திங்கள், 30 செப்டம்பர், 2019

இந்தியாவில் ரூ.7 லட்சம் கோடியை முதலீடு செய்கிறது சவுதி அரேபியா!

Image
ரூ.7 லட்சம் கோடியை இந்தியாவில் முதலீடு செய்யவுள்ளதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கணக்கில் கொண்டு உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளரான சவுதி அரேபியா 100 பில்லியன் டாலரை (இந்திய மதிப்பில் ரூ.7 லட்சம் கோடி) பெட்ரோகெமிக்கல்ஸ், ஆற்றல், சுத்திகரிப்பு, உள்கட்டமைப்பு, சுரங்கம், விவசாயம் போன்ற துறைகளில் இந்தியாவில் முதலீடு செய்ய இருப்பதாக இந்தியாவிற்கான சவுதி அரேபிய தூதர் சவுத் பின் முகமது அல்சடி தெரிவித்துள்ளார். 
சவுதியில் அராம்கோ, ரிலையன்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து 44 மில்லியன் டாலர்களை இந்தியாவில் முதலீடு செய்ய இருப்பது இருதரப்பு உறவின் முக்கிய மைல்கல்லாக உருவெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் 17% கச்சா எண்ணெய் மற்றும் 32% எல்.பி.ஜி தேவைகளை சவுதி அரேபியாவே பூர்த்தி செய்கிறது. மேலும் 40க்கும் மேற்பட்ட வாய்ப்புள்ள துறைகளை கண்டறியப்பட்டு அதில் சவுதி அரேபியா முதலீடு செய்ய இருப்பதாகவும், வருங்காலங்களில் இந்த முதலீட்டுன் அளவு பெருமளவில் அதிகரிக்கப்படும் என்றும் முகமது அல்சடி கூறினார்.
வர்த்தக தடை காரணமாக ஈரானிடமிருந்து இந்தியா பெறும் கச்சா எண்ணெயின் அளவு குறைந்திருப்பதை சவுதி அரேபியா ஈடுகட்டுமா என்ற கேள்விக்கு நிச்சயமாக இது போன்ற பற்றாக்குறைகளை சமாளிக்க சவுதி அரேபியா கைகொடுக்கும் என்று உறுதிபட கூறினார்.
credit ns7.tv

றுக்கமான உடைகள் அணிபவர்களுக்கும், பொது இடங்களில் முத்தம் கொடுப்பவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்ற உத்தரவை சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.

credit ns7.tv
Image
சுற்றுலா விசாக்களை வழங்கப்போவதாக அறிவித்த மறுநாளே இறுக்கமான உடைகள் அணிபவர்களுக்கும், பொது இடங்களில் முத்தம் கொடுப்பவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்ற உத்தரவை சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.
ஆண்களும், பெண்களும் நவநாகரிக ஆடைகளை அணிந்துகொள்ள முழு சுதந்திரம் அளிக்கப்படுகிறது என்றாலும் அவர்களின் உடை கண்ணியம்மிக்கதாக இருக்க வேண்டும், பொது இடங்களில் அன்பை பரிமாறுவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது, இது போன்ற 19 குற்றச் செயல்கள் கண்டறியப்பட்டுள்ளது, இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கபப்ட்டுள்ளது. இருப்பினும் அபராதத் தொகை எவ்வளவு என்று குறிப்பிடப்படவில்லை.
இது போன்ற விதிகளை சுற்றுலா பயணிகளுக்கு நம் நாட்டை பற்றிய சட்டதிட்டங்களை புரிய வைக்கும், அவர்களும் பொது நடத்தைக்கு இணங்கி செயல்படுவார்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட 49 நாடுகளை சேர்ந்தவர்கள் இனி ஆன்லைன் வழியாக சவுதி அரேபிய சுற்றுலா விசாக்களை விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என்ற அறிவிப்பை சவுதி அரேபிய அரசு கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டதை தொடர்ந்து பொது நடத்தைக்கு அபராதம் விதிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கச்சா எண்ணெயை மட்டுமே நம்பியிருக்கும் சவுதி அரேபியாவின் பொருளாதாரத்தை சுற்றுலாத்துறை வசம் திருப்பும் முயற்சியாக இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது.
2030ஆம் ஆண்டிற்குள் சவுதி அரேபியாவை மாற்று பொருளாதாரத்திற்கு நகர்த்திச் செல்லும் வகையில் பல புதிய அறிவிப்புகளை அந்நாட்டு பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் வெளியிட்டு வருகிறார் என்பது நினைவுகூறத்தக்கது.

பதவி விலகிய நீதிபதி தஹில் ரமானி மீது முறைகேடு புகார்...!


Image
பதவி விலகிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி மீது முறைகேடு புகார் எழுந்துள்ளது. இதனை அடுத்து, மத்திய உளவுத்துறையின் அறிக்கை மீது, விசாரணை நடத்த சிபிஐக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானி, மேகாலய உயர்நீதிமன்றத்திற்கு அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால், பணியிட மாற்றத்தை ஏற்க மறுத்த அவர், தலைமை நீதிபதி பதவியை ராஜினாமா செய்தார். 
இந்நிலையில், சென்னை புறநகர் பகுதிகளில் சுமார் 3 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளை தஹில் ரமானி வாங்கியது தொடர்பான வங்கிப் பணப்பரிமாற்றம் மற்றும் முக்கிய புள்ளிகள் சம்பந்தப்பட்ட சிலைக் கடத்தல் வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற அமர்வை கலைத்த விவகாரங்கள், அவருக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளன. 
இதுகுறித்து மத்திய உளவுத்துறை அறிக்கை அளித்துள்ள நிலையில், அறிக்கை மீது சிபிஐ விசாரணை நடத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவுறுத்தியுள்ளார். ஏற்கனவே தஹில் ரமானி ராஜினாமா விவகாரம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய வேளையில், தற்போது எழுந்துள்ள புதிய சர்ச்சைகளும் நீதித்துறை வட்டாரங்களில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.
credit ns7.tv

பெற்றோரை கைவிட்டால் இனி 6 மாதம் சிறை?

வயதான பெற்றோரை கைவிட்டால், பிள்ளைகளுக்கு ஆறு மாதம் சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டுவரவுள்ளது.
பெற்றோர்களை முதுமை காலத்தில் பாதுகாக்க வேண்டிய பிள்ளைகள் அவர்களை தவிக்க விடுவது அதிகரித்து வருகிறது. வயதான காலத்தில் கவனிக்க யாருமற்ற சூழலில் பெற்றோருக்கு இது மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.
இதை கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ள பிரதமர் அலுவலகம், தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு சமூகம் மற்றும் அதிகார வழங்கல் துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு, நலச்சட்டம் 2007-ன்படி, வயதான பெற்றோரை உடன் வைத்து பராமரிக்காமல், பிள்ளைகள் கைவிட்டால் 3 மாதம் விதிக்கப்படும் சிறைத்தண்டனை 6 மாதமாக அதிகரிக்க சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட உள்ளது. 

credit ns7.tv

கீழடியை பார்வையிட குவியும் மக்கள்!

கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  பார்வையிட்டனர். 
சிவகங்கை மாவட்டம் கீழடியில், 5வது கட்டமாக அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. அகழ்வாராய்ச்சி பணிகள் 2 வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், தொல்லியத்துறை கண்காணிப்பாளர்கள் 3 பேரின் கீழ், அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அகழாய்வு பணிகளை காண, விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஏராளமானோர் கீழடியில் குவிந்தனர். அகழாய்வு பணிகள் குறித்து மக்களுக்கு தொல்லியல்துறையினர் விரிவாக எடுத்துரைத்தனர். 
இந்நிலையில் கீழடியில் நடைபெற்று வரும் ஆராய்ச்சிக்கு மத்திய, மாநில அரசுகள் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை பெசன்ட் நகரில் பருவநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  கீழடி அகழாய்வு தொடர்பாக, அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்தார். 

credit ns7.tv

ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!

ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வரி ஏய்ப்பு மற்றும் பண மோசடி உள்ளிட்டவற்றை தடுக்கும் முயற்சியாக அனைவரும், தங்களது ஆதார் கணக்குடன், பான் எண்ணை இணைக்கவேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி பலரும் தங்களது பான் எண்களை ஆதாருடன் இணைத்து வருகின்றனர். அவ்வாறாக, இணைக்காதவர்கள் நடப்பு மாதமான செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் இணைத்துவிடவேண்டும் எனவும், அதுவே கடைசி தேதி எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அந்த காலக் கெடுவை தளர்த்தியுள்ள மத்திய நிதியமைச்சகம், ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
credit ns7.tv

சனி, 28 செப்டம்பர், 2019

இந்தியாவில் சுமார் 22 லட்சம் பேருக்கு காசநோய் பாதிப்பு...! பலனளிக்குமா புதிய திட்டம்?


Image
2018ம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் சுமார் 21.5 லட்சம் பேருக்கு காசநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. காசநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2017 ம் ஆண்டைவிட 2018ம் ஆண்டில் 17 சதவீதம் உயர்ந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
உலகிலேயே அதிக காசநோய் பாதிப்புகள் அதிகம் இருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா பிரதான இடத்தில் இருக்கிறது. உலகளவில் காசநோயால் பாதிக்கப்படும் 4பேரில் ஒருவர் இந்தியர் என்றும் உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. உலகளவில் இந்த புள்ளிவிபரங்கள் ஒருபுறம் இருக்க இந்தியாவில் ஏற்படும் காசநோய் பாதிப்புகள் பற்றிய இந்திய காசநோய் அறிக்கை தற்போது வெளியாகியிருக்கிறது. அந்த அறிக்கையின்படி, 2018 ஆம் ஆண்டில்மட்டும் இந்தியா முழுக்க 21.5 லட்சம்பேருக்கு காசநோய் பாதிப்பு இருப்பது தெரிவந்துள்ளது. 2017ம் ஆண்டில் 18 லட்சமாக இருந்த காசநோயாளிகளின் எண்ணிக்கை 2018ம் ஆண்டில் 21.5 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. அதாவது இந்தியாவில் காசநோய் பாதிப்புகள் சுமார் 17 சதவீதம் அதிகரித்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

2030 ஆம் ஆண்டிற்குள் உலகளவில் காசநோயை ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாகவே அதாவது 2025ம் ஆண்டிற்குள்ளாகவே இந்தியாவில் காசநோய் பாதிப்புகளை ஒழிக்கப் பாடுபடுவோம் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார் பிரதமர் மோடி. இதற்காகவே புதிய செயல் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். காசநோய் ஒழிப்புக்கான தேசிய வழிமுறை திட்டத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

காசநோயை கண்டறிவதிலேயே பல சிக்கல்களை இந்தியா கொண்டிருந்தது. தற்போது அந்த சிக்கல்கள் களையப்பட்டு காசநோய் அறிகுறிகள் கண்டறியப்பட்டு பதிவுசெய்ய மத்திய அரசு எடுத்துவரும் தொடர் முயற்சிகள் மூலமாக காசநோயை கண்டறிவதில் அரசின் இலக்கு எட்டப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்திருக்கிறார். தேசிய காசநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ், 14.4 கோடி பேர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதன் விளைவாக கூடுதலாக 49,733 காசநோய் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்திருக்கிறார். நோய் கண்டறியப்பட்டிருப்பவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க வெகுஎளிதில் அவர்களை குணப்படுத்தும் முயற்சியில் இனி அரசு ஈடுபடும் என்றும் கூறியிருக்கிறார் அமைச்சர் ஹர்ஷவர்தன்.

அதற்காகவே கடந்த ஆண்டில் காசநோயாளிகளுக்காகவே, சிகிச்சை மையங்கள் இந்தியா முழுவதும் நிறுவப்பட்டு வருகிறது.மேலும், காசநோய் எதிர்ப்பு மருந்துகளைக் கண்டறியும் ஆய்வுகளிம் நடந்துகொண்டிருக்கின்றன. பிரதமரின் காசநோய் ஒழிப்புத் திட்டத்திற்காகவே, TB Harega Desh Jeetega" என்ற பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது

உலகின் மிகக்கொடும் உயிக்கொல்லி நோயான காசநோயைக் கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவுகள், தற்போது பலனளிக்கத் தொடங்கியிருந்தாலும், 2025க்குள் காசநோயைக் முழுவதுமாகக் கட்டுப்படுத்த அரசு இன்னும் எவ்வளவு தீவிரமாக செயல்படப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்...
credit ns7.tv

TNPSC மொழிப்பாட சர்ச்சை:

டி.என்.பி.எஸ்.சி. குரூப் -2 முதல் நிலைத்தேர்வில் மொழித்தாள் நீக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சைக்கு, டி.என்.பி.எஸ்.சி செயலர் நந்தகுமார் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, 
➤ புதிய பாடத்திட்டத்தில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், குரூப் II  மற்றும் குரூப் IIA தேர்வுகள் ஒரே தேர்வாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
➤ பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் ஏதேனும் ஒன்றில் தேர்வு எழுதலாம் என்றிருந்த நிலையை மாற்றி, முதனிலை (Prelims) மற்றும் முதன்மை (Mains) எழுத்துத் தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளது.
➤ தனித் தனி தேர்வு நடத்துவதால் வரிப் பணம் வீணாவதுடன், விண்ணப்பதாரர்களும் இரண்டு முறை தேர்வு எழுத வேண்டிய நிலையை மாற்றப்பட்டுள்ளது.
➤ தமிழ் அல்லது ஆங்கிலம் நீக்கப்பட்டு, தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் முதனிலை (Prelims) தேர்வின் பாடத்திட்டத்தில் இரண்டு அலகுகள் (Units) சேர்க்கப்பட்டுள்ளன
➤ முதனிலைத் (Prelims) தேர்வில் நீக்கப்பட்ட பொதுத்தமிழ் மற்றும் பொது ஆங்கில பகுதிகள் முதன்மை (Mains)எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.  
➤ முதனிலைத் (Prelims) தேர்வு பாடத்திட்டத்தில் தமிழ் சமூகத்தின் வரலாறு, சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு, அரசியல் இயக்கங்களின் தோற்றம் குறித்த பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
➤ திருக்குறளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதுடன், சமூக நீதி, சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் உள்ளிட்ட தலைப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

credit ns7.tv

கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஒத்திவைப்பு!


