ஈரான் போர்: துபாய் விமான நிலையம் மீது தாக்குதல்... இந்தியர் உட்பட 4 பேர் படுகாயம்
/indian-express-tamil/media/media_files/2026/03/11/iran-2026-03-11-15-46-28.jpg)
ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் நடத்திய கூட்டு தாக்குதலில் கடந்த பிப். 28 அன்று ஈரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், குவைத் ஆகிய வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்கத் தளங்களைக் குறிவைத்து ஈரான் படைகள் தாக்குதல் நடத்தி வருவதால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில், துபாய் சர்வதேச விமான நிலையத்தின் மிக அருகே ஈரான் புதன்கிழமை (மார்ச் 11) ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. துபாய் விமான நிலைய ஓடுபாதையில் ட்ரோன்கள் விழுந்து நொறுங்கியதில் கானா நாட்டைச் சேர்ந்த 2 பேர், வங்க தேசத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 4 பேர் காயமடைந்தனர். இருப்பினும் விமான சேவையில் பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
துபாய் ஊடக அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், புதன்கிழமை காலை ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இரண்டு கானா நாட்டவரும், ஒரு வங்கதேச நாட்டவருக்கும் காயம் அடைந்தனர். இந்திய நாட்டவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும் விமான சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தொடர்ந்து இயக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், நீண்ட தூர விமான நிறுவனமான எமிரேட்ஸின் தாயகமான துபாய் சர்வதேச விமான நிலையம், சர்வதேச பயணங்களுக்கு உலகின் மிகவும் பரபரப்பானது. விமான நிலையம் போரில் குறிவைக்கப்பட்டிருந்தாலும், அதிகாரிகள் விமானங்களை தொடர்ந்து இயக்கி வருவதாகவும், அதற்கான அட்டவணை தயாரித்து வருவதாக ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஒது ஒருபுறம் இருக்க மறுபுறம் இந்த மோதல் காரணமாக உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பல ஓட்டல்கள் தற்காலிகமாக மூடப்பட்டதுடன் பல இடங்களில் டீ, காஃபி, பஜ்ஜி, வடை ஆகியவற்றின் விலையும் உயர்ந்துள்ளது.





