன்படுத்தும் பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக்கால் ஆன தெர்மாகோல் தட்டுகள் மற்றும் குவளைகளை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது.
➤உள்பக்கம் பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித குவளைகள், தண்ணீர் குடிக்க பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் குவளைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 
➤மேலும், தண்ணீர் பாக்கெட்டுக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள்,  உணவை பார்சல் செய்ய பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொட்டலங்கள், கடைகளில் பொருட்கள் வாங்கும்போது இலவச இணைப்பாக தரப்படும் பிளாஸ்டிக் தூக்கு பைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 
➤இதேபோன்று பிளாஸ்டிக் கொடிகளையும் பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் விரிப்புகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுக்களை உபயோகப்படுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
➤டீக்கடைகளில் தரப்படும் பிளாஸ்டிக் தேநீர் குவளைகள்,இளநீர், குளிர்பானங்களை உறிஞ்சிக் குடிக்க பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உறிஞ்சுக் குழல்கள், பிளாஸ்டிக் பூசப்பட்ட பைகள், நெய்யாத பிளாஸ்டிக் பைகளுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

முத்தலாக் மசோதாவை நிறைவேற்ற தீவிரம் காட்டும் பாஜக! December 30, 2018

source ns7.tv

Image

முத்தலாக் மசோதா நாளை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த விவகாரத்தில் அதிமுகவின் நிலைபாடு முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
முத்தலாக் அவசர சட்டம்... இந்திய முழுவதும் கடந்த சில நாட்களாக பேசு பொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில் நாளை இந்த மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்கிறது மத்திய பாஜக அரசு... மக்களவையில் கடும் அமளிக்கு இடையில் இந்த மசோதாவை நிறைவேற்ற உள்ளது மத்திய அரசு... காரணம்... தனிப்பெரும்பான்மையுடன்  மக்களவையில் உள்ள பாஜகவிற்கு எதிர்க்கட்சிகளின் அமளி மட்டுமே தடையாக இருக்கும் என்பது தான் நிதர்சனம். ஆனால் மாநிலங்களவையில் நிலைமை வேறு மாதிரியாக உள்ளது. மாநிலங்களவையில் மசோதாவை நிறைவேற்ற மாநில கட்சிகளை எதிர்நோக்க வேண்டிய நிலையில் உள்ளது பாஜக
மாநிலங்களவையை பொறுத்த வரையில் தனிப்பெரும் கட்சியாக 73 உறுப்பினர்களை கொண்டுள்ளது பாஜக. ஆனால் மசோதாக்களை நிறைவேற்ற இந்த எண்ணிக்கை போதாது என்ற நிலையை தொடர்ந்து அனுபவித்து கொண்டே வருகிறது. பாஜவிற்கு அதிக உறுப்பினர்கள் இருப்பினும், அக்கட்சி தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 93 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். அதே வேளையில் காங்கிரஸ் தலைமை வகிக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும், பாஜகவை கடுமையாக எதிர்க்கும் மாநில கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 112... 
இந்த எண்ணிக்கையை கொண்டு முத்தலாக் தடை மசோதாவை நிறைவேற்றி விட முடியாது என்பதை பாஜக உணர்ந்தே உள்ளது. அதே வேளையில் பாஜக கூட்டணியில் இடம் பெறாத, அதே வேளையில் ஒரு சில நேரங்களில் பாஜகவை ஆதரிக்க தயங்காத கட்சிகளின் சார்பாக 39 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் குறிப்பாக தமிழகத்தை சேர்நத அதிமுகவிற்கு 13 உறுப்பினர்களும், ஒடிசாவின் பிஜூ ஜனதா தளம் கட்சிக்கு 9 உறுப்பினர்களும் உள்ளனர். இந்த 2 கட்சிகளும் பல்வேறு விவகாரங்களில் பாஜகவை ஆதரித்தவை. அதே வேளையில் முத்தலாக் விவகாரத்தில் இந்த இரண்டு கட்சிகளும் பாஜகவிற்கு எதிரான நிலைபாட்டையே மக்களவையில் எடுத்தன. எனவே அதிமுகவின் நிலைபாடு இந்த விவகாரத்தில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. 
அதே வேளையில் வாக்கெடுப்பை புறக்கணிக்க அதிமுகவும், பிஜூ ஜனதா தளமும் முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலங்களவையை பொறுத்த வரை  அரசியல் சாசன மசோதாவிற்கு, மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் அவையில் இருந்து, அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களின் ஆதரவு தேவை. அதே வேளையில், சாதரண சட்டமாக தாக்கல் செய்யப்பட்டால், அவையில் எத்தனை பேர் இருக்கிறார்களோ அத்தனை பேரில் பாதிக்கு மேற்பட்டவர்களின் ஆதரவு போதுமானது. 
முத்தலாக் மசோதா அரசியல் சாசன மசோதாவாக கருதப்பட்டாலும், சாதரண மசோதாவாகவே தாக்கல் செய்யப்பட உள்ளது. இதன் பின்னணியில் அதிமுகவின் புறக்கணிப்பு என்பதை கருத்தில் கொண்டிருக்கலாம் என்றே அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். அப்படி அதிமுக வெளிநடப்பு செய்தாலும் மற்றக் கட்சிகள் கடுமையாக எதிர்த்தாலும், மசோதா நிறைவேறுவதில் சிக்கல் உள்ளது. அதே வேளையில் அதிமுக ஆதரித்து வாக்களித்தால் அது மசோதாவை நிறைவேற்ற ஒத்துழைப்பாக இருக்கும். அதே வேளையில் அதிமுக எதிர்த்து வாக்களிக்குமானால், மசோதா நிறைவேற வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது. 

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக எதைப் பயன்படுத்துவது என தெரியாமல் தவிப்பவரா நீங்கள்? December 30, 2018



source ns7.tv
Image

➤ பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக காலங்காலமாக உணவருந்த பயன்படும் வாழையிலையை தொடர்ச்சியாக பயன்படுத்தலாம். 
➤ நகரங்களில் சுப நிகழ்ச்சிகளில் நின்று கொண்டு சாப்பிடுவதற்கு பாக்குமர இலையும் பயன்படுத்தலாம். 
➤ உணவகங்களில் பார்சல் கட்டுவதற்கு அலுமினியத்தாள்  காகித சுருள் அல்லது தாமரை இலைகள்  உபயோகப்படுத்தலாம். 
➤ கண்ணாடி குவளைகள் அல்லது உலோகத்தால் ஆன குவளைகளை தண்ணீர் அருந்த பயன்படுத்தலாம். 
➤ மூங்கில் மரப் பொருட்களையும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக உபயோகிக்கலாம். 
➤ பிளாஸ்டிக் உறிஞ்சுக்குழல்களுக்கு மாற்றாக காகித குழல்களை பயன்படுத்தலாம்.  
➤ கடைகளுக்கு செல்லும்போது, துணி, காகிதம் மற்றும் சணல் பைகள் உடன் எடுத்துச்செல்லலாம். 
➤ அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு காகிதம் அல்லது துணியால் ஆன கொடிகளை பயன்படுத்தலாம். 
➤ பீங்கான் பாத்திரங்கள் மண் கரண்டிகள் மற்றும் மண் குவளையும் பொதுமக்கள் பயன்படுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சனி, 29 டிசம்பர், 2018

1000 லிட்டர் மதுவை எலி குடித்துவிட்டது...” போலீசார் கொடுத்த அதிர்ச்சி ரிப்போட்! December 29, 2018


source ns7.tv

Image

பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 1000 லிட்டர் மதுவை எலி குடித்துவிட்டது என போலீசார் அறிக்கை தாக்கல் செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம் பரேலி பகுதியில் உள்ள காவல்நிலைய குடோனில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 1000 லிட்டர் மதுவை போலீசார் வைத்திருந்தனர். இந்நிலையில், கடந்த புதன்கிழமை குடோனுக்கு சென்ற காவலர், மது பாட்டில்களில் இருந்த மது காலியாகி இருப்பதையும் அந்த பாட்டில்கள் மற்றும் கேன்கள் அருகே சில எலிகள் இருந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்த காவலர், பறிமுதல் செய்யப்பட்ட 1000 லிட்டர் மதுவையும் எலிகள் குடித்துவிட்டது என தகவல் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். ஆனால், காவலரின் தகவல் அறிக்கையை நம்பாத உயர் அதிகாரிகள், உண்மையிலேயே மதுவை எலிகள் குடித்துவிட்டதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
பறிமுதல் செய்யப்பட்ட மதுவில் சிறிது அளவு மட்டும் எடுத்துவைத்துக்கொண்டு மீதியை அழித்துவிடவேண்டும் என்றே போலீசாருக்கு கட்டளை விதிக்கப்பட்டிருக்கிறது எனவும் அதனை பின்பற்றாததால் இதுபோன்ற சிக்கல்கள் ஏற்பட்டிருப்பதாகவும் அப்பகுதி காவல்துறை உயர் அதிகாரி தெரிவித்தார். 
பேப்பர் மற்றும் துணிகளை மட்டுமே எலிகள் கடிக்கும் என்று கேள்விபட்டிருக்கும் நிலையில் இதுபோன்று 1000 லிட்டர் மதுவை எலிகள் குடிக்குமா என்ற கேள்வி பலரிடத்தில் இருக்கிறது. 

