ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

இந்தோனேசியாவை உலுக்கிய சுனாமி தாக்குதல்: பலர் உயிரிழப்பு! September 30, 2018

Image

இந்தோனேசியாவில் நிலநடுக்கம், மற்றும் சுனாமி தாக்குதலில் சுமார் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டின் பேரிடர் மீட்பு படை தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவில் கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் தாக்கத்தை, அத்தனை எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. இந்தியா, ஆஸ்திரேலியா என 14 நாடுகளில் பெரும் உயிரிழப்புகளையும், சேதத்தையும் ஏற்படுத்திய அந்த சுனாமி தாக்குதலில் இரண்டரை லட்சம் பேர் உயிரிழந்தனர். பல லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை இழந்தனர். 21-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட மிக மோசமான சுனாமி என வல்லுநர்கள் தெரிவித்தனர். 

இந்நிலையில், வடக்கு இந்தோனேசியாவில் உள்ள சுலவேசி தீவில், கடந்த 28-ம் தேதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில், 380க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ரிக்டர் அளவுகோளில் 7.5 ஆக பதிவான நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து தரைமட்டமானது. நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறினார். நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்தோனேசியா வானிலை மையம், 3 முதல் 4 மீட்டர் அளவுக்கு, சுனாமி அலை வரலாம் என்று எச்சரிக்கை விடுத்தது. ஆனால், அந்த எச்சரிக்கையை வானிலை மையம் திரும்பப் பெற்றபோது தான், இந்தோனேசியாவின் சுலவேசி தீவு பகுதியை சுனாமி தாக்கியது. இதனால் பாலு மற்றும் டோங்க்லா உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிப்படைந்தன. 

எதிர்பாராத இந்த சுனாமி தாக்குதலில் 10 அடி உயரத்திற்கு எழுந்த ஆழிப்பேரலைகள், கடலோர பகுதிகளை வாரி சுருட்டியது. குடியிருப்புகள், கோவில்கள், மருத்துவமனை என்று ஒன்றுவிடாமல் அனைத்தும் தரைமட்டமானது. இந்நிலையில், இதுகுறித்து தெரிவித்த இந்தோனேசியா தேசிய பேரிடர் மீட்பு படை, தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், 384 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாலும், காயமடைந்துள்ளதாலும் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

பசிபிக் அக்னி வளையப் பகுதியில் அமைந்துள்ள இந்தோனேசியாவில், நிலநடுக்கம் ஏற்படுவதும், சுனாமி தாக்குவதும் அவ்வபோது நிகழ்ந்து வரும் ஒன்றாக மாறியுள்ள நிலையில், அனைத்தையும் மறந்து சகஜநிலைக்கு திரும்புவது அம்மக்களின் இயல்பு, அந்தவகையில், இந்த தாக்குதலில் ஏற்பட்ட வலிகளில் இருந்தும், அம்மக்கள் மீள்வார்கள் என நம்புவோம்.

கள்ளத்தொடர்பு குற்றமில்லை என தீர்ப்பளித்த நீதிபதியின் மனநிலையை பரிசோதிக்க வேண்டும் - காங்கிரஸ் மூத்த தலைவர்! September 30, 2018

Image

கள்ளத்தொடர்பு குற்றமில்லை என தீர்ப்பளித்த நீதிபதியின் மனநிலையை பரிசோதனை செய்து பார்க்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் நீதித்துறையை விமர்சித்து கூறியிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநில காங்கிரஸ் தலைவரான கே.சுதாகரன், கன்னூர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது மேடையில் பல மூத்த காங்கிரஸ் தலைவர்கள் முன்னிலையில் அவர் பேசும்போது, அண்மையில் கள்ளத்தொடர்ப்பு தொடர்பாக தீர்ப்பு கூறிய நீதிபதி குறித்து கடுமையான முறையில் விமர்சித்தார்.

கள்ளத்தொடர்பு குற்றமில்லை என தீர்ப்பளித்த நீதிபதியின் மனநிலையை பரிசோதனை செய்து பார்க்க வேண்டும், 
மனநிலை பாதிக்கப்பட்ட அந்த நீதிபதி தனது தீர்ப்பை மறுபரீசிலனை செய்ய வேண்டும், அவரின் தீர்ப்பு நாட்டின் குடும்ப மதிப்புகளுக்கு எதிரானதாக உள்ளது என்று சுதாகரன் பேசினார்.

மேலும், கலாச்சார மற்றும் குடும்ப அமைப்பின் மீது பெருமை கொண்டுள்ள நாடு இந்தியா, இப்படிப்பட்ட தீர்ப்பை அளித்துள்ளதன் மூலம் இந்தியாவின் குடும்ப மதிப்புகளைப் பற்றி எதையும் அந்த மனநிலை பாதிக்கப்பட்ட நீதிபதி அறிந்திருக்கவில்லை என்பது தெரிகிறது என்றும் சுதாகரன் குறிப்பிட்டார்.

குடும்ப மதிப்புகளை உலக நாடுகளுக்கு உணர்த்துவதில் இந்தியர்களாக நாம் பெருமை கொள்கிறோம், இதுவே நமக்கு பெருமை, ஆனால் இப்போது கணவரோ மனைவியோ அவரவர் பாதையில் விலகிச்செல்லலாம். நீதிபதி கண்டிப்பாக மனநிலை பரிசோதை மேற்கொள்ள வேண்டும் என்று சுதாகரன் காட்டமாக கூறினார்.

இதேபோல, சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாம் என தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளையும் அவர் கடுமையாக விமர்சனம் செய்தார். மத ரீதியான விவகாரங்களில் தலையிடுவதில் நீதித்துறைக்கு உரிமையில்லை, இவை பலநூற்றாண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் மரபு என சுதாகரன் குறிப்பிட்டார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், கள்ளத்தொடர்பு குற்றமாகாது என 497 சட்டப்பிரிவை ரத்து செய்து தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது. ஒரு பாலினத்தவருக்கு அடுத்த பாலினத்தவர் அடிபணிதல் என்பது அரசியலமைப்பிற்கு விரோதமானது என நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறினர்.

கேரளாவில் மீண்டும் தொடங்கிய பருவ மழை; முல்லைப் பெரியாறு அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பு! September 30, 2018

Image

கேரளாவில் பருவ மழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதனால், முல்லை பெரியார் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 2 ஆயிரத்து 624 கனஅடியில் இருந்து 3 ஆயிரத்து 583 கனஅடியாக அதிகரித்துள்ளது. 

கடந்த 2 நாட்களில் அணையின் நீர்மட்டம், 125 அடியிலிருந்து 127 அடியாக உயாந்துள்ளது. மழை தொடருவதற்கான வாய்ப்புகள் உள்ளதால், அணை விரைவில் 142 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் விநாடிக்கு ஆயிரத்து 360 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. முதல்போக சாகுபடியில் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அணை நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பருவ மழை காரணமாக வைகை அணைக்கான நீர் வரத்து 2 ஆயிரத்து 475 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், அணையின் நீர் மட்டம் 56.43 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து ஆயிரத்து 360 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தேனி மாவட்ட மலை பகுதிகளான வருசநாடு, வெள்ளிமலை, மேகமலை உள்ளிட்டவற்றில் கடந்த இரண்டு தினங்களாக இரவில் விடிய விடிய மழை பெய்ததை அடுத்து, வைகையின் பிறப்பிடமான மூல வைகை ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாக மூல வைகை ஆறு வறண்டு கிடந்த நிலையில் தற்போது வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதைக் கண்டு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், தற்போதைய மழையால், குடிநீருக்காக மூல வைகையை மட்டும் நம்பியிருந்த 100 க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் நிலவி வந்த குடிநீர் பஞ்சம் தீர்ந்துள்ளது.

