வியாழன், 30 நவம்பர், 2017

அதானி சூரிய ஒளி மின்நிறுவன தீவிபத்தில் பொறியாளர்கள் 4 பேருக்கு பலத்த தீக்காயம்! November 30, 2017

Image

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அதானி சோலார் மின் நிலையத்தின் கட்டுப்பாட்டு அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் காயம் அடைந்தனர். 

இராமநாதபுர மாவட்டம் கமுதி அருகே செங்கப்படையில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த அதானி நிறுவனத்திற்குச் சொந்தமான சூரிய ஒளி மின்திட்ட பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு மின்வாரியம் மூலம் விநியோகிக்கப்படுகிறது. 

இந்நிலையில் இரவு 11 மணியளவில் அந்த சூரிய ஒளி பூங்காவின் கட்டுப்பாட்டு அறையில் அதிக அழுத்தம் கொண்ட மின் வயர்களில் தீப்பிடித்தது. தீ மளமளவென கட்டுப்பாட்டு அறை முழுவதும் பரவியது. 

இந்த தீ விபத்தில் மன்னார்குடியைச் சேர்ந்த சரவணன் மற்றும் ஆந்திரா, கேரளாவைச் சேர்ந்த பொறியாளர்கள் 3 பேர் என  4 பொறியாளர்கள் பலத்த தீக்காயம் அடைந்தனர். அவர்களுக்கு உதவச் சென்ற 3 பேரும் தீக்காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

நிறையும் தென் தமிழக அணைகள்! November 30, 2017

Image

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி அதிகரித்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளான அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, கடையம், சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று முதல் மழை பெய்து வருவதால், பெரியார் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டமானது 34 அடியாக உயர்ந்துள்ளது.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வினாடிக்கு 150 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டு வருவதாகவும், தொடர்ந்து அணையின் நீர் மட்டம் உயர்ந்தால், நீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உருவானது ஓகி புயல்! November 30, 2017

Image

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கன்னியாகுமாரி அருகே 70 கிலோ மீட்டர் தொலைவில் ஓகி புயலாக மாறி மையம் கொண்டுள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச் சந்திரன், இந்த புயல் எதிராலியாக தமிழகத்தில் பரவலாக மிதமான மழை பெய்யும் என்றார்.

தென் மாவட்டத்தில் கனமழை முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார். கடலோர பகுதிகளில் மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்திற்கு பலத்த காற்று வீசும் என்றும் பாலச்சந்திரன் எச்சரித்தார்.  

மிதக்கும் குமரி... தவிக்கும் மக்கள்... குளிர்கிறது தென் தமிழ்நாடு! November 30, 2017

Image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் அதிவேக காற்றின் காரணமாக,  500க்கும் மேற்பட்ட  மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. கனமழையின் காரணமாக, சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், கடலோரப்பகுதிகளில் கடல்சீற்றம் காணப்படுவதால், மீனவ கிராம மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேறி வருகின்றனர். இதனிடையே , இடலாக்குடி  அருகே செல்போன் கோபுரம் சாய்ந்து விழுந்துள்ளதையடுத்து மீட்புப்பணிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன. சாலையோரங்களில் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால், பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், பேருந்து கிடைக்காமல் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

மழை காரணமாக கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர். இதனால் சுருளி அருவிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள், அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. பலத்த காற்றின் காரணமாக பிரசித்தி பெற்ற பனிமய மாதா கோவில் அருகில் உள்ள காவல்துறையினரின் போக்குவரத்து சமிக்கை விளக்கு கம்பம் கீழே விழுந்ததால், கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்களே சமிக்கை விளக்கு கம்பத்தை அப்புறப்படுத்தினர். திருச்செந்தூர் சாலையில் உள்ள சத்யாநகரில் குடிசை வீட்டின் முன்பாக மரம் விழுந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக வீட்டிலிருந்த 4 பேர் உயிர் தப்பினர். 

நெல்லை மாவட்டத்தில் பரவலாகப் பெய்து வரும் கனமழையால், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பழைய குற்றாலம் அருவிக்கு செல்லும் பாதையிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அப்பகுதிக்கு வந்த சுற்றுலா பயணிகள், சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை கண்டு  மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இரவு முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று மாலை முதல் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் வரத்து குறைந்துள்ளது. பொதுமக்கள் வெளியே வர முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். மழை காரணமாக திண்டுக்கல் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழையால் முடங்கிய கன்னியாகுமரி மாவட்டம்! November 30, 2017

Image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் சூறைக்காற்றின் காரணமாக, 500க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. 

கனமழையின் காரணமாக, சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், கடலோரப்பகுதிகளில் கடல்சீற்றம் காணப்படுவதால், மீனவ கிராம மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேறி வருகின்றனர். இதனிடையே, இடலாக்குடி  அருகே செல்போன் கோபுரம் சாய்ந்து விழுந்துள்ளதையடுத்து மீட்புப்பணிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன. 

ஓகி புயலால் வீசிய பலத்த காற்று காரணமாக கன்னியாகுமரியின் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதில் சிக்கி 4 பேர் பலியானார்கள். இதற்கிடையே கன்னியாகுமரி மாவட்டத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அங்கு விரைந்துள்ளனர். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. இதன் காரணமாக சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மார்த்தாண்டம், தக்கலை உள்ளிட்ட இடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரப்பர் மரங்கள் மற்றும் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன. சாலையோரங்களில் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால், பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், பேருந்து கிடைக்காமல் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். கடல் சீற்றமாக காணப்படுவதால், மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. கடற்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வன்மமான ஒரு கேள்விக்கு


#தலைமைநீதிபதி : அரசு செலவில் தொடர்ந்து படிக்க விரும்பறயாம்மா ?
#ஹதியா: ஆம் நான் தொடர்ந்து படிக்க விரும்புகிறேன். ஆனால் என் கணவரால் என்னை எதுவரைக்கும் வேண்டுமானாலும் படிக்கவைக்க முடியும் என்பதால் நீங்கள் சொல்லும் அரசு உதவி எனக்கு தேவையில்லை.