உச்சகட்டத்தை எட்டிய புதுவை ஆளுநர் - முதல்வர் இடையேயான அதிகார மோதல்! December 29, 2018



source: ns7.tv

Image

புதுவையில், ஆளுநர் மற்றும் முதலமைச்சர் இடையிலான அதிகார மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பொங்கலை முன்னிட்டு இலவச ரேசன் அரிசி வழங்கும் விவகாரம் தொடர்பாக இருவரும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருவது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்களுக்கு இலவச பொருட்கள் வழங்குவதற்கான கோப்பு துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு இன்று மீண்டும் அனுப்பப்பட உள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் நாராயணசாமி, அரசு ஊழியர்களுக்கு தகுதி தேர்வு நடத்தி பள்ளி ஆசிரியைப்போல ஆளுநர் கிரண்பேடி செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
முதலமைச்சர் நாராயணசாமியின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்துள்ள துணைநிலை ஆளுநர் கிரண்பேடி,  பொங்கல் பண்டிகை முன்னிட்டு இலவச ரேஷன் பொருட்கள்  வழங்க  தாம் மறுப்பு தெரிவித்து வருவதாக கூறுப்படுவது உண்மை இல்லை என்று கூறியுள்ளார்.
மேலும், நிதி இல்லாமல் வெறும் அறிவிப்புகளை அறிவித்து வருவதாக குற்றம்சாட்டியுள்ள அவர், தாம் எந்த திட்டத்திற்கும் தடை விதிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். 
source ns7.tv

நாடு முழுவதும் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டம்! December 29, 2018

Image
நாடு முழுவதும் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
வாகனங்களுக்கு பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய நம்பர் பிளேட்டுகளை அறிமுகப்படுத்துவது தொடர்பான, அறிவிப்பை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதற்காக, மோட்டார் வாகன விதிகள் 1989-ல் புதிய திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, 2019 ஏப்ரல் 1 முதல், புதிய நம்பர் பிளேட் திட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. புதிய வாகனங்களுக்கு உயர் பாதுகாப்பு அம்சங்களோடு, லேசர் பதிவெண் நம்பர் பிளேட்டுகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. 
இதை வாகன உற்பத்தியாளர்களும், டீலர்களும் அமல்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகள் மூலம் வாகனங்களை எளிதாக கண்காணிக்க முடியும் என்பதுடன், திருடப்பட்ட வாகனங்களை வெகுவிரைவில் போலீஸார் கண்டுபிடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

source: ns7tv

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால் மரண தண்டனை! December 29, 2018

Image

source: ns7.tv

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு, மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனை வழங்கும் சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. போக்சோ என அழைக்கப்படும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதன்படி, 18 வயதிற்குட்பட்டவர்கள் சிறார்களாக கருதப்பட்டு, அவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு, அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வழங்கும் வகையில் இருந்தது. 
இந்நிலையில், குழந்தைகளுக்கு எதிரான இத்தகைய குற்றங்களுக்கு, கடுமையான தண்டனை வழங்க வேண்டும், என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ், அதிகபட்சமாக மரண தண்டனை வழங்கும் வகையில் திருத்தப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. மேலும், விண்வெளிக்கு 3 இந்தியர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் Gaganyaan திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்! December 28, 2018

Image

source ns7.tv
10,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் Gaganyaan திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இதுவரை மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய 3 வல்லரசு நாடுகள் மட்டுமே இடம்பிடித்துள்ளன. அந்தப்பட்டியலில் இந்தியாவும் விரைவில் இணைய உள்ளது.
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, 2022ம் ஆண்டில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப உள்ளது. மிகவும் சவாலான இந்த பணியினை 10,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இஸ்ரோ மேற்கொள்ள உள்ளது. இதன்படி இரண்டு ஆளிள்ளாத மற்றும் ஒரு ஆட்களை ஏற்றிச்செல்லும் ராக்கெட்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளதாக தெரிகிறது.
சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி தனது உரையில், 2022ம் ஆண்டு இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியாவின் மகன் அல்லது மகள் கைகளில் மூவர்ணக்கொடியை ஏந்தியவாறு  விண்வெளிக்கு செல்வர் என்றார்.
GSLV-Mk III விண்கலம் மூலம் இந்தியாவிலிருந்து 3 பேர் விண்வெளிக்கு அனுப்பப்படுவர், இவர்கள் 7 நாட்கள் வரை அங்கு தங்கியிருந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளனர். இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். இந்தத்திட்டத்திற்கு Gaganyaan எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இத்திட்டம் வெற்றிபெறும்பட்சத்தில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 4வது நாடாக இந்தியா விளங்கும்.

குறைவான மாணவர்கள் உள்ள சத்துணவு மையங்களை மூடவுள்ளதா தமிழக அரசு? December 29, 2018

Image

source: ns7.tv

தமிழகத்தில் 25-க்கும் குறைவான மாணவர்கள் உள்ள சத்துணவு மையங்களை மூட, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக வெளியான தகவல், மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காமராஜர், எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரால், பாதுகாக்கப்பட்டு வந்த சத்துணவு திட்டத்தை, தற்போதைய அரசு நிறுத்தவுள்ளதா?
தமிழகத்தில் மதிய உணவுத் திட்டம் என்பது, 1925-ம் ஆண்டு நீதிக்கட்சியால் கொண்டு வரப்பட்டது. ஏழை குழந்தைகளின் நலனுக்காக, சென்னை மாநகராட்சியில் கொண்டு வரப்பட்ட இத்திட்டம்,  பின்னர் காமராஜர் ஆட்சி காலத்தில், மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டது. 
பசியுடன் வாடும் குழந்தைகளுக்கு ஒருவேளை உணவளித்தால், பள்ளியின் பக்கம் எட்டிப் பார்ப்பார்கள் என்ற உயர்ந்த எண்ணத்தில், கல்வி வளர்ச்சியில் தீவிர கவனம் செலுத்திய அப்போதைய முதல்வர் காமராஜர் இத்திட்டத்தை விரிவுபடுத்தினார். இத்திட்டத்திற்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டும் அப்போதைய அரசு பல தனியார் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகளிடம் நிதி திரட்டி சிறப்பாக செயல்படுத்தி வந்தது. 
அதிமுகவை தொடங்கிய எம்ஜிஆர், முதல்வராக பதவியேற்றதும் மதிய உணவு திட்டத்திற்கு சத்துணவு திட்டம் என பெயர் சூட்டி, மாநிலம் முழுவதும் பிரபலப்படுத்தினார்.  எம்ஜிஆரின் நடவடிக்கையால் அண்டை மாநிலங்களான கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலும் இத்தகைய திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. 
எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் இத்திட்டத்திற்கு நெருக்கடி ஏற்பட்டதால்,  டாஸ்மாக் என்ற தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தைத் தொடங்கி, அதன் வாயிலாக வருமானம் கிடைக்க செய்து, திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வந்தார்.  பின்னர் முதல்வரான  கருணாநிதியும், ஜெயலலிதாவும் சத்துணவு திட்டத்தை மேம்படுத்தினர். 
நூற்றாண்டை எட்டும் இத்திட்டத்தை தமிழக அரசு நிறுத்தவுள்ளதாக திடீரென தகவல் பரவியது. அதாவது 25க்கும் குறைவான மாணவர்கள் உள்ள சத்துணவு மையங்களை மூட, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன. 
இந்த முயற்சிக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குறைவான மாணவர்கள் பயிலும் பள்ளிகளிலுள்ள சத்துணவு மையங்கள் மூடப்பட்டால், ஏராளமானோரின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுவதுடன், ஏழை குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். 
இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் அண்மையில் சமூக நலத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், 25 மாணவர்களுக்கு கீழ் பயிலும் பள்ளிகளில், சத்துணவு மையங்களை மூடும் எந்த திட்டமும் பரிசீலனையில் இல்லையெனவும், ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையும், 6 முதல் 12ம் வகுப்புகள் வரையும் தனித்தனியாக இயங்கும் சத்துணவு கூடங்களை ஒரே மையமாக மாற்றவே ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அரசின் இந்த அறிவிப்பால் சத்துணவு திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்கள், ஓரளவு நிம்மதி அடைந்துள்ளனர். எது எப்படியோ கல்வித்துறை தனியார் மயமாகி வரும் சூழலில், சத்துணவு மையங்களை மூடினால், அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை மக்கள் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் என்பது உண்மையே. சத்துணவு திட்டத்தை தமிழக அரசு என்றென்றும் தொடர வேண்டும், என்பதே அனைவரின் விருப்பம். 

