வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் கள்ள நோட்டுக்களின் புழக்கம் அதிகரித்துள்ளது : ரிசர்வ் வங்கி August 31, 2018

Image

500 ரூபாய் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

கடந்த 2016-17-ஆம் ஆண்டில் 199 புதிய 500 ரூபாய் கள்ளநோட்டுகள் சிக்கியதாகவும், 2017-18-ஆம் ஆண்டில் 9 ஆயிரத்து 892 நோட்டுகள் சிக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது. 2,000 ரூபாய் நோட்டுகளை பொருத்தவரை, 2016-17-ஆம் ஆண்டில் 638 நோட்டுக்கள் சிக்கியதாகவும், 2017-18-ஆம் ஆண்டில் 17 ஆயிரத்து 929 நோட்டுகள் சிக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைப்போல 100 ரூபாய் கள்ள நோட்டுகள் 35 சதவீதமும், 50 ரூபாய் கள்ள நோட்டுகள் 154 சதவீதமும் அதிகரித்து இருப்பதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது

சமூக வலைதள பதிவால் சிங்கப்பூரில் வேலை இழந்த இந்திய வம்சாவளி இளைஞர்! August 30, 2018

Image

சிங்கப்பூரில் வசித்துவரும் இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர், கிழிந்த நிலையில் இருக்கும் சிங்கப்பூர் நாட்டு கொடியின் படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்ததற்காக அவரது வேலை பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிங்கப்பூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணிபுரிந்துவருபவர் அவிஜித் தாஸ் பட்னயிக். இவர், கடந்த 10 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வசித்து வருகிறார். அவர், தான் சிங்கப்பூரில் இருந்தாலும், தாய் நாடான இந்தியாவை மிகவும் நேசிப்பதை வெளிப்படுத்த, கிழிந்த நிலையில் சிங்கப்பூரி கொடிகள் இருப்பது போலும், அதற்கு அடியில் இந்தியக்கொடி தெரிவது போலும் இருக்கின்ற புகைப்படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

அதனை கண்ட பலர் அதற்கு கண்டனங்களை தெரிவித்தவண்ணம் இருந்தனர். அதுமட்டுமல்லாமல், இது சிங்கப்பூர் கொடியை இழிவுபடுத்துவது போல் உள்ளது எனக்கூறி அவரை வேலையில் இருந்து நீக்கிவிட்டனர்

வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு! August 31, 2018

Image


வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. 

வருமான வரிச் சட்டத்தின் கீழ், தணிக்கை தேவைப்படாத பிரிவினர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய கடந்த ஜூலை மாதம் 31ம் தேதி, கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில் அந்த கால அவகாசமும் இன்றுடன் நிறைவடைகிறது. மாத ஊதியம், ஓய்வூதியம், வீட்டு வாடகை, தொழில் மூலம் வருமானம் பெறுவோர் இத்தகைய சட்டத்தின் கீழ் வருகின்றனர். 

வருமான வரியை இன்று தாக்கல் செய்யவில்லை என்றால் அபராதம் கட்ட வேண்டும் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் அடிப்படையில் 5 லட்சம் ரூபாய்க்கு கீழ் வருமானம் இருப்பவர்கள் ஆயிரம் ரூபாய் அபராதமும், 5 லட்சத்திற்கு அதிகமாக இருப்போர் 5 ஆயிரம் ரூபாயும் அபராதமாக செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வருமான வரியை செலுத்தாதவர்கள் உடனடியாக இன்றைய தினமே செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

​மதுரை மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொட்டிப் பாலத்திற்கு வந்தடைந்தது வைகை நீர்! August 31, 2018

Image

வைகை அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் மதுரை மாவட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள தொட்டிப் பாலத்திற்கு முதன்முறையாக வந்தடைந்துள்ளது. 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக, வைகையிலிருந்து உபரி நீராக வெளியேறும் நீரை உசிலம்பட்டி பகுதி மக்களின் விவசாய பாசனத்திற்கு கொண்டு வர அப்பகுதி மக்கள் கடந்த 20 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தனர். அதன்பேரில் 1996ம் ஆண்டு 33 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு 58 கால்வாய் திட்டப்பணி துவங்கப்பட்ட நிலையில், கடந்த மார்ச் 31ம் தேதி இத்திட்டப் பணிகள் முடிவுற்றது. 

இதனையடுத்து வைகை அணையிலிருந்து கடந்த 22ம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இந்த கால்வாயில் நீரை திறந்து வைத்தார். இந்நிலையில் இந்நீரானது புதிதாக கட்டப்பட்ட தொட்டிப் பாலத்திற்கு வந்தடைந்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பார்வையிட்டு வருகின்றனர்.

வியாழன், 30 ஆகஸ்ட், 2018

ஆசிய விளையாட்டுப் போட்டி - 11 தங்கம், 20 வெள்ளிகளுடன் 8-வது இடத்தில் இந்தியா! August 29, 2018

Image

18வது ஆசிய விளையாட்டு போட்டியில் 11 தங்கப்பதக்கங்கள் உள்பட 54 பதக்கங்களை பெற்று இந்தியா எட்டாவது இடத்தில் உள்ளது.

இந்தோனேசியாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், மும்முறை தாண்டுதல் பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர் அர்பிந்தர் சிங், இறுதிச்சுற்றில் 16.77 மீட்டர் நீளம் தாண்டி முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

ஆசிய விளையாட்டுப் போட்டி ஹெப்டத்லான் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்வப்னா பர்மன் தங்கம் வென்றார்.  நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம், 800 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகிய ஏழு போட்டிகளை அடக்கிய ஹெப்டத்லான் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்வப்னா பர்மன் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

மகளிர் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் டூட்டிசந்த் வெள்ளி பதக்கம் வென்றார்.

இதே போல், மகளிர் அரையிறுதி ஹாக்கிப் போட்டியில், இந்திய அணி, 1க்கு பூஜ்யம் என்ற கணக்கில் சீனாவை தோற்கடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 1998ம் ஆண்டுக்கு பிறகு, இந்திய மகளிர் அணி, ஹாக்கிப் போட்டியில், இறுதி சுற்றுக்கு முன்னேறுவது இதுவே முதல்முறையாகும். 

புதன், 29 ஆகஸ்ட், 2018

ஆசிய விளையாட்டுப் போட்டி: குழு வில்வித்தையில் அசத்திய இந்திய அணியினர்! August 28, 2018

Image

ஆசிய விளையாட்டுப் போட்டியின் குழு வில் வித்தை பிரிவில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் வெள்ளிப்பதக்கங்களை வென்றுள்ளனர். 

முதலில் நடந்த பெண்கள் குழு வில்வித்தை போட்டியில் இந்திய அணி தென்கொரியாவை எதிர்கொண்டது. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் பெண்கள் அணி 228-231 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய அணி தோல்வி அடைந்து வெள்ளியை வென்றது.

இதேபோல் குழு வில் வித்தை ஆண்கள் போட்டியில் இந்திய அணி தென் கொரியாவை எதிர்கொண்டது. இதில் 229-229 என்ற புள்ளிக் கணக்கில் போட்டி சமனானது. இறுதியில் SHOOT OFF முறையில் தென்கொரிய அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தென்கொரியாவுக்கு தங்கப்பதக்கமும், இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கமும் வழங்கப்பட்டது.