#ஹதியா

thanks fb Lakshmanasamy Odiyen Rangasamy

​அழிவின் விளிம்பில் அதிவேக சிறுத்தை! November 29, 2017

Image

உலகிலேயே மிக விரைவாக ஓடும் விலங்கான சிறுத்தை அழிவின் விளிம்பில் உள்ள உயிரினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவின் கேப்பில் நடைபெற்ற ஒரு போட்டியில் பந்தயக் காரைவிட அதிவிரைவாக ஒரு சிறுத்தை ஓடியுள்ளது.

பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தால் விலங்குகள் அழிவதைத் தடுக்க முன்னெடுக்கப்பட்டுள்ள முயற்சியாக இந்தப் போட்டி நடத்தப்பட்டுள்ளது. ஓடத் தொடங்கிய மூன்றே நொடிகளில் சிறுத்தை மணிக்கு நூறு கிலோமீட்டர் வேகத்தை எட்டியதும் குறிப்பிடத் தக்கது.

கே.ஆர்.பி அணையில் மதகு உடைந்த இடத்தில் அதிகாரிகள் ஆய்வு! November 30, 2017

Image

கே.ஆர்.பி அணையில் மதகு உடைந்த இடத்தில் பொதுப் பணித்துறையின் உயர்மட்டக் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். 

அணையின் முழுக் கொள்ளளவான 52 அடியில் 46 அடி நீர் உள்ளதால் உடைந்த மதகை சரி செய்ய முடியாமல் அதிகாரிகள் திணறினர்.  அணையில் தற்பொழுது உள்ள 51 அடி நீர், 31 அடியாக  குறைந்தால் மட்டுமே மதகை சரி செய்ய முடியும் என்பதால், அணையிலிருந்து 10 ஆயிரம் கன அடிக்கும் அதிகமான நீர் வெளியேற்றப்படுவதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் இன்று காலை சென்னையில் இருந்து சென்ற பொதுப்பணித்துறையின் தலைமை செயற்பொறியாளர் முருக சுப்பிரமணியன் தலைமையிலான 4 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவினர் கே.ஆர்.பி.அணையினை நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.

​உச்ச நட்சத்திரங்கள் தனிகட்சியாக இருந்தால் ஆதரிப்பீர்களா? November 30, 2017

Image

உச்ச நட்சத்திரங்கள் தனிகட்சியாக இருந்தால் ஆதரிப்பீர்களா அல்லது  தேசிய, மாநில கட்சிகளில் ஏதேனும் ஒன்றுடன்  கூட்டணி வைத்தால் ஆதரிப்பீர்களா என கருத்து கணிப்பில் தமிழக புதுச்சேரி மக்களிடம்  கேட்கப்பட்ட கேள்விக்கு பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். 

உடல்நலக்குறைவால் ஜெயலலிதா காலமானதும், தீவிர அரசியலில் இருந்து கருணாநிதி ஓய்வில் இருப்பதும் தமிழக அரசியலில் வெற்றிடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் தி.மு.க., அ.தி.மு.க. தவிர்த்து மக்கள் வேறொரு மாற்றுக்கு நடிகர்கள் மூலம் தயாராக இருக்கிறார்களா என்பதை தெரிந்து கொள்வதற்காக இந்த கேள்வி கேட்கப்பட்டது. ஆனால் இதில் பெரும்பாலானோர் நடிகர்கள் தனிகட்சி தொடங்குவதை விட யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்பதை பொருத்தே தங்களது ஆதரவை முடிவு செய்வோம் என குறிப்பிட்டுள்ளனர். சுமார் 47 சதவீதம் பேர் நடிகர்கள் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை தெளிவுபடுத்தினால் மட்டுமே ஆதரவு என கூறியுள்ளனர். மக்களின் இந்த பதில் மக்கள் யாருமே இந்த நடிகர்கள் தனிக்கட்சி தொடங்கும் பட்சத்தில் முழுவதுமாக ஆதரவளிக்க போவதில்லை என்பதை பிரதிபலிக்கிறது. 

18 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், இந்த மூன்று நடிகர்களில் எவரேனும் அரசியலுக்கு வந்தால் அவர்கள் எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கிறார்கள் எனபதை பொருத்தே ஆதரவளிப்போம் என 45 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். அதே வேளையில் 31 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களில் 47 சதவீதம் பேரும், 50 வயதுக்கு மேலானாவர்களில் 51 சதவீதம் பேரும் ரஜினி, கமல், விஜய் யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்பதை பொருத்தே ஆதரவு தருவோம் என குறிப்பிட்டுள்ளனர். 

ஆண்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பில் இந்த மூன்று நடிகர்கள், தனி கட்சி தொடங்கினால் ஆதரவு என சுமார் 39 சதவீத பேரும், கூட்டணி வைப்பது பொருத்து என 48 சதவீத பேரும் தெரிவித்துள்ளனர். அதே வேளையில் பெண்களில் 40 சதவீத பேர் நடிகர்கள் தனி கட்சி தொடங்கினால் ஆதரவு என்றும், 45 சதவீத பேர் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை பொருத்தே ஆதரவளிப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.

ரஜினி, கமல், விஜய் ஆகிய மூவரும் எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கிறார்கள் என்பதை பொருத்துதான் ஆதரவளிப்போம் என அதிக பட்சமாக கிறித்துவர்களில் சுமார் 57 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். அடுத்து இதே போன்ற கருத்தை 49  சதவீத  இஸ்லாமியர்களும்  46 சதவீத இந்துக்களும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