கர்நாடகாவில் ஒத்திவைக்கப்பட்ட 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 5-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கர்நாடகாவில் 17 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் விசாரணை முடிவடையாததால் தேர்தலை ஒத்திவைக்க முடியுமா? என தேர்தல் ஆணையத்திடம் உச்சநீதிமன்றம் கேட்டிருந்தது. 
இதனையடுத்து, கர்நாடகா இடைத்தேர்தலை ஒத்திவைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. அதன்படி கர்நாடகாவில் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெற இருந்த 15 தொகுதி இடைத்தேர்தல் டிசம்பர் 5-ம் தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது. 
வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 9-ம் தேதி நடைபெறும் என்றும இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

credit ns7.tv

அணு ஆயுத போர் வெடித்தால், அதற்கு ஐ.நா. சபையே பொறுப்பு

இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே அணு ஆயுத போர் வெடித்தால், அதற்கு ஐ.நா. சபையே பொறுப்பு என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா.சபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உரையாற்றினார்.  இந்தியா மீதும், பிரதமர் மோடி மீதும் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்த அவர், பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற பின்னர் இந்தியாவுடன் நல்லுறவை பேண முயற்சிகள் மேற்கொண்டதாகக் கூறினார். ஆனால், இந்தியா அதனை புறந்தள்ளிவிட்டதாக விமர்சித்தார். 
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர், அங்கு 80 லட்சம் மக்களை இந்தியா சிறை வைத்துள்ளதாக குற்றம்சாட்டிய அவர், காஷ்மீரில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை உலகம் உற்று நோக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 
காஷ்மீரில் அரசியல் தலைவர்கள் அனைவரும் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய பாகிஸ்தான் பிரதமர் , தான் அங்கு இருந்திருந்தால், கண்டிப்பாக துப்பாக்கி ஏந்தியிருப்பேன் என்றும் ஆவேசத்துடன் தெரிவித்தார்.
ஐந்தாயிரம் தீவிரவாதிகளை பாகிஸ்தான் அனுப்பியதாக இந்தியா கூறுவதாக குறிப்பிட்ட இம்ரான்கான், இஸ்லாமிய தீவிரவாதம் என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தி இந்தியா தங்கள் மீது தேவையின்றி பழிபோடுவதாக குற்றம்சாட்டினார். காஷ்மீரில் இருக்கும் தடைகள் விலக்கப்பட்ட பின்னர் அங்கு ரத்த ஆறுதான் ஓடும் என்றும் அவர் கூறினார். 
credit ns7.tv

வெள்ளி, 27 செப்டம்பர், 2019

புனேவில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு 15க்கும் மேற்பட்டோர் பலி..!

Image
புனேவில் பெய்த கனமழையால் 15க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 16 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. தாழ்வான இடங்களை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதால், ஏராளமானோர் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில், மழை வெள்ளத்தில் சிக்கி கார் உள்ளிட்ட வாகனங்கள் சேதம் அடைந்தன.
இதற்கிடையே, அர்னேஷ்வர் பகுதியில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். கனமழைக்கு இதுவரை 15க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மழை ஓய்ந்தும் வெள்ளநீர் வடியாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த முதல்வர் தேவேந்திர பட்னவிஸ்,  மீட்பு பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.  

credit ns7.tv

இந்தியாவின் இளம் தொழிலதிபராக உருவெடுத்த “OYO” ரிதேஷ் அகர்வால்!

Image
இந்தியாவின் மிக இளம் தொழிலதிபராக ஓயோ ரூம்ஸ்-ன் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ரிதேஷ் அகர்வால் தேர்வாகியுள்ளார்.
IIFL India Hurun India Rich List of 2019 பட்டியல் நேற்று வெளியானது. அந்த பட்டியலில் ஓயோ ரூம்ஸ்-ன் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான 25 வயதே ஆன ரிதேஷ் அகர்வால், 7500 கோடி சொத்துமதிப்புடன் இந்தியாவின் இளம் தொழிலதிபர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இவரது சொத்துமதிப்பு இந்த ஆண்டு 188% அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் அதிக வளர்ச்சியை சந்தித்த 4வது தொழிலதிபராக திகழ்கிறார் ரிதேஷ் அகர்வால்.
40 வயதிற்குட்பட்ட பணக்கார தொழிலதிபர்களில் media.net நிறுவனரான, 37 வயதான திவ்யங்க் துராகியா 13,000 கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தை பிடித்துள்ளார். இரண்டாவது இளம் பணக்கார தொழிலதிபராக ஓலா கேப்ஸ் நிறுவனர்களில் ஒருவரான 33 வயதான அன்கிட் பாதி 1,400 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் தேர்வாகியுள்ளார். இவர் மட்டுமல்லாமல் ஸ்விக்கியின் மற்றொரு நிறுவனரான 33 வயதான ஸ்ரீஹர்ஷா மஜேட்டி 1,400 கோடி ரூபாய் சொத்துமதிப்புடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் இந்தியாவின் பணக்கார தொழிலதிபர்கள் பட்டியலில் தொடர்ந்து 8வது ஆண்டாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஸ் அம்பானி 3,80,700 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முதலிடத்தை பிடித்துள்ளார். 1,86,500 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் எஸ்.பி.ஹிந்துஜா & Family இரண்டாவது
இடத்தையும், விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி 1,17,100 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தையும், 1,07,300 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் எல்.என் மிட்டல் & Family நான்காவது இடத்தையும், கவுதம் அதானி & family 94,500 கோடி ரூபாய் சொத்துகளுடன் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
1000 கோடிக்கும் மேல் சொத்து வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை கடந்த 2016ம் ஆண்டு 617ஆக இருந்த நிலையில் இந்த ஆண்டு அது 953 ஆக அதிகரித்திருக்கிறது. இந்த எண்ணிக்கை கடந்த 2018ம் ஆண்டு 831 ஆக இருந்தது. ஆனால், அமெரிக்க டாலர்கள் மதிப்பில் பில்லியனர்களாக இருந்தவர்களின் எண்ணிக்கை 141ல் இருந்து 138 ஆக குறைந்துள்ளது.
முதல் 25 இடங்களை பிடித்துள்ள தொழிலதிபர்களின் சொத்துமதிப்பு இந்தியாவின் ஜிடிபியில் பத்து சதவீதமாகும். 953 பேரின் சொத்துமதிப்பு இந்தியாவின் ஜிடிபி-யில் 27 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்த தொழிலதிபர்களின் சொத்துக்களின் மதிப்பு இந்த ஆண்டு 2 சதவீதம் வளர்ந்திருக்கிறது. ஆனால் சராசரியை பொறுத்தவரை, கடந்த ஆண்டைக்காட்டிலும் 11% குறைந்திருக்கிறது. 
இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள தொழிலதிபர்களில் 26 சதவீதம் பேர் அதாவது 246 பேர் மும்பையை தலைமையகமாக கொண்டவர்கள். மேலும், டெல்லியைச் சேர்ந்த 175 தொழிலதிபர்களும், பெங்களூருவைச் சேர்ந்த 77 பேரும் இடம்பிடித்துள்ளனர். வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபர்கள் 82 பேர் அந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். அதில் 76 பேர் சுயமாக முன்னேறியவர்கள் ஆவர். வெளிநாடுவாழ் இந்திய தொழிலதிபர்களில் 31 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அமெரிக்காவிற்கு அடுத்து, அரபு நாடுகளைச்சேர்ந்தவர்களும், இங்கிலாந்தைச் சேர்ந்தவர்களும் இடம்பெற்றிருக்கின்றனர்.