இத்துடன், 8 தங்கம், 16 வெள்ளிப்பதக்கங்கள் வென்று பதக்கப்பட்டியலில் 9வது இடத்தில் இருக்கிறது இந்தியா

மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் கைதுக்கு தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு கண்டனம்! August 28, 2018

Image

இன்று கைதான மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என கைதுக்கு  வலியுறுத்துள்ளது.

இன்று டெல்லி, ஜார்கண்ட், மும்பை, மகாராஷ்டிரம், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களில் உள்ள முக்கிய மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் முதலானோர் வீடுகள் சோதனையிடப்பட்டு, சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பேரா. அ.மார்க்ஸ் மற்றும் பேரா. பி. கோயா ஆகியோர், "வழக்குரைஞரும் பி/.யூ.சி.எல் அமைப்பின் தேசியத் தலைவருமான சுதா பரத்வாஜ், எழுத்தாளரும் மனித உரிமைப் போராளியுமான கௌதம் நவ்லக்கா ஆகிய இருவரும் போலீஸ் காவலில் உள்ளதாகவும் அறிகிறோம். தலித் அறிவுஜீவியும் எழுத்தாளருமான ஆனந்த் டெல்யும்டே, செயல்பாட்டாளர் சூசன் ஆப்ரஹாம், ஜார்கன்டில் பழங்குடி மக்கள் மத்தியில் வேலை செய்யும் திருச்சியைச் சேர்ந்த பாதிரியார் ஸ்டான் சாமி, ஆந்திரக் கவிஞர் வரவர ராவ், வழக்குரைஞர் அருண் ஃப்ரெய்ரா ஆகியோரது வீடுகள் சோதனை இடப்பட்டுள்ளது"  என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், "சென்ற டிச 31 அன்று புனேயில் உள்ள பீமா கொரேகான் என்னுமிடத்தில் பேஷ்வா அரசுப் படைகளை தலித் படைவீரர்கள் வீழ்த்திய நினைவுச் சின்னத்தில் தலித்கள் மற்றும் பொதுமைச் சிந்தனை உடையவர்கள் கூடி 'எட்கார் பரிஷத்' எனும் நிகழ்ச்சியை நடத்தினர். அண்ணல் அம்பேத்கர் அஞ்சலி செய்த நினைவுச் சின்னம் அது. தலித் படை வெற்றிபெற்றதைக் கொண்டாடிய இந்த நிகழ்வில் ஆர்.எஸ்,எஸ் அமைப்பினர் புகுந்து குழப்பம் விளைவித்தனர். இந்த வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததில் மாஓயிஸ்டுகளின் பங்கு இருந்ததாகச் சொல்லி இரண்டு மாதங்கள் முன் சுரேந்திரா காட்லிங், சுதிர் தவாலே, பேராசிரியை ஷோமாசென், மகேஷ் ராவ்த், ரோனா வில்சன் முதலான தலித் மற்றும் மனித உரிமைச் செயல்பாட்டாளர்களை மகாராஷ்டிர அரசு கைது செய்தது. அவர்கள் இன்று 'சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்' (UAPA) கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இன்று வீடுகள் சோதனையிடப்பட்டவர்கள் அனைவரும் அந்தக் கைதுகளைக் கண்டித்தவர்கள்.

இப்படி மக்களுக்காகப் போராடுபவர்கள் மற்றும் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், தலித் அறிவுஜீவிகள் ஆகியோர் மத்திய - மாநில பா.ஜ.க அரசுகளால் துன்புறுத்தப்படுவதை 'தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு' வன்மையாகக் கண்டிக்கிறது. இன்று போலீஸ் காவலில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளனர்.

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலாதேவி உள்ளிட்ட 3 பேரின் காவலை நீட்டித்து உத்தரவு! August 28, 2018

Image

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் பேராசிரியை  நிர்மலாதேவி உள்ளிட்ட 3 பேரின் நீதிமன்ற காவலை வரும் 10ம் தேதிவரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அருப்புக்கோட்டை கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட தனியார் கல்லூரி பேராசிரியர் நிர்மலா தேவி மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன் மற்றும் கருப்பசாமி மூன்று பேரும் நீதிமன்றமன்ற காவல் முடிந்து இன்று விருதுநகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 

இதனையடுத்து அவர்களின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 10ம் தேதி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது; 16-கண் உபரி நீர் போக்கி மூடப்பட்டது! August 28, 2018

Image


மேட்டூர் அணையின் நீர்வரத்து 22,000 கன அடியாக குறைந்ததையடுத்து வெளியேற்றம் 20,800 கன அடியாக குறைக்கப் பட்டதால் இன்று காலை 8.00 மணி முதல்16-கண் உபரி நீர் போக்கி மூடபட்டது.

கர்நாடக பகுதிகளில் கனமழை பெய்ததன் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர் வரத்து அதிகரித்து கடந்த மாதம் 23ம் தேதி அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி, நிரம்பி வழிந்தது. அப்போது நீர்வரத்து ஒரு லட்சம் கன அடிக்கு மேல் வந்ததால் உபரி நீர் அப்படியே வெளியேற்றப் பட்டது. அதன் பின்னர் மீண்டும் கர்நாடக பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக  இம் மாதம் இரு முறை அணை நிரம்பி வழிந்தது.

இதனையடுத்து கடந்த 9- ம் தேதி முதல் கூடுதல் நீரை அணையின் 16 கண் பாலம் உபரி நீர் போக்கி மூலம் அதிக பட்சமாக வினாடிக்கு 2,05,800 கன அடி வரை வெளியேற்றப் பட்டது.மேலும்  இம்மாதம்  23-ம் தேதி அணையின் நீர்திறப்பு 20,000 கன அடியாக குறைக்கப் பட்டதையடுத்து 14 நாட்களுக்கு பிறகு 16-கண்உபரி நீர் போக்கி மூடப்பட்டது. 

பின்னர் மேட்டூர் அணையின் நீர்வரத்து 26,000 கன அடியாக அதிகரித்ததையடுத்து 3 நாட்களுக்கு பிறகு நேற்று முன் தினம்(26.08.2018) காலை மீண்டும் 16 - கண் உபரி நீர் போக்கி வழியாக நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படிமேட்டூர் அணையின் நீர்வரத்து 22,000 கன அடியாக குறைந்ததையடுத்து வெளியேற்றம் 20,800 கன அடியாக குறைக்கப் பட்டதால் 16-கண் உபரி நீர் போக்கி மூடபட்டது.

அப்போது அணை நீர்மட்டம்  120.05  அடியாகவும், நீர்இருப்பு : 93.55  டி.எம்.சி. யாகவும் இருந்தது.மேலும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800 கன அடி நீர் வெளியேறிக் கொண்டிருந்தது.

திமுக தலைவராக இன்று பொறுப்பேற்கிறார் மு.க.ஸ்டாலின்! August 28, 2018

Image

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் இன்று பொறுப்பேற்கிறார். இதற்கான அறிவிப்பு இன்று நடைபெறும் கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்படுகிறது. 

