ஆதாரை ஆவணமாக ஏற்க வேண்டும் – தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
பிகார் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் எதிராக தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று நீதிபதிகள் சூர்ய காந்த், ஜாய்மால்யா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆர்.ஜே.டி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்,
8 9 2025
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் ஆதார், ரேஷன் அட்டை, அட்டை ஆகியவற்றை தேர்தல் ஆணையம் பெற மறுப்பதாகவும், குறிப்பாக ஆதார் அட்டை அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை மீண்டும் சேர்க்க முடியாது என தேர்தல் ஆணையம் மறுக்கிறது. ஆதாரை குடியிருப்புக்கான அடையாளமாக தான் ஏற்க செல்கிறோம் ஏனென்றால் பலரிடம் அந்த குறிப்பிட்ட இடத்தில் அவர்கள் வசிக்கிறார்கள் என்பதற்கான ஆதாரமாக ஆதார் அடையாள அட்டை தான் இருக்கிறது. அது ஏற்கப்படவில்லை என்றால் பலரது விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப் படாமலேயே போய்விடும் அவர்களால் வாக்களிக்க முடியாது.நாடுமுழுதும் ஆதார் ஆவணமாக பெறும் போது தேர்தல் ஆணையம் ஆதார் அட்டையை தொடர்ந்து பெற மறுக்கிறது. தேர்தல் ஆணையம் கூறியுள்ள 11 ஆவணங்களை மட்டுமே பெற முடியும் என்று தேர்தல் ஆணையும் பிடிவாதமாக உள்ளது, நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை. ஆதார் எண்ணை 12 வது ஆவணமாக சேர்க்க வேண்டும்” என்று வாதிட்டார்.
அதற்கு தேர்தல் ஆணைய தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் லாகேஷ் திவேதி, ”ஆதார் அட்டையை குடியுரிமை ஆவணமாக பெற முடியாது. சட்டமன்ற உறுப்பினரை தேர்வு செய்யும் வாக்காளர் இந்திய குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும். ஆதார் அட்டையை முகவரி சான்றாக மட்டுமே பெற முடியும் என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,தேர்தல் ஆணையம் ஏன் ஆதார் அட்டையை 12 வது ஆவணமாக சேர்க்க மறுக்கிறது ? ஒருவரிடம் ஆதார் மட்டுமே இருந்தால் அதனை பெற்று அவர் குறித்து விசாரணை நடத்தி வாக்காளர் பட்டியலில் சேர்க்க தேர்தல் ஆணையத்துக்கு என்ன பிரச்னை? ஆதார் அட்டை ஒரு நபரின் அடையாள அட்டை என்று ஆதார் சட்டம் கூறியுள்ளது. எனவே, ஆதார் அட்டையை வாக்காளர் பெயர் சேர்ப்பு ஆவணமாக பெற வேண்டும் அது தொடர்பாக அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்றனர்.
இதனையடுத்து தேர்தல் ஆணையம்,ஆதார் அடையாளத்திற்காக ஏற்றுக்கொள்ளப்படும் என்பதற்கான வழிமுறைகளை இன்று வெளியிடுவோம் என உறுதி அளித்தது.
இதனை தொடர்ந்து நீதிபதிகள் ஆதார் அட்டையை 12வது ஆவணமாக தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் என உத்தரவிட்டனர். அதேவேளையில், ஆதார் அட்டையின் நம்பகத்தன்மை மற்றும் உண்மை தன்மையை சரிபார்க்க அதிகாரிகளுக்கு உரிமை உண்டு. மேலும், ஆதார் அட்டை என்பது குடியுரிமைக்கான சான்றாக ஏற்றுக்கொள்ளப்படாது என்பதை தெளிவுபடுத்துகிறோம். ஆதார் அட்டையை வாக்காளர் பட்டியலில் இணைவதற்கான 12வது ஆவணமாக ஏற்பது தொடர்பான வழிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று உறுதி அளித்துள்ளதை பதிவு செய்கிறோம் எனவும் தெரிவித்தனர்.