உக்ரைனுக்கு அனுப்பப்படும் வெளிநாட்டு ராணுவங்களும் இலக்குகளே – புதின் எச்சரிக்கை 6 92025

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 3 வருடங்களாக போர் நடைப்பெற்று வருகிறது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா இப்போரை தொடங்கியது. அந்த நாட்டின் மீது போர் தொடுத்தது. இப்போரில் இன்னும் இரு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தம் ஏற்படவில்லை. இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுவருகிறார்.
இந்த நிலையில், அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள ஆங்கரேஜ் நகரில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் புதின் இடையே போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தைக்கு நடைபெற்றது. மேலும் உக்ரைன் அதிபர் மற்றும் ஐரேப்பிய தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா மற்றும் மேற்க்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து போர் நிறுத்தப்பட்ட தருணத்தில் நிலம், கடல் அல்லது வான் வழியாக துருப்புக்களை அனுப்பி உக்ரைனுக்கு பாதுகாப்பு வழங்க உதவுவதற்காக உக்ரைனின் 26 நட்பு நாடுகள் உறுதியளித்துள்ளதாக பிரான்ஸ் அதிபர் மெக்ரான் தெரிவித்திருந்தார்.
இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசியுள்ள ரஷ்யா அதிபர் புதின், “உக்ரைனில் படைகளை நிறுத்தும் மேற்கத்திய நாடுகளின் திட்டங்களை நாங்கள் நிராகரிக்கிறோம். உக்ரைனுக்கு அனுப்பப்படும் எந்தவொரு வெளிநாட்டு ராணுவங்களும் சட்டபூர்வமான இலக்குகளாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.