​தமிழகத்தின் அடுத்த எம்.ஜி.ஆர். யார்? November 30, 2017

Image

நியூஸ் 7 தமிழ், குமுதம் இணைந்து நடத்திய பிரமாண்ட கருத்துக்கணிப்பில் எம்.ஜி.ஆர் விட்டு சென்ற வெற்றிடத்தை  அரசியலில் நிரப்ப போகும் நடிகர் யார் என்ற கேள்விக்கு மக்கள் அளித்த பதில்கள் வெளியிடப்பட்டது. இதில் மாவட்ட வாரியாகவும், இளைஞர்கள், படித்தவர்கள், சிறுபான்மையின மக்கள் என அனைவரும் கருத்து தெரிவித்துள்ளனர். 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற ஒட்டுமொத்த கருத்து கணிப்பில் ரஜினி, கமல், விஜய் ஆகிய மூவருமே அடுத்த எம்.ஜி.ஆர். இல்லை என 56 சதவீதத்துக்கும் மேலானோர் தெரிவித்துள்ளனர். இதில் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டு, தற்போது ஆட்சியில் இருக்கும் அதிமுகவை விமர்சித்து வரும் கமல்ஹாசன், அடுத்த எம்ஜிஆராக இருக்கலாம் என 16 சதவீத பேர் மட்டுமே கூறியுள்ளனர். அதே போல் எம்.ஜி.ஆருக்கு பிறகு அதிக ரசிகர்களை பெற்றுள்ள ரஜினிகாந்த், அடுத்த எம்.ஜி.ஆர். என சுமார் 15 சதிவீதம் பேர் தெரிவித்துள்ளனர். எம்.ஜி.ஆர். ரஜினி வரிசையில் அடுத்து மாஸ் ஹீரோ என்று சொல்லப்படும் விஜய் அடுத்த எம்.ஜி.ஆர். என 12 சதவீதம் பேர் மட்டுமே குறிப்பிட்டுள்ளனர். 

எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின் பிறந்த 18 வயது முதல் 30 வயது வரை உள்ள இளைஞர்களிடம் கேட்டபோது அவர்களில் 52 சதவீதத்துக்கும் மேலானோர் ரஜினி, கமல், விஜய் ஆகிய மூவரில் எவருமே  அடுத்த எம்ஜிஆர் இல்லை என பதிலளித்துள்ளனர். அதே சமயத்தில் எம்.ஜி.ஆரின் தீவிர அரசியலை பார்த்த 30 முதல் 50 வயதுக்குட்பட்டோரில் 60 சதவீதத்துக்கும் மேலானோர் இந்த மூவரும் அடுத்து எம்.ஜி.ஆர். இல்லை என கூறியுள்ளனர். மேலும் எம்.ஜி.ஆரின் சினிமா அரசியல் என இரண்டு பரிணாமங்களையும் பார்த்த 50 வயதுக்கு மேற்பட்டவர்களில் 62 சதவீதத்துக்கும்  மேலானோர் இந்த மூன்று உச்சநட்சத்திரங்களும் அடுத்த எம்.ஜி.ஆராக முடியாது என தெரிவித்துள்ளனர். 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் ஆண்களில் 57 சதவீதத்துக்கும் மேலானோர் அடுத்த எம்.ஜி.ஆராக ரஜினி, கமல், விஜய்யை பார்க்க முடியவில்லை என கூறியிருக்கிறார்கள். பெண்களில் 55 சதவீதத்துக்கும் மேலானோர் மூன்று நடிகர்களுமே அடுத்த எம்.ஜி.ஆர். இல்லை என தெரிவித்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்களில் 34 சதவீதம் பேர் அடுத்த எம்.ஜி.ஆராக நடிகர் ரஜினியை பார்ப்பதாக கூறியுள்ளனர். 

பள்ளி வரை மட்டுமே படித்தவர்கள் மற்றும் இளநிலை முடித்தவர்களில் தலா 56 சதவீதம் பேரும் முதுநிலை அளவிற்கு படித்தவர்களில் 59 சதவீதம் பேரும் ரஜினி கமல் விஜய் ஆகியோரில் அடுத்த எம்ஜிஆர் எவருமில்லை என பதிலளித்துள்ளனர்.

அதே போல் மத வாரியாக நடைபெற்ற கருத்துக்கணிப்பில் 62 சதவீதத்துக்கும் மேலான இஸ்லாமியர்கள், மூன்று நடிகர்களில் யாருமே அடுத்த எம்.ஜி.ஆராக முடியாது என கூறியுள்ளனர். அதே போல் இந்துக்களிலும் கிறித்துவர்களிலும் தலா 56 சதவீதம் பேர் ரஜினி, கமல், விஜய் ஆகிய மூவருமே அடுத்த எம்.ஜி.ஆர். இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தை வாபஸ் பெற்றனர் செவிலியர்கள்..! November 30, 2017

Image

செவிலியர்கள் போராட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளதையடுத்து, செவிலியர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். 

சென்னை ஆவடியை சேர்ந்த கணேசன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அரசு மருத்துமனையில் பணிபுரியும் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் பல நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், உடனே போராட்டத்திற்கு தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 

அப்போது 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வரும் செவிலியர்களுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். இந்த போராட்டம் தேவையற்றது என கண்டித்த  நீதிபதிகள், செவிலியர்கள் உடனடியாக போராட்டத்தை கைவிட்டு விட்டு நாளை முதல் பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டனர். பேச்சுவார்த்தை மூலமே பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், இல்லாவிட்டால் செவிலியர் தரப்பு வாதங்களை கேட்கமாட்டோம் என்றும் கண்டிப்புடன் கூறினர். அதுமட்டுமின்றி செவிலியர்களுடன் தமிழக அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தவும்  நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இதனிடையே நீதிமன்ற உத்தரவை ஏற்று நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் போராட்டத்தை கைவிடுவதாக செவிலியர்கள் அறிவித்துள்ளனர். இதன் காரணமாக தமிழகம் முழுவதிலும் இருந்து வந்து சென்னையில் போராட்டத்தில் பங்கேற்ற செவிலியர்கள் நாளை முதல் தங்கள் பணிக்கு திரும்பவுள்ளனர்.

​வானில் பறந்துகொண்டே விமானத்துக்குள் இறங்கிய விமானிகள்! November 29, 2017

Image

சுவிட்சர்லாந்தில் செயற்கை இறக்கைகள் மூலம் வானில் பறந்த பிரான்ஸ் நாட்டு வீரர்கள் இருவர் வானில் பறந்தபோதே விமானத்துக்குள் இறங்கி சாதனை படைத்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைக்கு மேல் ஜங்க்பிரா மலைஎன்னுமிடத்தில் பிரெட்  புஜன், வின்ஸ் ரெபெட் ஆகிய இருவரும் பல முறை பயிற்சி மேற்கொண்ட பின் வெற்றிகரமாக இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

விமானத்தில் இருந்த மற்றொரு விமானி இருவரையும் பாராட்டினார்.