அழிந்துவரும் பாரம்பரிய நெல் ரகங்களை விதைத்து அசத்திவரும் இயற்கை விவசாயி! December 29, 2018



source: ns7.tv


Image
மறைந்த நெல் ஜெயராமனின் குடும்பத்தினரிடம் இருந்து அழிந்து வரும் பாரம்பரிய நெல் ரகங்களை வாங்கி அதனை விதைத்து அதிக மகசூல் ஈட்டிவருகிறார் இயற்கை விவசாயி ஒருவர்.
ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து கீழ்பாவனி கால்வாயில் பாசனத்துக்காக திறக்கபடும் நீரை கொண்டு இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் பாசனம் பெற்று வருகின்றது. இந்த நீரைக் கொண்டு கீழ்பாவனி பாசன விவசாயிகள் நெல், கரும்பு, வாழை, மஞ்சள், தென்னை உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
வழக்கமான விவசாயத்தை தவிர்த்து, ஈரோடை அடுத்த மாமரத்துபாளையம் பகுதியை சேர்ந்த சேகர் என்ற விவசாயி, தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில், ஒரு ஏக்கரில் பாரம்பரிய நெல் ரகமான கருப்பு கவுனி நெல் ரகத்தையும் மற்றும் ஒரு ஏக்கரில் கிச்சிலி சம்பா நெல் ரகத்தையும் பயிரிட்டு அசத்தி வருகின்றார்.
பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டுள்ள ஒரு ஏக்கர் பகுதியைச் சுற்றியும் விஷ பூச்சிகள், நெல் பயிர்களை தாக்கும் பூச்சிகள் வண்டுகளை தவிர்த்து, மகரந்த சேர்கையில ஈடுபட்டு, உணவு சங்கிலி தொடரில் தொடர்புடைய வண்டுகள் பூச்சிகளை நெல் பயிர்களிடம் அழைத்து வர துலுக்க சாமந்தி, கொட்டா மரம், மக்கா சோளம், தட்டப்பயிறு, உளுந்து, காட்டுகம்பு, சோளம் ஆகியற்றை பயிரிட்டுள்ளார். இதனால் நெல் பயிர்கள் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றப்பட்டு நன்கு செழிக்கும் என்று கூறுகின்றனர். 
மறைந்த நெல் ஜெயராமனின் குடும்பத்தினரிடம் இருந்து பாரம்பரிய நெல் விதைகளை வாங்கி அதனை கொண்டு எளிய முறையில் விவசாயம் செய்து வரும் விவசாயி சேகர், மற்ற விவசாயிகளையும் இயற்கை விவசாயத்திற்கு வரவேண்டும் எனவும் அழிந்து வரும் நெற்பயிர்களை விவசாயம் செய்யவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கிறார்

வெள்ளி, 28 டிசம்பர், 2018

சாத்தூர் சம்பவம் போல சென்னையிலும் ஒரு கொடூரம்...கர்ப்பிணிக்கு HIV ரத்தம் ஏற்றப்பட்டது அம்பலம்! December 28, 2018

Image

source ns7.tv

சாத்தூர் சம்பவம் போல சென்னையிலும் ஒரு கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டது அம்பலமாகியுள்ளது. 
சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு HIV ரத்தம் செலுத்தப்பட்ட செய்தியின் ரணம் ஆறுவதற்கு உள்ளாகவே, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ரத்தம் ஏற்றப்பட்டதால் தனக்கு எச்.ஐ.வி. பாதிப்பு வந்தாக மற்றொரு பெண் புகார் தெரிவித்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்தவர் லதா. இந்த பிரச்னை காரணமாக அவரின் சமூக மதிப்பிற்கு பங்கம் வரக் கூடாது என்பதற்காக பெயர் மாற்றப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் இரண்டாவது முறையாக கருதரித்த லதா, மாங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். 
4 மாத கர்ப்பிணியாக இருந்த போது ரத்த சோகை ஏற்பட்டதால் ரத்தம் ஏற்றிக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அதனடிப்படையில் கடந்த ஏப்ரல் 5ம் தேதி  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றுவதற்காக சென்றுள்ளார். அங்கு அவருக்கு 2 யூனிட் ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். 
 
கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி, 8 மாத கர்ப்பிணியான லதாவிற்கு நடத்தப்பட்ட ரத்த பரிசோதனையில் அவருக்கு எச்.ஐ.வி உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவருக்கு எச்.ஐ.வி.க்கான நோய் எதிர்ப்பு மருந்துகளை மருத்துவர்கள் வழங்கி உள்ளனர். இதற்கான காரணம் கேட்ட போது ரத்தம் ஏற்றும் போது தொற்று வந்து இருக்கலாம் என மருத்துவர்கள் அலட்சியமாக பதில் அளித்தாக கண்ணீர் மல்க தெரிவிக்கிறார் லதா. பிறக்கும் குழந்தைக்காவது இந்த நோய் தொற்று இல்லாமல் குழந்தை பிறக்க சிகிச்சை எடுத்து பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி குழந்தை பிறந்துள்ளது. 
 
இந்த சம்பவத்திற்கு பின் தன் உடன் பிறந்த சகோதரிகள் கூட தன்னை ஏற்றுக்கொள்ள தயராக இல்லை என்றும், மருத்துவர்களின் கவனக்குறைவு மற்றும் அலட்சியத்தால் தனது வாழ்க்கையே பறிபோய் விட்டதாக கூறுகிறார் லதா. இந்த பிரச்சனை குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் கடிதம் எழுதி உள்ளதாகவும் ஆனால் இதுவரை எந்த பதிலும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் குறிப்பிடுகிறார். 
 
எச்.ஐ.வி பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து ரத்தம் பெறக் கூடாது, அவ்வாறு பெற்று இருந்தால் கூட உரிய பரிசோதனையின்றி அதனை பிறருக்கு செலுத்துவது மருத்துவத்துறையின் அலட்சியமே. அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றப்பட்ட 2 கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவர்களின் கவனக்குறைவால் HIV நோயாளிகளாக மாற்றப்பட்டிருக்கும் சம்பவம், அரசு மருத்துவமனையின் மீதான நம்பகத்தன்மையை அசைத்துப் பார்த்திருக்கிறது. அதுமட்டுமின்றி ரத்த  வங்கிகளில் பின்பற்றப்பட்டு வரும் பாதுகாப்பு நடைமுறைகளை மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய நிலையையும் ஏற்படுத்தியிருக்கிறது. 

