/indian-express-tamil/media/media_files/2025/11/06/parandur-airport-chennai-second-airport-parandur-land-acquisition-parandur-land-handover-2025-11-06-08-51-13.jpg)
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவுள்ள புதிய பசுமை வழி விமான நிலையத் திட்டத்திற்காக, நிலம் மற்றும் வீடுகளை வழங்கும் 13 கிராம மக்களுக்குத் தேவையான மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு பணிகளைத் தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, இடம்பெயரவுள்ள குடும்பங்களுக்காகத் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) மாதிரி வீடுகளைக் கட்டி முடித்துள்ளது. இதுகுறித்த முக்கிய தகவல்கள் டைம்ஸ் ஆஃப் இந்தியா பக்கத்தில் வெளியாகியுள்ளது.
பரந்தூர் ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு அருகிலேயே இந்த மாதிரி வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 400 சதுர அடி பரப்பளவில், பல்வேறு வடிவமைப்புகளில் (Designs) இந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளன. பொதுமக்கள் இந்த வீடுகளை நேரில் பார்வையிட்டு, தங்களுக்குப் பிடித்தமான வடிவமைப்பைத் தேர்வு செய்து கொள்ளலாம் என்று டிட்கோ (TIDCO) நிர்வாக இயக்குநர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
மேலும், அங்கு அமையவுள்ள புதிய குடியிருப்புகளில் பள்ளி, மருத்துவமனை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து விளக்கும் வகையிலான காணொளிகளும் பொதுமக்களுக்காகத் திரையிடப்பட உள்ளன. பாதிக்கப்படும் விவசாயிகளுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் கடந்த ஜூன் மாதம் அரசு ஒரு விரிவான நிவாரணத் திட்டத்தை அறிவித்தது.
அதன்படி ஒரு ஏக்கர் விவசாய நிலத்திற்கு ரூ. 35 லட்சம் முதல் ரூ. 60 லட்சம் வரை இழப்பீடு, வீடுகளை இழப்பவர்களுக்கு 5 முதல் 10 சென்ட் நிலத்தில், 400 சதுர அடி பரப்பளவில் புதிய வீடு கட்டித் தரப்படும், வீடு வேண்டாம் என்பவர்கள் ரூ. 8 லட்சம் ரொக்கப் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். கடனுதவி, வேலைவாய்ப்பு, வாழ்வாதாரப் படிகள் மற்றும் கடைகளுக்கான இழப்பீடுகளும் இந்தத் தொகுப்பில் அடங்கும்.
இந்த விமான நிலையத் திட்டத்திற்காக மொத்தம் 13 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 5,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. சுமார் 1,005 குடும்பங்கள் சிறுவள்ளூர், மதுரமங்கலம், மகாதேவி மங்கலம் மற்றும் காரை ஆகிய கிராமங்களில் உருவாக்கப்படவுள்ள ஒருங்கிணைந்த நகரியங்களுக்கு மாற்றப்பட உள்ளனர். இதுவரை 1,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி மாதத்திற்குள் மேலும் 1,000 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரசு இத்தனை சலுகைகளை அறிவித்தாலும், ஒரு தரப்பு மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நீர்நிலைகளைப் பாதிக்கும் வகையில் இத்திட்டம் அமைந்துள்ளதாகக் கூறி, போராட்டக் குழுவினர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். மாதிரி வீடுகளைப் பார்வையிடத் தங்களுக்கு விருப்பமில்லை என்றும், போராட்டக் குழுவின் தலைவர் ஜி. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/parandur-airport-project-model-houses-ready-for-relocated-families-10993504