ஆன்லைன் முறையில் விவசாயிகளிடம் நூதன பணமோசடி..! November 30, 2017

Image

தமிழகத்தில் ஆன்லைன் வரத்தகம் மூலம் நூதன முறையில் விவசாயிகளிடம் அரிசி, மிளகு, மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை பெற்று பணமோசடி செய்திடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இந்த முறை மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்த கும்பல் குறித்து, திருவள்ளூர் மாவட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.    

வறட்சியால் பாதிக்கப்பட்டு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் விவசாயம் செய்து வரும் விவசாயிகள், தங்கள் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கமால் அவதிபடுவதை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி நூதன மோசடி செய்திடும் கும்பலின் நடவடிக்கை தற்போது தமிழகத்தில் தலைதூக்கியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம்  கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள சிந்தலகுப்பம் கிராமத்தில்,  "கீரின்  டிரேடிங்"  என்ற நிறுவனத்தை முஸ்தபா முகமது செரிப் என்பவர் நடத்தி வந்துள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இயங்கி வந்த இந்த மையத்தில் மூலம், தமிழகத்தின் பல்வேறு பகுதி விவசாயிகளிடம் ஆன்லைன் முறையில் விவசாய விளைப்பொருட்களை பெற்று, வெளி மாநிலங்களுக்கு நல்ல விலைக்கு விற்று தருவதாக விளம்பர படுத்தியுள்ளனர். 

இவர்களின் செயலை நம்பி, நாமக்கல் மாவட்டம்  கொல்லிமலையை சேர்ந்த வடமலை என்ற விவசாயி, கடந்த ஆகஸ்ட் மாதம் 26ஆண் தேதி ஆன்லைன் மூலம் 2 டன் எடையுள்ள மிளகை விற்றுள்ளார். இதற்கு 2 லட்ச ரூபாயினை மட்டுமே முன்பணமாக வழங்கிய இந்நிறுவனம், மீதமுள்ள நிலுவை தொகை 9 லட்சத்து 90ஆயிரம் ரூபாய் தராமல் தலைமறைவாகினர். இது குறித்து விவசாயி வடமலை அளித்த புகாரின் பேரில், மதுரையை சேர்ந்த முகமது மாலிக், கேரளாவை சேர்ந்த வஜிம், சென்னை அரும்பாக்கம் அப்பாஸ் ஆகிய 3 பேரை  கடந்த 24 ஆம் தேதி போலீசார் கைது செய்துள்ளனர். 

இதனிடையே சென்னை ஜே-ஜே நகர் பகுதியை சேர்ந்த செந்தாமரை என்பவரிடமும் 8 லட்சரூபாய் மதிப்பிலான பத்து டன் அரிசியை ஆன்லைனில் வாங்கி கொண்டு இதே கும்பல் ஏமாற்றி மோசடி செய்ததாக  கும்மிடிபூண்டி சிப்காட் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.. இது தவிர தமிழகம் மட்டுமல்ல, மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ் பண்டாரி, மஞ்சள்  வியபாரியிடம்  18லட்சம் ரூபாய் மதிப்பிலான 16 டன் மஞ்சளை பெற்று அவரை பணம் தராமல் ஏமாற்றியுள்ளதும் தெரியவந்துள்ளது. 

இந்நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான "முஸ்தபா முகமது செரிப்" என்பவரை கைது செய்தால் மட்டுமே, இக்கொள்ளை கும்பலின் மோசடி நடவடிக்கைகள் முழுவதும் தெரியவரும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். அதிகவிலை கிடைக்கிறது என்பதற்காக ஆன்லைனில் வரும்  விளம்பரங்களை பார்த்து ஏமாந்திடமால், மக்கள் விழிப்புணர்வோடு செயல்பட்டால் மட்டுமே, இது போன்ற மோசடிகளை முற்றிலுமாக தடுக்கமுடியும்.

மாணவிகளை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்! November 30, 2017

Image

திருவள்ளூர் அருகே பள்ளி மாணவிகளை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளூரில் உள்ள ஆர்.எம்.ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக இருப்பவர் மணிமேகலை. 

இவர் கடந்த 24ம் தேதி, ஒவ்வொரு வகுப்பு தலைவர் மற்றும் துணைத் தலைவர் உள்ள மாணவிகளை அழைத்து கழிப்பறையை சுத்தம் செய்ய சொல்லியுள்ளார். இதனால் அதிர்ச்சியில் உறைந்த மாணவிகள் அழுதபடியே கழிப்பறையை சுத்தம் செய்துள்ளனர். எந்தவித பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் கழிப்பறையை சுத்தம் செய்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மாணவிகள், இரண்டு நாட்களாக சாப்பிடாமல் இருக்கவே பெற்றோரிடம் இது குறித்து தெரிவித்துள்ளனர். 

அதனைத் தொடர்ந்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் பள்ளியில் நேற்று நேரில் விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து, தலைமை ஆசிரியை  மணிமேகலையை பள்ளிகல்வி இயக்குநர் பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

அரசு உதவிகோரும் தேசிய சிலம்பாட்ட மாணவி! November 29, 2017

Image

தேசிய அளவிலான சிலம்பாட்டப் போட்டிகளுக்கு தேர்வாகி உள்ள புதுக்கோட்டை மாணவி, தமிழக அரசு தேவையான உதவிகள் வழங்கினால், பல்வேறு சாதனைகள் புரிய முடியும் என தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கே.ராசியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி வெண்ணிலா, மாவட்ட அளவிலான பல்வேறு சிலம்பாட்டப் போட்டிகளில் பங்கேற்று தொடர் வெற்றிகளை குவித்துள்ளார்.