திமுகவின் தலைவர் பதவியில் சுமார் 50 ஆண்டுகாலம் வரை நீடித்து வந்த கருணாநிதி கடந்த 7ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.  தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை அப்பதவிக்கு முன்மொழிந்து கட்சியிலுள்ள அனைத்து மாவட்டச் செயலாளர்களும் மனு தாக்கல் செய்தனர்.  இதே போல் பொருளாளர் பதவிக்கு திமுகவின் முதன்மை செயலாளரும், எம்.எல்.ஏவுமான துரைமுருகன் வேட்பு மனு தாக்கல் செய்தார். மு.க.ஸ்டாலினுக்கு போட்டியாக யாரும் வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை. 

இதையடுத்து அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியானது. இதேபோல் பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறார். இன்று காலை சென்னையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான அறிவிப்பை முறைப்படி வெளியிடுகிறார் கட்சியின் பொதுச் செயலாளரான அன்பழகன். 

திமுகவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் மு.க.ஸ்டாலின், இளைஞரணிச் செயலாளர், பொருளாளர் எனப் படிப்படியாக முன்னேறி கட்சியின் தலைவராகவுள்ளார். திமுக தொடங்கியபோது தலைவர் பதவி ஏற்படுத்தாத நிலையில் அண்ணாவின் மறைவுக்கு பின்னர் அப்பதவி உருவாக்கப்பட்டு திமுகவின் முதல் தலைவராக கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டார். சுமார் 50 ஆண்டுகளாக அவர் கட்சித் தலைவராக நீடித்து வந்த நிலையில் கருணாநிதி மறைவுக்கு பின்னர் கட்சியின் 2வது தலைவராக மு.க.ஸ்டாலின் இன்று பொறுப்பேற்க உள்ளார். 

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

கருணாநிதி மீதான 13 அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரும் வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு! August 27, 2018

Image

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மீதான 13 அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரும் வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அதிமுக அரசுக்கு எதிராகவும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்தும் முரசொலி நாளிதழின் கேள்வி பதில் பகுதியில் பல்வேறு கருத்துகளை கருணாநிதி வெளியிட்டதற்காக அவர் மீது 13 அவதூறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கருணாநிதி மறைந்ததால் இந்த வழக்குகளை தள்ளுபடி செய்யுமாறு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. 

நீதிபதி சுபாதேவி உத்தரவிட்டபடி, கருணாநிதியின் இறப்பு சான்றிதழை வழக்கறிஞர் குமரேசன் இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதுதொடர்பாக, தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை அக்டோபர் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

​Wifi-யை இப்படியும் பயன்படுத்தலாமா? August 27, 2018

பொது இடங்களில் பயன்படுத்தப்படும் வைஃபை மூலம் , ஆயுதங்கள் மற்றும் வெடிக்கக்கூடிய பொருட்களை கண்டுபிடிக்க முடியும் என அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 


Image
பொது இடங்களில் தற்பொழுது பயன்படுத்தப்படும் Bomb Scanning Device அதிக பொருட்செலவை ஏற்படுத்துவதாகவும் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க அதிக நேரம் தேவைப்படுவதாகவும் தெரிவித்த ஆராய்ச்சியாளர்கள், குறைந்த விலையிலேயே வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கவே இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். 

வைஃபை சிக்னல்கள், அனைத்து இடங்களுக்கும் எளிதில் ஊடுருவி செல்வதால் இந்த முறையை பயன்படுத்தி எளிதில் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கலாம். அதுமட்டுமல்லாமல், தண்ணீர், ஆல்கஹால், அமிலம் போன்ற திரவங்களின் அளவையும் இந்த வைஃபை அமைப்பு மூலம் கண்டறியலாம். 

இந்த அமைப்பை ஏற்படுத்துவதற்கு மூன்று ஆண்டனாக்கள் கொண்ட Wifi Device தேவைப்படும் என்றும் இதனை அனைத்து இடங்களிலும் எளிதாக உபயோகப்படுத்த முடியும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இந்த அமைப்பு, 100 சதவிகிதம் துள்ளியமாக வெடிகுண்டு இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும். 


​வெள்ள பாதிப்பில் இருந்து உங்கள் காரை பாதுகாக்கும் புதிய கண்டுபிடிப்பு! August 27, 2018

Image


https://www.motor1.com/news/263562/flood-guard-car-bag/அண்மையில் கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை நாம் எளிதில் மறந்திருக்க வாய்ப்பில்லை.. வரலாற்றிலேயே மோசமான வெள்ள பாதிப்பை அம்மாநிலம் சந்தித்துள்ளது. இதில் சுமார் 370க்கும் மேற்பட்டோர் பலியானதுடன், வீடுகளை இழந்து ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

வீடு, கட்டுமான சேதம், பொருளாதார இழப்பு என எல்லாவற்றையும் கடந்து மிகவும் முக்கியமான ஒன்றாக வாகனங்கள் நீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டும், பயன்படுத்த முடியாத வகையில் பாழடைந்து வீணாகியுள்ளது. இதனால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதித்துள்ளனர்.



கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய ஆயிரக்கணக்கான வாகனங்கள் இதே போல பாழாகியுள்ளது. கேரளாவில் மட்டுமல்ல கடந்த 2015ல் சென்னை நகரில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி இதே போல ஆயிரக்கணக்கான வாகனங்கள் நாசமாகியதையும் நாம் கண்கூடாக கண்டிருக்கிறோம்.

இது போல வெள்ள பாதிப்பில் கார்கள் சிக்காமல் இருக்க பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரு புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளனர். ஆசிய கண்டத்திலேயே வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடாக பிலிப்பைன்ஸ் விளங்குகிறது. நமக்கு வெள்ளம் என்பது எப்போதாவது நடக்கும் ஒரு விஷயம் என்றால் அந்நாட்டில் அது வாடிக்கையான ஒரு இயற்கை சீற்றமாக உள்ளது. இதற்கு தீர்வு காணும் நோக்கிலேயே இந்த புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளனர்.

பிலிப்பைன்ஸைச் சேர்ந்த Paul Dela Fuente என்பவர் ‘The Flood Guard car bag’ என்ற ஒன்றை கண்டறிந்துள்ளார். இது ஒரு முழு காரையும் மூடிவிடும் ஒரு பிளாஸ்டிக் பை போன்றது.


இந்த Flood Guard car bag-ஐ கீழே விரித்து காரினை அதன் மேல் ஓட்டிச் செல்ல வேண்டும், பின்னர் ஜிப்களை பயன்படுத்தி காரை மூடிவிடவேண்டும். இந்த முறையில் கார் வெள்ள நீர் காருக்குள் உட்புகாமல் முழுமையாக பாதுகாக்கப்படுகிறது. இதன் பக்கவாட்டில் கயிறுகள் கொடுக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் கார் அடித்துச் செல்லாமல் இந்த கயிறுகளை அருகிலிருக்கும் தூண், மரம் ஆகியவற்றில் கட்டிவிடலாம்.

