செவ்வாய், 30 நவம்பர், 2021

அதிக அபாயத்தை உருவாக்கும் ஒமிக்ரான்; உலக நாடுகள் தயாராக வேண்டும்: உலக சுகாதார நிறுவனம்

Omicron / ஒமிக்ரா 29 11 2021 இன்றுவரை, ஒமிக்ரானுடன் தொடர்புடைய இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை. இருப்பினும், தடுப்பூசிகள் மற்றும் முந்தைய நோய்த்தொற்றுகளால் உருவான நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து தப்பிக்கும் ஓமிக்ரானின் திறனை மதிப்பிடுவதற்கு கூடுதல் ஆராய்ச்சி தேவை என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

பெரிய அளவில் மாற்றமடைந்துள்ள ஓமிக்ரான் கொரோனா வைரஸ் மாறுபாடு சர்வதேச அளவில் பரவ வாய்ப்புள்ளது. சில இடங்களில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு இந்த தொற்றுநோய் பெரிய அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

தடுப்பூசிகள் மற்றும் முந்தைய நோய்த்தொற்றுகளால் உருவான நோய் எதிர்ப்பு சக்திக்கு எதிரான பாதுகாப்பைத் தவிர்க்கும் அதன் திறனை மதிப்பிடுவதற்கு கூடுதல் ஆராய்ச்சி தேவைப்பட்டாலும், ஒமிக்ரான் உடன் தொடர்புடைய இறப்புகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை.

கடந்த வாரம் முதல் அறிக்கையில், பரவலாக தொற்றுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதை எதிர்பார்த்து, உலக சுகாதார நிறுவனம் அதன் 194 உறுப்பு நாடுகளின் உயர் முன்னுரிமை குழுக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்துவதை விரைவுபடுத்தவும், சுகாதாரப் பணிகளை மேலும் தொடரவும் திட்டங்களை உறுதிப்படுத்தவும் வலியுறுத்தியது.

“ஒமிக்ரான் முன்னோடியில்லாத எண்ணிக்கையில் திடீரென அதிக பிறழ்வுகளைக் கொண்டுள்ளது, அவற்றில் சில தொற்றுநோய்களின் பாதையில் மிக அதிகமான தாக்கத்தை செலுத்துகிறது என்று உலக சுகாதார நிறுவனம் கூறியது.

“இந்த புதிய மாறுபாடு தொடர்பான ஒட்டுமொத்த உலகளாவிய அபாயம்… மிக அதிகமாக மதிப்பிடப்படுகிறது.” என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார தலைமை இயக்குநர், டெட்ராஸ் ஆதானோம் கெப்ரேயசஸ், சுகாதார அமைச்சர்களின் கூட்டத்தின் தொடக்கத்தில் எச்சரிக்கையை எழுப்பினார். இது எதிர்காலத்தில் தொற்றுநோய்களைத் தடுப்பதற்கான சர்வதேச ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“மிகவும் மாறுபாடு அடைந்த ஒமிக்ரான் மாறுபாட்டின் தோற்றம் நமது நிலைமை எவ்வளவு அபாயமானதாக உள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது” என்று டெட்ரோஸ் கூறினார். “தொற்றுநோய்கள் தொடர்பாக உலகிற்கு ஏன் ஒரு புதிய ஒப்பந்தம் தேவை என்பதை ஒமிக்ரான் நிரூபிக்கிறது: நம்முடைய தற்போதைய அமைப்பு, தவிர்க்க முடியாமல் தங்கள் நாடுகளில் காணப்படும் நிலைமை குறித்து மற்றவர்களுக்கு எச்சரிக்கை செய்வதிலிருந்து நாடுகளைத் தடுக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

மே, 2024-க்குள் எதிர்பார்க்கப்படும் உலகளாவிய புதிய ஒப்பந்தம், தொற்றுநோய் பற்றிய தரவுகளைப் பகிர்ந்துகொள்வது மற்றும் வளர்ந்து வரும் வைரஸ்களின் மரபணு வரிசைகள் மற்றும் ஆராய்ச்சியிலிருந்து பெறப்பட்ட தடுப்பூசிகள் போன்ற விவகாரங்களை உள்ளடக்கியிருக்கும்.