இந்நிலையில் திருச்செங்கோட்டில் நடந்த மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டு, சாம்பியன் பட்டம் வென்றார். தேசிய அளவிலான சிலம்பாட்டப் போட்டிகளில் பங்கேற்க அவர் தேர்வாகி உள்ளார்.

விவசாயக் குடும்பத்தை சேர்ந்த வெண்ணிலா, ஏழ்மையால் மிகவும் கஷ்டப்படுகிறார். எனவே  தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு சாதனைகள் புரிய, தமிழக அரசு தேவையான உதவிகள் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

புதன், 29 நவம்பர், 2017

காங்கிரஸ் அரசின் சாதனைகளைத் தான் இவான்கா புகழ்ந்ததாக ட்விட்டரில் சிதம்பரம் கருத்து November 29, 2017

Image

இந்தியாவில் 13 கோடிக்கும் மேற்பட்டோர் வறுமை நிலையில் இருந்து மீட்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகள் இவான்கா குறிப்பிட்டுப் பேசியது காங்கிரஸ் அரசின் சாதனை என்று ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்ற இவான்கா, மோடியையும், இந்திய அரசின் செயல்பாடுகளையும் புகழ்ந்து பேசினார். அப்போது, இந்தியாவில் 13 கோடிக்கும் மேற்பட்டோர் வறுமை நிலையில் இருந்து மீண்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

இந்நிலையில், ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவில் 13 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளதாக இவான்கா பேசியது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சாதனை தான் எனக் குறிப்பிட்டுள்ளார். 
 

மேலும், 2004 முதல் 2014 வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நடவடிக்கையால் வறுமையில் இருந்து மீட்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கை 14 கோடிக்கும் மேல் என்றும் சிதம்பரம் விளக்கமளித்துள்ளார். 

அடுத்த 48 மணிநேரத்தைப் பொறுத்தவரை... November 29, 2017

Image

அடுத்த இரண்டு நாட்களில் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் பேசிய வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், வட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகக் கூறினார்.

சென்னையைப் பொறுத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்.

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பலத்த காற்று வீசும் என்றும் பாலச்சந்திரன் எச்சரித்தார்

அனைத்து மணல் குவாரிகளையும் மூட உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு November 29, 2017

Image

தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் இன்று முதல் 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது, 

➤மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை கொண்டு செல்ல அனுமதிக்கலாம். 

➤தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளை இன்று முதல் 6 மாதங்களுக்குள் முழுவதுமாக மூட வேண்டும். 

➤புதிதாக எந்த மணல் குவாரிகளையும் திறக்க கூடாது. 

➤வருங்கால தமிழக சந்ததியின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

➤சட்டவிரோதமாக மணல் எடுத்து செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

➤வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் மூலம், தமிழகத்தின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். 

➤மணல் இறக்குமதிக்கான விதிமுறைகளை வகுக்க வேண்டும். 

➤சோதனை சாவடிகள் வழியாக செல்லும் வாகனங்களை கண்காணிப்பு கேமரா பொருத்தி மணல் கடத்தல் குறித்து கண்காணிக்க வேண்டும். 

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், மணல் குவாரிகள் மீதான உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தடை காரணமாக கட்டுமான தொழில் பெரிதும் பாதிக்கப்படும் என்று லாரி உரிமையாளர் சங்கங்களும், கட்டுமான சங்கங்களும் எச்சரித்துள்ளன.

​கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம்! November 29, 2017

Image

கண்டம் விட்டு கண்டம் பாயும் மேலும் ஒரு புதிய ஏவுகணை சோதனையை வடகொரியா மேற்கொண்டதால், கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வட கொரியாவின் செயலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. 

உலக வல்லாதிக்க சக்தியான அமெரிக்காவிற்கும் அதன் கூட்டு நாடுகளுக்கும் தொடர்ந்து மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருவது வடகொரியா. இதன் காரணமாக எப்போது வேண்டுமானாலும் கொரிய தீபகற்பத்தில் போர் மூளலாம் என்ற நிலை உள்ளது. உலக நாடுகள் தொடர்ந்து கண்டனங்களை பதிவு செய்தாலும் அவற்றிற்கு கொஞ்சம் கூட செவிமடுக்க வட கொரியா தயாராக இல்லை. இதன் தொடர்ச்சியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் மேலும் ஒரு ஏவுகணையை வடகொரியா சோதனை செய்துள்ளதாக தென்கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த ஏவுகணைகள் ஜப்பானுக்கு சொந்தமான பகுதியில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது. 

வடகொரியாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், வடகொரியாவின் செயல்பாடுகளை கையாள தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் உடனடியாக தலையிட வேண்டும் என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தை கூட்ட அழைப்பு விடுத்துள்ளதாகவும், உலக நாடுகள் அனைத்தும் வட கொரியா மீது தடைகளை விதிக்க வேண்டுமென்றும் கேட்டு கொண்டார். 

வடகொரியாவின் செயலால் பெரிதும் பாதிக்கப்படும் நாடுகளில் முக்கியமானது தென் கொரியா. வடகொரியாவின் ஏவுகணை சோதனையை கண்டித்துள்ள தென் கொரிய அதிபர்  MOON JAE ஆத்திரமூட்டும் இது போன்ற நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்பட்டது தான் என்றும் குறிப்பிட்டார். 

அமெரிக்க வல்லாதிக்கம், அதன் கூட்டு நாடுகளின் எதிர்ப்பு இவ்வளவையும் தாண்டி தொடர்ந்து ஏவுகணை சோதனையை மேற்கொள்ளும் வடகொரியாவின் செயலால் கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

இருதரப்பு மோதலால் பலியான இளைஞரின் உயிர்..! November 29, 2017

Image

கடலூர் மாவட்டத்தில் இரு தரப்பு மோதலால் தீகுளித்ததாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

​கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகேயுள்ள சாத்தாவட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். இவருக்கும் அதே ஊரில் இருக்கும் மற்றொரு சமுதாயத்தை சேர்ந்த சிலம்பரசன் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், சிலம்பரசன் கடந்த தீபாவளி  தினத்தன்று நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த ஆனந்த், மது போதையில் தகராறு செய்ததுடன் சிலம்பரசனையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்ட நிலையில், தகவலறிந்து அங்கு வந்த போலீசார் இருவரையும் கைது செய்துள்ளனர். பின்னர் சிறிது நாட்கள் கழித்து இருவரும் சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில், மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டடுள்ளது. இந்த தகராறின்போது, சிலம்பரசன் ஆனந்தை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனால், மனம் உடைந்த ஆனந்த் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து தன் மீது ஊற்றிக்கொண்டு தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனை அறிந்து அங்கு வந்த போலீசார் தீக்காயத்துடன் கிடந்த ஆனந்தை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், ஆனந்தின் உறவினர்கள் ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, ஆனந்த் மீது சிலர் தீ வைத்து விட்டதாகவும், அவர்களை கைது செய்யக் கோரியும் முழக்கமிட்டனர். 

