ஞாயிறு, 18 ஜனவரி, 2026

இன்றே கடைசி... வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முந்துங்கள்; உடனடியாக விண்ணப்பியுங்கள்!

 18 1 26 


தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் மற்றும் 18 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்க இன்றே (18.01.2026)_ கடைசி நாள் என்பதால் தகுதியானவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யுங்கள்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களின்படி வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எஸ்.ஐ.ஆர் பணிகளின்போது படிவங்களை சமர்ப்பித்த வாக்காளர்களின் பெயர்களை உள்ளடக்கிய வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19, 2025-ல் வெளியிடப்பட்டது.


மேலும், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர், ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் 19.12.2025 முதல் 18.01.2026 வரை தாக்கல் செய்யப்பட்டு, அதே காலகட்டத்திற்குள் பரிசீலித்து முடிவு செய்யப்படும் என்று தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியும் அரசு முதன்மைச் செயலாளருமான அர்ச்சனா பட்நாயக் ஜனவரி 6-ம் தேதி அறிவித்தார்.

அதன்படி, ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் காலத்தில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத குடிமக்கள் மற்றும் 18 வயது நிரம்பிய தகுதியுடைய குடிமக்கள் படிவம்-6 ஐ உறுதிமொழி படிவத்துடன் (Declaration Form) சமர்ப்பித்து தங்கள் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம் நெறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், முன்மொழியப்பட்ட சேர்க்கைக்கு ஆட்சேபனை தெரிவிக்க அல்லது ஏற்கனவே உள்ள பதிவை நீக்க கோரிக்கையாகச் சமர்ப்பிக்க படிவம்-7 மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டது.

முகவரி மாற்றுதல் / ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்தம் செய்ய / வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC) மாற்றம் செய்ய / மாற்றுத் திறனாளி (PwDs) வாக்காளர்கள் என குறிப்பது ஆகிய கோரிக்கை உடையவர்கள் படிவம்-8 மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க, பெயர் நீக்கம் செய்ய, ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் செய்ய தகுதியான குடிமக்கள் விண்ணப்ப்பங்களை சமர்ப்பிக்க அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன.

இந்நிலையில், வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க, நீக்கம் உள்ளிட்ட திருத்தப் பணிகள் இன்றுடன் (18.01.2026) நிறைவடைய உள்ளதால், இதுவரை விண்ணப்பம் செய்யாதவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யுங்கள். 

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை ஒட்டுமொத்தமாக 12.8 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளார்கள். இந்த பணிகள் எல்லாம் நிறைவடைந்த பிறகு, தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17-ம் தேதி வெளியாக உள்ளது.

சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் (எஸ்.ஐ.ஆர்) கீழ், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை மற்றும் நீக்கத்திற்கான ஆட்சேபனை கால அவகாசம் இன்றுடன் (ஜனவரி 18) நிறைவடையும் நிலையில், இதுவரை 12 லட்சத்து 80 ஆயிரத்து 110 பேர் தங்களது பெயர்களைச் சேர்க்க படிவம் 6 மற்றும் 6A மூலம் விண்ணப்பித்துள்ளனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், மாநிலத்தில் இருந்த 6.41 கோடி வாக்காளர்களில் சுமார் 97.37 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன. இதன் விளைவாக, தமிழகத்தின் வாக்காளர் எண்ணிக்கை 5.43 கோடியாகக் குறைந்துள்ளது. மேலும், பட்டியலிலிருந்து தங்களை நீக்கக் கோரி 32,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தி.மு.க, அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க ஆகிய கட்சிகள் தலா 60,000-க்கும் மேற்பட்ட பூத் நிலை முகவர்களைக் (BLA) கொண்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 2.72 லட்சம் முகவர்கள் இருந்தாலும், கட்சிகள் நேரடியாகச் சமர்ப்பித்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 100-ஐ விடச் சற்றே அதிகம். வாக்காளர்கள் தாங்களாகவே விண்ணப்பிப்பது எளிது என்பதால், முகவர்கள் அவர்களுக்குத் துணையாக மட்டுமே செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.

வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய இன்றே கடைசி என்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யுங்கள். கடைசி வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/last-day-to-apply-for-voter-id-inclusion-correction-tamil-nadu-sir-11009506