பெருகும் கோரிக்கைகள்

ஒமிக்ரான் முதன்முதலில் நவம்பர் 24ம் தேதி தென்னாப்பிரிக்காவில் இருந்து அறிவிக்கப்பட்டது. அங்கு தொற்று எண்ணிக்கை திடீரென உயர்ந்தன.

இந்த ஒமிக்ரான் 12க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. அவற்றில் பல நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளை விதித்து வெளிநாட்டினருக்கு அனுமதி இல்லை என்று கதவை மூடிக்கொள்ள முயற்சித்தன. திங்கள்கிழமை ஜப்பான், இஸ்ரேலுடன் இணைந்து வெளிநாட்டினருக்கு அனுமதி இல்லை என்று எல்லைகளை மூடுவதாகத் தெரிவித்தன.

மேலும் ஆலோசனை நிலுவையில் உள்ள நிலையில், உலக நாடுகள் “சர்வதேச பயண நடவடிக்கைகளை சரியான நேரத்தில் சரிசெய்ய ஆபத்து அடிப்படையிலான அணுகுமுறையை பயன்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் மீண்டும் வலியுறுத்தியது. அதே நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு என்பது அதிக நோயாளிகள் மற்றும் இறப்பு விகிதங்களுக்கு வழிவகுக்கும். பாதிக்கப்படக்கூடிய மக்கள் மீதான தாக்கம் கணிசமானதாக இருக்கும். குறிப்பாக குறைந்த தடுப்பூசி பாதுகாப்பு உள்ள நாடுகளில் அது மேலும் அதிகமாக இருக்கும்” என்று கூறியுள்ளது.

இதனிடையே, தடுப்பூசி போடப்பட்ட நபர்களில், “சிறிய மற்றும் கணிக்கக்கூடிய விகிதத்தில் இருந்தாலும், COVID-19 தொற்று எண்ணிக்கைகளும் தொற்று பரவலும் எதிர்பார்க்கப்படுகின்றன…”

ஒட்டுமொத்தமாக, நோய் எதிர்ப்பில் இருந்து தப்பிக்கும் ஒமிக்ரானின் திறன் அளவுகளில் கணிசமான நிச்சயமற்ற தன்மைகள் உள்ளன. மேலும், வரும் வாரங்களில் கூடுதல் தரவுகள் எதிர்பார்க்கப்படுகிறது.

source https://tamil.indianexpress.com/india/who-says-omicron-poses-very-high-global-risk-world-must-prepare-376104/

221 நாள்கள் அமலில் இருந்த வேளாண் சட்டங்கள்… ரத்து மசோதா சொல்வது என்ன?

 


மக்களவையில் இன்று மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும் மசோதா எவ்வித விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டது. மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவைத் தாக்கல் செய்தார்.

வேளாண் சட்ட ரத்து மசோதா 2021 என்றால் என்ன?

இந்த வேளாண் சட்ட ரத்து மசோதா 2021, மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் நோக்கில் தாக்கல் செய்யப்பட்டது.

  1. அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020
  2. விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020
  3. விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020.

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 19ஆம் தேதி மூன்று சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக அறிவித்தார். பிரதமரின் அறிவிப்பைத் தொடர்ந்து, வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. தற்போது, மக்களவையில் வேளாண் சட்ட ரத்து மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

மசோதாவில் எத்தனை பிரிவுகள் உள்ளன?

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட ஆறு பக்க மசோதாவில் மூன்று பிரிவுகள் மட்டுமே உள்ளன.