இதனையடுத்து, ஆனந்துடன் தகராறில் ஈடுபட்ட மூன்றுபேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆனந்த், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் சாத்தாவட்டம் கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தீக்குளித்ததாக கூறப்படும் இளைஞர் அளித்த வீடியோ வாக்குமூலத்தில், தாம் குறிப்பிட்ட சிலரால் தீ வைத்து எரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர்களின் பெயர்களையும் அவர் கூறியுள்ளார். ஆனந்த் உயிரிழந்த நிலையில், அவரது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சிலர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், ஆனந்தின் மரணத்திற்குக் காரணமானவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினர்.

ஒரு தரப்பினர் ஆனந்த் தனக்குத்தானே தீ வைத்ததாகக் கூறிவரும் நிலையில், ஆனந்த் மற்றும் அவரது ஆதரவாளர்கள், ஆனந்தை சிலர் தீ வைத்து எரித்ததாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால், அங்கு பதற்றம் நீடித்து வரும் நிலையில், போலீசார் சமாதான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

கமல் யாருடன் கூட்டணி வைத்தால்... கருத்துக் கணிப்பு November 29, 2017

Image

நியூஸ் - 7 தமிழில், மக்கள் மனசுல யாரு ? கருத்துக் கணிப்பில், கமல் யாருடன் கூட்டணி வைத்தால் வெற்றி அதிகம் என்ற கேள்விக்கு, பொதுமக்கள் அளித்த பதில்கள்...

நடிகர் கமல் திமுகவுடன் கூட்டணி வைத்தால் வெற்றி வாய்ப்பு அதிகம் என கூறியுள்ளனர். இதற்கு ஆதரவாக 47 சதவீதத்துக்கும் அதிகமானோர் கருத்து தெரிவித்துள்ளனர். அதே வேளையில், அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் கமலுக்கு வெற்றி வாய்ப்பு என வெறும் 17 சதவீதம் பேர் மட்டுமே கருத்து கூறியுள்ளனர். பாஜகவுடன் கூட்டணி வைத்தால் கமலுக்கு வெற்றி என 8.5 சதவீதம் பேரும், காங்கிரசுடன் கூட்டணி வைத்தால் வெற்றி என 6 சதவீதம் பேரும், இதர கட்சிகளுடன் என சுமார் 20 சதவீதம் பேரும் கருத்து கூறியுள்ளனர்.  

18 வயதில் இருந்து 30 வயதுடையோர், கமல் திமுகவுடன் கூட்டணி வைக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். அதனால் வெற்றி வாய்ப்பு அதிகம் என 44 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் வெற்றி வாய்ப்பு  என 19 சதவீதம் பேரும், பாஜகவுடன் என 9 சதவீதம் பேரும், காங்கிரசுடன் என ஏறக்குறைய 6 சதவீதம் பேரும், இதர கட்சிகளுடன் என 20 சதவீதம் பேரும் கருத்து கூறியுள்ளனர். 

50 வயதுக்கு மேற்பட்டோரில், 52 சதவீதத்துக்கும் அதிகமானோர், திமுகவுடன் கூட்டணி வைத்தால் கமலுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என கருத்து கூறியுள்ளனர். அதே நேரத்தில், அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் வெற்றி வாய்ப்பு அதிகம் என வெறும் 14 சதவீதம் பேர் மட்டுமே கருத்து தெரிவித்துள்ளனர். 

அதிகபட்சமாக ஆண்களில், 48 சதவீதம் பேர், நடிகர் கமல் திமுகவுடன் கூட்டணி வைத்தால் வெற்றி வாய்ப்பு அதிகம் என கருத்து கூறியுள்ளனர். அதே வேளைகளில், பெண்களில் 46 சதவீதம் பேர் கமல் திமுகவுடன் கூட்டணி வைக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் கமலுக்கு வெற்றி வாய்ப்பு என அதிகம் என ஆண்களில் 14 சதவீதம் பேரும், பெண்களில் 20 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். 

இதே போல், கல்வி தகுதி அடிப்படையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், மாணவர்களில் 48 சதவீதம் பேர், திமுகவுடன் கூட்டணி வைத்தால், கமலுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என கூறியுள்ளனர். இளநிலை பட்டதாரிகளில் 46 சதவீதம் பேரும், முதுநிலை பட்டதாரிகளில் 47 சதவீதம் பேரும் கமல் திமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், கமல் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என மாணவர்களில் 17 சதவீதம் பேரும், இளநிலை பட்டதாரிகளில் சுமார் 18 சதவீதம் பேரும், முதுநிலை பட்டதாரிகளில் வெறும் 13 சதவீதம் பேரும் கருத்து கூறியுள்ளனர். 

யாருடன் கூட்டணி வைத்தால் கமலுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்ற கேள்விக்கு, மத அடிப்படையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், இந்துக்களில் 47 சதவீதம் பேரும், முஸ்லீம்களில் 50 சதவீதம் பேரும், கிறித்துவர்களில் 52 சதவீதம் பேரும் திமுகவுடன் கமல் கூட்டணி வைக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், இந்துக்களில் 17.5 சதவீதம் பேரும், முஸ்லீம்களில் 15 சதவீதம் பேரும், கிறித்துவர்களில் 14 சதவீதம் பேரும் என கமல் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

மேகி நூடுல்சில் நச்சுத்தன்மை - ஆய்வில் உறுதி! November 29, 2017

Image

நெஸ்ட்லே நிறுவனத்தின் மேகி நூடுல்சில் நச்சுத் தன்மை இருப்பதாகக் கண்டறியப்பட்டதை அடுத்து நெஸ்லே நிறுவனம், அதன் விநியோகஸ்தர் ஆகியோருக்கு ஷாஜகான்பூர் மாவட்ட நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.

