திங்கள், 2 மார்ச், 2026

கமேனி கொலை ஒரு அநாகரீகமான படுகொலை'... சீறிய புதின்

 


Russian President Vladimir Putin

'கமேனி கொலை ஒரு அநாகரீகமான படுகொலை'... சீறிய புதின்; ரஷ்யாவிற்கு ஈரான் ஏன் முக்கியம்?

ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடுமையாகச் சாடியுள்ளார். கமேனியின் கொலையை "அநாகரீகமான படுகொலை" (Cynical Murder) என்று அழைத்த புதின், இது சர்வதேச சட்டங்கள் மற்றும் மனித தர்மத்தின் அனைத்து நெறிமுறைகளையும் மீறும் செயல் என்று கூறினார். சுதந்திரமான ஐநா உறுப்பு நாட்டின் மீது நடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கை இது என ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவிற்கு ஈரான் ஏன் முக்கியம்?

ரஷ்யாவும் ஈரானும் நீண்டகால நட்பு நாடுகளாக உள்ளன. 2025-ல் இரு நாடுகளும் 'விரிவான மூலோபாய கூட்டாண்மை' (Strategic Partnership) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு ஈரான் பெரும் உதவியாக இருந்தது. 2,000 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் 'ஷாஹெட்' (Shahed) தற்கொலை ட்ரோன்களை ஈரான் வழங்கியது. 'சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடம்' (INSTC) மூலம் ரஷ்யா தனது பொருட்களை பந்தர் அப்பாஸ் மற்றும் சபஹார் துறைமுகங்கள் வழியாக உலக நாடுகளுக்கு அனுப்ப ஈரான் உதவுகிறது. இது உக்ரைன் போரினால் ஐரோப்பா மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளில் ரஷ்யாவிற்கு ஏற்பட்டுள்ள வணிகச் சிக்கல்களைத் தவிர்க்க உதவுகிறது.

அணுசக்தி ஒத்துழைப்பு

ஈரானின் ஒரே செயல்பாட்டு அணுமின் நிலையமான புஷெர் (Bushehr) அணுமின் நிலையத்தை ரஷ்யாதான் கட்டியது. சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலுக்குப் பிறகும், ரஷ்யாவின் 'ரோசாட்டம்' நிறுவன ஊழியர்கள் அங்கு தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். கடந்த ஆண்டு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கூட இந்த அணுமின் நிலையம் இலக்கு வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


ஐநா மற்றும் சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) ஈரானுக்கு எதிராகக் கொண்டு வந்த தீர்மானங்களை ரஷ்யாவும் சீனாவும் தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளன. அதேபோல், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தபோது, ஐ.நா.வில் ரஷ்யாவிற்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் ஈரான் வாக்களிக்காமல் (Abstain) நடுநிலை வகித்தது.

ஈரானின் தற்போதைய நிலை 

கமேனி கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, அமெரிக்க ராணுவத் தளங்களைக் கொண்டுள்ள ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, கத்தார் போன்ற நாடுகள் மற்றும் டெல் அவிவ் மீது ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. தற்காலிகமாக ஈரானை வழி நடத்த அயதுல்லா அராஃபி நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், ஈரானின் தேசிய பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி தான் தற்போது நாட்டைத் திரைமறைவில் இருந்து வழிநடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. ஈரானில் ஏற்பட்டுள்ள இந்த ஆட்சி மாற்றம் மற்றும் போர்ச் சூழல், கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என உலகத் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

source https://tamil.indianexpress.com/international/russian-president-vladimir-putin-condemns-ayatollah-khameneis-cynical-murder-why-is-iran-important-to-moscow-11167026