மாநிலங்களவையில் வெல்லுமா முத்தலாக் மசோதா? December 28, 2018

நான்கு மணி நேர நீண்ட விவாதத்திற்கு பிறகு முத்தலாக் தடை மசோதா மக்களவை நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாததால் மசோதா நிறைவேறுமா என சந்தேகம் எழுந்துள்ளது.
நாடாளுமன்றத்தை சூடாக்கிய முக்கிய மசோதாக்களில் ஒன்றாக முத்தலாக் தடை மசோதா மாறியுள்ளது. திருத்தங்களுடன் கூடிய முத்தலாக் தடை மசோதாவை சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மக்களவையில் தாக்கல் செய்ய, நாடாளுமன்றமே விவாதக்களமாக மாறியது. 
மத்திய அரசின் முத்தலாக் மசோதாவிற்கு  கடும் கண்டனங்களும் விமர்சனங்களும் எழுந்ததால், திருத்தப்பட்ட மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தது மத்திய பாஜக... முத்தலாக் கூறும் நபர்கள், உடனடியாக ஜாமின் பெற முடியாது என்பதில் திருத்தம் கொண்டு வந்து, நீதிபதிகளிடம் ஜாமின் பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், பாதிக்கப்பட்ட பெண்ணோ அல்லது அவரது குடும்பத்தினரோ புகார் தெரிவிக்கலாம் என்ற திருத்தமும் மேற்கொள்ளப்பட்டது. 
இவ்வாறு திருத்தப்பட்ட முத்தலாக் மசோதா மீதான விவாதம் மக்களவையில் தொடங்கிய உடன்,  காங்கிரஸ் கட்சி கடும் விமர்சனங்களை முன்வைத்தது. சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த விவாதத்தில், முத்தலாக் மசோதாவை, நாடாளுமன்ற சிறப்பு குழுவுக்கு அனுப்ப வேண்டும் என காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தினர்.
பெரும்பாலும், பாஜகவை கடுமையாக விமர்சிக்காத அதிமுக, முத்தலாக் மசோதாவை கைவிட வலியுறுத்தியது. அக்கட்சியின், அன்வர் ராஜாவின் நாடாளுமன்ற உரை அனைத்துக்கட்சிகளின் கவனத்தையும் ஈர்த்தது. 
நீண்ட விவாதத்திற்கு பிறகு நடந்த முத்தலாக் தடை மசோதா மீதான வாக்கெடுப்பில், மசோதாவுக்கு ஆதரவாக 245 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும் பதிவாகியது. இதனால், பெரும்பான்மையுடன் முத்தலாக் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேறியுள்ளது. வாக்கெடுப்பின்போது காங்கிரஸ், அதிமுக, சமாஜ்வாடி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மக்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தன.  
மக்களவையில், பாஜகவுக்கு பெரும்பான்மை இருப்பதால், முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா மாநிலங்களவைக்கு அனுப்பப்பட உள்ளது. மாநிலங்களவையில், பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாததால், அங்கு, முத்தலாக் மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மாநிலங்களவையில், முத்தலாக் மசோதா நிறைவேறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

source: ns7.tv
Image

அடி பணிகிறாரா சந்திரசேகர ராவ்? பாஜகவின் ஸ்லீப்பர் செல்லாக செயல்படுகிறாரா? December 28, 2018

Image
source: ns7.tv

பாஜக - காங்கிரஸ் கட்சிகளுக்கு மாற்றாக 3-வது அணியை உருவாக்கும் தெலங்கானா மாநில முதல்வர் சந்திர சேகரராவ் - பாஜகவின் ஸ்லீப்பர் செல்லாக செயல்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்வைக்கும் விமர்சனங்களுக்கு என்ன காரணம்? 
நாடாளுமன்ற தேர்தலை நிர்ணயிக்க கூடிய சக்திகளாக - சந்திர சேகர ராவ் - சந்திரபாபு நாயுடு - மு.க.ஸ்டாலின் என தென்னிந்திய தலைவர்களே தற்போதைய நிலவரத்தில் முன்னணியில் உள்ளனர். பாஜவை வீழ்த்தியே தீருவேன் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சூளுரைத்து காய்களை நகர்த்த, திமுக. தலைவர் மு.க.ஸ்டாலினோ ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்து திரிசங்கு சொர்க்கத்தில் காங்கிரஸ் கட்சியை நிறுத்தியுள்ளார். 
இது ஒருபுறம் இருக்க, சந்திர சேகர ராவோ - பாஜக - காங்கிரசுக்கு மாற்றாக மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார். இந்த இடத்தில், சந்திரபாபு - மு.க.ஸ்டாலினின் நிலைப்பாடு வெளிப்படையாக தெரிய, சந்திர சேகரராவோ ஒருவகையில், பாஜகவின் ஸ்லீப்பர் செல்லாக, செயல்படுவதாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஐதராபாத் அருகே பிரகதி நிவேதனா சபா என்ற பெயரில், ராஷ்டிர சமிதி மாநாடு, சில மாதங்களுக்கு முன்பு பிரமாண்டமாக நடைபெற்றது. அங்கு பிரமாண்டமாக அமைக்கப்பட்ட ,மேடையில் ஏறிய சந்திர சேகர ராவ் - டெல்லியிடம் சரணடைய மாட்டோம் என ஆவேசமாக பேசி அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். ஆனால், அந்த பேச்சில், காங்கிரஸ் கட்சியை மட்டுமே அவர் கடுமையாக விமர்சித்ததாகவும், பாஜகவுக்கு  மௌன சிரிப்பை பரிசளித்ததாகவும் அரசியல் விமர்சகர்கள் தெளிவுபட கூறியுள்ளனர். இருப்பினும், பாகஜவுடன் தான் நட்பில் இல்லை என்பதைப் போல் காட்டிக்கொண்ட அவர், சில வாரங்களுக்கு முன்பு நடந்து முடிந்த தெலங்கானா தேர்தலில் தனித்து போட்டியிட்டு, அபாரமாக ஆட்சியையும் கைப்பற்றினார்.
இதன் உடன் நிகழ்வாக, பாஜக - காங்கிரசுக்கு மாற்றாக, 3-வது அணியை அமைக்கும் முயற்சியிலும் தீவிரம் காட்டி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி உள்ளிட்ட மாநில கட்சி தலைவர்களையும் சந்தித்து பேசியுள்ளார். இப்படி, கூட்டணி குறித்து அவரின் பேச்சுகளோடு நிறுத்தியிருந்தால் சந்தேகம் எழுந்திருக்காது. 
அடுத்த நகர்வாக, பிரதமர் மோடியையும் அவர் சந்தித்து விவாதித்ததே தேசிய அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இடத்தில் கடும் விமர்சனங்களை முன்வைத்த சந்திரபாபு நாயுடு, நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில், சந்திர சேகர ராவின் தெலங்கான ராஷ்டிரிய சமிதி கட்சி பாஜகவின் 2-வது அணியாக செயல்பட்டு வருவதாக கடுமையாக விமர்சித்துள்ளார். வடக்கிற்கு பணிய மாட்டோம் என்று ஆவேசமாக பேசிய சந்திர சேகர ராவ், தற்போது பாஜகவின் வலையில் வீழ்ந்துவிட்டதாகவும், அவர்களுக்காகவே காங்கிரசை வீழ்த்தும் முயற்சியில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். 
ஒன்றுபட்ட ஆந்திராவில் தெற்கில் சந்திராபு நாயுடு என்றால், வடக்கில் சந்திர சேகர ராவ் என்பது தான் அம்மாநில மக்களின் மாறாத நம்பிக்கை. நாடாளுமன்ற தேர்தலிலும் இருவருமே வடக்கின் குரலாகவே ஒலிக்கின்றனர்.  சந்திரபாபு நாயுடு, வடக்கில் காங்கிரசின் குரலாக வெளிப்படையாக காட்டிக்கொண்டாலும், சந்திர சேகர ராவும் தனது சுய ரூபத்தை விரைவில் வெளிப்படுத்துவார் என்றே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். 

வியாழன், 27 டிசம்பர், 2018

அஸ்ஸாமில் சூடு பிடிக்கும் எலிக்கறி விற்பனை..