பெண் தொழிலதிபர்களை பொறுத்தவரை இந்த பட்டியலில் 152 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்களின் சராசரி வயது 56. இவர்களில் 31400 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இளம் தொழிலதிபராக, ஹெச்சிஎல் நிறுவனத்தின், 37வயதான ரோஷினி நாடார் இடம்பெற்றுள்ளார். இவரையடுத்து, கோத்ரேஜ் குழுமத்தின் 68 வயதான ஸ்மிதா வி க்ரிஷ்ணா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். பயோகான் நிறுவனத்தின் கிரன் மசும்தார் ஷா 18500 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் சுயமாக முன்னேறிய தொழிலதிபராக உருவெடுத்துள்ளார்.
இவர்கள் மட்டுமல்லாமல்,  ஸோமேட்டோ-வின் தீபிந்தர் கோயல், ஃப்ளிப்கார்ட் சச்சின் பன்சால், அமோத் மாள்வியா, வைபவ் குப்தா மற்றும் சுஜூத் குப்தா ஆகியோரும், வியு டெக்னாலஜிஸ்-ன் தேவிதா சரஃப் மற்றும் ரிவிகோ நிறுவனத்தின் தீபக் கார்க் ஆகியோர் அந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். 40 வயதுக்குட்பட்ட தொழிலதிபர்களின் சொத்து மதிப்பு சராசரியாக 4,200 கோடி ரூபாயாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

credit ns7.tv

இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் இவர்கள் தான்!

IIFL India Hurun India Rich List of 2019 பட்டியல் நேற்று வெளியானது. அந்த பட்டியலில் 3.8 லட்சம் கோடிகளுடன் தொடர்ந்து முதலிடத்தை பிடித்திருக்கிறார் ரிலையன்ஸ் குழுமத்தின் முகேஷ் அம்பானி. இந்தியாவின் முதல் 10 பெரும் பணக்காரர்கள் யார், அவர்கள் நிறுவனம் மற்றும் சொத்து மதிப்பு எவ்வளவு என்று தற்போது பார்க்கலாம்.
1.முகேஷ் அம்பானி
mukesh-ambani
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக இருந்துவரும் முகேஷ் அம்பானி 3.8 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இந்த இடத்தை தொடந்து 8 ஆண்டுகளாக தக்கவைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

2.எஸ்.பி.இந்துஜா & Family
sp-hinduja-family
இந்துஜா குழுமத்தின் சேர்மனாக இருந்து வரும் எஸ்.பி.சிந்துஜா 1.86 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இந்த குழுமம் லண்டனை தலைமியிடமாகக் கொண்டு செயல்பட்டுவருகிறது என்பது குறிப்பிடதக்கது.

3.அசிம் ப்ரேம்ஜி
azim-premji
மென்பொருள் நிறுவனம், மின்சாதன பொருள்கள் விற்பனை உள்ளிட்டவற்றில் பிரபலமான விப்ரோ நிறுவனத்தின் சேர்மனாக இருக்கும் அசிம் பிரேம்ஜி 1.17 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 4வது இடத்தை பிடித்துள்ளார்.
4.லட்சுமி மிட்டல் & Family
lakshmi-mittal
 இரும்பு உள்ளிட்ட உலோக தொழிற்சாலைகளை நடத்திவரும் ஏர்செலோர் மிட்டல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் சேர்மனாக இருந்து வரும் லட்சுமி மிட்டல், 1.07 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் பட்டியலில் 4ம் இடத்தை பிடித்துள்ளார்.
5.கவுதம் அதானி
gautam-adani
அதானி குழுமத்தின் தலைவரும், குஜராத்தை சேர்ந்தவருமான கவுதம் அதானி 94,500 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இந்திய பணக்காரர்களில் 5வது இடத்தை பிடித்துள்ளார்.
6.உதய் கோடக்
udhay- kotak
கோடக் மஹிந்திரா வங்கியின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான உதய் கோடக்  94,100 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 6வது இடத்தை பிடித்துள்ளார்.
7.சைரஸ் பூனவல்லா
cyrus-poonawalla
74 வயதான சைரஸ் பூனவல்லா, பூனவல்லா குழுமத்தின் சேர்மனாக இருக்கிறார்.  88,800 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 7வது இடத்தை பிடித்துள்ள இவர், இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதையும் வாங்கியிருக்கிறார்.
8.சைரஸ் மிஸ்ட்ரி
Cyrus Mistry
அயர்லாந்து வாழ் இந்தியரான சைரஸ் மிஸ்ட்ரி டாடா குழுமத்தின் சேர்மனாக இருந்தவர். தற்போது ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்தின் மேலான் இயக்குநராக இருந்துவரும் இவர், 76,800 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இந்திய பணக்காரர்கள் வரிசையில் 8 வது இடத்தை பிடித்திருக்கிறார். சைரஸ் மிஸ்ட்ரி இந்தியாவில் மட்டுமல்லாது பிரிட்டனிலும் ஒரு முக்கிய தொழிலதிபராக உருவெடுத்திருக்கிறார்.
9.ஷபூர் பல்லோன்ஜி மிஸ்ட்ரி
Shapoor Pallonji Mistry
ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்தின் சேர்மனான ஷபூர்ஜி பல்லோன்ஜி மிஸ்ட்ரி, 76,800 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 9வது இடத்தை பிடித்திருக்கிறார். பார்ஸி இனத்தவரான ஷபூர்ஜியின் குடும்பம் பெர்சியாவிலிருந்து குஜராத்திற்கு இடம் பெயர்ந்தது. ஐரிஷ் பெண்மணி ஒருவரை மணந்து கடந்த 2003ம் ஆண்டு முதல் ஐரிஷ் குடிமகனாக இருந்து வருகிறார் ஷபூர்ஜி.
10.திலிப் சங்வி
Dilip Shanghvi சன் மருந்துகள்(Sun Pharmaceuticals)ன் நிறுவனரும், மேலாண் இயக்குநருமான திலிப் சங்வி 71,500 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 10வது இடத்தை பிடித்திருக்கிறார்.
credit ns7.tv

காஷ்மீர் விவகாரம்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மீண்டும் திட்டவட்டம்..!

Image
காஷ்மீர் விவகாரத்தில் தலையிட எந்த நாட்டுக்கும் உரிமை இல்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற சார்க் நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்தில், அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய அவர், காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், அதுதொடர்பாக இந்திய அரசு உரிய முடிவுகளை எடுத்து வருவதாகவும் கூறினார். 
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் உட்பட வேறு எந்த நாடும் தலையிட உரிமை இல்லை என்றும் அவர் தெரிவித்தார். இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தை தூண்டிவிடும் நாட்டுடன், எப்படி பேச்சுவார்த்தை நடத்த முடியும் எனவும் ஜெய்சங்கர் அப்போது கேள்வி எழுப்பினார்.
credit ns7.tv 

வியாழன், 26 செப்டம்பர், 2019

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழக மாணவி...!