கேரளாவின் முணாரில் பெய்து வரும் கனமழையால் மாட்டுப்பட்டி அணை 2வது முறையாக நிரம்பியுள்ளது. 162 அடி கொள்ளவு கொண்ட மாட்டுப்பட்டி அணை, கடந்த மாதம் நிரம்பியதை அடுத்து, ஆகஸ்ட் 14ம் தேதி திறக்கப்பட்டது.

இந்நிலையில், இரண்டாவது முறையாக அணை மீண்டும் நிரம்பியுள்ளது. அணையின் நீர்மட்டம் 162 அடியை எட்டியுள்ளதால், ஒரு ஷட்டர் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றபட்டு வருகிறது. அங்கு வரும் சுற்றுலா பயணிகள் இதணைக் கண்டு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

​எதிர்ப்பு வலுத்ததால் சிங்கப்பூரில் பெற்ற மருத்துவ சிகிச்சைக்கான தொகையை அரசிடம் திருப்பியளித்த நிதியமைச்சர்! September 30, 2018


அரசுப் பணத்தில் சிங்கப்பூரில் எடுத்துக்கொண்ட மருத்துவ சிகிச்சைக்கான தொகையை எதிர்ப்பு காரணமாக மீண்டும் அரசிடமே திருப்பி ஒப்படைத்துள்ளார் அமைச்சர் ஒருவர்.

சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர மாநில அரசின் நிதியமைச்சராக இருப்பவர் யனமலா ராம கிருஷ்னுடு, இவருக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் சிங்கப்பூர் சென்று அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் பல் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டு திரும்பினார்.
Image

இந்த சிகிச்சைக்காக அவர் செலவிட்ட 2.88 லட்ச ரூபாய் தொகையை ஏழைகளுக்கு சுகாதார சேவையளிக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட Dr.NTR வைத்திய சேவா மருத்துவக்காப்பீடு திட்டத்தின் கீழ் அவர் திருப்பப்பெற்றுக்கொண்டார் என்று கூறப்படுகிறது.

ஆந்திர சட்டசபையில் இந்தாண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய நிதியமைச்சர் யனமலா ராம கிருஷ்னுடு, ஆந்திர மாநிலத்தின் நிதிப்பற்றாக்குறை 24,205 கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்படுவதாக தெரிவித்தார்.

அதே போல, கடந்த தேர்தலின் போது அவர் தனக்கு 9 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக தேர்தல் ஆணையத்தில் தகவல் தெரிவித்திருந்தார்.

மாநில அரசின் நிதிப்பற்றாக்குறை இந்த அளவிற்கு இருக்கும் சூழலில், பணக்காரராக விளங்கும் நிதியமைச்சர் யனமலா ராம கிருஷ்னுடு தனக்காக மருத்துவ சிகிச்சைக்கான தொகையை ஏழைகளுக்கான மருத்துவக்காப்பீடு திட்டத்தின் இருந்து பெற்றுக்கொண்டதால் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானார்.

அமைச்சரின் இந்த செயலால் பொதுமக்கள், எதிர்கட்சியினர் பலரும் அதிருப்தி தெரிவித்து விமர்சித்து வந்த நிலையில், அரசிடம் இருந்து சிகிச்சைக்காக பெற்ற 2 லட்சத்து 88 ஆயிரத்து 823 ரூபாயை அவர் மீண்டும் அரசின் கருவூலத்தில் செலுத்தியுள்ளார்.

விடுதலை செய்

Corrupt

No automatic alt text available.

சனி, 29 செப்டம்பர், 2018

கைது வாரண்ட் இருந்தும் ஹெச்.ராஜாவையும், எஸ்.வி.சேகரையும் கைது செய்யாமல் விட்டது, நிர்வாக சீரழிவுக்கு எடுத்துகாட்டு - நல்லக்கண்ணு September 29, 2018

Image

கைது வாரண்ட் இருந்தும் ஹெச்.ராஜாவையும், எஸ்.வி.சேகரையும் கைது செய்யாமல் விட்டது, நிர்வாக சீரழிவுக்கு எடுத்துகாட்டு என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பின் மூலம், பாலின வேறுபாடு களையப்பட்டுள்ளதாக கூறினார். குட்கா ஊழல் தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகள் வீட்டில் சோதனை நடத்தப்பட்டும் நடவடிக்கையில்லை என்றும், அவர்கள் ஆட்சியிலும் அதிகாரத்திலும் நீடிப்பது சரியல்ல என்றும் தெரிவித்தார்.

கொள்கைகளை விமர்சிப்பவர்கள் கைது செய்யப்படுவதாகவும், நீதிமன்றத்தை கீழ்தரமாக பேசியவர் சுதந்திரமாக உள்ளதாகவும் நல்லக்கண்ணு கூறினார்.

கறிவேப்பிலையின் மகத்துவம்! September 29, 2018

Image

தினமும் நாம் உட்கொள்ளும் உணவு பொருட்களில் அதிகமாக சேர்க்கப்படுவது கறிவேப்பிலை. கறிவேப்பிலை உணவில் சேர்த்துக்கொள்வது, சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியம் மேம்படவும் உதவுகிறது. காப்பர், கேல்சியம், இரும்புசத்து போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள கறிவேப்பிலை, நம் உடல் ஆரோக்கியத்தில் வகிக்கும் பங்கினை எடுத்துறைக்கும் செய்தி...

கறிவேப்பிலை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:

1. கறிவேப்பிலையில் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் அதிக அளவில் உள்ளதால் பல நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. 

2. காயங்களை குணப்படுத்த உதவும் அமிலங்களும் கறிவேப்பிலையில் இருப்பதால் சிறிய காயங்களை குணப்படுத்தும் தன்மை கறிவேப்பிலைக்கு உண்டு. கறிவேப்பிலையை வைத்து தயாரிக்கப்படும் ஒரு விதமான பேஸ்ட், கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

3. அடிக்கடி கறிவேப்பிலை எடுத்துக்கொள்வது உடல் எடையை குறைக்க உதவுகிறது. ஆதனால், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அடிக்கடி கறிவேப்பிலையை எடுத்துக்கொள்ளலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

4. கறிவேப்பிலை சாப்பிடுவது ஞாபகசக்தியை அதிகரித்து மறதி நோய் ஏற்படாமல் தடுக்கிறது.

5. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ அதிக அளவில் இருப்பதால் கண்களுக்கு மிகவும் நல்லது. 

6. இதுமட்டுமல்லாமல், முகம் பொலிவுடன் இருப்பதற்கும், கூந்தல் அடர்த்தியாக இருப்பதற்கும் கறிவேப்பிலை உதவுகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

வடகிழக்கு பருவமழை குறித்த முதல் அப்டேட் வெளியிட்ட வானிலை ஆய்வு மையம் September 29, 2018

Image

தமிழகத்தில் நடப்பாண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவமழை 12 சதவீதம் அதிகமாகப் பொழியும் என, வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன், அடுத்த இரு தினங்களுக்கு தென் தமிழகத்தின் அநேக இடங்களிலும், வட தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்தார். 