  • முதல் பிரிவு சட்டத்தின் தலைப்பை வரையறுக்கிறது: வேளாண் சட்டங்கள் ரத்துச் சட்டம், 2021
  • இரண்டாவது பிரிவு மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான விதிகளை கூறுகிறது.
  • மூன்றாவது பிரிவு, அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் 1955இன் 3வது பிரிவில் இருந்து துணைப்பிரிவு (1A)ஐ நீக்குவது ஆகும்.

துணைப் பிரிவு (1A) நீக்கம் ஏன்?

அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தி, வழங்கல், விநியோகம் போன்றவற்றைக் கட்டுப்படுத்த அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிப்பதற்காக, அத்தியாவசியப் பொருட்கள் சட்டம், 1955 இன் பிரிவு 3 இல் துணைப் பிரிவை (1A) அரசாங்கம் புதிதாக இணைத்தது.

போர், பஞ்சம், திடீர் விலை உயர்வு மற்றும் இயற்கை பேரழிவு போன்ற அசாதாரண சூழ்நிலையில், தானியங்கள், பருப்பு வகைகள், உருளைக்கிழங்கு, வெங்காயம், சமையல் எண்ணெய் வித்துக்கள் மற்றும் எண்ணெய்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவதற்கான நெறிமுறையை துணைப்பிரிவு (1A) வழங்குகிறது.

சட்டத் திருத்தத்தின்படி இம்மாதிரி கட்டுப்பாடுகளைப் பின்வரும் சூழலில்தான் விதிக்க முடியும்: அதாவது, தோட்டப் பயிர்களைப் பொறுத்தவரை அவற்றின் விலை கடந்த 12 மாதங்களின் சராசரி விலையைவிட 100 சதவீதம் அதிகரிக்க வேண்டும். தானியங்களைப் பொருத்தவரை, கடந்த ஐந்து ஆண்டுகளின் சராசரி விலையைவிட 50 சதவீதம் அதிகரிக்க வேண்டும். அப்படி இருந்தாலும்கூட இந்தக் கட்டுப்பாடு உணவுப் பொருட்களைப் பதப்படுத்தும் நிறுவனங்களுக்குப் பொருந்தாது.

வேளாண் சட்டம் ரத்துக்கு அரசு கூறிய காரணம் என்ன?

வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா 2021ஐ தாக்கல் செய்த விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பல்வேறு காரணங்களை முன்வைத்தார்.

அவர் கூறியதாவது, “இந்தச் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளில் ஒரு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தாலும், வேளாண் சட்டங்களின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு ஏற்படுத்த அரசாங்கம் கடுமையாக முயன்றது. பல தரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.

விவசாயிகளுக்கு இருக்கும் வழிமுறைகளை அகற்றாமல், அவர்களின் விளைபொருட்களின் வர்த்தகத்திற்கு புதிய வழிகள் வழங்கப்பட்டது. எங்கு விற்பனை செய்தால் அதிக விலை கிடைக்குமோ அவற்றை தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரம் வழங்கப்பட்டது.

இருப்பினும், வேளாண் சட்டங்களின் செயல்பாடு உச்ச நீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டது.கோவிட் காலத்தில், விவசாயிகள் உற்பத்தியை அதிகரிக்கவும், நாட்டின் தேவைகளை நிறைவேற்றவும் கடுமையாக உழைத்துள்ளனர்.

சுதந்திரத்தின் 75-வது ஆண்டை நாம் கொண்டாடும் போது – “ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்”, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் வளர்ச்சியின் பாதையில் ஒன்றாக அழைத்துச் செல்வதே காலத்தின் தேவை என்பதை குறிக்கிறது.

அதனை கருத்தில் கொண்டு, மூன்று வேளாண் சட்டம் ரத்து செய்யும் மசோதா தாக்கல் செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எத்தனை நாட்கள் அமலில் இருந்தன?