Image
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பார்வை குறைபாடு உடைய மாணவி லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்துள்ள செட்டிமான்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ஏழைக் கூலித் தொழிலாளியின் மகள் சுபாஷினி. பார்வை குறைபாடு உடைய இவர் சேலம் அயோத்யா பட்டணத்திலுள்ள பார்வை குறைபாடு உள்ளோருக்கான விடுதியில் தங்கியபடி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். 
வாழ்வில் சாதனை நிகழ்த்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்ட சுபாஷினி, பாரா ஜூடோ போட்டிகளில் மாநில அளவில் சாதனை படைத்துள்ளார். இந்த நிலையில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று விளையாடிய சுபாஷினி தங்கப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். 
இதுஒருபுறமிருக்க வறுமையின் காரணமாக மாணவி சுபாஷினி காமன் வெல்த் போட்டியில் பங்கேற்பதில் எழுந்த சிக்கல் பற்றி  நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக தமிழக அரசு உதவியுடன் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்ற மாணவி சுபாஷினி தற்போது தங்கப் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

credit ns7.tv

Authors Image அந்தமான் - நிகோபர் தீவுகள் இன்னும் சில ஆண்டுகளில் வாழத்தகுதியில்லாத இடமாக மாறிவிடும் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது ஐநா. புவி வெப்பமயமாவதால் உருவாகும் பருவநிலை மாற்றம் உலகை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறது என்றே சொல்லலாம். இதை தடுக்க உலக நாடுகளின் தலைவர்கள் பல முயற்சிகளை எடுத்தாலும், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தீமையின் கையே ஓங்கியிருக்கிறது. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமான பருவநிலை மாற்றம் தொடர்பான ஆய்வுக்குழு, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் எழில் கொஞ்சும் தீவு நகரமான அந்தமான் - நிகோபர் இன்னும் சில ஆண்டுகளில் மனித இனம் வாழத்தகுதியில்லாத இடமாக மாறிவிடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. புவி வெப்பமயமாதல் தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் உலகின் வெப்பநிலை மேலும் 2 டிகிரி அதிகரிக்கும் என்றும், பனிப்பாறைகள் உருகி கடல்நீர் மட்டம் மேலும் உயரும் என எச்சரித்துள்ளது ஐநா. 2100ம் ஆண்டு 30 முதல் 60 சென்டிமீட்டர் வரை கடல்நீர் மட்டம் உயரலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. கடலின் வெப்பநிலை அதிகரிக்க தொடங்கினால் புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளாகவே உலகளவில் 90 சதவீதத்துக்கு அதிகமான வெப்பநிலையை கடல்கள் உள்வாங்கி வந்துள்ளன என்றும், 1993ம் ஆண்டு முதல் கடல்களின் வெப்பநிலை இரு மடங்கு உயர்ந்துள்ளது எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. பருவநிலை மாற்றத்தால் பனிப்பாறைகள் உருகுவதுடன், வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்களை சந்திக்க உலகம் தயாராக இருக்க வேண்டும் என்பது ஆய்வாளர்களின் பொதுவான கருத்து. இதே நிலை நீடித்தால் அந்தமான் - நிகோபர், மாலத்தீவுகள் உட்பட உலகின் சிறிய தீவுக்கூட்டங்களில் வசிக்கும், 6 கோடி மக்களும் வேறிடத்துக்கு புலம் பெயர வேண்டியிருக்கும் என்பதே ஐநாவின் எச்சரிக்கை மணி.

credit ns7.tv
Image
போக்ஸோ நீதிமன்ற நீதிபதி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
செப்டம்பர் 2016ம் ஆண்டு 12ம் வகுப்பு படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவியை பள்ளியில் இருந்து கடத்திச்சென்று 4 நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்த காரணத்திற்காக பஞ்சாப் சிங் மற்றும் யஷ்வீர் சிங் என்ற இருவர், கடந்த ஏப்ரல் 2017ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்திடம் பஞ்சாப் சிங் மற்றும் யஷ்வீர் சிங் தரப்பு முறையிட்டுள்ளது. ஆனால் அதனை ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அடுத்த 2 முறை ஜாமீன் கோரிய மனுவையும் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் நிராகரித்ததால் தோல்பூர் போக்ஸோ நீதிமன்றத்திடம் முறையிட்டுள்ளனர்.
இதனை அடுத்து, இந்த வருடம் மே மாதம் போக்ஸோ நீதிமன்ற நீதிபதி முகேஷ் தியாகி குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் கொடுத்துள்ளார். இதனை அறிந்த மாற்றுத்திறனாளி மாணவியின் தந்தை, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு இதனை கொண்டு சென்றுள்ளார். பின்னர், தலைமை நீதிபதி, முகேஷ் தியாகி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பரிந்துரை செய்துள்ளார். 
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி மீதே கடும் நடவடிக்கைக்கு ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது பரபரப்பாக பேசப்படுகிறது. 

அந்தமான் - நிகோபர் தீவுகள் குறித்து ஐ.நா அதிர்ச்சி தகவல்..

credit ns7.tv
Image
அந்தமான் - நிகோபர் தீவுகள் இன்னும் சில ஆண்டுகளில் வாழத்தகுதியில்லாத இடமாக மாறிவிடும் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது ஐநா. 
புவி வெப்பமயமாவதால் உருவாகும் பருவநிலை மாற்றம் உலகை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறது என்றே சொல்லலாம். இதை தடுக்க உலக நாடுகளின் தலைவர்கள் பல முயற்சிகளை எடுத்தாலும், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தீமையின் கையே ஓங்கியிருக்கிறது.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமான பருவநிலை மாற்றம் தொடர்பான ஆய்வுக்குழு, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் எழில் கொஞ்சும் தீவு நகரமான அந்தமான் - நிகோபர் இன்னும் சில ஆண்டுகளில் மனித இனம் வாழத்தகுதியில்லாத இடமாக மாறிவிடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.
புவி வெப்பமயமாதல் தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் உலகின் வெப்பநிலை மேலும் 2 டிகிரி அதிகரிக்கும் என்றும், பனிப்பாறைகள் உருகி கடல்நீர் மட்டம் மேலும் உயரும் என எச்சரித்துள்ளது ஐநா. 2100ம் ஆண்டு 30 முதல் 60 சென்டிமீட்டர் வரை கடல்நீர் மட்டம் உயரலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடலின் வெப்பநிலை அதிகரிக்க தொடங்கினால் புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களும் அதிகரிக்கும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளாகவே உலகளவில் 90 சதவீதத்துக்கு அதிகமான வெப்பநிலையை கடல்கள் உள்வாங்கி வந்துள்ளன என்றும், 1993ம் ஆண்டு முதல் கடல்களின் வெப்பநிலை இரு மடங்கு உயர்ந்துள்ளது எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. 
 
பருவநிலை மாற்றத்தால் பனிப்பாறைகள் உருகுவதுடன், வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்களை சந்திக்க உலகம் தயாராக இருக்க வேண்டும் என்பது ஆய்வாளர்களின் பொதுவான கருத்து. இதே நிலை நீடித்தால் அந்தமான் - நிகோபர், மாலத்தீவுகள் உட்பட உலகின் சிறிய தீவுக்கூட்டங்களில் வசிக்கும், 6 கோடி மக்களும் வேறிடத்துக்கு புலம் பெயர வேண்டியிருக்கும் என்பதே ஐநாவின் எச்சரிக்கை மணி.  

வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம்-டெல்லி அரசு அறிவிப்பு!

credit ns7.tv
Image
டெல்லியில், வாடகை வீட்டில் வசிக்கும் குடும்பத்தினருக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
டெல்லியில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு நடைபெற்று வருகிறது. ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வரும் கெஜ்ரிவால் அரசு, 2020ம் ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. சமீபத்தில் டெல்லி அரசுப் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பெண்கள் கட்டணங்கள் ஏதுமின்றி இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பு டெல்லி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
இது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் “முக்யமந்திரி கிரெய்தார் பில்ஜி மீட்டர் யோஜனா” திட்டத்தின் கீழ் வாடகை வீட்டில் வசிப்பவர்களும் மானியம் பெறலாம் என்று தெரிவித்துள்ளார். வாடகை வீட்டில் வசிப்பவர்கள் முன்பணம் செலுத்தி மீட்டர்களை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். இந்த மீட்டரைப் பெறுவதற்கு வாடகை வீட்டில் இருப்பதற்கான ஒப்பந்தத்தின் நகலை ஒப்படைத்தால் போதுமானது என்று அறிவித்துள்ளார். இதற்கு முன்பு, வீட்டின் உரிமையாளரிடம் தடையில்லாச் சான்று பெற வேண்டும் என்ற நடைமுறை இருந்தது. அதை நீக்கி, மானியம் பெறும் நடைமுறையை எளிமைபடுத்தியுள்ளனர்.
டெல்லியில் வசிக்கும் மக்கள், மாதத்திற்கு 200 யூனிட் வரை மின்சாரத்தை பயன்படுத்தினால், அதற்கு கட்டணம் எதுவும் செலுத்தத்தேவையில்லை என்று கடந்த ஆகஸ்டு 1ம் தேதி அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்த பலனை, வாடகை வீட்டில் வசிப்பவர்களும் பெறலாம் என்று திட்டத்தை விரிவுபடுத்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மாதம் 200 யூனிட்கள் வரை மின்சாரத்தை பயன்படுத்தும் குடும்பதாரர்கள் கட்டணம் எதுவும் செலுத்தத்தேவையில்லை. 200 யூனிட்டுகளுக்கு மேல் 1 யூனிட் அதிகம் பயன்படுத்தினாலும் மொத்த கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.
தமிழகத்தில் அனைத்து குடும்பங்களுக்கும் 100 யூனிட்கள் வரை இலவச மின்சாரம் கடந்த 2016ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 25 செப்டம்பர், 2019

சின்மயானந்த் மீது பாலியல் புகார் தெரிவித்த மாணவி கைது..!

Image
முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்த் மீது பாலியல் புகார் தெரிவித்த மாணவியை பண மோசடி வழக்கில் உத்திரப்பிரதேச மாநில போலீசார் கைது செய்துள்ளனர். 
பாஜகவைச் சேர்ந்த சின்மயானந்த் நடத்தும் சட்டக்கல்லூரியில் பயின்று வந்த மாணவி, அவர் மீது பாலியல் புகார் தெரிவித்தார். தன்னை தவறாக வீடியோ எடுத்து மிரட்டி ஓராண்டாக பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் மாணவி குற்றம் சாட்டியிருந்தார்.
மூக்கு கண்ணாடியில் கேமரா பொருத்தி எடுத்ததாக மாணவி கொடுத்த வீடியோக்களை அடிப்படையாக கொண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்மயானந்தை கைது செய்தனர். இந்நிலையில் சின்மயானந்த் மீது புகார் அளித்த மாணவி, மிரட்டி பணம் பறித்தல் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். 
இந்த வழக்கு தொடர்பாக இந்த பெண் ஏற்கெனவே முன் ஜாமீன் கோரி அலகாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சின்மயானந்த் மீதான பாலியல் புகார் ஆதாரங்களை அழிப்பதற்காக 5 கோடி ரூபாய் பணம் கேட்டு அந்த பெண் மிரட்டியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

credit ns7.tv

பருவநிலை மாற்றத்திற்கென தனி ஒரு ஆளாக போராடும் ஸ்வீடன் போராளி கிரேட்டா தன்பர்க்.

credit ns7.tv
பருவநிலை மாற்றத்திற்கென தனி ஒரு ஆளாக போராடும் ஸ்வீடன் போராளி கிரேட்டா தன்பர்க். யார் இந்த கிரேட்டா? இவர் செய்த மாற்றங்கள் என்ன?
ஸ்வீடனை சேர்ந்த கிரேட்டா தன்பெர்க், பருவநிலை மாற்ற மாநாட்டின் கதாநாயகியாக மாறியுள்ளார். 16 வயதில் ஐ.நா மன்றத்தில் உரை,  நோபல் பரிசுக்கு பரிந்துரை என கால நிலை மாற்றத்திற்கான தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் கிரேட்டா தன்பெர்க். ஸ்வீடனில் தனி ஆளாக தன் போராட்டத்தை தொடங்கிய கிரேட்டா, வெள்ளிக்கிழமை மட்டும் தன் வகுப்புகளை புறக்கணித்து ஸ்வீடன் நாடாளுமன்றம் முன்பு போராடி வந்தார். அதனை தொடர்ந்து பருவநிலை மாற்றத்திற்கு உலக நாடுகளில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கால நிலை மாற்றத்திற்காக போராட Friday For Future என அனைத்து மாணவர்களையும் ஒன்றிணைந்து போராட அழைப்பு விடுத்தார்.  
News7 Tamil
சமீபத்தில் இங்கிலாந்தில் இருந்து சிறிது அளவு கூட மாசு ஏற்படுத்தாத  சோலார் படகில் அமெரிக்கா வந்தவர், நியூயார்க் நகரில் மாணவர்களை ஒன்றிணைத்து காலநிலை மாற்றத்திற்கு என்ற பெரும் போராட்டத்தை நடத்தினார். ஐ.நாவின் பருவநிலை மாநாட்டில் பேசிய கிரேட்டா இங்கு நடக்கும் அனைத்தும் தவறாக உள்ளன. நான் இங்கு இருக்கக் கூடாது, கடல் கடந்து உள்ள என் பள்ளியில் நான் மீண்டும் படித்திருக்க வேண்டும். ஆனால், என்னால் அதைச் செய்ய முடியவில்லை. 
இளைஞர்களை நம்பி எதிர்காலம் உள்ளதாகக் கூறுகிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம்? என கோபம் கலந்த கண்ணீருடன் ஆக்ரோஷமாக பேசினார். கடந்த தலைமுறை செய்த தவறுகளை இந்த தலைமுறையினர் அனுபவித்து வருகிறோம். அதிகாரத்தில் இருப்பவர்கள் பருவநிலை மாற்றம் குறித்தும் அதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அழகான வார்த்தைகளை பேசி வருகிறார்களே தவிர அவர்களின் நோக்கம் வேறாக உள்ளது என விமர்சித்தார்.  
கிரேட்டாவின் இந்த பேச்சு சமூக வலைதளத்தில் வைரலானதால் அவருக்கான ஆதரவுக்குரல் அதிகரித்து வருகிறது. இந்திய கிரிக்கெட்டர் ரோஹித் ஷர்மா, நடிகை ப்ரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் கிரேட்டாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். கிரேட்டா ஆக்ரோஷமாக பேசும் விடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ட்ரம்ப், பார்ப்பதற்கு நல்ல எதிர்காலத்தை எதிர்பார்க்கும் மகிழ்ச்சியான பெண்ணாக இருக்கிறார் என கிண்டலாக பகிர்ந்துள்ளார். இதனை பலர் விமர்சித்து வருகின்றனர். ஐ.நா மன்றத்தில் ட்ரம்ப் வருகையின் போது கிரேட்டாவின் உடல்மொழி வீடியோவை பலர் சமூகவலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். 
News7 Tamil
மாறி வரும் காலநிலையில் இருந்து உயிரினங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுங்கள் என போராடும் கிரேட்டா தன்பெர்க்குக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மூன்று நார்வே எம்.பி.க்கள் முன்மொழிந்தனர். தற்போது கிரேட்டாவின் பெயர் நோபல் பரிசுக்கான பரிந்துரையில் உள்ளது. பருவநிலை குறித்து கிரேட்டா எழுதிய ஒரு கட்டுரை அவரை பருவநிலையை காப்பாற்றும் போராளியாக மாற்றியுள்ளது என்றால் மிகையாகாது. 