Flood Guard car bag-கள் Medium மற்றும் Large என இரண்டு அளவுகளில் கிடைக்கிறது. இது காம்பாக்ட் செசன், எஸ்யூவிக்கள் முதல் சிறிய ரக பிக் அப் டிரக்குகள் வரை பயன்படுத்த ஏற்றதாக உள்ளது.

இரண்டு அளவுகளுமே 250 அமெரிக்க டாலர்கள் என்ற விலையில் கிடைக்கிறது. இந்திய மதிப்பில் இதன் மதிப்பு சுமார் 17,500 ரூபாய் இருக்கலாம் என தெரிகிறது. 



வெள்ள பாதிப்பு உள்ள பகுதிகளில் இந்த தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக அமையலாம். இது தொடர்பாக மேலும் தகவல்களை கீழ்கண்ட இணையதளத்தில் அறியலாம்.  https://www.motor1.com/news/263562/flood-guard-car-bag/

​ட்விட்டரில் இந்திய ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கும் #DMKThalaivarStalin ஹேஷ்டாக்! August 28, 2018

Image

#DMKThalaivarStalin என்ற ஹேஷ்டாக், ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. 

திமுகவின் தலைவர் பதவியில் சுமார் 50 ஆண்டுகாலம் வரை நீடித்து வந்த கருணாநிதி கடந்த 7ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.  தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்தார். 

அவரை அப்பதவிக்கு முன்மொழிந்து கட்சியிலுள்ள அனைத்து மாவட்டச் செயலாளர்களும் மனு தாக்கல் செய்தனர்.  இதே போல் பொருளாளர் பதவிக்கு திமுகவின் முதன்மை செயலாளரும், எம்.எல்.ஏவுமான துரைமுருகன் வேட்பு மனு தாக்கல் செய்தார். மு.க.ஸ்டாலினுக்கு போட்டியாக யாரும் வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை. 

அதனால், ஒரு மனதாக திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, சென்னையில் இன்று நடைபெற இருக்கும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் வெளியிடப்படும். அதனையடுத்து, திமுகவின் 2வது தலைவராகப்போகும் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் #DMKThalaivarStalin என்ற ஹேஷ்டாகை  பயன்படுத்தி இணையதளவாசிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த ஹேஷ்டாக் ட்விட்டர் இந்திய ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது. 

திங்கள், 27 ஆகஸ்ட், 2018

​டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடக்கம்! August 27, 2018

Image

டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. 

2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் இன்று அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு பிற்பகுதியிலும், மக்களவைக்கு அடுத்த ஆண்டும் தேர்தல் நடைபெற உள்ளது. இதுகுறித்து இன்றைய அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. 

இதற்காக தலைமை தேர்தல் ஆணையத்தில் நடைபெறும் கூட்டத்திற்கு, அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள், 51 மாநில கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வாக்குசீட்டு முறையை மீண்டும் கொண்டு வருவது குறித்தும், ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. வேட்பாளர்களின் செலவு, வேட்பாளர்களின் விளம்பரம் தொடர்பாக பத்திரிகைகளுக்கு கட்டுப்பாடு, ஆன்லைன் பிரச்சாரம் குறித்து ஆலோசிக்கபடலாம் என தெரிகிறது

புதுச்சேரி கடற்கரையில் உருவாக்கப்படும் செயற்கை மணற்பரப்பு திட்டம்! August 27, 2018

Image

புதுச்சேரி கடற்கரையில் உருவாக்கப்படும் செயற்கை மணற் பரப்பு திட்டம், மீனவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ளது. 

சுற்றுலா பயணிகளின் சொர்க்க பூமியாக திகழும் புதுச்சேரியின் அழகினை ரசிக்க, நாள்தோறும் ஏராளமானோர் வருகை தருகின்றனர். அவர்கள் புதுச்சேரி கடற்கரையின் அழகை ரசிக்க தவறுவதில்லை. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் வரை, பல மீட்டர் தூரத்திற்கு அழகாக காட்சியளித்த மணற்பரப்பு, கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போனது. 

கடல் அரிப்பால் மறைந்து போன மணற்பரப்பினை மீட்டெடுக்கும் முயற்சியாக, செயற்கையான மணற் பரப்பு உருவாக்கும் திட்டத்தை, புதுச்சேரி அரசு மத்திய அரசுடன் இணைந்து, 25 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக, புதுச்சேரி தலைமைச் செயலகம் எதிரில், கடற்கரையில் இருந்து, 120 மீட்டர் தூரத்தில், இரும்பிலான முக்கோண வடிவமுடைய ராட்சத மிதவையை, கடலினுள் இறக்கி உள்ளனர். இதனால் கடல் நீரோட்டத்தில் மணல் அடித்து செல்லாமல் தடுக்கப்பட்டு, 200 மீட்டர் தொலைவிற்கு, செயற்கையான மணற்பரப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது படிப்படியாக உயர்ந்து, அடுத்த 2 வருடங்களில், 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு, செயற்கை மணற்பரப்பு உருவாக்கப்படும் என்று, இத்திட்டத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

நியூசிலாந்திற்கு அடுத்து, இந்தியாவிலேயே முதல்முறையாக, இரும்பிலான முக்கோண வடிவ மிதவை, இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மிதவை, 50 மீட்டர் நீளமும் , 60 மீட்டர் அகலமும் கொண்டது. இதன் எடை 900 டன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ராட்சத மிதவையால் அலையின் வேகம் குறைந்து, 200 மீட்டர் தொலைவிற்கு மணற் பரப்பு உருவாகியுள்ளது.

மேலும், முகத்துவாரத்தில் தூர்வாரப்படும் மணல், இப்பகுதியில் கொட்டப்படும்போது, முழுமையான கடற்கரை மணற்பரப்பு உருவாகும். இத்திட்டம் கடல் அரிப்பை தடுக்கும் என்பதால், மீனவர்களுக்கும் உதவியாக இருக்கும். இந்த புதிய முயற்சிக்கு, சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், மணலில் விளையாடுவதில் ஆர்வம் காட்டும் சுற்றுலா பயணிகளும், மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இத்திட்டம், பொலிவிழந்த புதுச்சேரி கடற்கரையின் அழகை, மீட்டெடுக்கும் முயற்சிக்கு கிடைத்த வெற்றி, என்றே கூறலாம். இதனால் ஓரிரு ஆண்டுகளில், முழுமையான மணற்பரப்பினை, புதுச்சேரி கடற்கரை சாலையில் காணலாம். 

​விபச்சாரத்திற்கு தள்ளப்படும் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள ரோகிங்கியா பெண்கள்! August 27, 2018

Image

மியான்மரில் இருந்து அகதிகளாக வங்கதேசத்தில் தஞ்சமடைந்த ரோஹிங்கியா முஸ்லீம் பெண்கள், கடத்தப்படுவது அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 

மியான்மரில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து சுமார் 7 லட்சம் மக்கள் வங்கதேசத்திற்கு அகதிகளாக இடம் பெயர்ந்தனர். அங்குள்ள காக்ஸ் பஜார் முகாமில் தங்கவைக்கப்பட்ட ரோகிங்கியா பெண்கள், பெண் குழந்தைகள் உள்ளிட்டோர் விபச்சாரத்துக்குள் தள்ளப்படுவதாக ஐ.நா. வேதனை தெரிவித்துள்ளது. 