மூன்று வேளாண் சட்டங்களின் பயணம் ஜூன் 5, 2020 அன்று தொடங்கியது. குடியரசுத் தலைவர் மூன்று அவசர சட்டங்களுக்கும் ஒப்புதல் வழங்கினார். அவசர சட்டம் முறையாக செப்டம்பர் 2020 இல் சட்டமாக இயற்றப்பட்டது. ஆனால், மூன்று வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்துவது ஜனவரி 12, 2021 அன்று உச்ச நீதிமன்றத்தால் நிறுத்தப்பட்டது. அதன்படி, இந்த சட்டங்கள் 221 நாட்களுக்கு மட்டுமே அமலில் இருந்தன.

அடுத்து என்ன?

அடுத்ததாக வேளாண் சட்டம் ரத்து மசோதா 2021, மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.

source https://tamil.indianexpress.com/explained/what-is-the-farm-laws-repeal-bill-2021/

300 சாலைகளுக்கு ஒப்பந்தம்: எஸ்.பி வேலுமணி சொன்னது பொய்யா? சவால் விடும் செந்தில் பாலாஜி!

 Minister Senthil Balaji challenge to AIADMK whip SP Velumani, Minister Senthil Balaji, AIADMK whip SP Velumani, 300 road works in coimbator, 300 சாலைகளுக்கு ஒப்பந்தம், எஸ் பி வேலுமணி குற்றச்சாட்டு, சவால் விடும் செந்தில் பாலாஜி, திமுக, DMK, AIADMK, Coimbatore, Tamilnadu

கோவை மாநகராட்சியில் 300 சாலைகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டு நிறுத்தப்பட்டதாகக் கூறும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதற்கான ஆதாரத்தை முடிந்தால் இரண்டு நாட்களில் வெளியிட வேண்டும் என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சவால் விடுத்துள்ளார்.

கோவையில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் கோவை மாவட்டத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 28) நடைபெற்றது.

கோவை ராம்லட்சுமி திருமண மஹாலில் நடைபெற்ற இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில், சிறப்புரை விருந்தினராக தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டார்.

இந்த கலந்தாய்வும் கூட்டத்தில், கோவை மாவட்டத்திற்குத் தேவையான வளர்ச்சி பணிகளுக்கான பட்டியல்களை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன் வழங்கினார்.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய, கொ.ம.தே.க பொதுச்செயலாளர் ஈஸ்வரன்: “கோவை சர்வதேச விமான நிலைய விரிவாக்கப் பணியைத் தமிழக முதல்வர் வேகப்படுத்தியுள்ளார். கோவையில் தேவையான வளர்ச்சித் திட்டங்களை நாங்கள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மனுவாகக் கொடுத்துள்ளோம். அமைச்சர் வாக்குறுதி கொடுத்துள்ளார். கடந்த ஆட்சியில் அனைத்து துறைகளிலும் முறைகேடு நடந்துள்ளது. காவல்துறை இதற்காக நடவடிக்கை எடுத்துக் கொண்டு வருகிறது. கைது செய்யப்பட வேண்டியவர்கள் கண்டிப்பாகக் கைது செய்யப்படுவார்கள்” என்று கூறினார்,

ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி; “கோவை வளர்ச்சி திட்டங்கள் குறித்து 16 பக்க கோரிக்கைகள் என்னிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகள் தமிழக முதல்வரிடம் ஒப்படைக்கப்படும். தமிழ்நாடு முதல்வர் இந்த கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றுவார்.” என்று கூறினார்.

அப்போது, கோவையில் 300 சாலைகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டு நிறுத்தப்பட்டதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி குற்றம்சாட்டியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “எந்தெந்த சாலைப் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. எந்தெந்த சாலைகளுக்குத் திட்ட மதிப்பீடு வழங்கப்பட்டது, அதன் வேலை உத்தரவு, வேலை தொடக்கம் ஆகியவற்றின் பட்டியலைத் தெளிவாக வெளியிடட்டும்.

