/indian-express-tamil/media/media_files/2025/09/09/nepal-gen-z-protest-updates-pm-president-resigns-nepal-security-tamil-news-2025-09-09-18-12-52.jpg)
நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி இன்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். தற்போதைய பிரச்சனைகளுக்கு அரசியலமைப்பு ரீதியாக தீர்வு காண்பதற்காக பதவியை ராஜினாமா செய்ததாக அவர் கூறியுள்ளார்.
நேபாளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ‘யூடியூப்’, ‘இன்ஸ்டாகிராம்’, ‘வாட்ஸ் அப்’ போன்ற 26 சமூக வலைதளத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், தலைநகர் காத்மண்டுவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடைகளுக்கு எதிராகவும், அரசின் ஊழலுக்கு எதிராகவும் இந்த போராட்டத்தை நடத்தினர்.
இந்த போராட்டத்தை ஒடுக்குவதற்காக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் உயிரிழந்ததாகவும், 400 பேர் படுகாயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இந்த போராட்டம் கலவரமாக வெடித்துள்ளது. போராட்டம் தொடர்ந்து இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் நிலையில், நாடாளுமன்ற கட்டிடம், அமைச்சர்களின் இல்லங்கள், பிரதமரின் தனிப்பட்ட இல்லம், நீதிமன்றம் ஆகியவைகளுக்கு போராட்டகாரர்கள் தீ வைத்தனர்.
இந்நிலையில், நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி இன்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். தற்போதைய பிரச்சனைகளுக்கு அரசியலமைப்பு ரீதியாக தீர்வு காண்பதற்காக பதவியை ராஜினாமா செய்ததாக அவர் கூறியுள்ளார். இதேபோல் அதிபரும் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். வன்முறை எதிரொலியாக அதிபர் ராம் சந்திர பவுடேல் ராஜினாமா செய்துள்ளார்.
காத்மண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டதாக காத்மண்டு போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்பில்லாத சூழ்நிலையை பயன்படுத்தி பிரதமர் உட்பட மூத்த அமைச்சர்கள் நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளதாக வதந்திகள் பரவிய நிலையில் இவ்வாறு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, நேபாளத்தில் இருக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், குறிப்பிட்டுள்ளதாவது, நேபாளத்தில் வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் நேபாள அதிகாரிகள் பிறப்பித்த நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் காத்மாண்டு மாவட்ட நிர்வாக அலுவலகம் காலை 8:30 மணி முதல் மறு அறிவிப்பு வரும் வரை ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
எல்லையில் பதற்றம் நிலவுவதால், இந்திய பாதுகாப்புப் படைகள் இந்தியா-நேபாள எல்லையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. நேபாளத்தில் நிலவும் பாதுகாப்பாற்ற தன்மையை கருத்தி கொண்டு காத்மண்டுவில் இருந்து புறப்படும் இந்திய விமானங்களான இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, நேபாள பாதுகாப்பு அதிகாரிகள் போராட்டக்காரர்களை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வலியுறுத்தி வருகிறார்கள்.
09 09 2025
இதனிடையே, நேபாளத்தில் நடந்து வந்த கலவரம் தீவிரமடைந்துள்ள நிலையில், ராணுவம் ஆட்சியை கையில் எடுத்துள்ளது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் ஆட்சியை கையில் எடுத்துள்ளதாக ராணுவம் கூறியுள்ள நிலையில், வன்முறை மற்றும் அசாதாரண சூழலை கட்டுக்குள் கொண்டுவர, நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,
source https://tamil.indianexpress.com/international/nepal-gen-z-protest-updates-pm-resigns-security-tamil-news-10065919