/indian-express-tamil/media/media_files/MNCfrQ8bnnAqtj6EJaJZ.jpg)
பொறியியல் சேர்க்கை 2025-26: கணினி அறிவியல், ECE பிரிவுகளுக்கு கடும் போட்டி!
2025-26 கல்வி ஆண்டுக்கான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA) கலந்தாய்வின் முதல் சுற்றில், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் (CSE) மற்றும் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் பொறியியல் (ECE) ஆகிய பிரிவுகளுக்கு மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து உள்ளது. முதல் சுற்றிலேயே 36,731 மாணவர்களுக்கு தற்காலிகமாக இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 417 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு 1.90 லட்சம் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு ஆண்டுதோறும் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் மூலம் நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு கலந்தாய்வில் பங்கேற்க 3.02 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அதில் 2.42 லட்சம் பேர் கலந்தாய்வில் பங்கேற்க தகுதிபெற்றனர். இவர்களுக்கான தரவரிசை பட்டியல் கடந்த ஜூன் 27-ம் தேதி வெளியானது.
தொடர்ந்து, மாணவர் சேர்க்கைக்கான இணையவழி கலந்தாய்வு கடந்த ஜூலை 7-ம் தேதி தொடங்கியது. முதல்கட்டமாக, மாற்றுத் திறனாளி உட்பட சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு 7 முதல் 11-ம் தேதி வரை நடந்தது. இதில் 994 இடங்கள் நிரம்பின. பொதுப் பிரிவினருக்கான முதல் சுற்று கலந்தாய்வு ஜூலை 14-ம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்க 39,145 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் 34,301 பேர் பங்கேற்று, பிடித்தமான கல்லூரிகளை தேர்வு செய்தனர். அவர்களில் 32,663 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5& இடஒதுக்கீட்டில் 2,491 மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்தனர். அதில் 2,462 பேருக்கு ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. தொழிற்கல்வி பிரிவில் 1,586 பேர் கல்லூரிகளை தேர்வு செய்த நிலையில், 1,392 பேருக்கு ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. தொழிற்கல்வி பிரிவில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் 214 பேருக்கு ஒதுக்கீடு தரப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 36,731 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், முதல் சுற்று பொறியியல் கலந்தாய்வில் 19,193 மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் சுற்று கலந்தாய்வில் 11,359 மாணவர்களுக்கு தற்காலிக சேர்க்கை ஆணை வழங்கப்பட்டுள்ளது. சேர்க்கை ஆணை பெற்ற மாணவர்கள் ஜூலை 23-ம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும். தற்காலிக ஆணை பெற்றவர்கள் ஜூலை 23-க்குள் உதவி மையம் சென்று சேர்க்கையை உறுதி செய்யவேண்டும். ஜூலை 23-க்குள் சேர்க்கையை உறுதி செய்யாதவர்களின் இடங்கள் காத்திருப்பில் உள்ளவர்களுக்கு தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ECE பிரிவிற்கான தேவை அதிகரித்திருப்பது முதல் சுற்று கலந்தாய்வு மூலம் தெரியவந்துள்ளது. பொறியியல் சேர்க்கையை கண்காணித்து வரும் கல்வி ஆலோசகர் ஆர்.அஸ்வின் இதுகுறித்துக் கூறுகையில், "இந்த ஆண்டு, ECE பிரிவு, தகவல் தொழில்நுட்பம் (IT), செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற படிப்புகளைக் காட்டிலும் மாணவர்களின் முதல் விருப்பத் தேர்வாக மாறியுள்ளது," என்றார்.
மாநிலத்தின் முதல் 10 கல்லூரிகளில், CSE, ECE, மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல் (EEE), இயந்திரப் பொறியியல் (Mechanical Engineering) மற்றும் சிவில் இன்ஜினியரிங் (Civil Engineering) போன்ற பொறியியல் பிரிவுகளில் பெரும்பாலான இடங்கள் முதல் சுற்றிலேயே நிரம்பிவிட்டன. தரவரிசைப் பட்டியலில் கீழேயுள்ள கல்லூரிகளிலும் கூட, கணினி அறிவியல் மற்றும் ECE போன்ற சர்க்யூட் தொடர்பான படிப்புகளுக்கு அதிக தேவை இருந்தது கவனிக்கத்தக்கது. மேலும், சென்னை மற்றும் கோயம்புத்தூர் நகரங்களில் உள்ள முன்னணி கல்லூரிகளுக்கு மாணவர்கள் மத்தியில் அதிக விருப்பம் இருந்தது.
அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் கிண்டி பொறியியல் கல்லூரி (CEG) , மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (MIT) போன்ற புகழ்பெற்ற உறுப்புக் கல்லூரிகள் மாணவர்களின் விருப்பப் பட்டியலில் முதலிடத்தில் தொடர்ந்தன. ஆனால், அண்ணா பல்கலைக் கழகத்தின் மற்ற பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள் இந்த ஆண்டு சற்று பின்தங்கின.
source https://tamil.indianexpress.com/education-jobs/tamil-nadu-engineering-admissions-cse-ece-preferred-choice-during-round-1-of-counselling-9511785