நெஸ்லே மேகி நூடுல்சில் நச்சுத் தன்மை உள்ளதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து மாதிரிகளை எடுத்து ஆய்வகத்துக்குச் சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தச் சோதனையில் நச்சுத் தன்மை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

விஜய் யாருடன் கூட்டணி வைத்தால்... கருத்துக் கணிப்பு November 29, 2017

Image
நியூஸ் - 7 தமிழில், மக்கள் மனசுல யாரு ? கருத்துக் கணிப்பில், விஜய் யாருடன் கூட்டணி வைத்தால் வெற்றி வாய்ப்பு அதிகம் என்ற கேள்விக்கு, பொதுமக்கள் அளித்த பதில்கள்

நடிகர் விஜய், திமுகவுடன் கூட்டணி வைத்தால் வெற்றி வாய்ப்பு அதிகம் என 39 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அதே வேளையில், அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் விஜய்க்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக 22 சதவீதம் பேர் கூறியுள்ளனர். பாஜகவுடன் கூட்டணி வைத்தால் விஜய் வெற்றி வாய்ப்பு என 7 சதவீதம் பேரும், காங்கிரசுடன் கூட்டணி வைத்தால் வெற்றி வாய்ப்பு என 6 சதவீதம் பேரும், இதர கட்சிகளுடன் என 24 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். 

18 வயதில் இருந்து 30 வயதுடையோர், திமுகவுடன் கூட்டணி வைத்தால், விஜய்க்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என 35 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் வெற்றி வாய்ப்பு இருப்பதாக 25 சதவீதம் பேரும், பாஜகவுக்கு ஆதரவாக 7 சதவீதம் பேரும் கருத்து கூறியுள்ளனர்.  காங்கிரசுடனான கூட்டணிக்கு 5 சதவீதம் பேரும், இதர கட்சிகளுடனான கூட்டணிக்கு  25 சதவீதம் பேரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.  

50 வயதுக்கு மேற்பட்டோரில், 42 சதவீதம் பேர்,  திமுகவுடன் கூட்டணி வைத்தால் விஜய்க்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என கூறியுள்ளனர். அதே நேரத்தில், அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் வெற்றி வாய்ப்பு இருப்பதாக  22 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.  

ஆண்களில், 41 சதவீதம் பேரும், பெண்களில் 35 சதவீதம் பேரும் விஜய் திமுகவுடன் கூட்டணி வைத்தால் வெற்றி வாய்ப்பு அதிகம் என  கூறியுள்ளனர். அதே நேரத்தில், அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் வெற்றி வாய்ப்பு என ஆண்களில் 20 சதவீதம் பேரும், பெண்களில்  27 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர். 

இதேபோல் கல்வி தகுதி அடிப்படையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், மாணவர்களில் 39 சதவீதம் பேர், திமுகவுடன் கூட்டணி வைத்தால், விஜய்க்கு வெற்றி வாய்ப்பு என தெரிவித்துள்ளனர். இளநிலை பட்டதாரிகளில் 38 சதவீதம் பேரும், முதுநிலை பட்டதாரிகளில் 37 சதவீதம் பேரும் விஜய் திமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என கூறியுள்ளனர். அதே நேரத்தில், விஜய் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என மாணவர்களில் 24 சதவீதம் பேரும், இளநிலை பட்டதாரிகளில் 21 சதவீதம் பேரும், முதுநிலை பட்டதாரிகளில் 17 சதவீதம் பேரும் பதிவிட்டுள்ளனர். 

யாருடன் கூட்டணி வைத்தால் விஜய்க்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்ற கேள்விக்கு, மத அடிப்படையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், இந்துக்களில் 38 சதவீதம் பேரும், முஸ்லீம்களில் 45 சதவீதம் பேரும், கிறித்துவர்களில் 40 சதவீதம் பேரும் திமுகவுடன் விஜய் கூட்டணி வைக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், இந்துக்களில் 23 சதவீதம் பேரும், முஸ்லீம்களில் 18 சதவீதம் பேரும், கிறித்துவர்களில் 23 சதவீதம் பேரும் என விஜய் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் வெற்றி என கூறியுள்ளனர். 

குஜராத் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் ?


source: Vikatan EMagazine's

சேலம் வந்தார் கேரள மாணவி ஹாதியா! கணவரை பார்க்க முடியாதாம்.. கல்லூரி தாளாளர் கல்பனா!

சேலம்: மதம் மாறி திருமணம் செய்துக்கொண்ட கேரள மாணவி ஹாதியா சேலம் வந்தடைந்தார். கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண் சேலம் ஹோமியோபதி மருத்துவக்கல்லூரியில் படித்து வந்தார். இவர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதல் திருமணம் செய்துகொண்டார். இதுதொடர்பான வழக்கு உச்சநிதமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஹாதியா சேலம் ஹோமியோபதி கல்லூரியில் தனது படிப்பை தொடர உச்சநீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது. 
விமனம் மூலம் கோவை
source: https://tamil.oneindia.com/news/tamilnadu/hadiya-reached-salem-homeopathy-college-after-the-permission/articlecontent-pf277527-303335.html

செல்போனுக்காக சிறுவனை கடத்திய மர்ம நபர்..! November 29, 2017

Image

சிவகங்கை மவட்டத்தில் செல்போனுக்காக சிறுவனை கடத்திய மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

சிவகங்கை பாரதிநகரை சேர்ந்தவர் கூலி தொழிலாளி பிச்சைமணி. இவரது மனைவி புவனேஸ்வரி, தனது 12 வயது மகன் முத்துப்பாண்டிக்கு ஆதார் அட்டை எடுப்பதற்காக,  சிவகங்கை தாலுகா அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர், ஆதார் அட்டை எடுப்பதற்காக உதவி செய்வதாகக் கூறியுள்ளார். மேலும், ஆதார் அட்டைக்கான சான்றிதழ்களை ஜெராக்ஸ் எடுத்து தருவதாகக் கூறிய அந்த நபர், துணைக்கு முத்துப் பாண்டியையும் அழைத்துச் சென்றுள்ளார். அனால் வெகு நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் அச்சமடைந்த புவனேஷ்வரி, தனது மகனை காணவில்லை எனக் கூறி அழுதுள்ளார். 