Image

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள குமரிகட்டா பகுதியில், எலிக்கறி விற்பனை மிக தீவிரமாக நடந்துவருகிறது.
குமரிகட்டா பகுதியில் உள்ள வவிவசாயிகள், தங்கள் விளைநிலங்களில் இருக்கும் எலிகளை பிடித்துவந்து, அதன் தோலை உரித்து, காரசாரமான மசாலா தடவி விற்பனை செய்துவருகின்றனர். கோழிக்கறி மற்றும் ஆட்டுக்கறியை விட எலிக்கறி அதிக அளவில் விற்பனையாகிறது என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
அப்பகுதியில், ஒரு கிலோ எலிக்கறி 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை சற்று அதிகமாக இருந்தாலும், அப்பகுதி மக்கள் அனைவரும் விரும்பி வாங்கிச்சென்று உண்கின்றனர். தேயிலை தோட்டத்தில் பகல் நேரத்தில் வேலை செய்யும் விவசாயிகள், இரவு நேரங்களில் எலி பிடிக்க சென்றுவிடுகின்றனர். எலிகளை பிடிப்பதற்காக மூங்கிலால் செய்யப்பட்ட பிரத்யேக கூடுகளை பயன்படுத்துகின்றனர்.
ஒரு சில எலிகள், ஒரு கிலோவிற்கும் அதிகமான எடை உடையதாக இருக்கும் எனவும் ஒரு நாளைக்கு குறைந்தது 10லிருந்து 20 கிலோ எலிக்கறி விற்பனையாகும் எனவும் தெரிவித்தனர். எலிகளை பார்த்து பயப்படுவோர் இருக்கும் நிலையிலும், எலிகளை பிடித்து அதனை சமைத்து சாப்பிடுவது பலரிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 
அஸ்ஸாமில், தேயிலை தோட்டத்தில் மட்டும் வேலை பார்த்து போதிய வருமானம் இல்லாமல் திணறும் மக்களுக்கு இந்த எலிக்கறி விற்பனை கைகொடுக்கிறது. குறிப்பாக, அங்குள்ள பழங்குடியினரே அதிகமாக இத்தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். 
source ns7.tv

ரத்த மாதிரிகளை பெறும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்! December 27, 2018

Image

source; ns7.tv

ரத்த மாதிரிகளை பெறும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?
ரத்தம் கொடுக்கக்கூடிய கொடையாளியின் உடல் எடையை கண்காணிக்க வேண்டும். ரத்தம் தானம் கொடுப்பவர், குறைந்தது ஆறு மாதம் இடைவெளிக்கு பின் தான், அடுத்த ரத்த தானம் வழங்க வேண்டும்.  ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் மற்றும் தட்டணுக்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட வேண்டும். குறிப்பாக ரத்த தானம் கொடுப்பவருக்கு, தொற்று நோய் அல்லது தொற்றா நோய் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். 
ஹெச்.ஐ.வி, காச நோய், கல்லீரல் தொடர்பான ஹெப்படைடிஸ் நோய்கள் இருக்கிறதா என்பதை பரிசோதிக்க வேண்டும். இதில் ஏதாவது தடங்கலோ அல்லது சிக்கலோ இருந்தால், அந்த குறிப்பிட்ட ரத்த மாதிரிகள் நிராகரிக்கப்பட வேண்டும். பரிசோதனையில் தேர்வான ரத்த மாதிரிகளை குளிர்பதன கிடங்கில் சேமித்து வைக்க வேண்டும். ரத்தம் பெறுபவரின் ரத்த மாதிரியையும்,  கொடுக்கப்படும் ரத்த மாதிரியையும் ஒப்பிட்டு ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும். இவை அனைத்தும் சரியாக இருந்தால் மட்டுமே, ரத்தம் தேவைப்படுவோருக்கு ரத்தம் செலுத்தப்பட வேண்டும்.

பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக மண்பாண்ட பொருட்கள்...! December 27, 2018

Image

வரும் 1ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமலாகவுள்ள நிலையில், அதற்கு மாற்றாக மண்பாண்ட பொருட்கள் தயார் செய்யும் பணி நெல்லையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பண்டைய காலத்தில் களிமண்ணால் செய்யப்பட்ட மண் சட்டி, மண் அடுப்பு, தண்ணீர் குவளை ஆகியவற்றை உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், படிப்படியாக ஈயம், சில்வர் என மாறி தற்போது எந்த பொருட்களை எடுத்தாலும், பிளாஸ்டிக் தான் முதன்மை தேவை என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்ததன் காரணமாக நிலத்தில் மாசு ஏற்படுவதுடன், பிளாஸ்டிக் பொருட்களை உண்ணும் கால்நடைகளும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. 
சூடான உணவுகளை பிளாஸ்டிக் பைகளில் வாங்கி பயன்படுத்துவதால் கேன்சர் உள்ளிட்ட நோய்கள் பரவும் நிலை ஏற்படுவதாகவும், ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்தனர். அனைத்து துறைகளிலும் பிளாஸ்டிக் தவிர்க்க முடியாத பொருளாக மாறியதன் காரணமாக வரும் 1 ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு முழுமையாக அமல்படுத்தப்படுகிறது. இதற்கு மாற்றாக நெல்லை- மேலப்பாளையம் குறிச்சியில் மண்பாண்டங்கள் தயார் செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது. 
 பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளான தண்ணீர் குடிப்பதற்கும்,  டீ, காபி குடிப்பதற்கும் 100ml முதல் 250ml வரையிலான மண்பாண்டத்தால் வடிவமைக்கப்பட்ட டம்ளர்கள் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. மேலும்,ஐஸ் கிரீம், தயிர் வைப்பதற்கான மண்பாண்ட பானை, 1 லிட்டர், 2 லிட்டர் தண்ணீர் ஜக் ஆகியவற்றிற்கு  அதிகளவில் ஆர்டர்கள் வருவதாக கூறுகின்றனர் மண்பாண்ட உற்பத்தியாளர்கள். பிளாஸ்டிக், பேப்பர் கப் வியாபாரம் நடத்தி வந்த வியாபாரிகளும் மண்பாண்ட பொருட்களை விற்பனை செய்வதற்கு மொத்தமாக ஆர்டர் கொடுக்க மண்பாண்ட உற்பத்தியாளர்களை நாடியுள்ளனர்.
 
போதிய வரவேற்பு இல்லாத காரணத்தினாலும், மண் எடுப்பதற்கு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இத்தொழிலில் இருந்து மாற்று தொழிலுக்கு சென்ற மண்பாண்ட தொழிலாளர்கள் தற்போது பிளாஸ்டிக் தடை என்ற அரசின் அறிவிப்பால் மனமகிழ்வோடு மீண்டும் இத்தொழிலை துவங்கியுள்ளனர். பாரம்பரிய மிக்க இந்த மண்பாண்ட தொழிலாளர்கள் களிமண் எடுப்பதற்கு அரசு அனுமதி வழங்கினால் இத்தொழிலை எளிதில் தொடர்ந்து நடத்த முடியும் என்பதே மண்பாண்ட தொழிலாளர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.
source ns7.tv

மணப்பெண் பற்றாக்குறையால் திணறும் சீன இளைஞர்கள்! December 27, 2018

Image

source ns7.tv
மணப்பெண் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பணம் கொடுத்து வெளிநாடுகளில் இருந்து பெண்களை வாங்கும் நிலைக்கு சீன இளைஞர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இரும்புத்திரை தேசம் என வர்ணிக்கப்படும் சீனாவில், பெண்களுக்கு எதிரான அரசின் பாலின நடவடிக்கைகள், பாலின விகிதாச்சாரத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் தொகை பெருக்கத்தில் முதலிடத்தில் இருந்த சீனா, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த, முப்பது ஆண்டுகளுக்கு முன் ‘ஒரு குழந்தைக் கொள்கை’ அமல்படுத்தியது. இக்கொள்கையை மீறும் குடும்பங்களுக்கு அரசு உதவிகள் மறுக்கப்பட்டதால், இதனை பின்பற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர் சீனப்பெண்கள். 
அதே நேரம், ஆண் வாரிசு மீதான விருப்பத்தால், பெண் குழந்தைகளைக் கருவிலேயே அழிக்கத் தொடங்கியதன் விளைவு,  சீனாவில் பெண்களைவிட, 3.3 கோடி இளைஞர்கள் அதிகமாக உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மற்றொரு புறம், பெருகிவரும் மணப்பெண் பற்றாக்குறையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் கடத்தல் காரர்கள், அருகில் இருக்கும் வியட்நாம், கம்போடியா, மியான்மர், லாவோஸ் ஆகிய நாடுகளிலிருந்து இளம் பெண்களை கடத்தி சீன இளைஞர்களுக்கு விற்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசும் இதைக் கண்டு கொள்ளாததால், சட்டவிரோத மணப்பெண் வர்த்தகம் கொடிகட்டிப் பறப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
ஆரோக்கியமான மனிதவளம் தேவை என்ற பேராசையால், மனநலம் குன்றியவர்களும், மாற்றுத்திறனாளிகளும் குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாது என்று சட்டம் இயற்றிய சீனா. சட்டவிரோத மணப்பெண் கடத்தலுக்கு ஆதரவாக செயல்படுவதன் தாக்கம், இளைஞர்களின் மனநிலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சொந்த மக்களின் நலனையும், உரிமைகளையும் புறந்தள்ளும் சீனா, பொருளாதாரத்தில் வளர்ந்து எதை சாதித்துவிட போகிறது என்பதே மனித உரிமை ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.

