டி.என்.ஸ்பார்க்' திட்டம்: மதுரை அரசுப் பள்ளிகளில் ஏ.ஐ, கோடிங் வகுப்புகள் தொடக்கம்!
/indian-express-tamil/media/media_files/2025/09/06/ai-coding-classes-2025-09-06-22-19-22.jpg)
'டி.என்.ஸ்பார்க்' திட்டம்: மதுரை அரசுப் பள்ளிகளில் ஏ.ஐ, கோடிங் வகுப்புகள் தொடக்கம்!
மதுரை மாவட்டத்தில் உள்ள 72 அரசுப் பள்ளிகளில், தமிழ்நாடு பள்ளிகள் செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் மற்றும் இணையக் கருவிகள் அறிவுத் திட்டம் (TNSPARK) என்ற புதிய திட்டம் இந்த கல்வியாண்டில் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI), கோடிங் மற்றும் இணையக் கருவிகள் குறித்த வகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தத் திட்டம், பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் (Hi-Tech labs) மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. போதிய உள்கட்டமைப்பு வசதிகள், பராமரிப்பு சிக்கல்கள் மற்றும் ஆசிரியர்கள் பற்றாக்குறை போன்ற சில சவால்கள் இருந்தாலும், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் இத்திட்டத்தை வரவேற்றுள்ளனர்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு பேட்டியளித்த மதுரை மகபூப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை நான்சி கூறுகையில், “வாரத்திற்கு ஒரு வகுப்பு வீதம் டி.என்.ஸ்பார்க் வகுப்புகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் ஸ்மார்ட் போர்டுகள் மற்றும் கணினிகளைப் பயன்படுத்தி ஆன்லைன் செயலிகளைப் பயில ஆர்வமாக உள்ளனர். இது தனியார் பள்ளிகளுக்கு இணையாக அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குகிறது” என்று தெரிவித்தார்.
இந்த திட்டத்திற்காக தனி பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அரசு ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர கணினி அறிவியல் ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (DIET) மூலம் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கணினி அறிவியல் ஆசிரியை கனிமொழி, “நாங்கள் முதலில் அடிப்படை அம்சங்களில் இருந்து தொடங்குகிறோம். Libre Office பயன்படுத்தி ஆவணங்கள், விரிதாள் மற்றும் விளக்கக்காட்சிகளை உருவாக்குகிறோம். மாணவர்கள் பி-ஸ்கூல் (PSchool), கூகுள் எர்த் (Google Earth) மற்றும் ஜியோஜெப்ரா (GeoGebra) போன்ற தளங்களையும் பயன்படுத்துகின்றனர்” என்று கூறினார்.
பேசிக் கிளாஸ் முடிந்ததும், உயர் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் பிளாகி (Blockly), ஸ்கிராட்ச் (Scratch), டர்டில்ஆர்ட் (TurtleArt), அனிமேஷன், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான படங்கள், வீடியோ கருவிகள் மற்றும் பைதான் புரோகிராமிங் போன்ற மேம்பட்ட மென்பொருட்களை பயன்படுத்த உள்ளனர். 8-ம் வகுப்பு மாணவி ஒருவர், “நாங்களே கணினிகளைப் பயன்படுத்துவது கற்றலை மிகவும் சுவாரஸ்யமானதாகவும் வேடிக்கையாகவும் ஆக்குகிறது” என்று தெரிவித்தார்.
எனினும், திட்டத்தில் உள்ள 72 பள்ளிகளில் சிலவற்றிற்கு இன்னும் முழுமையான கணினி அமைப்புகள், இணைய இணைப்பு, பாடப்புத்தகங்கள் கிடைக்கவில்லை. இதுகுறித்து பேசிய பள்ளிக் கல்வித் துறை அதிகாரி ஒருவர், இந்த சிக்கல்கள் கவனிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்றும் உறுதியளித்தார். மேலும், இந்தத் திட்டம் படிப்படியாக அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.
“இந்த முயற்சி ஒரு முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால், அதன் நீண்டகால வெற்றி என்பது தொடர்ச்சியான நிதி ஒதுக்கீடு மற்றும் நிரந்தர ஊழியர்களை நியமிப்பதைப் பொறுத்தது. செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் போன்றவை எதிர்காலத்திற்கு அவசியமானவை. எனவே, தற்காலிக ஆசிரியர்களை மட்டும் நம்பியிராமல், அரசுப் பள்ளிகளில் நிரந்தர கணினி அறிவியல் ஆசிரியர்களை நியமிப்பது மிகவும் அவசியம். மேலும், உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை நிறுவுவதற்கும், பராமரிப்பதற்கும் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் ஒதுக்கீடு அவசியம் என்று கல்வியாளர் ஆர்.முரளி கூறினார்.