செவ்வாய், 24 செப்டம்பர், 2019

உலக முதலீட்டாளர்கள் மாநாடு: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Image
தமிழக அரசால் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் எத்தனை தொழில் நிறுவனங்கள் துவங்கப்பட்டன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
தமிழக அரசு சார்பில் கடந்த ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற தனியார் நிறுவனங்களின் விவரங்களை ஆராய வேண்டும் என்று மற்றொரு தனியார் நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் 2015ஆம் ஆண்டில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்குபெற்ற தனியார் நிறுவனங்களின் பின்னணியை ஆராயததால் பல நிறுவனங்கள் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாகவும், அதனால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், உலக மூதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் வேலைவாய்ப்பு கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கானது நீதிபதிகள் சத்தியநாரயணன், சேசஷாயி அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 
அப்போது உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் தமிழகத்தில் எத்தனை நிறுவனங்கள் துவங்கப்பட்டுள்ளன என்பது குறித்தும் அதன் மூலம் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்தும் ஒரு வாரத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
credit ns7tv

சிறுவர், சிறுமிகளை டார்ச்சர் செய்கிறார்கள் : நித்யானந்தா மீது சிஷ்யை புகார்

Image
நித்யானந்தா சிறுவர், சிறுமிகளை கொடுமைப்படுத்துகிறார் என அவர் மீது குற்றம் சாட்டி அவரது முன்னாள் சிஷ்யை ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 
பெங்களூருவில் உள்ள நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் தங்கியிருந்த கனடா நாட்டை சேர்ந்த சாரா ஸ்டீபனி லாண்ட்ரி என்ற பெண் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், நித்தியானந்தா ஆசிரமத்தில், தான் தங்கியிருந்த அனைத்து நாட்களும் மிகச் சிறந்தது என நினைத்திருந்தேன், ஆனால் அவை அனைத்தும் பொய் எனப் பிறகு தான் தெரிந்துகொண்டேன் என தெரிவித்தார். 
மேலும், திருவனந்தபுரத்தில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்திற்கு தான் சென்றிருந்த போது, அங்கிருந்த சிறுவர்கள் சிலர் தன்னை சந்தித்து பல குற்றச்சாட்டுகளை தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார். 
ஆசிரமத்தில் உள்ளவர்களால் தாங்கள் அடித்து துன்புறுத்தப்படுகிறோம் எனவும், கழிவறைக்குச் செல்லக் கூட தங்களுக்கு அனுமதி இல்லை எனவும் இரும்பு கம்பிகள் நிறைந்த அறையில் தாங்கள் சிறை வைக்கப்பட்டுள்ளோம் எனவும் அந்த சிறுவர்கள் தன்னிடம் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார். 
நித்தியானந்தா பற்றிய உண்மைகளை தெரிந்து கொண்ட பின், சொந்த நாட்டுக்கே திரும்பி விட்டதாகத் சாரா தெரிவித்தார். ஆனால், நித்தியானந்தாவின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாக, நித்தியானந்தா தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
credit ns7.tv

பருவ நிலை மாற்றத்திற்கு எதிராக பேசுவதை முடித்துக் கொண்டு செயல்பட வேண்டிய நேரம்

credit ns7.tv
Image
பருவ நிலை மாற்றத்திற்கு எதிராக பேசுவதை முடித்துக் கொண்டு செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டதாக ஐ.நா அவையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 
பருவநிலை மாற்றம் குறித்த ஐ.நா உச்சிமாநாடு, நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய நரேந்திர மோடி, அதிகமான போதனைகளைவிட மிகச் சிறிய செயல் சிறந்தது என்பதில் இந்தியா நம்பிக்கை கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார். 
இந்தியாவில், கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு தூய்மையான சமையல் எரிவாயு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், தண்ணீரை சேமிப்பதற்கான பல்வேறு திட்டங்களையும் தொடங்கி இருப்பதாகத் தெரிவித்தார். 
இந்திய சுதந்திர தினத்தின்போது, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பயன்பாட்டை கைவிட நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகத் தெரிவித்த நரேந்திர மோடி, இவ்விஷயத்தில் சர்வதேச அளவில் விழிப்புணர்வு அதிகரிக்கும் என நம்புவதாகவும் கூறினார். 
நேற்றைய அமர்வில் பேசுவதற்கான தலைவர்களின் பட்டியலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பெயர் இல்லாத போதிலும், அவைக்கு வந்திருந்த அவர், பிரதமர் நரேந்திர மோடியின் உரையை கேட்டுவிட்டு சென்றார்

ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குள் சேகரிக்கப்பட்ட 1000 கிலோ பிளாஸ்டிக்!