புதன், 26 டிசம்பர், 2018

குட்கா வழக்கில் விரியும் வலை: சிக்கப்போவது யார்? December 25, 2018

source ns7.tv
Image



தமிழகத்தை பரபரப்பில் ஆழ்த்தியுள்ள குட்கா ஊழல் வழக்கில் காவல்துறை உயர் அதிகாரிகளை விசாரிக்க சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு  குட்கா விற்பனைக்கு தமிழக அரசு தடைவிதித்த பிறகும் அமைச்சர்கள், அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு குட்கா விற்பனையை கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. 
இந்நிலையில் குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ-யின் 2-வது கட்ட விசாரணை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. குட்கா ஊழல் நடந்த காலகட்டத்தில் வணிக வரித்துறை அமைச்சராக இருந்த பி.வி.ரமணா மற்றும் தற்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகிய இருவரிடமும்  சி.பி.ஐ. அதிகாரிகள்  கடந்த 15ஆம் தேதி விசாரணை மேற்கொண்டனர். 
மேலும் இந்த வழக்கில் காவல்துறை உயர் அதிகாரிகளும் லஞ்சம் பெற்றதாக கூறப்பட்டது. இந்நிலையில் குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வரும் ஜனவரி மாதம் காவல் துறை உயர் அதிகாரிகளை விசாரிக்கத் திட்டமிட்டுள்ளனர். இதனால் குட்கா ஊழல் வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

14 ஆண்டுகளாகியும் அழியாத சுனாமி ஆழிப்பேரலையின் சுவடுகள்! December 26, 2018

Image

source ns7.tv
தெற்காசியாவில் கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி, சுமார் இரண்டரை லட்சம் உயிர்களை காவு வாங்கியது. அந்த தாக்குதல் நிகழ்ந்து இன்றோடு 14 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. 
2004 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் நாள். உலகமே உறைந்து போன ஒரு தினமாக வரலாற்றில் பதிந்தது அந்த நாள். கிறிஸ்துமஸ் பண்டிகை முடிந்த அடுத்தநாள் அது. இந்தியக் கடலோர நாடுகளில் வசிக்கும் மக்கள், தங்கள் வீடுகளில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர். சரியாக நள்ளிரவு நேரம். இந்தோனேஷியாவின் மேற்கு பகுதியில், சுமத்ரா தீவுக்கு கீழே 30 கிலோ மீட்டர் ஆழத்தில், 9.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக சிறியதாய் தோன்றிய அலை ஒன்று, பூதாகரமாய் பெருக்கெடுத்து, தெற்காசிய நாடுகளையே புரட்டிப் போட்டது. 
உறங்கிக் கொண்டிருந்த மக்களுக்கு அதன் வீரியம் உணர சில நிமிட நேரங்கள் நீடித்தன.  இந்தியாவில் 9571, இந்தோனேஷியாவில் 94,100, இலங்கையில் 30,196, தாய்லாந்தில் 5,187, மியான்மரில் 90 பேரும், மாலத்தீவில் 75 பேரும், மலேசியாவில் 68 பேரும், சோமாலியாவில் 176 பேரும், தான்சானியாவில் 10 பேரும், கென்யாவில் ஒருவரும் சுனாமிக்கு பலியாயினர்.
உறவினர்கள், நண்பர்கள், உடைமகள் என அனைத்தையும் இழந்துவிட்டு லட்சக்கணக்கான மக்கள் பல நாடுகளிலும் தவியாய் தவித்தனர். 
சுனாமியால் அதிகம் பாதிப்புக்குள்ளானது தமிழகம் தான். தமிழகத்தில் நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கடலூர், புதுக்கோட்டை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சுனாமி தாக்குதலில் மீன்பிடி படகுகள் சுக்கு நூறானதால், மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு நிலைக்கு மீண்டுவர ஒரு சில ஆண்டுகள் வரை ஆனது. 
அந்த கோர நிகழ்வு நடந்து 14 ஆண்டுகள் கடந்துவிட்டது. இப்போது, ஆழிப்பேரலை எச்சரிக்கை செய்வதில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். உலகளவில் சுனாமி குறித்த எச்சரிக்கையை வெளியிடும் நாடுகளின் தகவல்களில், இந்தியா வெளியிடும் தகவல் மிக சரியானதாக இருப்பதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அந்த தகவல்கள் எல்லாம் வெறும் வார்த்தையாகி விடாமல், உண்மையாக இருக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக இருக்கிறது. வெறுமனே முன்னெச்சரிக்கை செய்வதில் சிறப்பாக செயல்படுவதாக பாராட்டிக் கொள்ளாமல், பாதிப்பு ஏற்படும் என அறிந்தால், அந்த பாதிப்புகளை குறைக்க நடவடிக்கை எடுப்பதே சிறந்தது என்பதை 2004ம் ஆண்டின் ஆழிப்பேரலையின் சுவடுகள் கற்றுக் கொடுத்திருக்கிறது.  

சோலார் தகடுகள் மூலம் 2 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்த விசாகப்பட்டினம் மாநகராட்சி! December 26, 2018

source ns7tv

Image
நாட்டிலேயே முதல்முறையாக நீரில் மிதக்கக்கூடிய சோலார் தகடுகளை அமைத்து, விசாகப்பட்டினம் மாநகராட்சி 2 மெகாவாட் மின்சாரத்த்தை உற்பத்தி செய்துள்ளது. 
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அங்குள்ள ஏரியில் 20 ஏக்கர் பரப்பளவில் மிதக்கும் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்பதால், நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் மாநகராட்சி செலவு சேமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 
இதனால் ஆயிரத்து 540 டன் நிலக்கரி எரிப்பது தடுக்கப்படுவதுடன், மூன்றாயிரத்து 80 டன் கார்பன்டை ஆக்சைடு வெளியிடப்படுவதில் இருந்து மக்கள் பாதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

செவ்வாய், 25 டிசம்பர், 2018

வாஸ்கோடகாமா

Image

source ns7.tv

வாஸ்கோடகாமா நினைவு தினம் இன்று!
வரலாற்றின் பெரும் பகுதி ஓரளவு தன்னிறைவுடைய ஒரு தனி நாடாகத்தான் இந்தியா இயங்கிவந்தது.ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்கு போக்குவரத்தே, அனைத்து  அரசாங்கமும் போக்குவரத்திற்கு அதிகம் செலவிடுவது கூட நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தான்,அதே நேரம் வழித்தடங்களும்,நேரம்,செலவு என்பது கருத்தில் கொள்ளப்படுகிறது அவ்வகையில் கி.பி 12 ஆம் நூற்றாண்டிலிருந்து 16 ஆம் நூற்றாண்டு வரையிலான ஐந்நூறு ஆண்டுகளில், இந்தியாவிற்கும், ஐரோப்பாவிற்குமிடையே இருந்த வர்த்தக உறவுகள் வலுவானதாய் இருக்க வாஸ்கோடகாமா வழித்தடம் முக்கிய பங்குவகிக்கிறது.தற்போதைய  நம்முடைய கலாச்சாரம் கூட பாதி ஐரோப்பிய கலாச்சாரம் கலந்து தான் காணப்படுகிறது.
 