மேலும் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஆட்கடத்தலுக்கு இலக்காகி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கேரளா வெள்ளப்பாதிப்பு எதிரொலி: பாசிப்பயறு விலை ரூ.900 வரை சரிவு! August 27, 2018

கேரளாவில் வெள்ளப்பாதிப்பு எதிரொலியால் பாசிப்பயறு விலை, மூட்டைக்கு 900 ரூபாய் சரிந்தது. 

விருதுநகர் சந்தையில் இரூநது கேரளாவுக்கு அனுப்பப்படும் பாசிப்பயறு தேக்கமடைந்துள்ளதால், ஏழாயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 100 கிலோ மூட்டை, ஆறாயிரத்து 500 ரூபாயாக சரிந்துள்ளது. 

மேலும், கேரளாவுக்கு பருப்பு அனுப்புவது தற்போது குறைந்தாலும், பருப்பு விலை குறையாமல் அதே விலையில் நீடிக்கிறது. 15 கிலோ எடை கொண்ட ஒரு டின் நல்லெண்ணெய், மற்றும் கடலை எண்ணெயின் விலை, 50 முதல் 85 ரூபாய் வரை குறைந்துள்ளது. 

பசுமை குடில் மூலம் காய்கறி சாகுபடியில் அசத்தும் பொறியியல் பட்டதாரி! August 27, 2018

Image

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில், பசுமை குடில் மூலம் காய்கறி சாகுபடியில், பொறியியல் பட்டதாரி தம்பதி அசத்தி வருகின்றனர். 

கடந்த 15 வருடங்களாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த பொறியியல் பட்டதாரி ராமகிருஷ்ணன், விவசாயத்தின் மீது கொண்ட ஆர்வத்தினால், தனது சொந்த ஊரில் பசுமைக்குடில் அமைத்து பயிரிட முடிவு செய்துள்ளார். இதற்கு அவருடைய மனைவி உமாமகேஸ்வரியும் முழு ஆதரவு தெரிவித்ததால், தங்களுடைய அரை ஏக்கர் நிலத்தில் பசுமை குடிலை அமைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

வறட்சியின் பிடியில் சிக்கி தவிக்கும் விவசாயிகளுக்கு, பசுமை குடில் விவசாய முறையை ஊக்குவிக்கும் வகையில், தமிழக தோட்டக்கலைத்துறை சார்பில் 50 சதவீதம் மானியமும்,  சொட்டு நீர் பாசன கருவிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்பட்டு வருகிறது.

இதனை பயன்படுத்தி கொண்டு இவர்கள் பசுமை குடிலை அமைத்துள்ளனர். தற்போது வெள்ளரி சாகுபடியை வெற்றிகரமாக மேற்கொண்டு வரும் இவர்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி விவசாயிகளுக்கு முன்னுதாரணமாக விளங்கி வருகின்றனர்.

என்னை திமுகவில் இணைக்காவிட்டால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்: மு.க.அழகிரி August 27, 2018

Image

திமுகவில் இணைக்காவிட்டால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்

மதுரையில், தனது ஆதரவாளர்களுடன் 4வது நாளாக மு.க. அழகிரி ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், கருணாநிதி இருந்ததால் ஸ்டாலின் செயல் தலைவரான போது எதிர்க்கவில்லை என்றார். 

திமுகவில் தன்னை மீண்டும் இணைக்காவிட்டால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்த அழகிரி, தொண்டர்களின் கேட்டுக்கொண்டதற்காகவே செப்டம்பர் 5ம் தேதி பேரணி நடத்துவதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறைக்கு எதிரான மனு தள்ளுபடி! August 27, 2018

Image

தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறைக்கு எதிராக, சென்னையை சேர்ந்த இரண்டு மாணவிகள் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

சென்னையைச் சேர்ந்த மாணவிகள் சஞ்சனா, அகிலா அன்னபூரணி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில் தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்டத்தை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாக அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். மேலும், 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறையால் மருத்துவ படிப்பில் சேர இடம்  கிடைக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தனர். இதை அவசர வழக்காக, விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் கூறியது. 

இந்நிலையில், மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி அமர்வு, இட ஒதுக்கீட்டு முறையை எதிர்த்து மாணவிகள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், இட ஒதுக்கீட்டிற்கு எதிரான பிரதான வழக்கு வரும் நவம்பர் மாதம் விசாரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.  

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

​திமுகவின் 2வது தலைவராக பொறுப்பேற்க உள்ளார் மு.க.ஸ்டாலின் August 26, 2018

Image

திமுக தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினைத் தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததையடுத்து அவர் தலைவராவது உறுதியாகியுள்ளது. 28ம் தேதி நடைபெறும் திமுக பொதுக்குழுவில் இதற்கான அறிவிப்பு முறைப்படி வெளியாக உள்ளது. 

திமுகவின் தலைவர் பதவியில் சுமார் 50 ஆண்டுகாலம் வரை நீடித்து வந்த கருணாநிதி கடந்த 7ம்தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாளான இன்று மு.க.ஸ்டாலின் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காக வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தார். 

இதே போல் பொருளாளர் பதவிக்கு திமுகவின் அமைப்புச் செயலாளர்களில் ஒருவரும் எம்.எல்.ஏவுமான துரைமுருகன் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்று மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது. ஆனால் மு.க.ஸ்டாலின், துரைமுருகனைத் தவிர வேறு யாரும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கும் துரைமுருகனும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகியுள்ளது. 

வரும் 28ந்தேதி நடைபெற உள்ள திமுக பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்படுகிறார். திமுக 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் மு.க.ஸ்டாலின் இளைஞரணிச் செயலாளர், பொருளாளர் எனப் படிபடியாக முன்னேறி கட்சியின் தலைவராக முன்னேறியுள்ளார். 

திமுக தொடங்கியபோது தலைவர் பதவி ஏற்படுத்தாத நிலையில் அண்ணாவின் மறைவுக்கு பின்னர் அப்பதவி உருவாக்கப்பட்டு திமுகவின் முதல் தலைவராக கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டார். சுமார் 50 ஆண்டுகளாக கட்சித் தலைவராக நீடித்து வந்த நிலையில் அவரது மறைவுக்கு பின்னர் கட்சியின் 2வது தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளார். 

மு.க. ஸ்டாலின் அரசியலில் கடந்து வந்த பாதை! August 26, 2018

Image

திமுகவின் தலைவராக பொறுப்பேற்கவுள்ள மு.க. ஸ்டாலின், அரசியலில் கடந்து வந்த பாதையை தற்போது பார்ப்போம்...

* 1953ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி பிறந்தார் மு.க.ஸ்டாலின். 
* 1967ல் திமுக முதன்முதலாக ஆட்சியை பிடித்த தேர்தலின் போது 14 வயதில் மு.க.ஸ்டாலின் பிரச்சார களத்தில் இறங்கினார்.
* 1968ம் ஆண்டு பள்ளியில் படிக்கும் போது கோபாலபுரத்தில் இளைஞர் திமுகவை உருவாக்கினார்.
* 1969ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நெடுஞ்சாலையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் முதன்முதலாக உரையாற்றினார்.
* 1970ம் ஆண்டு மார்ச் மாதம்  'முரசே முழங்கு' என்ற நாடகத்தில் நடித்தார். 

