செவ்வாய், 5 ஆகஸ்ட், 2025

தூத்துக்குடி, நெல்லைக்கு ஸ்டாலின் அறிவித்த 4 திட்டங்கள்: முதலீட்டாளர் மாநாட்டில் ரூ32,500 கோடிக்கு ஒப்பந்தம்

 


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-thuththukudi-investors-conclave-function-mous-worth-32554-crore-9626746

தூத்துக்குடி, நெல்லைக்கு ஸ்டாலின் அறிவித்த 4 திட்டங்கள்: முதலீட்டாளர் மாநாட்டில் ரூ32,500 கோடிக்கு ஒப்பந்தம்


MK Stalin Scheme

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் தென் மாவட்டங்களை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் வகையில், தூத்துக்குடியில் பிரம்மாண்டமாக நடைபெற்ற தமிழ்நாடு ரைசிங் இன்வெஸ்டர்ஸ் கான்ஃளோவ் ('TN Rising Investors Conclave')  நிகழ்வு, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினின் கனவுத் திட்டங்களின் வெளிப்பாடாக அமைந்தது. இந்நிகழ்வில் பேசிய முதலமைச்சர், தமிழ்நாடு திராவிட மாடல் ஆட்சியில் தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருக்கிறது என பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ரூ1,230 கோடி மதிப்பீட்டிலான 4 முக்கிய திட்டங்களின் வணிக உற்பத்தியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டங்கள் மூலம் சுமார் 3,100 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டங்கள் தமிழகத்தின் தென் மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமிடும் என நம்பப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், 41 புதிய திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. இவற்றின் மொத்த முதலீடு ரூ32,554 கோடி ஆகும். இந்தத் திட்டங்களின் மூலம் சுமார் 49,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த 41 திட்டங்களில், 19 திட்டங்கள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) துறையைச் சேர்ந்தவை. இவற்றின் முதலீடு ரூ265.15 கோடி ஆகும்.

இந்த நிகழச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "தென் தமிழகம் குறித்து கலைஞர் கருணாநிதி கண்ட கனவு இப்போது நிஜமாகி வருகிறது" என்று உணர்ச்சிபூர்வமாக குறிப்பிட்டார். வின்ஃபாஸ்ட் (VinFast) வாகன உற்பத்தி ஆலையின் தொடக்க விழாவில் பேசியதை நினைவுகூர்ந்த அவர், இன்றைய தினம் தென் மாவட்டங்களின் வளர்ச்சியில் ஒரு பொன்னான நாள். துறைமுகம், வளமான இயற்கை வளங்கள் மற்றும் திறமையான பணியாளர்களுடன் கூடிய தூத்துக்குடியை ஒரு தொழில் வளர்ச்சி அடைந்த மாவட்டமாக மாற்றுவதற்கு நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தென் மாவட்டங்களில் தொழில் பூங்காக்களில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ளார்.

இந்த புதிய திட்டங்களில், தூத்துக்குடியில் 256 ஏக்கர் பரப்பளவில் ஒரு விண்வெளி பூங்கா (Space Park), தூத்துக்குடியில் பிரத்தியேக கப்பல் கட்டும் தொழில் துறை (Dedicated Ship Building Industry). முருங்கை ஏற்றுமதியை மேம்படுத்த தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் ரூ5.59 கோடி மதிப்பீட்டில் பொது வசதி மையம் (Common Facility Centre). மேலும், தூத்துக்குடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், மதுரையில் டைடல் பூங்கா (Tidel Park), விருதுநகரில் பி.எம். மித்ரா பூங்கா போன்ற திட்டங்கள் தென் மாவட்டங்களில் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்,

அனைத்து துறைகள், அனைத்து மாவட்டங்கள் மற்றும் அனைத்து சமூகங்களுக்கும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் முன்னேற்றமே தற்போதைய அரசின் முக்கிய நோக்கம். இதன் அடிப்படையில், உயர் தொழில்நுட்ப செமிகண்டக்டர் உற்பத்தி, மின்சார வாகன உற்பத்தி, சூரிய மின்கலங்கள் உற்பத்தி, பசுமை ஹைட்ரஜன் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகள் போன்ற வளர்ந்து வரும் துறைகளில் அரசு கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.