அப்போது அங்கு நின்ற பொதுமக்கள், முத்துப்பாண்டியை தேடி சென்றபோது, அவன் பேருந்துநிலையம் அருகே நின்றுகொண்டிருந்தான். பின்னர் சிறுவனிடம் விசாரித்தபோது, கடத்திசென்ற மர்ம நபர் தன்னிடம் இருந்த செல்போனை பறித்துகொண்டு, பேருந்து நிலையம் அருகே விட்டுச் சென்றதாக கூறியுள்ளான். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சிறுவனை கடத்தி, செல்போனை பறித்துச் சென்ற நபரை தேடி வருகின்றனர். 

ரோஹிங்கிய அகதிகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள்..! November 29, 2017

Image

மியான்மர் நாட்டில் ரோஹிங்கிய இனத்தைச் சேர்ந்த இளம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்திருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

மியான்மரில் வசித்துவரும் ரோஹிங்கியர்களை அந்நாட்டில் வசிக்கும் உரிமை இல்லை எனக்கூறி பல்வேறு ஆயுதக்குழுக்களால்  அமைப்புக்களால் விரட்டியடிக்கப்பட்டனர். பல ஆண்டுகளாக நீடித்த  இது போன்ற செயல்களால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அகதிகளாக வெளியேறினர். இதற்கிடையே கடந்த ஆகஸ்ட் மாதம் ரோஹிங்கிய ஆயுதக்குழு ஒன்று பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியது. 

இதைத் தொடர்ந்து ராக்கைன் மற்றும் சுற்றுப் புறங்களில் ராணுவத்தினர் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். இதனால் லட்சக்கணக்கான ரோஹிங்கியர்கள் நாட்டை விட்டுத் தப்பியோடும் நிலை ஏற்பட்டது. அண்டை நாடான வங்கதேசத்திற்கு அகதிகளாகச் சென்ற 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர், காக்ஸ் பஜாரில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், ரோஹிங்கிய இனத்தின் இளம் பெண்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாலியல் குற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், சிறுமிகள் பாலியல் அடிமைகளாக விலைக்கு விற்கப்படுவதாகவும் தற்போது அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெடிக்கும் அபாயத்தில் உள்ள இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள எரிமலை! November 29, 2017

Image

இந்தோனேசியாவின் பாலி தீவிலிருந்து புறப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் சிரமங்களை எதிர்கொண்டுவருகின்றனர். 

இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள ஆகங் எரிலை கடந்த இரு மாதங்களாக சீற்றத்தை வெளிப்படுத்தி பொதுமக்களை மிரட்டிக்கொண்டிருந்தது. இதனால் அந்த எரிமலையைச் சுற்றிலும் 8 முதல் 10 கிலோ மீட்டர் தொலைவுக்குள் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற அரசு உத்தரவிட்டது.  இதனால் பலமுறை இரண்டாம் எண் எச்சரிக்கை விடப்பட்டது. இந்த எரிமலைக்கு அருகே உள்ள கிராமப் பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் ஏற்கனவே பாதுகாப்பு முகாம்களுக்குச் சென்றுவிட்டனர். 

இந்நிலையில், எரிமலை எப்போது வேண்டுமானாலும் வெடித்துச் சிதறும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், 4ம் எண் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், கிட்டத்தட்ட ஒரு லட்சம் மக்கள் தற்போது அபாயகரமான பகுதிகளில் வசித்துவருவதாக இந்தோனேசியாவின் தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது.இருப்பினும் ஏராளமான பொதுமக்கள் கால்நடைகள் மற்றும் பல்வேறு காரணங்களைக் காட்டி, இப்பகுதியை விட்டு வெளியேறத் தயக்கம் காட்டிவருகின்றனர். 

இதையடுத்து, அப்பகுதியில் உள்ள அனைவரையும் கட்டாயமாக வெளியேற்ற அரசு அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். எரிமலை வெடிக்கும் அபாயம் காரணமாக பாலி தீவில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு நாடுகளிலிருந்து வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழக ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளராக ராஜகோபால் ஐஏஎஸ் நியமனம்...! November 29, 2017

Image

தமிழக ஆளுநர் மாளிகையில் ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளர் என்கிற புதிய பதவி தற்காலிகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பதவியில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராஜகோபால் நியமிக்கப்பட்டுள்ளார். 

தமிழக ஆளுநரின் முதன்மைச் செயலாளராக இருந்து வரும் ரமேஷ் சந்த் மீனா மாற்றப்பட்டு தமிழ்நாடு தொழில்மேம்பாட்டுக் கழகமான டிட்கோவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஆளுநரின் முதன்மைச் செயலாளர் என்கிற பதவிக்குப் பதிலாக ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளர் என்கிற பதவி உருவாக்கப்பட்டுள்ளது.இந்த பதவிக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரியும் மாநிலங்களுக்கிடையேயான குழுவின் முன்னாள் ஆலோசகருமான ராஜகோபால் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஆளுநரின் கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ராஜகோபாலுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு உரிய அந்தஸ்தும் பொறுப்பும் அளிக்கப்படும் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பதவி ஏற்கும் காலத்திலிருந்து ஒரு வருடம் அல்லது தேவை உள்ளவரை இதில் குறைந்த கால அளவோ அதுவரை ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளர் என்கிற பதவி நடைமுறையில் இருக்கும் என்றும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
source: http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/29/11/2017/rajagopal-ias-appointed-additional-chief-secretary-tamil-nadu-governor