* 1973ல்  'திண்டுக்கல் தீர்ப்பு' என்ற நாடகத்தில் நடித்தார். 
* 1974ல் புதுக்கோட்டை மாவட்ட திமுகவின் தேர்தலை தேர்தல் ஆணையாளராக நடத்தி வைத்தார்.
* 1975ல் துர்க்காவதியை மணம் முடித்தார் மு.க.ஸ்டாலின்.
* 1976ம் ஆண்டு  திருமணமான அடுத்த ஆண்டிலேயே மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 
* 1977ல் பதினொரு மாதங்கள் கழித்து சென்னை மத்தியச் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். 

* 1980ல்  திருச்சி மூதூரில்  திமுக இளைஞரணி உருவாக்கப்பட்ட போது அதன் அமைப்புக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார் மு.க.ஸ்டாலின்.
* 1981ம் ஆண்டு  கைலாசம் விசாரணைக் கமிஷனின் சட்ட நகலை எரித்ததால் கைதாகி 38 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார். 
* 1982ம் ஆண்டு திமுக இளைஞரணியின் அமைப்புக்குழு உறுப்பினரானார்.
* 1983ம் ஆண்டு திமுக இளைஞரணி அமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் மு.க.ஸ்டாலின்.
* 1983ம் ஆண்டு அதே ஆண்டில்  திமுக இளைஞர் அணிச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.

* 1984ல் முதன் முறையாக ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டுபோது  தோல்வியைத் தழுவினார். 
* 1988ல்  'ஒரே ரத்தம்' என்ற திரைப்படத்தில் நடித்தார் மு.க.ஸ்டாலின்.
* 1989ம் ஆண்டு  தோல்வியுற்ற அதே ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார்.  
* 1991ம் ஆண்டு  மூன்றாவது முறையாக ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட போது தோல்வி அடைந்தார். 
* 1993ம் ஆண்டு   இளைய சூரியன் என்ற தமிழ் வார இதழைத் தொடங்கி ஆசிரியராக பணியாற்றினார்.

* 1996, 2001, 2006 ஆகிய ஆண்டுகளில்   ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்றார். 
* 1996ல்  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்  மாநகர மேயராக பணியாற்றினார். 
* 2002ல்  அதிமுக ஆட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற சட்டம் அமலானதை தொடர்ந்து மேயர் பதவியை ராஜினாமா செய்தார். 
* 2003ல் திமுகவின் துணைப்பொதுச் செயலாளராக தேர்வுசெய்யப்பட்டார் மு.க.ஸ்டாலின்.
* 2006ல் உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார் மு.க.ஸ்டாலின்.

* 2008ம் ஆண்டு  திமுக பொருளாளராக தேர்வு செய்யப்பட்டார். 
* 2011,2016ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 
* 2009-2011வரை  தமிழகத்தின் துணை முதல்வராக பணியாற்றினார்.
* 2015 ம் ஆண்டு  'நமக்கு நாமே' சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு 234 சட்டமன்ற தொகுதிகளிலும் பரப்புரை செய்தார்.  
* 2017ம் ஆண்டு  திமுக செயல்தலைவராக மு.க.ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். 

2018ம் ஆண்டு  திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பின் தலைவராக ஒருமனதாக தேர்வுசெய்யப்பட்டார் மு.க.ஸ்டாலின். 

சனி, 25 ஆகஸ்ட், 2018

பின் இருக்கையில் பயணிப்பவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம்! August 24, 2018

Image

இருசக்கர வாகனங்களின், பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிமுறைகள், கண்டிப்புடன் அமல்படுத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது. 

மோட்டார் சட்ட விதிகளின்படி, இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என விதிமுறையை தமிழக அரசு அமல்படுத்தக் கோரி, சென்னை கொரட்டூரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி மணிகுமார், நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு, விசாரணைக்கு வந்தது. 

அப்போது, கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்தியது குறித்து காவல்துறை தரப்பில், கூடுதல் தலைமை வழக்கறிஞர் அறிக்கை தாக்கல் செய்தார். அதனை ஆய்வு செய்த நீதிபதிகள், ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகள் மீது மட்டும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டினர். 

 இதனையடுத்து, இருசக்கர வாகனங்களின் பின் இருக்கையில் பயணிப்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற மோட்டார் வாகன சட்ட விதிகள் அமல்படுத்தப்படும் என காவல்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இது தொடர்பாக பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

மேலும், ஹெல்மெட் அணியாமல் பின் இருக்கையில் பயணித்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தனி அறிக்கை தாக்கல் செய்வதாகவும் கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கு விசாரணை ஆகஸ்ட் 31ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

கடைமடைக்கு நீர் வராமல் போனதற்கு முறையாக தூர் வாராததே காரணம்: ஜி.கே.வாசன் August 25, 2018

Image

தஞ்சை மாவட்டத்தில் கடைமடைக்கு நீர் வராமல் போனதற்கு முறையாக தூர் வாராததே காரணம் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார். 

தஞ்சை மாவட்டத்திலேயே மிகப்பெரிய ஏரியான செல்லிக்குறிச்சி ஏரியை இருசக்கர வாகனத்தில் சென்று வாசன் பார்வையிட்டார். 320 ஏக்கர் பரப்பளவுள்ள ஏரி வறண்டு கிடப்பதை பார்வயிட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வாசன், மேட்டூர் அணை நிரம்பாத காலத்தில் கூட இந்த ஏரியில், நீர் நிறைந்திருந்ததாக கூறினார். 

கால்வாய்களை முறையாக தூர் வாராததே கடைமடைக்கு நீர் வராததற்கு காரணம் என்று குற்றம்சாட்டிய அவர், காமராஜர் சொன்ன ராசிமணல் அணை திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டுமென வலியுறுத்தினார்.

​எங்கள் மாநிலத்திற்கு உதவ ஐக்கிய அரபு அமீரகம் முன்வந்ததில் எந்த சந்தேகமும் இல்லை: கேரளா முதல்வர் August 25, 2018

Image

மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தங்கள் மாநிலத்திற்கு உதவ ஐக்கிய அரபு அமீரகம் முன்வந்ததில் எந்த சந்தேகமும் இல்லை என கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். 

தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததன் காரணமாக கடந்த ஜூலை மாத இறுதியில் இருந்து கேரள மாநிலம் முழுவதும் கடுமையான மழை பொழிவை சந்தித்து வந்தது. இதன் காரணமாக கேரளாவின் மொத்தமுள்ள 14 மாவட்டங்களில், 13ல் கடுமையான சேதத்தை சந்தித்தது. அம்மாநில மக்களில் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது.

இயற்கை சீற்றத்தின் கோரத்தாண்டவத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் 370க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அம்மாநில மக்களுக்கு பொதுமக்கள், சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள் என பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற நிவாரண உதவியை அளித்து வந்தனர். பல்வேறு மாநில அரசுகளும் நிதியுதவி அளித்துள்ள நிலையில், மத்திய அரசு முதல்கட்டமாக 600 கோடி ரூபாயை கேரளாவிற்கு வழங்கியுள்ளது.