குமரிக் கடல், தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத் தீவில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசும்  என்றும், கடல் சீற்றத்துடன் காணப்படும் எனவும் அவர் எச்சரித்தார். எனவே, மீனவர்கள் நாளை மாலை வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார். மேலும் சென்னையில் லேசான முதல் மிதமான மழை பெய்ய கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.

வெள்ளி, 28 செப்டம்பர், 2018

​தீபாவளியை முன்னிட்டு 22 ஆயிரம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு! September 28, 2018

Image

தீபாவளியை முன்னிட்டு 22 ஆயிரம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு நவம்பர் 6-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர் செல்வார்கள் என்பதால், சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தீபாவளி சிறப்பு பேருந்துகள் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், நேற்று அறிவிப்பு வெளியிட்டார். 

அதன்படி, நவம்பர் 3, 4, 5, 6 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து 12 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சென்னையில், கோயம்பேடு, அடையாறு, தாம்பரம், அண்ணாநகர் மற்றும் ஊரப்பாக்கம் ஆகிய 5 இடங்களில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

இதுதவிர நவம்பர் 3, 4, 5, 6ம் தேதிகளில் தமிழகத்தின் இதர மாவட்டங்களிலும் 10 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் வரை இயக்கப்படவுள்ளன. 

எனவே மொத்தம் 22 ஆயிரம் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக இயக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு தீபாவளியில் மொத்தம் 5.35 லட்சம் மக்கள் பயணம் செய்தனர். எனவே அதே அளவிலான மக்கள் இம்முறையும் எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமண பந்தத்தை தாண்டிய தகாத உறவு கிரிமினல் குற்றம் அல்ல என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு! September 27, 2018

Image

திருமண பந்தத்தை தாண்டிய தகாத உறவு கிரிமினல் குற்றம் அல்ல என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. திருமணமான பெண்ணுடன் தகாத உறவு கொள்ளும் ஆணுக்கு மட்டும் தண்டனை விதிக்கும் 497 சட்டப்பிரிவு அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என 5 நீதிபதிகளும் ஒரே மாதிரியான தீர்ப்பை அளித்துள்ளனர். தகாத உறவு கிரிமினல் குற்றமல்ல என்றாலும், குடும்ப வாழ்க்கையை பாதிப்பதாக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்தார். 

பெண்களின் கண்ணியத்தை பாதிக்கும் சட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும், கணவன்-மனைவி இடையே விவாகரத்து ஏற்பட தகாத உறவும் காரணமாக இருப்பதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினார். எந்த குற்றமும் இழைக்காமல் தகாத உறவு கொள்வதை கிரிமினல் குற்றமாக கருத முடியாது என்றும், பெண்களுக்கு சம உரிமை வழங்காத எந்த சட்டமும் அரசியலமைப்புக்கு எதிரானதுதான் என்றும் தனது தீர்ப்பில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா குறிப்பிட்டார்.

சபரிமலை ஐயப்பன் கோயில் விவகார தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்த முக்கிய அம்சங்கள்! September 28, 2018

Image

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பில் தெரிவித்த முக்கிய அம்சங்கள்

ஆண், பெண் சமமானவர்கள் எனத் தெரிவித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, மதங்களில் இரட்டை முறை கடைப்பிடிப்பது, பெண்களின் கவுரவத்தை பாதிக்கும் நடவடிக்கை எனத் தெரிவித்தார். மாதவிடாய் போன்ற உடல்ரீதியான மற்றும் உளவியல் ரீதியான காரணங்களைக் கொண்டு, பெண்களின் உரிமைகளை பறிக்க முடியாது எனவும், பெண்களை கோயில் வழிபாட்டுக்கு அனுமதிக்காமல் இருப்பதை, மதத்தின் முக்கிய அங்கமாக கருத முடியாது எனவும் தீபக் மிஸ்ரா கூறினார். 

கோயில், பொது இடங்களுக்கு செல்வதற்கு கடைப்பிடிக்க சாத்தியமில்லாத விதிமுறைகளை வகுத்து, கடைபிடிக்க கூறுவது, ஒருசாரரின் உரிமையை பறிக்கும் செயல் என தீபஸ் மிஸ்ரா தீர்ப்பில் குறிப்பிட்டார். பெண்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் மத நம்பிக்கைகள் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்பதால், அவற்றை ரத்து செய்ய வேண்டுமெனக் கூறிய நீதிபதி சந்திரசூட், அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயல்களும் தீண்டாமையே என தெரிவித்தார். 

ஐயப்ப பக்தர்களை தனிக்குறியீடாகவோ, அடையாளமாகவோ கருத முடியாது எனத் தெரிவித்த நீதிபதி ஆர்.எஃப். நரிமன், அவர்களின் வழிபாடும், இந்து மத வழிபாடுகளில் ஒன்றே எனக் குறிப்பிட்டார். வழிபாடு என்ற அடிப்படை உரிமையை தடுத்தால், அது பெண்களை உரிமையை பறிப்பதற்கு சமம் என நீதிபதி ஆர்.எஃப். நரிமன் தீர்ப்பில் தெரிவித்தார்.மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய பெண் நீதிபதி இந்து மல்கோத்ரா, சபரிமலை கோயில் அரசின் நிதியுதவியில் இயங்குவது கிடையாது என்பதால், அங்கு பெண்களை அனுமதிப்பது தொடர்பாக திருவாங்கூர் தேவசம் போர்டு தான் முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டார்.  

இது, மத நம்பிக்கை சார்ந்த விவகாரம் என்பதால் நீதிமன்றம் தலையிடக்கூடாது எனக் கூறிய இந்து மல்கோத்ரா, ஐயப்ப பக்தர்கள் பலமான தனிப்பட்ட நம்பிக்கை கொண்டவர்கள் என்பதால் அதற்கு மதிப்பளிக்க வேண்டுமென தீர்ப்பில் தெரிவித்தார். 

​அலுமினியப் பாத்திரங்கள் உதவியுடன் ஆற்றைக் கடக்கும் பள்ளி மாணவர்கள்! September 28, 2018

Image

அசாம் மாநிலத்தில் அலுமினியப் பாத்திரங்கள் உதவியுடன், குழந்தைகள் ஆற்றை கடந்து பள்ளிக்கு செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. 

பிஸ்வந்த் மாவட்டத்தில் உள்ள நதுவார் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளிக்கு ஆற்றை கடந்து செல்ல வேண்டிய நிலையில், பாலம் இல்லாததால் மாணவர்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக அலுமினிய பாத்திரங்களில் மிதந்து சென்று ஆபத்தான முறையில் குழந்தைகள் ஆற்றை கடக்கின்றனர். 

ஆற்றை கடந்து செல்ல உடனடியாக படகு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பள்ளியை வேறு இடத்துக்கு மாற்ற மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்

வியாழன், 27 செப்டம்பர், 2018

அயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றத் தேவையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு! September 27, 2018

Image


அயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றத் தேவையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

கடந்த 1994ம் ஆண்டு அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தொழுகை நடத்துவதற்கு மசூதிகள் அவசியமான ஒன்று அல்ல என தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி அசோக் பூஷண், நீதிபதி அப்துல் நஷிர் அமர்வு இன்று தீர்ப்பளித்தது. 