நிர்வாக அனுமதி இல்லாமல், டெண்டர் கூட விடாமல் எவ்வித விதிமுறைகளையும் பின்பற்றாமல், வெறும் தேர்தலை மட்டும் கருத்தில் கொண்டு பொதுமக்களை ஏமாற்ற வேண்டும் என்பதற்காக அந்த சாலைப் பணிகள் தொடங்கப்பட்டது. நிதி ஆதாரங்கள் இல்லாமல் தொடங்கப்பட்ட பட்டியலை இரண்டு நாட்களுக்குள் வெளியிடட்டும்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் குற்றச்சாட்டுகளுக்கு சவால் விடுத்துப் பேசினார்.

முன்னதாக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி கோவையில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 26) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அதிமுக முன்னாள் அமைச்சரும், அதிமுக சட்டமன்ற கொறடாவுமான எஸ்.பி. வேலுமணி, “திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு கோவையில் சாலைப் பணிகள் உட்பட 300 பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் மக்கள் சிரமப்பட்டுவருகின்றனர். மக்கள் பிரச்சனைகளைத் தமிழக அரசு உடனடியாக தீர்க்காவிட்டால் ஒருவார காலத்திற்குள் தமிழ்நாடு அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என்று விமர்சனம் செய்திருந்தார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில், திமுக 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது. இந்த சூழலில், கோவையில் சாலைப் பணிகள் உட்பட 300 பணிகள் ஒப்பந்தம் போடப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளன என்று எஸ்.பி வேலுமணி குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு 2 நாட்களில் ஆதாரங்களை வெளியிடட்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்துள்ளார்.

இதே போல, சில வாரங்களுக்கு முன்பு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மின்சாரம் கொள்முதலில் முறைகேடு நடந்துள்ளதாகவும் ஆதாரங்கள் வெளியிடப்படும் என்று கூறி மின்சார கொள்முதல் கணக்கை வெளியிட்டபோது, அதில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை. இது எல்லாமே அதிமுக ஆட்சிக் காலத்தில் கடைபிடித்த நடைமுறையைக் கடைபிடிக்கிறோம். எக்ஸெல் ஷீட் வைத்துக்கொண்டு ஆதாரம் என சொல்லக்கூடாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி சளைக்காமல் பதிலடி கொடுத்தார். அந்த வரிசையில் அமைச்சர் செந்தில் பாலாஜி, விமர்சனங்களை முன்வைத்த அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதற்கான ஆதாரங்களை 2 நாட்களில் வெளியிட வேண்டும் என்று சவால் விடுத்துள்ளார். இதனால், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வைத்த குற்றச்சாட்டு உண்மையா பொய்யா என்ற விவாதம் எழுந்துள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/minister-senthil-balaji-challenge-to-aiadmk-whip-sp-velumani-on-300-road-works-in-coimbatore-376010/

மனித கழிவுகளை அகற்றும் புதிய ரோபோ… அசத்தும் சென்னை ​​ஐஐடி மாணவர்கள்!

 IIT-Madras students develop a robot to clean septic tanks Tamil News:

Chennai city Tamil News: மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலம் பல நாடுகளில் ஒழிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆகியும் இன்னும் தொடர்கிறது. கடந்த 1993ம் ஆண்டு மனித கழிவுகளை மனிதர்கள் அப்புறப்படுத்த, மத்திய அரசு தடை விதித்தது. அந்த தடையை 2013ம் ஆண்டில் மீண்டும் வலுப்படுத்தியது. மேலும், இது தொடர்பான விழிப்புணர்வை, போர்கால அடிப்படையில், விளிம்பு நிலை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தியது. ஆனால், அதுபற்றிய எந்த விழிப்புணர்வும், இன்று வரை பெரிய அளவில் ஏற்படுத்தப் படவில்லை.

