வியாழன், 1 மே, 2025

100 நாள் வேலைத் திட்டம்: தமிழ்நாட்டிற்கு ரூ.2,999 கோடியை விடுவித்தது மத்திய அரசு

 

MGNREGS

100 நாள் வேலைத் திட்டம் - ரூ.2,999 கோடியை விடுவித்தது மத்திய அரசு

நாடு முழுவதும் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலைவாய்ப்பு மக்களுக்கு வழங்கப்படுகிறது. அதாவது கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை உருவாக்கியது. இதன்மூலம் கிராமப்புற மக்களுக்கு 100 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கப்படும். இதன்மூலம் பெரும்பாலான மக்கள் பயன்பெறும் நிலையில், இந்த வேலைவாய்ப்பில் சேர்பவர்களுக்கு தனியாக அட்டையும் வழங்கப்படுகிறது.


இந்நிலையில், இந்த கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதி விடுவிக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது மத்திய அரசு அதனை விடுவித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டிற்கு 100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதி விடுவிக்கப்படாமல் இருந்த நிலையில், தமிழக அரசு அந்த நிதியை விடுவிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. மேலும், தற்போது மத்திய அரசு ரூ.2 ஆயிரத்து 999 கோடி நிதியை விடுவித்துள்ளதாக அறிவித்துள்ளது.

முந்தைய ஆண்டின் மொத்த நிலுவைத் தொகை சுமார் ரூ.3 ஆயிரத்து 170 கோடி. அனுமதிக்கப்பட்ட ரூ.2 ஆயிரத்து 851 கோடியில், பட்டியலினர், பழங்குடியினர் மற்றும் பிற பயனாளிகள் முறையே ரூ.740 கோடி, ரூ .43 கோடி மற்றும் ரூ.2 ஆயிரத்து 68 கோடி பெறுவார்கள் என்று மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் இயக்குநர் சஞ்சய் குமார் சமீபத்தில் மத்திய அமைச்சகத்தின் ஊதியம் மற்றும் கணக்கு அதிகாரிக்கு அனுப்பிய தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடிதத்தின் நகல் தமிழக அரசுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இதுவரை, மாநில அரசுக்கு, ஆயிரத்து 111 கோடி ரூபாய் வந்துள்ளது. 2024-25ம் ஆண்டிற்கான நிலுவைத் தொகை ஆயிரத்து 246 கோடி. மத்திய அரசிடமிருந்து மீதமுள்ள தொகையை மாநில அரசு பெறும் என்று நம்புகிறது. கடந்த ஆண்டு நவம்பர் முதல், ஊதியம் வழங்கப்படாதது பயனாளிகளுக்கும், மாநில அரசுக்கும் கவலை அளிக்கும் விஷயமாக இருந்தது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் இந்த விவகாரத்தை மத்திய அரசிடம் எடுத்துச் சென்றார்.

"கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பும் இரத்தமும்" என்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தொடங்கிய 100 நாள் வேலை திட்டத்தை "இரக்கமற்ற" பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு மூட முயற்சிக்கிறது என்று ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

ஆளும் தி.மு.க-வும் நிதி விடுவிக்கக்கோரி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. வேலூர் மாவட்டம் திருமணி கிராமத்தில் கடந்த ஒருவாரத்திற்கு முன் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இம்மாத தொடக்கத்தில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் தொழிலாளர்கள் நிலுவைத் தொகையை வழங்கும்வரை பணியில் ஈடுபட வேண்டாம் என்று முடிவு செய்தனர்.

தமிழ்நாட்டில் 76 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 91 லட்சம் தொழிலாளர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனர். 86% வேலைவாய்ப்பு பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

29% தொழிலாளர்கள் SC/ST குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 லட்சம் மாற்றுத்திறனாளி தொழிலாளர்கள் இதன்மூலம் பயனடைகின்றனர். 

source vhttps://tamil.indianexpress.com/tamilnadu/centre-sanctions-about-2999-crore-to-tamil-nadu-under-mgnregs-9020514

Related Posts: