12 01 2026
/indian-express-tamil/media/media_files/2026/01/13/mk-stalin-double-decker-2026-01-13-06-25-24.jpg)
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்ற விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தக் குளிர்சாதன வசதி கொண்ட இரண்டு அடுக்கு மின்சாரப் பேருந்து சேவையை (டபுள் டெக்கர் மின்சார பேருந்து) கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
சென்னை மாநகரின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கிய ‘டபுள் டெக்கர்’ பேருந்துகள், சுமார் 18 ஆண்டுகால நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சென்னையின் சாலைகளில் வலம் வரத் தொடங்கியுள்ளன. இம்முறை நவீன வசதிகளுடன், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத மின்சாரப் பேருந்தாக இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த புதிய சேவை
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்ற விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தக் குளிர்சாதன வசதி கொண்ட இரண்டு அடுக்கு மின்சாரப் பேருந்து சேவையை (டபுள் டெக்கர் மின்சார பேருந்து) கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பேருந்தின் உட்புற வசதிகளைப் பார்வையிட்ட முதலமைச்சர், அதன் வடிவமைப்பு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
சுற்றுலாப் பயணிகளுக்குக் கொண்டாட்டம்
அயலகத் தமிழர்களின் நிதிப் பங்களிப்புடன், அசோக் லேலண்ட் நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ள இந்தப் பேருந்து, முழுக்க முழுக்க சுற்றுலாத் துறையின் பயன்பாட்டிற்காக இயக்கப்பட உள்ளது.
பேருந்தின் சிறப்பம்சங்கள்:
பயணிகள் எண்ணிக்கை: இந்த டபுள் டெக்கர் பேருந்துகளில் ஒரே நேரத்தில் மொத்தம் 65 பயணிகள் அமர்ந்து பயணிக்கலாம்.
பரந்த ஜன்னல்கள்: பயணிகள் பேருந்தின் உள்ளே அமர்ந்தபடி நகரின் எழிலையும், கடற்கரை அழகையும் ரசிப்பதற்கு வசதியாக பக்கவாட்டில் அகலமான ஜன்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மின்சாரப் பேருந்து: இந்த டபுள் டெக்கர் பேருந்து மின்சார பேருந்து என்பதால் சத்தம் மற்றும் புகை மாசு இருக்காது.
பயண வழித்தடம் மற்றும் இலக்கு
முதல்கட்டமாக இந்தப் பேருந்து அடையாறில் இருந்து மாமல்லபுரம் வரை இயக்கப்பட உள்ளது. இது பொதுமக்களுக்கான சாதாரண போக்குவரத்துச் சேவையாக இல்லாமல், சுற்றுலாப் பயணிகளுக்காக மட்டுமே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சென்னையின் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயண அனுபவத்தை வழங்கவும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்ட்தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “கனவுகளைச் சுமந்து கடல்களையும் - நிலங்களையும் கடந்த நம் தமிழ்ச்சொந்தங்களை அயலகத் தமிழர் நாளில் தாய்நிலத்தில் வாழ்த்தினேன்.
கல்வியும் உழைப்பும் கொண்டு பெயரும் புகழும் அடைந்து அயலகங்களில் தமிழினத்துக்குப் பெருமை சேர்க்கும் அவர்களுக்கு அன்பை வழங்கி அரவணைப்போம்.
மாபெரும் தமிழ்க்கனவுகளைச் சாத்தியப்படுத்திடும் நமது திராவிட மாடலில் ‘உங்க கனவ சொல்லுங்க’ என்று கேட்டதும் அவர்களது எண்ணங்களை - கனவுகளைச் சொல்லியிருக்கிறார்கள். அவற்றையும் நனவாக்கப் பயணிப்போம்.
தமிழால் இணைவோம், தரணியில் வெல்வோம்” என்று தெரிவித்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/cm-mk-stalin-innaugruates-chennai-double-decker-electric-bus-service-launch-adyar-to-mamallapuram-10993440