முதலில் தீர்ப்பை வாசித்த நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதி அசோக் பூசண், அனைத்து மதத்தினரின் உரிமைகளையும் மதிக்க வேண்டும் என்றனர். 1994ம் ஆண்டு இருமத வழிபாட்டை ஒப்பிட்டு கூறியது ஏற்புடையதல்ல என்றும் நீதிபதிகள் கூறினர்.

1994ல் அரசியல் சாசன அமர்வானது, இஸ்லாமியர்கள் வழிபட மசூதி தேவையில்லை, எங்கு வேண்டுமெனாலும் நமாஸ் செய்யலாம் எனக்கூறியது வெறும் கருத்தே தவிர தீர்ப்பு அல்ல என்றும் தெரிவித்தனர். அயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவை இல்லை என்றும் தெரிவித்தனர்.

பின்னர் தீர்ப்பை வாசித்த அப்துல் நசீர், இரு நீதிபதிகளின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்தார்.  ஒரு மதத்தின் நம்பிக்கை மற்றும் நடைமுறையை மதிக்க வேண்டும் என்றும் அப்துல் நசீர் கூறினார். இந்த வழக்கு அக்டோபர் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

10-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு மாணவர் இயக்கத்தை சேர்ந்த மாணவர்கள் போலீசாரால் கைது -

நியூஸ்7தமிழின் 'பகத்சிங்' ஆவணப்படத்தை காண சென்ற 10-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு மாணவர் இயக்கத்தை சேர்ந்த மாணவர்கள் போலீசாரால் கைது - 

கடும் வெள்ளத்தில் தத்தளிக்கும் நகரங்கள்! September 27, 2018

Image

ஹிமாச்சலப்பிரதேசம் மணாலியில் வெள்ள பாதித்த பகுதியில் ராணுவத்தினர் ஹெலிகாப்டர் மூலம் உணவுப்பொருட்களை வழங்கினர்.

மணாலியில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகிறது. பல இடங்களில் மீட்பு பணியினர் செல்ல முடியாத அளவிற்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

அதனால், அங்கு, ஹெலிகாப்டர் உதவியுடன், குடிநீர், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மீட்பு படையினர் வழங்கினர்.

அயோத்தி வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படுமா? September 27, 2018

அயோத்தி விவகாரத்தில் மேல்முறையீட்டு மனுக்களை, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது குறித்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் குறித்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.  மொத்தமுள்ள 2.77 ஏக்கர் நிலத்தின் ஒருபகுதி நிர்மோகி அகாரா அமைப்புக்கும், மற்றொரு பகுதி ராமர் கோயில் கட்டவும், மீதமுள்ள பகுதி சன்னி வகுப்பு வாரியத்துக்கும் சொந்தம் என தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 3 தரப்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

இதுகுறித்த விசாரணை  நடைபெற்று வரும் நிலையில், இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த மசூதிகள் அத்தியாவசியமில்லை என உச்சநீதிமன்றம் கடந்த 1994ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது குறித்து உச்சநீதிமன்றம் இன்று பிற்பகலில் தீர்ப்பு வழங்க உள்ளது. 

Image

பெண்ணை ஜீப்பின் மேற்கூரையில் கட்டி கொண்டு சென்ற போலீசார்! September 27, 2018

Image

பஞ்சாபில் பெண்ணை ஜீப்பின் மேற்கூரையில் கட்டி போலீசார் கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சர் மாவட்டத்தில் சாவிந்தா தேவி பகுதியை சேர்ந்த ஒருவரை வழக்கு ஒன்றில் கைது செய்ய போலீசார் அவரது வீட்டுக்கு சென்றனர். ஆனால் அதற்கு அவரது மனைவி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த போலீசார், அந்த பெண்ணை, ஜீப்பின் மீது கட்டி வாகனத்தை ஓட்டிச்சென்றனர். 

ஒரு திருப்பத்தில் சென்ற போது ஜீப்பில் இருந்து கீழே விழுந்த பெண் படுகாயம் அடைந்தார். இதையடுத்து, அவரை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்த சிசிடிவி கேமரா காட்சிகள், வைரலாகி வருகின்றன. 

தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கொள்ளைபோன 89 சிலைகள் சைதாப்பேட்டையில் மீட்பு! September 27, 2018

Image

தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கொள்ளை போன 89 சிலைகள் சென்னை சைதாப்பேட்டையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சைதாப்பேட்டை ஸ்ரீநகர் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ரன்வீர் ஷா என்பவரது வீட்டில் கடத்தல் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கூறி, சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார் கடந்த 2016ஆம் ஆண்டு சோதனை நடத்தினர். அப்போது 300க்கும் மேற்பட்ட கடத்தல் சிலைகள் கைப்பற்றப்பட்டன. 

வீட்டை இடித்து முழுமையாக சோதனை நடத்த அனுமதி கோரி, சிறப்பு நீதிமன்றத்தில் பொன். மாணிக்கவேல் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மேலும், ரன்வீர் ஷா வீட்டில் சிலைகள் உள்ளதற்கான ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படட்டன. அதனையேற்று நீதிமன்றம் சோதனை நடத்த அனுமதி வழங்கியது. 

இதனையடுத்து, இன்று அவரது வீட்டில், சிலைக்கடத்தல் பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது 4 ஐம்பொன் சிலைகள், கல் தூண்கள் உட்பட 89 சிலைகள் கைப்பற்றப்பட்டன. தலைமறைவாக உள்ள ரன்வீர் ஷாவை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

செங்கோட்டை கலவரத்தில் சாமி மீது கல் எறிந்தவர்கள் கைது:


கடந்த 16 ஆம் தேதி ஜெய மூர்த்தி என்பவர் தலைமையில் புதுச்சேரியில் இருந்து சபரி மலை ஐயப்பன் கோவிலுக்கு சாமி குமிடுவதற்காக சுமார் 80 நபர்கள் இரண்டு பேருந்துகளில் செங்கோட்டை கோட்டான் குளம் வழியாக செல்ழும் போது சுமார் 5 மணி அளவில் TN 76AE 0042 என்ற இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள்
பேருந்துகள் மீது கல்லெறிந்தார்கள். பேருந்தில் உள்ளவர்கள் பேருந்தில் இருந்து இறங்கி வந்து கல் எறிந்த இருவரையும் மடக்கி பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
அந்த இருவரையும் காவல் துறை விசாரித்ததில் தங்களுடைய பெயர்களை இஸ்மாயில் என்றும் அப்துல் காதர் என்றும் கூறினர்.பின்பு காவல் துறையினர் நன்கு விசாரித்த போது அவர்கள் இருவரும் அருண் மற்றும் முருகேஷன் என்பதும் அவர்கள் இருவரும் இந்து முன்னணியின் உறுப்பினர்கள் என்பதும் தெரியவந்தது.
மேலும் விசாரித்ததில் 14 ஆம் தேதி நடந்த செங்கோட்டை விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பிள்ளையார் மீது கல்லெறிந்தது இவர்கள் தான் என்பது தெரியவந்தது.
பார்வை: வழக்கு எண் 415/2018 செங்கோட்டை காவல் நிலையம்