5 ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கும், மேலை நாடுகளிற்குமிடையே வணிகம் நடைபெற மூன்று கடல் வழி மார்க்கங்கள் இருந்தன.எகிப்தின் வழியாக ஐரோப்பாவை அடையும் மார்க்கம், ஆக்ஸஸ் காஸ்பியன் மற்றும் கருங்கடல் வழியாக ஐரோப்பாவை அடையும் வடக்கு வழி மார்க்கம்,சிரியாவிலிருந்து மத்திய தரைக்கடல் மூலம் ஐரோப்பாவை அடையும் இடைப்பட்ட மார்க்கம்.
இவைகள் அனைத்தும் துருக்கிய பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தது.எனவே எந்த ஒரு பரிமாற்றமும் வர்த்தகமும் அவர்கள் தலையீடு இல்லாமல் இருக்காது.இன்னொரு முக்கிய காரணம் ஐரோப்பிய, துருக்கி அரசுகளுக்கிடையேயிருந்த பகைமை முக்கிய பிரச்னையாக இருந்தது. அவர்கள் விதிக்கப்பட்ட சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே வணிகம் செய்ய வேண்டும்.
இந்த காரணங்களால், ஐரோப்பாவிற்கும், இந்தியாவிற்குமிடையேயான புதிய மற்றும் நேரடி கடல் வழி மார்க்கத்தை கண்டு பிடிக்க வேண்டியதன் முக்கியத்துவம் உணரப்பட்டது. இந்த முயற்சியை முதன் முதலில் தொடங்கியவர்கள் ஸ்பானியரும், போர்த்துக்கீசியருமே. ஆனால் இதில் முதலில் வெற்றி கண்டவர்கள் போர்த்துக்கீசியர்களே. அப்போதைய இளவரசர் ஹென்றி இதற்குத் தேவையான முழு உதவியையும், ஆதரவையும் வழங்கினார்.இதனைப் பயன்படுத்திக்கொண்டு, ஆப்பிரிக்கக் கடற்கரைப் பகுதியில் காலூன்றி, பின்னர் 1471ல் பூமத்திய ரேகையைக் கடந்தனர். 27 வருட கடும் முயற்சிக்குப் பின்னர் 1498 ல் இந்தியாவை வந்தடைந்தனர்.
1483 இல், 'டீகோ காவோ' என்ற கப்பல் போர்ச்சுகலில் இருந்து ஆப்ரிக்காவின் காங்கோ ஆறு வரை கடலில் பயணம் செய்து வந்தடைந்தது; அதற்கு ஐந்தாண்டுகளுக்குப் பின் பார்டோலொமு டயஸ் ஆப்ரிக்க கண்டத்தை கடல் வழியே கடந்து, இந்தியப் பெருங்கடலை எட்டிப் பார்த்தது. அனுமான்யமாக  ஆப்ரிக்காவின் தொன்கோடி முனைக்கு "நன்நம்பிக்கை முனை" எனப் பெயர் வைத்தது - டயஸ் தான் என்பார்கள். அதே இடத்திற்கு திரும்பவும் வந்து, பின் அங்கிருந்து இந்தியாவை அடையும் பயணத்தை துவக்கிடலாம் என்ற நம்பிக்கையில். பின்னர் இன்னொரு பயணத்தில் அவர் இறந்து விட்டதால், அந்த பொறுப்பு வாஸ்கோ டகாமாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
பின் நம்பிக்கை முனை நான்காவது இடமாக கென்யா வந்ததடைந்து பின்  1498 இல், அந்தத் துணையுடன் ஆப்ரிக்காவில் இருந்து புறப்பட்ட அவரது கப்பல்கள் 23 நாட்களிலேயே இந்தியாவின் மலபார் கடற்கரையைத் தொட்டுவிட்டது. வருடம்  காலகட்டத்தை கவனத்தில் கொள்ளும்போது மிகவும் கஷ்டமான கண்டுபிடிப்புதான் இது. எந்த நேரத்திலும் வழி தவறி மேற்கே போய்விடக்கூடிய அபாயம்; இதன் நடுவில் மாதக் கணக்காக வேற்று முகத்தையே பார்க்காமல், போகும் முடிவும் தெரியாமல் சில மாலுமிகளும், சில கப்பல் பணியாளர்களும் திரும்பத் தன் நாட்டுக்கே போய்விட வேண்டும் என்று கலகம் செய்தது; ஆங்காங்கே கரையில் இறங்கிய இடத்தில் அபாயம், உணவுப் பற்றாக்குறை, குடிநீர் பற்றாக்குறை, புயல் சீற்றத்தின் பயமுறுத்தல் என்று எண்ணிலடங்காத சோதனையைக் கடந்து கள்ளிக்கோட்டையில் கால் வைத்ததே சாதனைதான்.
வாஸ்கோடகாமாவின் இந்தியப் பயணத்தின் விளைவாக,ஐரோப்பா மற்றும் தூரக்கிழக்கு நாடுகளுக்கிடையேயான ஒரு நேரடி கடல்வழித் தடம் அமைந்தது.இதன் காரணமாக,எண்ணற்ற நாடுகள் பெரும் பயனடைந்தன.இதுவே வாஸ்கோடகாமா கடல்வழிப் பயணத்தின் அடிப்படை முக்கியத்துவமாக இருந்தது.இந்தப் பயணத்தால் போர்ச்சுக்கல் நாட்டிற்கு குறுகிய காலத்தில் அதிகம் பயன் கிடைத்தது.
ஐரோப்பியர்களின் சமூகத்தாலும் மதத்தாலும் வியாபாரத்தாலும் அல்லது தொழிற்நுட்பத்தாலும் பாதிக்கப்படாத மக்கள் யாருமே இல்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும் கிழக்கத்திய கொள்கைகள் இப்படிப்பட்ட ஊற்றுமூலங்கள் வழியாக ஐரோப்பாவிற்கு வந்து ஓரளவு ஆதிக்கத்தையும் செலுத்த ஆரம்பித்தன. காலப்போக்கில் இந்த கருத்துப் பரிமாற்றங்கள், பல்வேறு மனித கலாச்சாரங்களுக்கு எல்லையே இல்லை என்ற விழிப்புணர்வை அதிகரித்தன.பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிப் பிற்பாதிக்குள் இந்தியத் துணைக் கண்டம் முழுவதுமே பிரிட்டிஷ் குடியரசின் கீழ் அடிமைப்பட்டது.வாஸ்கோடகாமாவின் கடற்பயணத்தின் விளைவுகள் உண்மையில் நல்லதோ கெட்டதோ, ஆனால் இந்த நவீன உலகம் அவருடைய கடற்பயணத்தின் பலன்களை இன்னும் அனுபவித்துக்கொண்டே இருக்கிறது.
மூன்றாம் முறை இந்தியா வந்த  வாஸ்கோடகாமா  1524 டிசம்பர் 25-ல்  கொச்சியில் மறைந்தார்.‘உருமி’ படத்தின் மூலம் மிக அழுத்தமாக இயக்குனர் சந்தோஷ் சிவன் பதிவு செய்திருந்தார்.

பழங்குடியின மக்களை தரக்குறைவாக பேசிய போலீசார்! December 25, 2018

Image
source: ns7.tv

நீலகிரி மாவட்டதில் தோடர் பழங்குடியின மக்களை தரக்குறைவாக பேசிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 
உதகையில் உள்ள பவானீஸ்வரர் கோவில் தேரோட்டத்தின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சில போலீசார் தோடர் பழங்குடியின ஆண்களை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தோடர் பழங்குடியினர், உதகை B1 காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் போலிசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.
மனுவை அளித்த பின்னர் அவ்விடத்தை விட்டு பழங்குடியின மக்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து அப்பகுதியில் இயல்பு நிலை திரும்பியது. 