Chennai city Tamil News: NEW robot to clean septic tanks by IIT-Madras students

கழிவு நீர் தொட்டி அடைப்பு, மழை நீர் வடிகால் போன்றவற்றில் ஏற்படும் அடைப்புகளுக்கு, இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசின் அந்த அறிவிப்பில் உத்தரவிடப் பட்டது. ஆனால், இத்தகைய வேலைகளில், துப்புரவு தொழிலாளர்களே அதிகளவில், முறைகேடாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் போது ஒவ்வொரு ஐந்து நாட்களுக்கும் ஒருவர் உயிரை இழக்கிறார் என சஃபாய் கரம்சாரிஸ் தேசிய ஆணையத்தின் (NCSK) 2018 அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 1.8 லட்சத்திற்கு அதிகமானோர் இந்த வேலை தொடர்ந்து செய்து வருவதாகவும், தற்போது அதிகாரப்பூர்வ எண்ணிக்கை இல்லை எனவும் சஃபாய் கரம்சாரிஸ் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

மனித கழிவுகள், சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய இயந்திரமயமாக்கப்பட்ட அமைப்புகளை சில மாநிலங்கள் தற்போதுதான் பயன்படுத்த முயற்சி எடுத்து வருகின்றன. ஆனால், அவை இன்னும் நாடு முழுதும் செயல்படுத்தப்படவில்லை. சமீபத்தில் டெல்லி அரசு கழிவுநீரை சுத்தம் செய்ய 200 இயந்திரமயமாக்கப்பட்ட அமைப்புகளை அறிமுகப்படுத்தியது. அவை ஒவ்வொன்றும் ரூபாய் 40 லட்சத்திற்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், மனித கழிவுகளை அகற்றும் புதிய ரோபோ ஒன்றை சென்னை​​ ஐஐடி மாணவர்கள் கண்டுபிடித்து அசத்தியுள்ளார். இந்த புதிய ரோபோ குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் ‘தி இந்திய எக்ஸ்பிரஸ் தமிழ்’ யூடியூப் தளத்திற்கு அளித்த பேட்டியில் சோலினோஸ் நிறுவனத்தின் பொறியாளர்கள் பவேஷ் மற்றும் சிவ சுப்பிரமணியம் விளக்கியுள்ளனர்.

இதேபோல் தண்ணீர் குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகள், கசிவுகள் போன்றவற்றை கண்டுபிடிக்க “என்டோபோட்” என்ற ரோபோ ஒன்றையும் சோலினோஸ் நிறுவனத்தினர் கண்டுபிடித்துள்ளனர். அதன் செயல்பாடு குறித்து பொறியாளர் பார்த்தசாரதி என்பவர் நமக்கு விளக்கமளித்து இருக்கிறார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-city-tamil-news-new-robot-to-clean-septic-tanks-by-iit-madras-students-376202/

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை; தொடரும் கனமழை; எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை?

 கனமழை காரணமாக இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. கனமழை காரணமாக காஞ்சி, செங்கல்பட்டு, நெல்லை, தேனி, கடலூர், ராமநாதபுரம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அறிவித்துள்ளது மாவட்ட நிர்வாகம். மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, திண்டுக்கல் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்கம்

வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் நிலை உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,   தெற்கு அந்தமான் கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அதனைத் தொடர்ந்து மத்திய கிழக்கு அரபிக்கடலில் டிசம்பர் 1ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை

சென்னையைப் பொறுத்தமட்டில் வானம் மேகத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கான வாய்ப்பு உள்ளது என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு

கடலூரில் அதிகபட்சமாக 17 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கன்னியாகுமரியின் சிவலோகம் பகுதியில் 16 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சித்தாறு பகுதியில் 13 செ.மீ மழையும், திருவள்ளூர் மாவட்டத்தின் உத்துக்கோட்டையில் 12 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. கடலூரின் பரங்கிப்பேட்டை மற்றும் குமரியின் தக்கலை போன்ற பகுதிகளில் 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-weather-chennai-rains-school-leave-new-depression-in-bay-of-bengal-376164/