எல்லாம் வல்ல அல்லா நமக்கு நல்ல துணையை தந்து அருள்புரிவானாக

#மனைவி; என்னங்க! Fஜர் பாங்கு சொல்லியாச்சு! ம்ம் எழும்புங்க!!!
#கனவன்; தூக்கம் வருதுமா! நாளை தொழுகிறேனே!
#மனைவி; அஸ்தஃபிருல்லா!!! கனவனை தொழுகைக்கு எழுப்பாத மனைவி நாளை மறுமை நாளில் நிர்வானமாக நிற்கப்படுவாளாம்!!! நாயகம் சொல்லிருக்காங்க! நாம் செய்யும் பாவத்திற்கு முதல் மந்திரமே நீங்கள் சொன்ன இந்த வார்தை தான். ஓதுவு செய்து வாங்க நான் இகாமத் சொல்ரேன்! அட! சொல்ரேன்ல ம்ம்! எழும்புங்க!
(தொழுகைக்கு பிறகு.)
#மனைவி; எங்க போறிங்க!!!
#கனவன்; தூங்க போறேன்!!!
#மனைவி; யா அல்லா!!! அதான் விடின்சு போச்சுல! பிறகு என்ன? தூக்கம்??? நான் குர்ஆண். ஒரு பக்கம் ஓதுரேன். அடுத்த பக்கம் நீங்கள் ஓதுங்க பிறகு வியாபாரத்திற்கு செல்லுங்க! ஏன் அப்படி பார்க்கிறிங்க!!!
#கனவன்; நீ எனக்கு மனைவியாய் கிடைக்க நான் என்ன தவம் செய்தேனம்மா!!!
#மனைவி; நான் உங்களுக்கு சொர்க்கமாக தான் இருப்பேன் ஒரு போதும் நரகமாக இருக்கமாட்டேன்.
இதற்கு பெயர் தான் அழகான வாழ்க்கை.
அல் குர்ஆன் உறுதி கூறப்பட்டிருப்பது போல சாலிஹான பெண்ணுக்கு சாலிஹான ஆணும். சாலிஹான ஆணிற்கு சாலிஹான பெண்ணும்.
எல்லாம் வல்ல அல்லா நமக்கு நல்ல துணையை தந்து அருள்புரிவானாக 

பேச்சுரிமை யாரிடமுள்ளது


புதன், 26 செப்டம்பர், 2018

கத்தார் நாட்டிற்கு Free visa( விசிட் விசா ) வில் வருபவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்!!

கத்தார் நாட்டிற்கு Free visa( விசிட் விசா ) வில் வருபவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்!!
இந்தியாவிலிருந்து ஒவ்வொரு நாளும் நூற்றுக் கணக்கான இளைஞர்கள் free visa வில் கத்தாருக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள்.
Qatar Free Visa என்பது இதுதான்.
அந்த வீசாவில் மூன்றுமாதம் கத்தாரில் சட்டபூர்வமாக வாழமுடியும். அந்த மூன்று மாத காலத்துக்குள் ஒரு நிறுவனத்தில் வேலை தேடிக் கொண்டு அந்த நிறுவனத்தோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளவேண்டும்.
கத்தாரின் அதிகமான நிறுவனங்கள் இரண்டு அல்லது, ஐந்து வருடத்துக்கு ஒரு தொழிலாளியோடு ஒப்பந்தம் செய்து கொள்கின்றன.
கத்தார் தொழில் சந்தையில் கடுமையான ஒரு போட்டி இருக்கிறது. அதற்கு முகம் கொடுக்க இந்தியாவில் இருந்து வரும் போதே ஆங்கில மொழியில் சமாளிக்கவும் கம்யூட்டரை சகஜமாக கையாளவும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.
அடுத்தது இங்கே வருவதற்கு முன்னறே நீங்கள் உங்கள் துறயை தெளிவாக தெரிவு செய்துகொள்ள வேண்டும்.
அந்தத் துறயைில் குறைந்தது இரண்டு, மூன்று அங்கீகரிக்கப்பட்ட சான்றிதல்களேனும் இருக்க வேண்டும்.
அப்படி இல்லாமல் எந்த வேலையானாலும் சரி என்று சொல்லிக் கொண்டு, மீலாத் விழாவிலும், இல்ல விளையாட்டு போட்டியிலும் கிடைத்த சான்றிதல்களை வைத்துக் கொண்டு இங்கே வேலை தேடமுடியாது.
இந்தியாவின் அதிகமான இளைஞர்கள் நாட்டின் எல்லா தொழில் முயற்சியையும் செய்ததன் பின்னரே வெளிநாடு செல்ல தீர்மாணிக்கிறார்கள்.
இங்கே வரும் எல்லோருமே ஆயிரம் கனவுகளுடனும், கடன்களுடனும், கஷ்டங்களுடனுமே வந்து சேர்கிறார்கள் கத்தாரை பொருத்தவரை தமிழகத்தின் எல்லா ஊரிலும் ஒரு சங்கம் அமைக்கும் அளவிற்கு ஆள் இருக்கிறது. எனவே Free Visa வீசாவில் யார் கடார் வந்தாலும் அவர்களுக்கு உதவி செய்ய நண்பர்கள், உறவினர்கள் யாராவது இருப்பார்கள்.
பெற்றோரின் எதிர்பார்ப்புகளுடனும் ஆயிரம் எதிர்காலக் கனவுகளுடனும் வரும் நம் இளைஞர்கள் வேலை தேடுவதற்குப் பதிலாக நன்றாக தூங்கிக் கொண்டும், முழுநேரம் ஃபேஸ்புக்கிள் தொங்கிக் கொண்டும் இருக்கிறார்கள்.
இங்கே வரும்போது எல்லோரும் வேலைதேட வேண்டும் என்ற வேட்கையோடுதான் வருகிறார்கள்.
ஆனால் ஏசி அறை,நேரத்துக்கு உணவு, முழு நேர இன்டநெட் இப்படி ஒரு வாழ்க்கை கிடைத்ததும் வீட்டையும், வீட்டுப் பிரச்சினைகளையும் மறந்துவிடுகிறார்கள்.
இங்கே முழுமூச்சோடு இறங்கி பாடுபட்டால் மட்டுமே ஒரு நல்ல நிறுவனத்தில் ஒரு நல்ல ஊதியத்துக்கு ஒரு வேலை தேடிக் கொள்ள முடியும்.
பத்திரகைகளில் வரும் வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் எறி இறங்கி பயோடேட்டாவை கொடுக்க வேண்டும்.
நண்பர்கள் உறவினர்கள் வேளை செய்யும் நிறுவனங்களில் இருக்கும் வேகென்சிகள் குறித்தும் எப்போதும் ஒரு கண் வைத்திருக்க வேணடும்.
இணையத்தில் ஒவ்வொரு நாளும் நிறுவனங்களில் இருக்கும் வேலை வாய்ப்புகளைத் தேடி விண்ணப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
அப்படி இல்லாமல் நல்லா திண்டு போட்டு படுத்தா வீசா முடியும் திகதி வரும் வரை அவருக்கு தெரியாமல் இருக்கும். அதன் பினனர் அவருக்கு இரண்டு ஒப்ஷன்தான் இருக்கும். ஒன்று நாட்டுக்கு போகனும் .
அல்லது வீசா காலத்தை நீடிப்பதற்காக வேண்டி ஒரு பஞ்ச சம்பளத்துக்கு கிடைக்கும் ஏதாவது ஒரு வேளையில் சேர்ந்து கொள்ள வேண்டும். எனவே பெற்றோரின் ஆயிரம் கனவு களோடும், கண்ணீரோடும்,கடல்கடந்து தொழில் தேடிவரும் நம் இளைஞர்கள் மிகப் புத்திசாளித்தனமாகவும், விணைத் திரனோடும் செயற்பட வேண்டும்.
அப்போது மட்டும்தான் பல தியாகத்துடனும் கனவுகளுடனும் வந்த வெளிநாட்டு வாழ்கையின் உண்மையான நோக்கத்தை அடைந்து கொண்டு சந்தோஷமாக நாட்டுக்கு செல்ல முடியும்.
Source: Kilakarai Classified

