புதன், 30 ஜூலை, 2025

இளையபெருமாள் கமிட்டி பரிந்துரை செயல்படுத்தும் பொறுப்பு மாநில அரசுகளுக்கு உண்டு; ரவிக்குமார் கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

 

இளையபெருமாள் கமிட்டி பரிந்துரை செயல்படுத்தும் பொறுப்பு மாநில அரசுகளுக்கு உண்டு; ரவிக்குமார் கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்


29 7 2025 
Ravikumar MP SP singh bagel

நாடாளுமன்றத்தில் விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு பஞ்சாயத்துராஜ் துறை இணை அமைச்சர் எஸ்.பி.சிங் பகேல் எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு தீண்டாமை ஒழிப்பில் கிராம பஞ்சாயத்துகளுக்குப் பொறுப்பளிக்கும் இளையபெருமாள் கமிட்டி பரிந்துரையை  பஞ்சாயத் ராஜ் சட்டத்தில் சேர்ப்பது மாநில அரசுகளின் பொறுப்பு என்று பஞ்சாயத்துராஜ் துறை இணை அமைச்சர் எஸ்.பி.சிங் பகேல் எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார்.

வி.சி.க பொதுச் செயலாளரும் விழுப்பும் எம்.பி-யுமான எழுத்தாளர் டாக்டர் ரவிக்குமார், நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை பின்வரும் கேள்விகளை எழுப்பினார். “அ) பெரும்பாலான மாநிலங்களில் உள்ள பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் பட்டியல் சாதியினரின் (SC) நலன்களைப் போதுமான அளவு பாதுகாக்கவில்லை என்றும், குறிப்பாக தீண்டாமையை ஒழிக்கத் தவறிவிட்டன என்றும் குறிப்பிட்ட எல். இளையபெருமாள் குழுவின் (1969) பரிந்துரைகளை அரசாங்கம் அறிந்திருக்கிறதா, அப்படியானால், அதன் விவரங்களைத் தருக;

(ஆ) அந்த நேரத்தில் ஆந்திரப் பிரதேசத்தில் மட்டுமே பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் தீண்டாமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் சட்டப்பூர்வ ஏற்பாடு இருந்தது என்பதை அரசாங்கம் ஒப்புக்கொள்கிறதா?;

(இ) இன்று வேறு எந்த மாநிலத்திலும் பஞ்சாயத்துராஜ் சட்டத்தில் அத்தகைய பிரிவு உள்ளதா, அப்படியானால், அதன் விவரங்களைத் தருக;

(ஈ) இல்லையென்றால், தீண்டாமையை ஒழிப்பதையும் பட்டியல் சாதியினரின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கு பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் ஒரு  விதி இல்லாததற்கான காரணங்கள் யாவை; 

 (இ) தீண்டாமையை எதிர்த்துப் போராடுவதற்கு ஏதுவாகப் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளில் குறிப்பிட்ட கடமைகளைச் சேர்க்க பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் முன்மொழிகிறதா, அப்படியானால், அதன் விவரங்கள் யாவை?”  ஆகிய வினாக்களை ரவிக்குமார் எம்.பி  எழுப்பினார். 

இதற்கு ஞ்சாயத்துராஜ் துறை இணை அமைச்சர் எஸ்.பி.சிங் பகேல் அளித்த எழுத்துபூர்வ பதிலில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது: 

“தற்போதுள்ள பஞ்சாயத்து முறை 1993-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. பஞ்சாயத்து அமைப்பின் பல்வேறு நிலைகளில் அந்தந்த மாநில சட்டங்களின் அடிப்படையில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தரப்பட்டுள்ளது. 

அரசமைப்புச் சட்ட உறுப்பு 17 தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டதென்றும், அதை கடைப்பிடித்தால் குற்றமெனவும் அறிவித்தது. எஸ்சி, எஸ்டி மக்களின் கண்ணியத்தைப் பாதுகாக்க வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989-உம்  இயற்றப்பட்டுள்ளது. 

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் 2004-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. எல். இளையபெருமாள் கமிட்டி பரிந்துரைகள் 1969-ல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.” எனக் கூறியுள்ளார். 

மேலும், “உள்ளூர் அரசு என்ற வகையில், பஞ்சாயத்து என்பது மாநில அதிகாரப் பட்டியலில் உள்ள ஒரு பொருளாகும், மேலும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையின் மாநிலப் பட்டியலின் ஒரு பகுதியாகும். அரசமைப்புச் சட்டப் பிரிவு 243G, ஒரு மாநிலத்தின் சட்டமன்றம், சட்டத்தின் மூலம், பஞ்சாயத்துகள் சுயராஜ்ய நிறுவனங்களாகச் செயல்படத் தேவையான அதிகாரங்களை வழங்குகிறது. அத்தகைய சட்டங்கள், பதினொன்றாவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள விஷயங்கள் உட்பட, பொருளாதார மேம்பாடு மற்றும் சமூக நீதிக்கான திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக, பஞ்சாயத்துகளுக்கு அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகளைப் பகிர்ந்தளிப்பதற்கான விதிகளை உள்ளடக்கியிருக்கிறது. பதினொன்றாவது அட்டவணையின் தொடர் எண் 27-ல் உள்ள அம்சம், "பட்டியல் பிரிவினரின் நலன், குறிப்பாக, பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினரின் நலன்" என்பதைக் குறிக்கிறது. அதன்படி, 73வது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் விதிகளைச் செயல்படுத்த அந்தந்த மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் தங்கள் மாநில பஞ்சாயத்து ராஜ் சட்டங்களை இயற்றியுள்ளன. இருப்பினும், ஆந்திரப் பிரதேசம் உட்பட, அந்தந்த மாநில பஞ்சாயத்து ராஜ் சட்டங்களின் கீழ் இயற்றப்பட்ட தீண்டாமை தொடர்பான விதிகள் குறித்த  விவரங்களை இந்த அலுவலகம் பராமரிக்கவில்லை.” எனத் தெரிவித்துள்ளார். 

இதைத் தொடர்ந்து, ரவிக்குமார் எம்.பி. “தமிழ்நாடு அரசு பஞ்சாயத்து சட்டத்தில் திருத்தம் செய்து தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கைகளை ஊராட்சிகள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்ற விதியை சேர்த்தால் அது இந்தியாவுக்கே முன்னுதாரணமாக இருக்கும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.


source 
https://tamil.indianexpress.com/tamilnadu/vck-mp-ravikumar-elaiyaperumal-committee-suggestions-abolition-of-untouchability-mos-answer-9604764