இந்நிலையில் கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், ஐக்கிய அரபு அமீரக அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு 700 கோடி ரூபாயை வழங்குவதாக தெரிவித்துள்ளதாக கூறினார்.

மத்திய அரசு 600 கோடி ரூபாய் அறிவித்த நிலையில் முதல்வர் பினராயி விஜயனின் இந்த அறிவிப்பு, நாடு முழுவதும் பலத்த பேசுபொருளாக மாறியது.  இந்நிலையில் கேரளாவிற்கு உதவுவது தொடர்பாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என இந்தியாவிற்கான ஐக்கிய அரபு அமீரக தூதர் தெரிவித்தார். 

இதனை மறுத்துள்ள கேரள முதல்வர் பினராய் விஜயன்,  தங்கள் மாநிலத்திற்கு உதவத் தயார் என ஐக்கிய அரபு அமீரகம் கூறியது உண்மைதான் என்றும் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியைத் தொடர்பு கொண்டு ஐக்கிய அரபு அமீரக இளவரசர் ஷேக் முகம்மது இதனைத் தெரிவித்ததாகவும் கேரள முதல்வர் பினராய் விஜயன் கூறியுள்ளார்.

செல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா? August 24, 2018

Image

இக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. 

செல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிப்பதற்கு நீங்கள் செய்யவேண்டியவை:

1. செல்போன் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர், Brightness-ஐ அதிகமாக வைத்து பயன்படுத்துவர். அவ்வாறு பயன்படுத்துவது செல்போனின் charge-ஐ சீக்கிரம் குறைவாக்கிவிடும். வெளியில் செல்போனை பயன்படுத்துவதாக இருந்தால் Auto Brightness Mode-ல் வைத்து விடுவது நல்லது.

2. நாம் வைத்திருக்கும் பெரும்பாலான செயலி, நாம் பயன்படுத்தாவிட்டாலும் இயங்கிக்கொண்டே இருக்கும். ஆதலால், தேவையற்ற செயலிகளை uninstall செய்து விடுவது நல்லது.

3. ப்ளூடூத், ஜிபிஎஸ் போன்றவற்றை எப்பொழுதும் on-ல் வைத்திருக்காமல், தேவையான பொழுது மட்டும் on செய்யவும். இது, பேட்டரி குறைவான நேரத்தில் தீராமல் இருக்க உதவும். 

4. செல்போனில், notification வரும்பொழுது, screen wake ஆகும்படி வைத்திருந்தால், அதனை மாற்றவும். ஏனெனில், அடிக்கடி notifica

​5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவிற்கு கிடைத்துள்ள 5வது பிரதமர்! August 24, 2018

Image

கடந்த 1975ம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலியா 5 பிரதமர்களை கொண்டிருந்தது, இருப்பினும் கடந்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 5வது பிரதமரை தேர்ந்தெடுத்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் ஆளும் லிபரல் கட்சியில் பிரதமராக இருந்த மால்கம் டர்ன்புல்லுக்கு ஏற்பட்ட எதிர்ப்பையடுத்து அந்நாட்டின் புதிய பிரதமராக ஸ்காட் மோரிஸ் தேர்வாகியுள்ளார். மால்கம் டர்ன்புல் தாராளவாத கொள்கைகளை கொண்டிருந்தார். அரசியல் ரீதியாக அவர் எடுத்த நிலைப்பாடுகள் அவரது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது, இதன் காரணமாக மால்கம் பிரதமர் பொறுப்பில் இருந்து விலகக் கோரி முன்னாள் உள்துறை அமைச்சரும், முன்னாள் காவல்துறை அதிகாரியும், வலதுசாரி சிந்தனையாளருமான பீட்டர் டத்தன் காய்களை நகர்த்தி வந்தார். 

இதன் காரணமாக நம்பிக்கை கோரும் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. ஆளும் லிபரல் கட்சியைச் சேர்ந்த எம்.பிக்கள் ஓட்டெடுப்பில் பங்கேற்றனர். இதில் எதிர்தரப்பான பீட்டர் டத்தன் மற்றும் மால்கம் டர்ன்புல் ஆதரவு பெற்ற தொழிலதிபரான ஸ்காட் மோரிஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

மால்கம் டர்ன்புல்லை பதவியில் இருந்து நீக்க போராடிய பீட்டர் டத்தனின் முயற்சி பலனளிக்காமல் போனது, ஆளும் தரப்பைச் சேர்ந்த பெரும்பாலானவர்களின் ஆதரவு ஸ்காட் மோரிஸுக்கே கிடைத்தது. எனவே அவர் ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விரைவில் அவர் பதவியேற்க உள்ளார்.

என்றாலும் முன்னாள் பிரதமரான மால்கம் டர்ன்புல் தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஆளும் தரப்பு ஒரு சீட் மெஜாரிட்டி கொண்டிருந்த நிலையில் தற்போது அந்த மெஜாரிட்டியை இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸ்காட் மோரிஸும் ஒரு வலதுசாரி சிந்தனையாளர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றி தெரியுமா? August 23, 2018

Image

ஸ்மார்ட்போனை கழிவறை உட்பட அனைத்து இடங்களிலும் பயன்படுத்துவதால் எத்தகைய ஆபத்துகள் உருவாகும் என்பது குறித்த ஒரு சிறப்புத் தொகுப்பு.

காலையில் கண் வழிப்பது தொடங்கி, இரவு உறங்கும் முன்பு வரை  ஒரு நாள் பொழுது என்பது சிலருக்கு செல்போனில் தொடங்கி செல்போனில் முடிகிறது. 

அதுவும் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்கள் தான் உடலின் ஒரு உறுப்பு போல செல்போனை பயன்படுத்துகிறார்கள். கழிப்பறைகளில் இருக்கும் கிருமிகளை விட 3 மடங்கு அதிகமான கிருமிகள் ஸ்மார்ட்போன் ஸ்கிரினில் இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இதன் மூலம் சறும நோய்கள் தொடங்கி பல நோய்கள் உருவாவததாகவும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

மேலும் பல வகையான நோய்களுக்கான எண்ட்ரி பாசே ஸ்மார்ட்போணில் உள்ள டச்ஸ்கிரினில் தான் இருக்கிறது என்கிறது அந்த ஆய்வு. கல்லூரிகள், அலுவலகங்கள் உள்ளிட்ட பொதுஇடங்களில் பலரால் பயன்படுத்தப்படும் மேசைகள், கம்ப்யூட்டர்கள் ,கீபோர்டு மற்றும் மவுசில்  அதிக கிருமிகள் இருப்பது வழக்கம். அதை விட அதிகமாக தனி நபரால் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட்போன்களில் கிருமிகள் கண்ணுக்கு தெரியாத வைரஸ்கள் இருப்பதாக சொல்கிறது அந்த ஆய்வு. 