ஒரு மணி நேரத்தில் அடுத்தடுத்து 3 பெண்களிடம் தங்கச் சங்கிலி பறிப்பு! September 26, 2018

Image

ஒரு மணி நேரத்தில் அடுத்தடுத்து 3 இடங்களில் பெண்களிடம் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் திருச்செங்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

திருச்செங்கோடு பகுதியில் உள்ள அம்மன் கோவிலுக்கு நேற்று மாலை சென்ற ராணி என்ற பெண்ணிடம் ஹெல்மட் அணிந்த மர்ம நபர்கள் 3 சவரன் செயினை பறித்துச் சென்றனர். அதே மர்ம நபர்கள், வாலரைகேட் பகுதியை சேர்ந்த வசந்தி என்பவரிடம் 8 சவரன் தாலி செயினை பறித்துச் சென்றுள்ளனர். மேலும், பனங்காடு என்ற பகுதியில் பால் விற்கச் சென்ற சித்தானந்தூர் பகுதியைச் சேர்ந்த முத்துபிரியா என்பவரிடம் 9 சவரன் தாலி செயினை பறித்துச் சென்றுள்ளனர். 

அடுத்தடுத்து 3 இடங்களில் ஒரு மணி நேரத்திற்குள்ளாக 15 சவரன் மதிப்புள்ள நகைகளை பறித்துச் சென்ற 2 மர்ம நபர்களை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். 

​சூறை காற்றுடன் பெய்த கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் வாழை மரங்கள் சேதம்! September 26, 2018

Image


களக்காடு அருகே திருக்குறுங்குடியில் சூறை காற்றுடன் பெய்த கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் வாழைகள் மற்றும் நெற்பயிர்கள் சேதம் அடைந்தன.

அங்கு நேற்றிரவு இடி மின்னலுடன் கனமழை பெய்தது. மழையின் போது பயங்கர சூறை காற்றும் வீசியது. இதனால் திருக்குறுங்குடி பெரியகுளம் பத்துக்காடு, மலையடிபுதூர், ராஜபுதூர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன.

இதுபோல 500 ஏக்கர் நெற் பயிர்களும் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். 

அரசின் அனைத்து சேவைகளையும் பெற ஆதார் எண் கட்டாயம் என்ற உத்தரவு தொடருமா? September 26, 2018

Image

அரசின் அனைத்து சேவைகளையும் பெற ஆதார் எண் கட்டாயம் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக தொடர்ப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பளிக்கபடுகிறது. 

வங்கிச் சேவை, பான் கார்டு, செல்போன் சேவை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்டவற்றை பெறுவதற்கு மத்திய அரசு ஆதாரை கட்டாயமாக்கியுள்ளது. இதனை எதிர்த்து 27 பேர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். 

பயோமெட்ரிக் தகவல்கள், கைரேகை, கண் விழித்திரை தகவல்கள் உள்ளிட்டவை அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு கட்டாயம் அல்ல என்றும் இதன் மூலம் தகவல் திருடப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் மனுதாரர்கள் தெரிவித்திருந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ளது.

வரலாற்று சாதனை படைத்த நியூசிலாந்து பிரதமர்! September 26, 2018

ஐநா பொதுச்சபை கூட்டத்தில் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா, தமது 3 மாத கைக்குழந்தையுடன் பங்கேற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். 

நியூசிலாந்து நாட்டின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டெர்ன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பதவியேற்றார். மிகச்சிறிய வயதில் நாட்டின் தலைவராக பொறுப்பேற்ற பெருமையை பெற்ற அவர், டிவி தொகுப்பாளரான கிளார்க் கேபோர்ட்டை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் ஆண் குழந்தையை பெற்றெடுத்த ஜெசிந்தா, நியூயார்க் நகரில் நடந்து வரும் ஐநா பொதுக்கூட்டத்தில்  தனது 3 மாத கைக்குழந்தை அட்ரென் கேபோர்ட் உடன் கலந்துகொண்டார். 

அவரது குழந்தைக்கு நியூசிலாந்தின் முதல் குழந்தை என ஐநாவின் அடையாள அட்டையும் வழங்கப்பட்டிருந்தது. பெண் தலைவர் ஒருவர் ஐநா கூட்டத்தில் குழந்தையுடன் வந்து பங்கேற்றது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

Image

செவ்வாய், 25 செப்டம்பர், 2018

வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு! September 25, 2018

வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 15-ஆம் தேதி வரை அவகாசம் அளித்து 2-ஆவது முறையாக கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 

2017-18 நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கை, ஜூலை 31 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது. பின்னர், பலரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த காலவரையறை ஆகஸ்ட்-31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்ற அறிவிப்பால் முன்னெப்போதும் இல்லாத வகையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோரின் சதவீதம் அதிகரித்தது. இந்த நிலையில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று வரும் 30-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 15-ஆம் தேதி வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்காக காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Image

ஐந்தே நாள்; எட்டரை லட்சம் கோடி இழப்பு. கதிகலங்கும் முதலீட்டாளர்கள்! September 25, 2018

Image
இந்தியப் பங்குச் சந்தைகளில் ஐந்தே நாளில், முதலீட்டாளர்களுக்கு எட்டரை லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால், இந்திய பங்குச்சந்தைகள் கடந்த வாரம் கடும் சரிவைச் சந்தித்தன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், கடந்த வாரம் 1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. 

இந்நிலையில், இன்று பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 536 புள்ளிகள் சரிந்து, 36,305 புள்ளிகளில் நிறைவடைந்தது. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி, 175 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து, 10,967 புள்ளிகளில் முடிவடைந்தது. அன்னிய நேரடி முதலீடு குறைவு மற்றும் கச்சா எண்ணெய் விலை ஏற்றம், ரூபாய் மதிப்பு சரிவு போன்றவையே, இந்த தொடர் சரிவுக்கு காரணம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 5 நாட்களில் மட்டும், இந்தியப் பங்குச்சந்தைகளில், முதலீட்டாளர்களுக்கு சுமார் எட்டரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது இந்தியப் பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட திடீர் சுனாமி என்றே பொருளாதார வல்லுநர்கள் விமர்சிக்கின்றனர்.

மாணவி சோபியா மற்றும் அவரது தந்தை சாமி ஆகியோர் மனித உரிமைகள் ஆணையத்தில் ஆஜர்! September 25, 2018

Image

பாஜக குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மாணவி சோபியா மற்றும் அவரது தந்தை சாமி ஆகியோர் மனித உரிமைகள் ஆணையத்தில் ஆஜராகினர்.

