ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்: நொடிக்கு நொடி அதிகரிக்கும் மரணங்கள் 1 9 2025
/indian-express-tamil/media/media_files/2025/09/01/afghanisthan-2025-09-01-13-35-22.jpg)
ஆப்கானிஸ்தானின் கிழக்கு மற்றும் பாகிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள், அந்தப் பகுதியில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோரின் எண்ணிக்கை நொடிக்கு நொடி அதிகரித்த வண்ணம் உள்ளது. (ஆகஸ்ட் 31)ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு, தொடர்ந்து பல பின்னதிர்வுகள் ஏற்பட்டன. இதனால் மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறி திறந்தவெளிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 800 ஆக உயர்வு, 2,500 பேர் காயம் என தலிபான் அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆனால், உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர், ஏனெனில் பல கிராமங்கள் முழுமையாக அழிந்துவிட்டன.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவலின்படி, நிலநடுக்கத்தின் மையம் ஜலாலாபாத்திற்கு வடகிழக்கே 27 கி.மீ தொலைவில், 8 கி.மீ ஆழத்தில் அமைந்திருந்தது. இந்த நிலநடுக்கத்தால் குனார் மாகாணம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. அங்குள்ள நூர் கால், சாவ்கி, வாட்பூர், மனோகி மற்றும் சபா தாரா போன்ற மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.
நிலநடுக்கத்திற்குப் பிறகு ஏற்பட்ட நிலச்சரிவுகளால் குறுகிய மலைப் பாதைகள் மூடப்பட்டதால் மீட்புப் பணிகள் மிகவும் சிக்கலாகியுள்ளன. தற்போது ஹெலிகாப்டர்கள் மூலமே பாதிக்கப்பட்ட பகுதிகளை அடைய முடிகிறது. தலிபான் அரசு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை குழுக்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் ஆப்கானிஸ்தான் பிரிவு, நிலநடுக்கத்தால் மனவேதனை அடைந்துள்ளதாகவும், அவசர உதவி மற்றும் உயிர் காக்கும் உதவிகளை வழங்குவதற்காக குழுக்கள் களத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் "ஆழ்ந்த கவலைக்குரிய விஷயம்" என்று தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்தார். மேலும், இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்தியா உதவிக்கரம் நீட்டும் என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல்களையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகளையும் தெரிவித்துள்ளார்.
பல தசாப்த கால போரினாலும், பொருளாதார நெருக்கடியாலும் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கு, இந்த நிலநடுக்கம் மேலும் ஒரு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சமூகத்தின் உடனடி உதவி, பாதிக்கப்பட்ட மக்களின் துன்பத்தைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்.