முன்னாள் அமைச்சர் மீது மோசடி வழக்கு: அமலாக்கத்துறை தீவிர விசாரணை

 

Vijaya baskar, C vijaya baskar, raid, vigilance department raid, IT raid

அமலாக்கத்துறை மண்டல அலுவலகத்தில் திங்கள் கிழமை அன்று ஆஜரானார் முன்னாள் தமிழக அமைச்சர் சி. விஜயபாஸ்கர். மோசடி வழக்கு ஒன்று தொடர்பாக அமலாக்கத்துறையினர் அவருக்கு சம்மன் அனுப்பிய நிலையில் நேரில் ஆஜரானார் அவர். 2016ம் ஆண்டு கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலியில் பதிவு செய்யப்பட்ட பணமோசடி வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அவருக்கு சம்மன் வழங்கப்பட்டது.

கேரளாவில் உள்ள பிரபல நகைக் கடை ஒன்றில் 2.5 கோடிக்கு நகைகளை வாங்கிவிட்டு பணத்தை திருப்பி செலுத்தவில்லை என்று ஆலப்புழாவைச் சேர்ந்த ஷர்மிளா என்ற பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகளுடன் தொடர்பு இருப்பதாக கூறி நகைகளைப் பெற்றுக் கொண்டதாக காவல்துறை விசாரணையில் கூறப்படுகிறது. ஆனால் அந்த பெண் முறையாக, வாங்கிய நகைகளுக்கு பணம் செலுத்தவில்லை.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது ஷர்மிளா, தான் அந்த நிறுவனத்தை ஏமாற்றவில்லை என்றும் மாறாக தன்னுடைய பணிக்கு தரப்பட்ட கமிஷன் இது என்றும் கூறியுள்ளார். அந்த நகைக் கடையில் இருந்து அதிக அளவு தங்கத்தை விஜயபாஸ்கரை வாங்க வைத்ததாகவும் அதற்கான கமிஷன் தான் இந்த நகை என்றும் ஷர்மிளா கூறியுள்ளார். இது தொடர்பான விசாரணையில் முன்னாள் அமைச்சரின் வாக்குமூலத்தை பதிவு செய்ய சம்மன் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தன்னுடைய செய்தியில் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இது தொடர்பாக சென்னையில் முன்னாள் அமைச்சரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. கமிஷனே இவ்வளவு அதிகம் இருந்தால் வாங்கப்பட்டிருக்கும் தங்கத்தின் மதிப்பு நிச்சயமாக மிகவும் அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுவதால் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஏற்கனவே பல்வேறு வழக்குகளை சி. விஜயபாஸ்கர் எதிர்கொண்டு வருகின்ற நிலையில் விஜயபாஸ்கர், ஷர்மிளா மற்றும் தங்க நகைக்கடை கொடுத்துள்ள வாக்குமூலங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கேரளாவைச் சேர்ந்த ஷர்மிளா ராஜீவ் என்பவர், திருநெல்வேலியில் என் மீது ஏற்கனவே ஒரு புகாரில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். எனது வழக்கறிஞர் மூலம் அவர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளேன். குற்றப் பின்னணி கொண்ட ஷர்மிளா தொடர்பான சம்மன் அடிப்படையில் நான் அமலாக்கத்துறை முன்பு ஆஜரானேன் என்று அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/cheating-case-enforcement-directorate-quizzes-c-vijayabaskar-376216/

அரசு அலுவலகங்களில் பிரதமர் புகைப்படம்; தமிழக அரசை வலியுறுத்தும் ....