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் கடந்த செப்டம்பர் 3ம் தேதி, ஆராய்ச்சி மாணவி சோபியா பயணம் செய்தார். அப்போது, விமானத்தில் பயணித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசையை நோக்கி, பாஜகவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார். இதுகுறித்த புகாரில் கைது செய்யப்பட்ட சோபியா பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதற்கிடையே சோபியா கைது விவகாரத்தில் மனித உரிமை மீறல் நடைபெற்றதாக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் அவரது தந்தை மனு தாக்கல் செய்தார். அதனைத்தொடர்ந்து நெல்லை வண்ணாரப்பேட்டை அரசு சுற்றுலா விருந்தினர் மாளிகையில் மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன் முன்பாக சோபியா, அவரது தந்தை சாமி, புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் திருமலை ஆகியோர் இன்று ஆஜராகினர்.

விசாரணையின் போது, மாணவியை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று இரவு 8.30 மணி வரை எப்படி விசாரணை நடத்தலாம் என, காவல்துறை ஆய்வாளரிடம் மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.

சோபியாவின் தந்தை அளித்த புகார் தொடர்பாக காவல்துறை எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யவும் மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். 

பியூஷ் மானுஷ் மீது தாக்குதல் நடத்திய சிறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்த சேலம் நீதிமன்றம் உத்தரவு! September 25, 2018

Image

சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் பியூஷ் மானுஷ் மீது தாக்குதல் நடத்திய சிறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய, அஸ்தம்பட்டி காவல் ஆய்வாளருக்கு சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சேலம் முள்ளுவாடி ரயில்வே கேட் அருகே பாலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 2016ம் ஆண்டு போராட்டம் நடத்திய பியூஷ் மானுஷை போலீசார் கைது செய்தனர். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட போது பியூஷ் மானுஷை சிறை அதிகாரிகள் தாக்கியதாக கூறப்படுகிறது. தம்மை தாக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சேலம் நீதிமன்றத்தில் பியூஷ் மானுஷ் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், சிறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி, அக்டோபர் 29ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய அஸ்தம்பட்டி காவல் ஆய்வாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

12ம் வகுப்பு மாணவியின் உயிரை ஒரே இரவில் இரு முறை காப்பாற்றிய ஆபத்பாந்தவன்! September 25, 2018

ஒரே இரவில் 12ம் வகுப்பு மாணவியின் உயிரை இரு முறை ஒருவர் காப்பாற்றியிருக்கும் வினோத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த சையது நாசர் ஹூசைன் (43வயது) என்பவர் பிளம்பிங் பொருட்களை விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். தினமும் கடையை அடைத்துவிட்டு இரவில் வஷி பாலத்தின் வழியாக வீட்டுக்கு திரும்புவார். வஷி பாலம் என்பது மும்பையையும், நவி மும்பை பகுதியையும் இணைக்கும் கடல் மீது கட்டப்பட்டுள்ள ஒரு பாலமாகும். மும்பையின் Mankhurd மற்றும் நவி மும்பையின் வஷி ஆகிய பகுதிகளை இப்பாலம் இணைக்கிறது.

இந்நிலையில் நேற்று இரவு 8.30 மணியளவில் தனது கடையிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த நாசர் ஹூசைன், பாலத்தின் மீது சிறுமி ஒருவர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நடந்து சென்று கொண்டிருப்பதை கண்டார்.

முன்னதாக இதே பாலத்தில் தற்கொலைக்கு முயன்ற இருவரை கடந்த இரண்டு ஆண்டுகளில் நாசர் காப்பாற்றியுள்ள நிலையில், நேற்று அவர் கண்ட சிறுமி வெறும் கால்களுடன் நடந்து கொண்டிருப்பதை கண்டவுடன் (முன்னதாக காப்பாற்றப்பட்ட இருவருமே வெறும் கால்களில் நடந்தவர்கள்) ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்பதை உணர்ந்தவராய் அவரது இருசக்கர வாகனத்தை அப்படியே கீழே போட்டுவிட்டு அந்த சிறுமியை நோக்கி ஓடினார். இதற்குள் அச்சிறுமி பாலத்தின் தூண் மீது ஏறி கடலுக்குள் விழுந்து தற்கொலை செய்யும் முயற்சியாக கீழே குதிக்க முயன்றுள்ளார். இதற்குள் அச்சிறுமியை பிடித்து இழுத்து அவரது உயிரை காப்பாற்றினார் நாசர்.

பின்னர் மன அழுத்தத்தில் இருந்த அச்சிறுமியின் வசிப்பிடம், நண்பர்கள், பெற்றோர்கள் குறித்து கேட்டபோதிலும் அவர் எந்த வித தகவல்களும் தர மறுத்ததையடுத்து சுமார் ஒரு மணி நேரம் அவருக்கு புத்துணர்ச்சி அளித்து மன அழுத்தத்தை போக்கும் முயற்சியாக பேசிக்கொண்டிருந்தார். பின்னர் ஒரு வழியாக, வாய்திறந்த அச்சிறுமி தான் மந்தலா பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி என்றும் ஆண் நண்பர் ஒருவர் அச்சிறுமியை ஏமாற்றியதன் காரணமாக மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து, அச்சிறுமியை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அவரின் வீட்டுக்கு சென்ற போது, அவரது வீடு பூட்டப்பட்டிருப்பதை கண்டனர். அவரது பெற்றோர்கள் மருத்துவமனைக்கு சென்றுள்ளதால அவரது உறவினர் வீட்டில் சாவி வாங்கி வந்து சிறுமியை வீட்டில் விட்டுச் சென்றுள்ளார் நாசர்.

பின்னர், தனது வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த நாசர் மன அழுத்தத்தில் இருந்த சிறுமியை தனிமையில் விட்டுவிட்டு வந்துவிட்டோமே, அவர் மீண்டும் ஏதாவது விபரீத முயற்சிகளில் இறங்கினால் என்ன செய்வது என எண்ணியவராய் மீண்டும் சிறுமியின் வீட்டுக்கு திரும்பினார். அங்கு வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது, அழைத்தும் வராததால் சந்தேகமடைந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது அச்சிறுமி தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக மீட்கப்பட்டு ஷதாப்தி மருத்துவமனையில் அனுமதித்தார் நாசர், மேல்சிகிச்சைக்காக சியோன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவரது உடல்நிலை சீரானது. உயிருக்கு ஆபத்தில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இரண்டு முறை சிறுமியின் தற்கொலை முயற்சியை தடுத்து ஆபத்பாந்தவனாக உதவிய நாசரை சிறுமியின் தந்தை நன்றி தெரிவித்தார்.

இது தொடர்பாக நாசரிடம் பேசிய போது, இதுவரை வஷி பாலத்தில் தற்கொலைக்கு முயன்ற 3 பேரை தான் காப்பாற்றியுள்ளதாகவும், அப்பாலத்தில் தெரு விளக்குகள் எரியாததால் இருட்டான சூழலை பயன்படுத்திக்கொண்டு அது ஒரு தற்கொலை களமாக உருவெடுத்துள்ளதாக அவர் கவலை தெரிவித்தார். உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு பாலத்தில் விளக்குகள் பொருத்துமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Image

திங்கள், 24 செப்டம்பர், 2018

நந்தினியின் தந்தை மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிய பாஜகவினர்! September 23, 2018

Image


மானாமதுரையில் சமூக ஆர்வலர் நந்தினியின் தந்தை மீது பாஜகவினர் தாக்குதல் நடத்திவிட்டு தப்பினர். 

மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகியோர், தமிழகம் முழுவதும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மதுரையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி இருசக்கரவாகனத்தில் சென்ற அவர்களை மானாமதுரை அருகே பாஜகவினர் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது நந்தினியின் தந்தை ஆனந்தனை பாஜகவை சேர்ந்த 5 பேர் அடித்து உதைத்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் நந்தினி, ஆனந்தனை போலீஸார் கைது செய்தனர்.

திருச்சி சோமரசம்பேட்டையில் தந்தை பெரியாரின் சிலையை சேதப்படுத்திய மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர். திருச்சி சோமரசம்பேட்டை பகுதியில் பெரியார் சிலையை 1991-ஆம் ஆண்டு திராவிடர் கழகத் தலைவர் வீரமணி திறந்துவைத்தார். பெரியார் கைத்தடியுடன் நிற்கும் முழு உருவச் சிலையாக இது இருந்துவந்தது. இந்த பெரியார் சிலையில் இருந்த கைத்தடி உடைந்து கிடந்ததைக் கண்ட திராவிடர் கழகத்தினர் போலீசாரிடம் புகார் அளித்தனர். சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டுமெனக் கோரியுள்ள அவர்கள், கண்டன ஆர்ப்பாட்டத்தையும் அறிவித்துள்ளனர். புறக்காவல் நிலையம் முன்பே நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக, சென்னை சிம்சன் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது காலணி வீசி அவமதிப்பு செய்ததை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, பெரியாரின் சிலையை அவமதிப்பு செயலை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். இதனால் சென்னை அண்ணாசாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பெரியார் சிலை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைதொடர்ந்து, தந்தை பெரியார் சிலை மீது செருப்பு வீச்சு என்பது அரக்கத்தனமான செயல் எனவும், இதனை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டிருந்தார். மேலும், இதுதொடர்பாக யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஜாதி, மதத்தின் பெயரால் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார்.

Image

அப்பாவிகளை கைது செய்யும் தமிழக அரசு, லஞ்சம் வாங்கிய அமைச்சர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை கைது செய்யாதது ஏன் என திமுக செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுக எம்.பி.க்கள், மத்திய அரசின் ஏவலர்களாக செயல்பட்டு வருவதாக விமர்சித்துள்ளார்.

தமிழகத்திற்கு நல்ல அரசு அமைய வேண்டும் அதற்கு ஆட்சி மாற்றம் ஒரு நல்ல தீர்வாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

திருச்சியில் தந்தை பெரியார் சிலையின் கைத்தடி உடைப்பு! September 24, 2018

Image


திருச்சி சோமரசம்பேட்டையில் தந்தை பெரியாரின் சிலையை சேதப்படுத்திய மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர். 

திருச்சி சோமரசம்பேட்டை பகுதியில் பெரியார் சிலையை 1991-ஆம் ஆண்டு திராவிடர் கழகத் தலைவர் வீரமணி திறந்துவைத்தார். பெரியார் கைத்தடியுடன் நிற்கும் முழு உருவச் சிலையாக இது இருந்துவந்தது.

இந்த பெரியார் சிலையில் இருந்த கைத்தடி உடைந்து கிடந்ததைக் கண்ட திராவிடர் கழகத்தினர் போலீசாரிடம் புகார் அளித்தனர். சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டுமெனக் கோரியுள்ள அவர்கள், கண்டன ஆர்ப்பாட்டத்தையும் அறிவித்துள்ளனர். புறக்காவல் நிலையம் முன்பே நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக, சென்னை சிம்சன் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது காலணி வீசி அவமதிப்பு செய்ததை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, பெரியாரின் சிலையை அவமதிப்பு செயலை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். இதனால் சென்னை அண்ணாசாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பெரியார் சிலை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைதொடர்ந்து, தந்தை பெரியார் சிலை மீது செருப்பு வீச்சு என்பது அரக்கத்தனமான செயல் எனவும், இதனை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டிருந்தார். மேலும், இதுதொடர்பாக யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஜாதி, மதத்தின் பெயரால் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார்.

ஹிமாச்சலில் கனமழையால் வெள்ளப்பெருக்கு; அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை நீடிக்கும்; நிலச்சரிவு அபாய எச்சரிக்கை! September 24, 2018

Image

கனமழை காரணமாக ஹிமாச்சல் பிரதேசத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

இரண்டு நாட்களாக அங்கு பெய்து வரும் கனமழைக்கு அங்குள்ள 12 மாவட்டங்களில் 10 மாவட்டங்கள் கடும் சேதம் அடைந்துள்ளதாக மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சுற்றுலா தலங்களான குலு, மணாலி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். 

குலு பகுதியில் ஆற்றங்கரையோரம் உள்ள வீடுகள் மற்றும் உணவகங்களுக்குள் வெள்ளநீர் புகுந்ததால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதேபோல் வெள்ளத்தில் சிக்கித் தவித்த மக்களையும், ஹெலிகாப்டர் மூலம் மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

இதன்காரணமாக வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மேலும், வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மலையேற்ற குழுவினர் பயிற்சி மேற்கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை நீடிக்கும் எனவும், பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

2009ல் இருந்த புலிகள் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்திய நேபாளம்! September 24, 2018

Image

உலகிலேயே புலிகள் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்திய முதல் நாடு என்ற அந்தஸ்தை நேபாளம் விரைவில் அடைய உள்ளது.

கடந்த 2010 நவம்பரில் ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் நகரில் புலிகள் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாக, புலிகள் வாழ்விட நாடுகளான ரஷ்யா, நேபாளம், இந்தியா, வங்காளதேசம், சீனா, மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட 13 நாடுகள் கலந்துகொண்ட சர்வதேச புலி பாதுகாப்பு கூட்டம்  நடைபெற்றது.

அப்போதைய காலகட்டத்தில் உலகில் மொத்தமே 3,200 புலிகளே வனப்பகுதிகளில் வசித்துவந்ததால், அந்த எண்ணிக்கையை அடுத்த புலிகள் ஆண்டான (Tiger Lunar Year) 2022க்குள் இருமடங்காக உயர்த்துவதே இக்கூட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது.

இதன் பின்னர் புலிகள் எண்ணிக்கையை அதிகரிக்க பல முயற்சிகளை மேற்கொண்டதன் பயனாக 2009ஆம் ஆண்டு 121 என்ற எண்ணிக்கையில் இருந்த புலிகளின் எண்ணிக்கை தற்போது 235ஆக அதிகரித்துள்ளது. தேசிய பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்படும் இன்றைய நாளில் இந்த அறிவிப்பை நேபாளம் வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவைக் காட்டிலும் முன்னதாகவே புலிகள் எண்ணிக்கையை கிட்டத்தட்ட நேபாளம் இருமடங்காக உயர்த்தியுள்ளது. இந்நிலையில் புலிகள் பல்வேறு காரணங்களால் அழிந்தும், அழிக்கப்பட்டும் வரும் சூழலில் உலகிலேயே புலிகள் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்திய முதல் நாடு என்ற அந்தஸ்தை நேபாளம் பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.