வியாழன், 12 ஜூன், 2014

திருக்குர்ஆனுடனும் நபிவழியுடனும் நேரடியாக மோதும் மவ்லிது:



இவ்வளவு மோசமான விளைவுகளை இந்த மவ்லிதுகள் சமுதாயத்தில் ஏற்படுத்தி இருப்பதுடன் திருக்குர்ஆனுடனும் நபிவழியுடனும் நேரடியாக மோதக் கூடியதாகவும் அமைந்துள்ளன. ஸுப்ஹான மவ்லிதில் உள்ள சில வரிகளை நாம் ஆராய்ந்தால் இதை உணரலாம்

பாவங்களை நபிகள் நாயகம் மன்னிக்க முடியுமா

كَفِّرُوْا عَنِّيْ ذُنُوْبِيْ
وَاعْفُ لِيْ عَنْ سَيِّئَاتِ

என் பாவங்களை நன்மைகளாக மாற்றுங்கள்!
என் தீமைகளை அலட்சியம் செய்யுங்கள்!
'யா நபி (நபியே!)' என்று அழைத்துப் பாடப்படும் முதல் பாடலின் சில வரிகள் இவை.

يَا مَنْ تَمَادَى وَاجْتَرَمْ
تُبْ وَاعْتَرِفْ وَارْجُ الْكَرَمْ
وَلُذْ بِمَنْ حَلَّ الْحَرَمْ

குற்றமும் பாவமும் செய்து விட்டவனே!
மன்னிப்புக் கேள்! குற்றத்தை ஒப்புக்கொள். அருளை எதிர்பார்.
சரணடைந்து விடு! (இத்தனையையும் ஹரமில் (மதீனாவில் தங்கியுள்ளவர்களிடம் கேள்!'
சல்லூ அலாகைரில் இபாத்' என்ற பாடலின் சில வரிகள் இல்லை.

وَاعْطِفْ عَلَيَّ بِعَفْوٍ مِنْكَ يَشْمَلُنِيْ

உங்களின் மன்னிப்பை என் மீது சொரிந்து என் மீது அருள் புரியுங்கள்.
யாஸையிதீ' என்ற பாடலின் வரி இது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் நிலைக்கு உயர்த்தும் இந்த வரிகளை உண்மை முஸ்லிம்கள் ஏற்க முடியுமா? குர்ஆனையும் நபிவழியையும் மதிக்கக் கூடியவர்கள் இந்த நச்சுக் கருத்தை ஆதரிக்க முடியுமா? பாவங்கள் செய்தோர் அதற்கான மன்னிப்பை இறைவனிடம் தான் பெற வேண்டும். இது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகும்.

அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள்.
(அல்குர்ஆன் 3:135)

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத் தெரிவிப்பீராக!
(அல்குர்ஆன் 39:53)

தன்னைத் தவிர வேறு எவரும் பாவங்களை மன்னிக்க முடியாது எனவும் அனைத்துப் பாவங்களையும் மன்னிக்கும் அதிகாரம் தன்னிடம் மட்டுமே உள்ளது எனவும் அவற்றில் வேறு யாருக்கும் பங்கில்லை எனவும் இந்த வசனங்கள் மூலம் இறைவன் அறிவிக்கிறான்.

இதனால் தான் எத்தனையோ நபிமார்கள் சில நேரங்களில் இறைவனின் கட்டளைக்கு மாறு செய்த போது, சிறிய தவறுகள் அவர்களிடம் நிகழ்ந்து விட்ட போது அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டுள்ளனர். அல்லாஹ் தங்களை மன்னிக்காவிட்டால் தாங்கள் பெரு நஷ்டம் அடைய நேரும் எனவும் கூறியுள்ளனர்.

ஆதம் (அலை அவர்களும் அவர்களின் மனைவியும் இறைக்கட்டளைக்கு மாறு செய்த பின்
எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோராவோம் என்று அவ்விருவரும் கூறினர்.
(அல்குர்ஆன் 7:23)

இறைவன் தம்மை மன்னிக்காவிட்டால் தாம் பெரு நஷ்டம் அடைய நேரும் என்று இருவருமே ஒரே குரலில் கூறியுள்ளனர்.

நூஹ் (அலை அவர்கள் தமக்கு ஞானமில்லாத விஷயம் பற்றிப் பிரார்த்தனை செய்த போது இறைவன் அவர்களைக் கடிந்து கொள்கிறான். அவர்களும் கூட ஆதம் (அலை அவர்களைப் போலவே அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடியுள்ளனர்.

நூஹ், தம் இறைவனை அழைத்தார். என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன். உனது வாக்குறுதியும் உண்மையே. நீயே தீர்ப்பு வழங்குவோரில் மேலானவன் என்றார். நூஹே! அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். இது நல்ல செயல் அல்ல. உமக்கு அறிவு இல்லதாது பற்றி என்னிடம் கேட்காதீர்! அறியாதவராக நீர் இருக்கக் கூடாது என உமக்கு அறிவுரை கூறுகிறேன் என்று அவன் கூறினான். இறைவா! எனக்கு அறிவு இல்லாதது பற்றி உன்னிடம் கேட்பதை விட்டும் உன்னிடமே நான் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ என்னை மன்னித்து அருள் புரியா விட்டால் நஷ்டமடைந்தவனாக ஆகி விடுவேன் என்று அவர் கூறினார். (அல்குர்ஆன் 11:45, 46, 47)

மூஸா (அலை அவர்கள் ஒருவரைக் கொலை செய்து விட்டு வருந்தும் போது அதற்காகவும் அல்லாஹ்விடமே பாவமன்னிப்புத் தேடினார்கள்.