அரை நூற்றாண்டை கடந்தாலும் அழியாத வடு : கீழ்வெண்மணி படுகொலை! December 25, 2018

source: ns7.tv
அரை நூற்றாண்டை கடந்துவிட்டாலும்  மக்கள்  மனதில் ஆறாத வடுவாகவே இருந்து வருகிறது கீழ்வெண்மணி படுகொலை சம்பவம். என்ன நடந்தது என்பதை பற்றி தற்போது விரிவாக காண்போம்.
1968 டிசம்பர் 25ம் நாள் நாட்டுத் துப்பாக்கிகளுடன் சிலர் கீழ்வெண்மணிக்குள் புகுந்தார்கள். விவசாய கூலிகளைத் தாக்கினார்கள்.  நில உடமையாளர்களின் அடியாட்கள் துப்பாக்கியால் சுட்டதில் பலர் ஓடினார்கள். ஓடியவர்கள் தெருவொன்றின் மூலையில் இருந்த "ராமையன்" என்பவரின் குடிசைக்குள் ஓடி ஒளிந்தார்கள். எட்டடி நீளம், ஐந்தடி அகலமுள்ள அந்தக் குடிசையில் 44 பேர் அடைந்திருந்தனர். கதவு அடைக்கப்பட்டுத் தீ வைக்கப்பட்டதில் அக்குடிசை எரிந்து சாம்பலானது. கர்ப்பிணிகள், பெண்கள், குழந்தைகள் உட்பட 44 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். கூலியாக அரைப்படி நெல் உயர்த்திக் கேட்டதற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொடூர நிகழ்வு இது. 
இந்தசம்பவத்தில் 106 பேர் கைதானார்கள். "இது சாதிய மோதல்" என்று காவல்துறை முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டது. "அதிக நிலங்களைச் சொத்துக்களாக வைத்திருப்பவர்கள் இப்படியொரு செயலைச் செய்திருக்கமாட்டார்கள். அவர்கள் குற்றவாளிகள் அல்ல" என்று 1973 ஏப்ரல் 6 ஆம் தேதி உயர்நீதிமன்றத்தால் தீர்ப்பு சொல்லப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலையானார்கள். 
வெண்மணி படுகொலை சம்பவம் நடந்து 50 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், உயிர் பிழைத்தவர்கள், காயம்பட்டவர்கள் சிலரை  கீழ்வெண்மணி கிராமத்தில் தற்போது பார்க்கமுடிகிறது.  அப்பொழுது இருந்த விவசாயக் கூலித் தொழிலாளர்கள்  தற்பொழுதும்  கூலித் தொழிலாளர்களாகவே இருக்கின்றனர். 
கீழ்வெண்மணிப் படுகொலையை நினைவு கூறும் விதமாக வருடாவருடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கட்சிபாகுபாடின்றி வெண்மணி தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வெண்மணி படுகொலை சம்பவம்  தங்களால் மறக்க முடியாத கோர நிகழ்வு என்று வேதனை தெரிவிக்கின்றனர். 
கீழ்வெண்மணி படுகொலை சம்பவம் அரை நூற்றாண்டை கடந்தாலும், இந்த சம்பவம் கிராம மக்களின் மனதில் ஒரு அழியாத வடுவாகவே இருந்து வருகிறது.

புகைப் பழக்கத்திற்கு நாடு முழுவதும் ஆண்டு ஒன்றுக்கு ரூ.80,000 கோடி செலவு! December 25, 2018

நாடு முழுவதும் பீடி புகைப்பழக்கத்தால் எவ்வளவு செலவாகிறது? புகைபிடிப்பதால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ செலவு எவ்வளவு தெரியுமா?
பீடி, புகைப் பழக்கத்திற்கு நாடு முழுவதும் ஆண்டு ஒன்றுக்கு  80,000 கோடி ரூபாய் அளவிற்கு செலவிடப்படுகிறது. தேசிய புகையிலை தடுப்பு மையம் (NTCP) நடத்திய ஆய்வில் இந்த அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது. பொது கொள்கை ஆராய்ச்சி மையத்தின் ஆய்வாளர் ரிஜோ.எம்.ஜான் நடத்திய ஆராய்ச்சியின் மூலம் இது தெரியவந்துள்ளது. பீடி புகைப்பவர்களின் மருத்துவத்திற்கான செலவு எவ்வளவு என்பதை இப்போது பார்க்கலாம்.
மருத்துவ செலவினங்களுக்காக ஒரு ஆண்டுக்கு 16,870 கோடி ரூபாய் செலவு செய்கிறார்கள். இதில், இரண்டு வகையான செலவினங்கள் அடங்கும். நேரடி செலவினங்களாக மருத்துவ பரிசோதனைகள், மருந்துகள், மருத்துவ கட்டணம் மற்றும் மருத்துவமனையில் தங்கும் செலவுகள், போக்குவரத்து செலவுகள் கருதப்படுகின்றன. மொத்த செலவுத் தொகையா 16,870 கோடி ரூபாயில், இது 20.9 சதவீதம் நேரடி செலவாகும். 
அடுத்து, மறைமுக செலவுகளை பார்ப்போம். குடும்ப நபரின் வருவாய் இழப்பு, நோயாளிகளை பார்த்துக்கொள்ளும் உறவினர்களுக்கான தங்கும், உணவு செலவினங்கள் மறைமுக செலவாக பார்க்கப்படுகிறது. மொத்த செலவான 16,870 கோடி ரூபாயில் இது 79 சதவீதம் ஆகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5% பீடி புகைப் பழக்கத்திற்காக செலவிடப்படுகிறது. மொத்த செலவினத்தில் இருந்து அரை சதவிகிதம் மட்டுமே வரி வருவாயாக அரசுக்கு கிடைக்கிறது. 
மொத்த மருத்துவ செலவினங்களில் 2.24% பீடி பழக்கத்திற்காகவே செலவிடப்படுகிறது. மொத்த புகையிலை பயன்பாட்டில் 81% பீடியாகவே இருக்கிறது. இந்தியாவில் சராசரியாக 15 வயதுக்கு மேற்பட்ட 7 கோடியே 20 லட்சம் பேர் பீடி புகைக்கிறார்கள்.
source: ns7.tv

"விஜயகாந்த் பூரண குணமடைந்து விரைவில் நாடு திரும்புவார்" - விஜயபிரபாகரன் December 25, 2018

Image

source: ns7.tv
தேமுதிகவில் எந்த குழப்பமும் இல்லை என்று விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார். 
தேமுதிக சார்பில் சென்னை தண்டையார்பேட்டையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜயகாந்த்தின் மகன் விஜயபிரபாகரன் கேக் வெட்டி, அப்பகுதி மக்களுக்கு பிரியாணி விநியோகம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் தேதி அறிவித்த பின் முடிவு செய்யப்படும் என்றார். 
தேமுதிகவில் எந்த குழப்பமும் இல்லை என்ற விஜய பிரபாகரன், அமெரிக்கா சென்றுள்ள விஜயகாந்த் பூரண குணமடைந்து விரைவில் நாடு திரும்புவார் என்றும் கூறினார். 

பரபரப்பை ஏற்படுத்திய முதல்வர் குமாரசாமி! December 25, 2018

source ns7.tv

Image

ஈவு இரக்கமில்லாமல் சுட்டுக்கொல்லுங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தொலைபேசியில் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில் தற்போது அதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளார். 
மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும் கர்நாடக முதல்வருமான குமாரசாமி தொலைபேசியில் ஒருவரிடம் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் நேற்று வைரலாகியது. 
மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிப் பிரமுகரான பிரகாஷ் என்பவர் தனது காரில் மாண்டியாவில் உள்ள மைசூரு சாலையில்  பயணித்துக்கொண்டிருந்தபோது மதூர் பகுதியில் அவர் அடையாளம் தெரியாத நபர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்திற்கு சென்ற முதல்வர் குமாரசாமியிடம் இந்தத் தகவலை உளவத்துறை போலீசார் தொலைபேசி வாயிலாக கூறியதாக தெரிகிறது. அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குமாரசாமி, மிகவும் கொந்தளித்தவராக காணப்பட்டார், அப்போது, “பிரகாஷ் ஒரு நல்ல மனிதர் அவரை கொலை செய்தவர்களை ஈவு இரக்கமில்லாமல் சுட்டுக்கொல்லுங்கள், எந்தப் பிரச்சனையும் இல்லை நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று அவர் பேசியுள்ளதாக தெரிகிறது. குமாரசாமி ஆக்ரோஷத்துடன் பேசும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
Karnataka CM HD Kumaraswamy caught on cam telling someone on the phone 'He(murdered JDS leader Prakash) was a good man, I don't know why did they murder him. Kill them (assailants) mercilessly in a shootout, no problem. (24.12.18)
2,283 people are talking about this
அந்த வீடியோ வைரலாகிய நிலையில், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தவதாக அவர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது, இதனால் இது தொடர்பாக விளக்கமளித்து அறிக்கை ஒன்றை தற்போது குமாரசாமி வெளியிட்டுள்ளார்.
அதில் ஈவு இரக்கமில்லாமல் சுட்டுக்கொல்லுங்கள் என போலீசாருக்கு நான் உத்தரவிடவில்லை, அந்த நேரத்தில் உணர்ச்சி வேகத்தில் நான் பேசிவிட்டேன். பிரகாஷை கொலை செய்தவர்கள் ஏற்கெனவே கொலை வழக்குகளில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் பிணையில் வந்து அவர்கள் இக்கொலையை செய்துள்ளனர். இப்படித்தான் பிணை தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.

குமாரசாமியின் இந்த பேச்சு கர்நாடக மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி அங்கம் வகித்து வரும் நிலையில் அரசியல் ரீதியாகவும் குமாரசாமியின் பேச்சு பாஜக உள்ளிட்ட எதிர்கட்சியினரால் விமர்சிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
 
source: ns7.tv