Image
கோவா கடற்கரையில் 1000 கிலோவிற்கு மேற்பட்ட பிளாஸ்டிக் குப்பைகள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களால் சேகரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப் பிரபலமான சுற்றுலாத்தலம் கோவா. இங்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் உள்நாடு மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் வந்து செல்கின்றனர். இந்தியாவில் இருக்கும் அனைத்து இளைஞர்களுக்கும் வாழ்வில் ஒருமுறையாவது கோவாவிற்கு செல்ல வேண்டும் என்ற ஆசை எப்போதும் உண்டு. அந்த அளவிற்கு அழகிய மாநிலம் கோவா. ஆனால், கோவாவிற்கு வந்து செல்லும் சுற்றுலாப்பயணிகளால், கோவா கடற்கரைகள் கடுமையாக மாசுபட்டு வருகிறது. குறிப்பாக பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு, கோவாவின் அழகிய கடற்கரைகளை பாழ்படுத்தி வருகிறது.
இந்நிலையில், 2019ம் ஆண்டின் கடற்கரை சுத்தம் செய்யும் நாள் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக கடற்கரைகளை சுத்தம் செய்யும் பணி இன்று தொடங்கியது. இதில், கோவாவைச் சேர்ந்த தேசிய கடல்சார் ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் அறிவியல் அறிஞர்கள் உள்ளிட்ட 130க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு 30வது ஆண்டாக கடற்கரைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணிகள் பனாஜி கடற்கரைப் பகுதியில் தொடங்கி நடைபெற்றது. கரன்ஸலெம் கடற்கரையில் இரண்டரை மணி நேரம் நடைபெற்ற சுத்தம் செய்யும் பணியில், பல்வேறு வகையான பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலந்திருப்பதை கண்டுபிடித்தனர்.
இந்த பணியின் போது, கடற்கரையின் ஒரு கிலோ மீட்டர் தூரத்தை சுத்தம் செய்ததில், 1078 கிலோ பிளாஸ்டிக் குப்பைகள், காகிதம் உள்ளிட்ட 486 கிலோ பசுமைக் குப்பைகள்,720 கிலோ பாட்டில்கள் மற்றும் 125 உலோக பாட்டில்கள் எடுக்கப்பட்டுள்ளன.
சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக்குகளில் உணவுகளை பார்சல் செய்ய பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகள், பிளாஸ்டிக் தொப்பிகள், பிளாஸ்டிக் ஸ்பூன், கப், ஸ்ட்ரா, பேனா, பேக், பொம்மைகள் மற்றும் அலங்கார பொருட்கள், சேதமடைந்த மீன் பிடி வலைகள், தார் பாய் சீட்டுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள, தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், ஒருமுறை பயன்படுத்தி தூக்கியெறியும் பிளாஸ்டிக்குகளுக்கு நாம் அடிமையாகியிருக்கிறோம். கழிவு மேலாண்மையில் நாம் பிந்தங்கியதன் விளைவு பிளாஸ்டிக் மாசுபாடு, உலகளாவிய தொற்று நோயாக உருவாகியுள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும், “பிளாஸ்டிக் எதிர்மறை விளைவுகளை உருவாக்கும் என்று தெரியும், அவைகள் எங்கிருந்து வருகிறது என்றும் தெரியும். நாம் பிளாஸ்டிக் மாசுபாட்டை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். முக்கியமாக பிளாஸ்டிக் குப்பைகள் உருவாவதற்கான மூலத்தை தடை செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இரண்டரை மணி நேரம் சுத்தம் செய்ததில் மட்டும் 1000 கிலோ பிளாஸ்டிக் குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில், மீதமிருக்கும் பகுதிகளில் மேலும் ஆயிரக்கணக்கான கிலோ பிளாஸ்டிக் குப்பைகள் கிடைக்கும் என்று ஆராய்ச்சி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவா என்னும் சிறிய மாநிலம் தினமும் 40 டன் பிளாஸ்டிக் குப்பைகளை உற்பத்தி செய்கிறது. அதனை உடனடியாக தடுக்க வேண்டும் என்ற குரல்கள் சமீபத்தில் எழுந்துவருவது குறிப்பிடத்தக்கது.

credit ns7.tv

ஒரே அடையாள அட்டை திட்டம் செயல்படுத்தப்படும்

ஒரே நாடு ஒரே ரேசன் வரிசையில், ஒரே அடையாள அட்டை திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 
 ஆதார், பாஸ்போர்ட், வங்கிக்கணக்கு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பான் எண் போன்ற அனைத்தும் தகவல்களும் பல்நோக்கு மின்னணு அடையாள அட்டையில் இடம்பெறும் என்று கூறினார். 
குற்றப்பின்னணி குறித்த தகவல்கள் ஒரே அடையாள அட்டையில் இணைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். டிஜிட்டல் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக செல்போன் செயலி மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த போதிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார். 
2021ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணியானது, ஜம்மு காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட பனிப் பிரதேசங்களில் நடப்பாண்டு அக்டோபர் 1ம் தேதி தொடங்கும் என்றும், பிற மாநிலங்களில், அடுத்தாண்டு மார்ச் ஒன்றாம் தேதி கணக்கெடுப்பு பணி தொடங்கும் என்றும் அமித்ஷா கூறினார்.
credit ns7.tv

ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

கர்நாடகாவில் 15தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!

கர்நாடகாவில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 15 எம்.எல்.ஏக்களின் தொகுதிகளில், தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியை தக்க வைக்க இந்த இடைத் தேர்தலில், நிச்சயம் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் பாஜக உள்ளது.
ஹரியானா மற்றும் மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களுடன், பல்வேறு மாநிலங்களில் காலியாக இருந்த 64 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்தது. அவற்றில் அதிகபட்சமாக கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கும், உத்தரபிரதேசத்தில் 11 தொகுதிகளுக்கும், இன்று இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளக் கூட்டணிக்கு எதிராக, போர்க்கொடி தூக்கிய அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 17 பேர், தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களில் 15 பேரின் தொகுதிகளில், தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. குமாரசாமி தலைமையிலான அரசு கவிழ்ந்த பிறகு, அங்கு எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றது. எடியூரப்பாவிற்கு தற்போது சுயேட்சை எம்.எல்.ஏ ஒருவரின் ஆதரவைச் சேர்த்து, 106 எம்.எல்.ஏக்களின் ஆதரவே உள்ளது. 15 தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்தப்படுவதால், பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான பலம் 113 ஆக உயரும். எனவே இடைத் தேர்தல் நடைபெறும் 15 தொகுதிகளில், குறைந்தபட்சம் 7 தொகுதிகளை, கைப்பற்றியே ஆக வேண்டிய கட்டாயத்தில் பாஜக உள்ளது. 
இதற்கிடையே, இடைத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என, மதசார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவகவுடா திட்டவட்டமாக கூறியுள்ளார். ஏற்கனவே காங்கிரசுடன் கூட்டணி அமைத்து முதலமைச்சராக பதவி வகித்த குமாரசாமி, கசப்பான அனுபவங்களையே சந்தித்தாகக் கூறிய தேவகவுடா, 15 தொகுதிகளிலும் மதசார்பற்ற ஜனதா தளம் தனித்தே போட்டியிடும் என்றார். 


credit ns7.tv

கீழடியில் உலகத் தரத்திலான அருங்காட்சியகம் அமைக்கப்படும்

Image
கீழடி அகழாய்வு கண்டுபிடிப்புகளை உலகறியச் செய்திடும் வகையில், அங்கு சர்வதேச தரத்திலான அருங்காட்சியகம் அமைக்கப்படும் என, தொல்லியல்துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் தெரிவித்தார். 
கீழடியில் நடத்தப்பட்ட 4-ம் கட்ட ஆய்வுகளின் அடிப்படையில், கி.மு. 6-ம் நூற்றாண்டு முதல், கி.பி. முதல் நூற்றாண்டு வரை கீழடி வளமான பண்பாடு கொண்ட பகுதியாக விளங்கியிருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கீழடி அகழ்வாய்வில் கிடைத்த அறிவியல்ரீதியான களக்கணிப்புகள், தமிழ்-பிராமியின் காலம் மேலும் நூறாண்டு பழமையானதாக கருதச் செய்வதாகவும், அதன்மூலம், கி.மு. 6-ம் நூற்றாண்டில் தமிழர்கள், எழுத்தறிவு பெற்ற சமூகமாக விளங்கியிருக்கிருப்பது தெரியவந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 
இந்நிலையில், பொள்ளாச்சியில் நடைபெற்ற, இளம் தொழில்முனைவோர் மையத்தின், இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்ற அமைச்சர் பாண்டியராஜன், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில், அதிமுக முழு வலிமையுடன், தோழமை கட்சிகளை ஒருங்கிணைத்து வெற்றி பெறும், என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், கீழடியில் தமிழக அரசு அளித்துள்ள ஒரு ஏக்கர் நிலத்தில், உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும், எனவும் அமைச்சர்  பாண்டியராஜன் கூறினார். 

credit ns7.tv