அவ்வூரார் கவனமற்று இருந்த நேரத்தில் அவர் அங்கே சென்றார். அங்கே இரண்டு மனிதர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்ததைக் கண்டார். ஒருவர் இவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர். இன்னொருவர் இவரது எதிரியின் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர் எதிரிச் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு எதிராக இவரிடம் உதவி தேடினார். உடனே மூஸா ஒரு குத்து விட்டார். உடனே அவன் கதை முடிந்து விட்டது. இது ஷைத்தானின் வேலை. அவன் வழி கெடுக்கும் தெளிவான எதிரி என்றார். என் இறைவா! எனக்கே நான் தீங்கு இழைத்து விட்டேன். எனவே என்னை மன்னிப்பாயாக! என்றார். அவன் அவரை மன்னித்தான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். என் இறைவா! நீ எனக்கு அருள் புரிந்ததால் குற்றவாளிகளுக்கு உதவுபவனாக இனிமேல் இருக்க மாட்டேன் என்றார். (அல்குர்ஆன் 28:15, 16, 17.

மூஸா (அலை அவர்களின் சமுதாயத்தவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்துப் பின்னர் தங்கள் தவறை உணர்ந்த போது மூஸா (அலை அவர்களிடம் பாவ மன்னிப்புக் கோராமல் அல்லாஹ்விடமே மன்னிப்புக் கேட்டுள்ளனர். தாங்கள் வழி தவறி விட்டதை உணர்ந்து அவர்கள் கைசேதப்பட்ட போது எங்கள் இறைவன் எங்களுக்கு அருள் புரிந்து, எங்களை மன்னிக்கா விட்டால் நஷ்ட மடைந்தோராவோம் என்றனர்.
(அல்குர்ஆன் 7:149)

நபிமார்களில் எவருக்கும் வழங்கப்படாத ஆற்றலும் அதிகாரமும் வழங்கப்பட்ட சுலைமான் (அலை அவர்களும் கூட தமது தவறுக்காக அல்லாஹ்விடமே மன்னிப்புக் கோரியுள்ளனர். ஸுலைமானை நாம் சோதித்தோம். அவரது சிம்மாசனத்தில் (அவரை ஒரு சடலமாகப் போட்டோம். பின்னர் அவர் திருந்தினார். என் இறைவா! என்னை மன்னித்து விடு! எனக்குப் பின் யாருக்கும் கிடைக்காத ஆட்சியை எனக்கு வழங்கு! நீயே வள்ளல் எனக் கூறினார்.
(அல்குர்ஆன் 38:34, 35)

திருக்குர்ஆனில் மிகவும் உயர்வாக இறைவனால் பாராட்டப்பட்ட இப்ராஹீம் (அலை அவர்களும் அல்லாஹ் தான் தமது தவறுகளை மன்னிக்க முடியும் என்று கூறியுள்ளனர். அவனே என்னைப் படைத்தான். அவனே எனக்கு நேர் வழி காட்டுகிறான். அவனே எனக்கு உணவளித்து (தண்ணீர் பருகச் செய்கிறான். நான் நோயுறும் போது அவனே எனக்கு நிவாரணம் தருகிறான். அவனே என்னை மரணிக்கச் செய்கிறான். பின்னர் எனக்கு உயிர் கொடுப்பான். தீர்ப்பு நாளில் என் தவறை அவன் மன்னிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
(அல்குர்ஆன் 26:78, 79, 80, 81, 82)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நியாயமான காரணமின்றிப் போருக்குச் செல்லாமல் பின்தங்கி விட்ட மூன்று நபித்தோழர்களின் குற்றத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மன்னிக்கவில்லை. இறைவன் மன்னித்து விட்டதாக அறிவிக்கும் வரை அம்மூவரையும் விலக்கி வைத்தனர். இறைவன் அவர்களை மன்னித்துவிட்டதாக அறிவித்த பின்பே அவர்களை இணைத்துக் கொண்டார்கள்.

தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்ட அந்த மூவரையும் (இறைவன் மன்னித்தான். பூமி விசாலமானதாக இருந்தும் அவர்களைப் பொறுத்த வரை அது சுருங்கி விட்டது. அவர்களது உள்ளங்களும் சுருங்கி விட்டன. அல்லாஹ்வை விட்டு (தப்பிக்க அவனிடமே தவிர வேறு போக்கிடம் இல்லை என்று அவர்கள் நம்பினார்கள். பின்னர் அவர்கள் திருந்துவதற்காக அவர்களை மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
(அல்குர்ஆன் 9:118 (புகாரி 4418, 4677 ஆகிய ஹதீஸ்களில் முழு விபரம் காணலாம்.)

மன்னிக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது என்பதால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு நடந்துள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன் பின் பாவங்களைத் தான் மன்னித்து விட்டதாக (அல்குர்ஆன் 48:2 இறைவன் கூறுவதும்,
'இறைவா! என்னை மன்னித்து அருள்புரி' என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 23:118)

என்று இறைவன் கட்டளையிடுவதும் மன்னிக்கும் அதிகாரம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் கூட இல்லை என்பதை ஐயத்திற்கிடமின்றி விளக்குகின்றன.

'அல்லாஹ்விடம் நான் தினமும் நூறு தடவை பாவமன்னிப்புக் கேட்கிறேன்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி&ள்ளனர்
அறிவிப்பவர்: அல் அகர் (ரலி)
நூல்: முஸ்லிம் 4870

பாவமன்னிப்பு வழங்குவது அல்லாஹ்வின் தனி அதிகாரம் என்பதற்கு இவை உறுதியான சான்றுகள்! இத்தனை சான்றுகளுடனும் மேற்கண்ட மவ்லிது வரிகள் நேரடியாக மோதுவதால் மவ்லிது ஓதுவது பாவம் என்பதை அறியலாம்.