 30 11 2021 

தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தி மதுரை மாவட்ட பாஜகவினர் மாவட்ட ஆட்சியர் மூலம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், பிற மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படும் மாநில அரசின் விழாக்களில் அமைக்கப்பட்டுள்ள பதாகைகளில் பிரதமர் நரேந்திர மோடியின் படங்களை வைக்க வேண்டும் என்று மதுரை மாவட்ட பாஜக மதுரைவினர் நேற்று (திங்கள்கிழமை) மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் மூலம் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியரிடம் பிரதமர் மோடி புகைப்படத்துடன் கோரிக்கை வைத்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த, பாரதிய ஜனதா கட்சியின் மதுரை மாவட்டத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான சரவணன், ”அரசு அலுவலகங்களில் நாட்டின் பிரதமரின் படத்தை மாட்டுவதற்கு நாங்கள் திமுகவிடம் கோரிக்கை வைக்கவில்லை. தமிழக அரசிடம் தான் கோரிக்கை வைக்கிறோம். அந்தத் திட்டங்களுக்கு மத்திய அரசின் பங்களிப்பும் உள்ளது என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதால், முதல்வர் படத்துடன் பிரதமரின் படத்தைப் பயன்படுத்த வலியுறுத்துகிறோம்.

1990 ஆம் ஆண்டு பொது (பொது I) துறையால் வெளியிடப்பட்ட GO இன் அடிப்படையில் மட்டுமே அவர்களின் கோரிக்கை உள்ளதாகவும், அந்த அரசாணையின்படி பிரதமர் உட்பட ஒன்பது தலைவர்களின் படங்கள் பொது அலுவலகங்களில் இடம்பெறலாம் என்றும், அதன்படி எங்கள் கோரிக்கை உள்ளது என்றும் மதுரை மாவட்ட பாஜக தலைவர் சரவணன் கூறினார்.

மாநிலத்தில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்களில் கூட முதல்வரின் படங்கள் பயன்படுத்தப்படுகின்றன, பிரதமரின் படங்கள் அல்ல. பிரதமரின் புகைப்படமும் இடம்பெற வேண்டும். முதல்வரின் காப்பீட்டுத் திட்டம் எனப்படும் ரூ.5 லட்சம் குடும்பக் காப்பீட்டுத் திட்டத்தில், மத்திய அரசின் பங்களிப்பு ரூ.3 லட்சமாகும்’’ என்று சரவணன் கூறினார்.

மாநில அரசு நிகழ்வுகள் மற்றும் அலுவலகங்களில் பிரதமரின் படத்தைப் பயன்படுத்தி பல மாநில அரசுகள் மத்திய அரசுக்கு உரிய முக்கியத்துவத்தை வழங்கி வருகின்றன. மத்திய அரசின் கீழ் மாநில அரசு உள்ளது, ஆனால் தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பிரதமரின் படங்கள் பயன்படுத்தப்படவில்லை என்று சரவணன் கூறினார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் எங்களின் மனு மீது நடவடிக்கை எடுக்க 15 நாட்கள் காத்திருப்போம் என்றும், எங்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்வோம் என்றும் மாவட்ட பாஜக தலைவர் சரவணன் கூறினார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-bjp-demands-pm-modi-pictures-displayed-on-govt-offices-376221/

ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழகத்தில் 12 மாவட்டப் பள்ளிகளுக்கு விடுமுறை

  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமமாக தமிழகம் புதுச்சேரி மற்றும் ஆந்திராவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பியுள்ள நிலையில், அதிகரித்து வரும் மழை நீரால் ஏராமான கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் நிலை உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  தெற்கு அந்தமான் கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அதனைத் தொடர்ந்து மத்திய கிழக்கு அரபிக்கடலில் டிசம்பர் 1ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது..

இதில் நாளை அந்தமான் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்தியப் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மதுரை, திருநெல்வேலி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  இதில் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

காஞ்சி, செங்கல்பட்டு, நெல்லை, தேனி, கடலூர், ராமநாதபுரம், மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி, திருவள்ளூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-rain-low-pressure-from-andaman-and-bay-of-bengal-376117/