மேலும் செல்போனை கழிப்பறை தொடங்கி அனைத்து இடங்களுக்கும் எடுத்துச் செல்லும் போது  ஸ்மார்ட்போண் ஸ்கிரினில் கிருமிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. செல்போணை கழிப்பறைகளுக்கு எடுத்துச் செல்வதே தவறு என சுட்டிக்காட்டும் அந்த ஆய்வு கழிப்பறைகளில் உள்ள கிருமிகள் எளிதில் செல்போணில் ஒற்றிக் கொள்வதாகவும் குறிப்பிடுகிறது. அதனால் கழிப்பறைக்கு செல்லும் போது ஆண்கள் தங்கள் சட்டப்பையில் ஸ்மார்ட்போனை வைத்திருப்பது கூட தவறு என்றும் வலியுறுத்தப்படுகிறது.

பெரும்பாலானோர் போன் வாங்கிய பிறகு அதனை சுத்தம் செய்வதே இல்லை. செல்போன் பழுதானால் அதனை சர்வீசுக்கு அனுப்பும் போது தான் அது சுத்தம் செய்யப்படுகிறது. அதனால் தான் கழிப்பறையில் இருக்கும் கிருமிகளை விட அதிக கிருமிகள் நம் செல்போனில் இருப்பதாகவும் சுட்டிக்காண்பிக்கின்றன ஆய்வாளர்கள்.

பல ஆயிரங்கள் முதல் லட்சங்கள் கொடுத்து வாங்கும் எத்தகைய மாடல் போனாக  இருந்தாலும் கிருமிகள் ஸ்கிரீனில் தேங்குவது என்பது  அனைத்து போன்களிலும் ஒரே மாதிரியாகத் தான் இருப்பதாக  பல வகையான செல்போன் மாடல்களில் செய்யப்பட்ட ஆய்வின் முடிவு கூறுகிறது. ஸ்மார்ட்போனில் உள்ள ஆன் - ஆஃப் பட்டன் , ஹோம் ஸ்கிரீன் ஆகியவற்றில் அதிகளவில் கிருமிகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

வாரம் ஒரு முறையாவது செல்போனை சுத்தம் செய்வது தான் கிருமிகள் தேக்கத்தை குறைக்க ஒரே வழி. ஆகையால் இந்த செய்தியை பார்க்கும் நீங்கள் உடனடியாக உங்கள் செல்போனை  சுத்தம் செய்ய ஆரம்பித்திருப்பீர்கள் என்றே நம்புகிறோம்.

முதல்வருக்கு எதிரான திமுகவின் புகார் குறித்து பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவு! August 24, 2018



முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிரான திமுகவின் ஊழல் புகார் குறித்து, பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகளில் 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது, வழக்குப்பதிவு செய்யக் கோரியும், திமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 5 நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகளை, முதல்வர் பழனிசாமியின் சம்பந்தி பி.சுப்பிரமணியம், உறவினர் நாகராஜன், செய்யாத்துரை மற்றும் சேகர் ரெட்டி ஆகியோர் பங்குதாரர்களாக இருக்கும் நிறுவனங்களுக்கு, சட்டவிரோதமாக வழங்கி முறைகேடு நடைபெற்றதாக கூறி, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, லஞ்ச ஒழிப்புத்துறையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்தார். 

ஆனால், இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், முதல்வர் பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில், இன்று விசாரனைக்கு வந்தது. இதில், திமுக மற்றும் அரசுத் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, 2 மாதங்களாக ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை? என கேள்வி எழுப்பினார். மேலும், நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு தொடர்பான புகாரில், எடுத்த நடவடிக்கைகள் குறித்து, லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கேன்சரை குணப்படுத்துமா மஞ்சள்? August 23, 2018

Image

கேன்சரை குணப்படுத்துவதற்கு மஞ்சள் ஒரு தீர்வாக அமையுமா என்று இந்திய மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவில் பல நூற்றாண்டு காலமாக சமையலுக்கு பயன்படுத்தப்படுவது மஞ்சள். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதால், அனைத்து விதமான உணவு வகைகளிலும் அதிகம் பயன்படுத்தப்படும். மஞ்சளில் இருக்கும் Curcumin என்ற பொருள், கேன்சரை குணப்படுத்துவதற்கு உதவும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியிருந்த நிலையில், Curcumin நீரில் கரைந்தால் மட்டுமே அதனை கேன்சர் நிவாரணியாக பயன்படுத்த முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். ஏனெனில், தண்ணீரில் கரைந்தால்மட்டுமே ரத்தத்தில் கலந்து கேன்சர் கட்டிகளை கரைப்பதற்கு உதவியாக அமையும்.

எனினும், ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில்,  தற்பொழுது, மஞ்சளில் இருக்கும் Curcumin-ஐ தண்ணீரில் கரைய வைப்பதற்கு ஒரு புதிய வழியை கண்டுபிடித்துவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அந்த ஆராய்ச்சி வெற்றிகரமாக இருந்தால், கேன்சர் கட்டிகளை கரைக்க மஞ்சளை பயன்படுத்த முடியும் என்றும் இது மருத்துவ உலகில் ஒரு புதிய புரட்சியை உருவாக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.  

முக்கொம்பு மேலணையில் 110 மீட்டர் நீளத்திற்கு தற்காலிக தடுப்பு அமைக்கும் பணி தொடக்கம்! August 24, 2018

Image

முக்கொம்பு மேலணையில் 110 மீட்டர் நீளத்திற்கு தற்காலிக தடுப்பு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் கடந்த புதன்கிழமை இரவு 9 மதகுகள் உடைந்தன. இதையடுத்து உடைந்த மதகுகளை பார்வையிட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். 

மதகுகள் உடைந்த பகுதிகளில், முதற்கட்டமாக 110 மீட்டர் தொலைவுக்கு 3 நிலைகளில், தற்காலிக தடுப்புகள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான பணிகள் தொடங்கியுள்ள நிலையில், நவீன இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. தண்ணீரில் மூழ்கியபடி பணிகளை மேற்கொள்வதற்காக திருச்சி மற்றும் சென்னையில் இருந்து புளோட்டிங் மெஷின்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

9 மதகுகள் உடைந்த நிலையில், பிற மதகுகளின் உறுதித்தன்மை குறித்தும் ஆய்வு செய்யப்பட்ட வருகிறது. புதிய கதவணைகள் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும் என தெரிகிறது. இதற்கிடையே, மதகுகள் உடைந்ததால் பாதிப்புக்கு உள்ளான முக்கொம்பு மேலணையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொள்கிறார். 

முக்கொம்பு மேலணை உடைந்து விழுந்ததை தொடர்ந்து, 410 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கதவணை அமைக்க பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது. இதன்படி கொள்ளிடத்தில் தற்போது உள்ளபடி புதிதாக 45 மதகுகளுடன் 325 கோடி ரூபாய் மதிப்பில் கதவணை கட்டப்பட உள்ளது. 

இது கொள்ளிடத்தின் தெற்கு பகுதியில் அமைக்கப்பட உள்ளது. இதே போல் வடக்கு பகுதியில் அய்யன்வாய்க்காலில் 10 மதகுகள் கொண்ட புதிய கதவணை 85 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட உள்ளது. இப்பணிகளுக்கு அரசு ஒப்புதல் அளித்தால் 18 மாதங்களுக்குள் கதவணைகளை அமைத்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.